
திறந்த ஸ்தலங்களை கண்டறிதல்
டாக்டர் ரிச்சர்ட் ஸ்வென்சன் தனது “மார்ஜின்” என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “நாங்கள் சுவாசிக்க கொஞ்சம் இடம்வேண்டும். சிந்திக்க சுதந்திரமும், குணமடைய அனுமதியும் வேண்டும். எங்கள் உறவுகள் ஒவ்வொன்றும் பட்டினியால் மடிகின்றன.... நற்சிந்தனையோடு சீறிப்பாய்ந்த எங்கள் குழந்தைகள் காயப்பட்டு தரையில் வீழ்ந்தனர். கடவுள் இப்போது சோர்வுக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ? அமர்ந்த தண்ணீரண்டைக்கு அவர் மக்களை இப்போது வழிநடத்துவதில்லையோ? கடந்த காலத்தின் பரந்த திறந்தவெளிகளை யார் கொள்ளையடித்தார்கள்? அவற்றை நாங்கள் எவ்வாறு திரும்பப் பெறுவது?” நாம் தேவனோடு இளைப்பாறுவதற்கும் தேவனை சந்திப்பதற்கும் அமர்ந்த செழிப்பான நிலம் வேண்டும் என்று ஸ்வென்சன் கூறுகிறார்.
அது எதிரொலிக்கிறதா? திறந்த வெளிகளைத் தேடும் வாழ்க்கைமுறையை மோசே நன்றாக வாழ்ந்திருக்கிறார் எனலாம். முரட்டாட்டமும் கலகமும் செய்யும் ஜனக்கூட்டத்தை வழிநடத்தி சென்ற மோசேக்கு, அமைதியாய் இளைப்பாறி தேவனுடைய பிரசன்னத்தை உணரவேண்டியது அவசியமாய் தோன்றியது. மேலும் அவருடைய “ஆசரிப்புக் கூடாரத்தில்” (வ. 7), “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (வச. 11). இயேசுவும் அவ்வப்போது, “வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என்று வேதம் சொல்லுகிறது. அவரும் மோசேயும் பிதாவோடு தனிப்பட்ட விதத்தில் நேரம் செலவழிப்பதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர்.
நாமும், தேவனோடு இளைப்பாறுவதற்கும் அவருடைய பிரசன்னத்தை உணருவதற்கும் இப்படிப்பட்ட ஸ்தலத்தை தெரிந்துகொள்வது அவசியம். அவரோடு நேரம் செலவழிப்பது என்பது நல்ல தீர்மானங்களை எடுக்க உதவும் - நமது வாழ்க்கையில் ஆரோக்கியமான விளிம்புகளையும் எல்லைகளையும் உருவாக்கி, அவரையும் மற்றவர்களையும் நன்றாக நேசிக்கும் அலைவரிசையை நாம் பெறுவதற்கு உதவுகிறது.
திறந்தவெளியில் தேவனைத் தேட பிரயாசப்படுவோம்.

கிறிஸ்துவின் வல்லமை
2013 ஆம் ஆண்டில், சுமார் அறுநூறு ஆன்-சைட் பார்வையாளர்கள் கிராண்ட் கேன்யன் அருகே 1500 அடி அகலமுள்ள பள்ளத்தாக்கில் ஒரு இறுக்கமான கயிற்றின் மீது நிக் வாலெண்டா நடப்பதைக் கண்டனர். வாலெண்டா 2 அங்குல தடிமன் கொண்ட இரும்பு கயிற்றில் நடக்கையில், அவருடைய தலையில் பொருத்தப்பட்ட கேமராவில் அவருக்கு முன் இருந்த பள்ளத்தாக்கு தெரிகிற வேளையில் அவர் இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். அவர் அந்த பயங்கரமான பள்ளத்தாக்கில் ஒரு சாதாரண நடைபாதையில் நடப்பதுபோல் நடந்துசென்று, இயேசுவுக்கு நன்றி சொன்னார். தீடீரென்று காற்று வீச, அவர் நிலைகுலைந்து பின்பு சமநிலைப்பட்டார். காற்றில் அசைந்த அந்த கயிற்றை தேவன் சமநிலைப்படுத்தியதற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அந்த இறுக்கமான கயிற்றின் ஒவ்வொரு அடியிலும், அவர் கிறிஸ்துவின் வல்லமையை சார்ந்திருப்பதை அன்றும் இன்றும் கேட்கும் அனைவருக்கும் பிரதிபலித்தார். வீடியோ உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.
கலிலேயா கடலில் சீஷர்களின் படகை பெருங்காற்று சூழ்ந்தபோது, அவர்கள் உதவிக்காய் கதறும் அளவிற்கு பயம் அவர்களை சூழ்ந்துகொண்டது (மாற்கு 4:35-38). இயேசு சலசலப்பை அடக்கிய பிறகு, அவர் காற்றையும் மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தினார் என்பதை சீஷர்கள் அறிந்தனர் (வச. 39-41). மெல்ல மெல்ல அவர் மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டார்கள். அவர்களின் இந்த தனிப்பட்ட அனுபவங்கள் மற்றவர்கள் இயேசுவோடு நெருங்குவதற்கும் அவருடைய அசாதாரண வல்லமையை விளங்கிக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது.
வாழ்க்கையின் புயல்களை நாம் சந்திக்கும்போதோ அல்லது துன்பத்தின் ஆழமான பள்ளத்தாக்குகளில் நீட்டிக்கப்பட்ட நம்பிக்கையின் இறுக்கமான கயிற்றில் நடக்கும்போதோ கிறிஸ்துவின் வல்லமையின் மீதான நம்பிக்கையை நாம் வெளிப்படுத்த முடியும். தேவன் நம்முடைய விசுவாச நடையை பயன்படுத்தி அவர் மீது நம்பிக்கை வைக்க மற்றவர்களை தூண்டுவார்.