இயேசு நமது மீட்பர்
ஒரு சாதாரண தொங்கு கயிா்கூர்தி பயணமாகப் பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் ஆரம்பித்த அந்த பயணம், பயங்கரமான சோதனையாக மாறியது. சவாரி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இரண்டு துணை கயிறுகள் அறுந்து விழுந்ததில், பள்ளிக் குழந்தைகள் உட்பட எட்டு பயணிகள் நூற்றுக்கணக்கான அடிகளுக்கு மேல் அந்தரங்கத்தில் தொங்கினர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பன்னிரண்டு மணி நேர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்கள் ஜிப்லைன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி பயணிகளை மீட்டனர்.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அந்த மீட்புக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள், ஆனால் பாவம் மற்றும் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி மீட்கும் இயேசுவின் நித்திய பணியுடன் ஒப்பிடுகையில் அவர்களின் பணி பெரிதல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு முன், ஒரு தூதன் மரியாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி யோசேப்பை அறிவுறுத்தினார், ஏனெனில் அவளுடைய கரு "பரிசுத்த ஆவியினால்" (மத்தேயு 1:18, 20) அருளப்பட்டது. யோசேப்பு தன் மகனுக்கு இயேசு என்று பெயரிடவும் சொல்லப்பட்டான், ஏனெனில் அவர், "அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (வ.21). இருப்பினும், இந்த பெயர் முதல் நூற்றாண்டில் பொதுவானதாக இருந்தபோதிலும், இந்த குழந்தை மட்டுமே இரட்சகராக இருக்கத் தகுதி பெற்றது (லூக்கா 2:30-32). மனந்திரும்பி தம்மை நம்புகிற அனைவரின் நித்திய இரட்சிப்பையும் முத்திரையிட்டுப் பாதுகாக்கக் கிறிஸ்து சரியான நேரத்தில் வந்தார்.
நாம் அனைவரும் பாவம் மற்றும் மரணத்தின் தொங்கூர்தியில் சிக்கி, தேவனிடமிருந்து நித்திய பிரிவின் பள்ளத்தாக்கில் தொங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் தம்முடைய அன்பினாலும் கிருபையினாலும் இயேசு நம்மை மீட்டு, நம் பரலோகத் தகப்பனிடம் பாதுகாப்பாகக் கொண்டுவர வந்தார். அவரை துதிப்போம்!
கிறிஸ்துவிலுள்ள ஊக்கம்
ஒரு பள்ளி ஆசிரியை தனது மாணவர்கள் தங்கள் சகாக்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் உண்டாக்கும் குறிப்புகளை எழுதப் பரிந்துரைத்தார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் வேறொரு பகுதியில் ஒரு பள்ளியில் துயரம் ஏற்பட்டபோது, அவர்களுக்கும் ஏதாகிலும் நடக்கலாம் என்று ஏற்பட்ட பயத்தையும் வேதனையையும் அவர்கள் மேற்கொள்ள, அவர்களின் குறிப்புகள் சக மாணவர்களை உற்சாகப்படுத்தியது.
தெசலோனிக்கேயிலுள்ள விசுவாசிகளுக்கு பவுல் எழுதியபோது ஊக்கமும் பரஸ்பர அக்கறையும் இருந்தது. அவர்கள் நண்பர்களை இழந்திருந்தனர், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயேசுவின் வாக்களிக்கப்பட்ட வருகையில் நம்பிக்கை வைக்குமாறு பவுல் அவர்களுக்கு அறிவுறுத்தினார் (1 தெசலோனிக்கேயர் 4:14). அது எப்போது நிகழும் என்று அவர்களுக்குத் தெரியாத நிலையில், அவர் திரும்பி வரும்போது விசுவாசிகளாகத் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர்களுக்கு நினைவூட்டினார் (5:9). அதற்குப் பதிலாக, அவர்கள் அவருடனான தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கவும், இதற்கிடையில் "ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி" (வ. 11) செய்யலாம்.
வேதனையான இழப்புகள் அல்லது புரிந்துகொள்ள முடியா துயரங்களை நாம் அனுபவிக்கும் போது, பயம் மற்றும் சோகம் நம்மை மேற்கொள்வது எளிது. பவுலின் வார்த்தைகள், எழுதப்பட்ட காலத்தில் உதவியது போலவே இன்றும் நமக்கு உதவியாக உள்ளன. கிறிஸ்து அனைத்தையும் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போமாக. இதற்கிடையில், குறிப்புகள், நல்வார்த்தைகள், சேவைகள் அல்லது எளிய அணைப்பு மூலம் நாம் ஒருவரையொருவர் ஊக்குவிக்கலாம்.
ஒரு பாட்டியின் விசுவாசம்
நாங்கள் இரவு உணவு அருந்துகையில், என் ஒன்பது வயது பேரன் புன்னகையுடன், "நான் பாட்டியைப் போலவே இருக்கிறேன். நான் படிக்க விரும்புகிறேன்!” என்றான். அவன் வார்த்தைகள் என் மனதை மகிழ்வித்தது. அவன் உடல்நலம் குன்றி, பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த முந்தைய வருடத்தை நான் மீண்டும் நினைத்தேன். அவன் நன்றாகத் தூங்கிய பிறகு, நாங்கள் அருகருகே அமர்ந்து ஒன்றாகப் படித்தோம். புத்தகங்களை நேசிக்கும்படி என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மரபை நான் அவனுக்குக் கடத்துவதில் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால் என் பேரக்குழந்தைகளுக்கு நான் கடத்த விரும்பும் மிக முக்கியமான மரபு அதுவல்ல. என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற விசுவாசத்தின் மரபையே மற்றும் என் பிள்ளைகளுக்குக் கடத்த முயல்கிறேன், அது என் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் விசுவாசத்தை நோக்கிய பயணத்தில் உதவும் என்று நான் ஜெபிக்கிறேன்.
தீமோத்தேயு ஒரு ஆவிக்குரிய தாய் மற்றும் பாட்டியின் மரபைக் கொண்டிருந்தார். மேலும் ஒரு ஆவிக்குரிய வழிகாட்டியான அப்போஸ்தலன் பவுலும் இருந்தார். அப்போஸ்தலன், "அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்" (2 தீமோத்தேயு 1:5) என்றெழுதினார்.
நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க போதுமானதாக இல்லை என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை நமக்குக் கடத்தப்பட்ட மரபு தீமையானதாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அல்லது எந்தவொரு குழந்தையின் வாழ்க்கையிலும் விசுவாசத்தின் மரபை உருவாக்கக் காலம் கடந்து போகவில்லை. தேவனின் உதவியால், நாம் விசுவாச விதைகளை விதைக்கிறோம். விசுவாசத்தை வளரச் செய்பவர் அவரே (1 கொரிந்தியர் 3:6-9).
அன்பு மரணத்தைப் போல வலியது
நெதர்லாந்தின் ரோர்மாண்டில் உள்ள புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க கல்லறைகளுக்கு இடையில் நீண்டு கிடக்கும் பழைய செங்கல் சுவரை சுற்றி நீங்கள் உலாவினால், ஒரு வினோதமான காட்சியைக் காண்பீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும், சுவருக்கு எதிராக ஒரே மாதிரியான இரண்டு உயரமான கல்லறை தலைக்கற்கள் நிற்கின்றன, ஒன்று புராட்டஸ்டன்ட் கணவருக்கும் மற்றொன்று அவரது கத்தோலிக்க மனைவிக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலாச்சார விதிகளின்படி அவர்கள் தனித்தனி கல்லறைகளில் புதைக்கப்பட வேண்டும். இருப்பினும், அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டவிதியை ஏற்கவில்லைபோல; அவர்களின் வழக்கத்திற்கு மாறான தலைக்கற்கள் வேலியிடப்பட்ட தடைக்கு மேலே செல்லும் அளவுக்கு உயரமாக இருப்பதால், மேலே ஒரு அல்லது இரண்டு அடி காற்று இடைவெளி மட்டுமே அவர்களைப் பிரிக்கும். ஒவ்வொன்றின் மேலுள்ள ஒரு கை சிற்பம் மற்றொன்றைத் தொடும், ஒருவருக்கொருவர் கரம் பிடித்துக் கொள்கின்றன. மரணத்திலும் தம்பதிகள் பிரிந்து வாழ மறுத்தனர்.
உன்னதப்பாட்டு அன்பின் வலிமையை விளக்குகிறது. "நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது" (8:6) என்று சாலொமோன் கூறுகிறார். மெய்யான அன்பு ஆற்றல் வாய்ந்தது, மூர்க்கமானது. "அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது" (வ.6). மெய்யான அன்பு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, ஊமையாக்கப்படாது, அழிக்கப்படவும் முடியாது. சாலொமோன் எழுதுகிறார்: “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது" (வ.7).
"தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:16). நமது வலிமையான அன்பு, அவர் நம்மீது கொண்ட கொடிதான அன்பின் உடைந்த பிம்பம் மட்டுமே. உண்மையான எந்த அன்பிற்கும், பற்றிப்பிடிக்கும் எந்த அன்பிற்கும் அவர்தான் மெய்யான ஆதாரம்.
தேவனின் பாதுகாக்கும் பிரசன்னம்
எனது உயர்நிலைப் பள்ளி ஆண்டு புகைப்படங்களைப் பார்த்து, எனது பேரக்குழந்தைகள் பழமையாய் போன சிகை அலங்காரங்கள், ஆடைகள் மற்றும் "பழங்கால" வாகனங்களைக் கண்டு வியந்தனர். நானோ வித்தியாசமான ஒன்றைக் கண்டேன்; முதலாவதாக நீண்டகால நண்பர்களின் புன்னகை, சிலர் இன்னமும் நண்பர்களாக உள்ளோம். இருப்பினும், அதை விட, தேவனின் பாதுகாக்கும் வல்லமையை நான் கண்டேன். அந்த பள்ளியிற்கேற்ப என்னை மாற்றிக்கொள்ள நான் சிரமப்படுகையில், அவரது மென்மையான பிரசன்னம் என்னைச் சூழ்ந்திருந்தது. பாதுகாக்கும் அவருடைய நற்குணம் என்னைப் பேணியது, தம்மைத் தேடும் அனைவருக்கும் அவர் இந்த தயவை அருளுகிறார்.
தேவனின் காக்கும் பிரசன்னத்தை தானியேல் அறிந்திருந்தார். பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டுப் போயிருக்கையில், "தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க," (தானியேல் 6:10) அவர் ஜெபித்தார். அவ்வாறு செய்யக்கூடாது என்ற ராஜாவின் ஆணையைப் பொருட்படுத்தவில்லை (வ. 7-9). நன்மை பயக்கும் அவருடைய ஜெப கண்ணோட்டத்தில், தன்னை தாங்கி, தன் ஜெபங்களை கேட்டு, பதிலளிக்கும் தேவனின் பேணிக்காக்கும் பிரசன்னத்தை தானியேல் நினைவில் கொள்வார். இவ்வாறு, தேவன் அவரைக் கேட்டு, பதில் அளித்து, மீண்டும் அவரைத் தாங்குவார்.
இருப்பினும், புதிய சட்டம் இயற்றப்பட்ட போதிலும், தானியேல் தனக்கு நேரிடப்போவதைப் பொருட்படுத்தாமல் தேவனின் பிரசன்னத்தை இன்னும் நாடினார். மேலும் அவர் முன்பு பலமுறை ஜெபித்தது போலவே ஜெபித்தார் (வ. 10). சிங்கங்களின் குகையிலிருந்தபோது, கர்த்தருடைய தூதன் தானியேலைப் பாதுகாத்தார், அவருடைய மெய்யான தேவன் அவரை மீட்டார் (வ. 22).
தற்கால சோதனைகளின் போது நமது கடந்த காலத்தைப் பார்ப்பது, தேவனின் உண்மைத்தன்மையை நினைவுபடுத்த உதவும். தரியு ராஜா கூட தேவனைப் பற்றிக் கூறியது போல், “அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்” (வ. 27). தேவன் அப்போது நல்லவராகவே இருந்தார், இப்போதும் நல்லவராகவே இருக்கிறார். அவருடைய பிரசன்னம் உங்களைக் காக்கும்.