
கிறிஸ்துவின் பேரன்பு
தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.
தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.
ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.
எனக்குப் பதிலாக இயேசு
இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.
இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.
இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை
பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் ‘மாண்டடம்’ அதாவது “கட்டளை” என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).
இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.
பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

சங்கீதம் 72 தலைவர்கள்
ஜூலை 2022 இல், பிரிட்டனின் பிரதம மந்திரி நேர்மை தவறிவிட்டதாக பலர் கருதியதால் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது (புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் சில மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!). நாட்டின் சுகாதார அமைச்சர் வருடாந்திர பாராளுமன்ற காலை உணவு பிரார்த்தனையில் கலந்துகொண்டு, பொது வாழ்க்கையில் நேர்மையின் அவசியத்தை உணர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்த செயலே இந்த நிகழ்வுக்கு காரணமாய் அமைந்தது. அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தபோது, பிரதமரும் தான் வெளியேற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். இது ஓர் அமைதியான பிரார்த்தனை கூட்டத்தில் இருந்து உருவான ஓர் குறிப்பிடத்தக்கத் தருணம்.
கிறிஸ்தவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களுக்காக ஜெபிக்க உந்தப்படுகிறார்கள் (1 தீமோத்தேயு 2:1-2). அதிகாரிகளின் கடமையையும் அதனை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஜெபம் தேவை என்பதை சங்கீதம் 72 உணர்த்துகிறது. அவை நீதியும் நேர்மையும் கொண்ட (வச. 1-2), பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பாற்றக்கூடிய (வச. 4), தேவையிலுள்ளவர்களுக்கு உதவிசெய்கிற (வச. 12-13), அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிற (வச. 14) ஓர் இலட்சிய தலைவனைக் குறித்து விவரிக்கிறது. அவர் அலுவலக நேரத்தில் “வெளியின்மேல் பெய்யும் மழையைப்போல” (வச. 6) நிலத்திற்கு செழிப்பைக் கொண்டுவருகிறார்கள் (வச. 3, 7, 16). மேசியாவால் மட்டுமே அத்தகைய பாத்திரத்தை முழுமையாக நிறைவேற்றமுடியும் (வச. 11). வேறு யாரால் அந்த தரத்தைக் கொடுக்க முடியும்?
ஓர் நாட்டின் ஆரோக்கியம் அதன் அதிகாரிகளின் நேர்மையால் நிர்வகிக்கப்படுகிறது. நம் தேசங்களுக்காக சங்கீதம் 72 குறிப்பிடும் தலைவர்களை தேடுவோம். மேலும் அவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம் இந்த சங்கீதத்தில் காணப்படும் குணங்களை உருவாக்க அவர்களுக்கு உதவுவோம்.

ஈஸ்டர் முரண்பாடு
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின. செய்தி பரவியதால், சில தேவாலயங்கள் தங்கள் ஆராதனைகளைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டன. மக்கள் திகைத்து, பயந்து வீட்டிற்கு விரைந்தனர். அவர்களின் மகிழ்ச்சியான கொண்டாட்டம் சோகமாக மாறியது.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், ஈஸ்டர் இப்போது "ஈஸ்டர் குண்டுவெடிப்பு" என்று குறிப்பிடப்படும் அர்த்தமற்ற வன்முறையால் மாண்ட அன்புக்குரியவர்களின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது. ஆயினும்கூட துயரம், அப்பாவிகளின் படுகொலை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் சோகம் ஆகியவை உயிர்த்தெழுதலில் உள்ள முரண்பாட்டிற்கு அப்பட்டமான நினைவூட்டல்களே ஆகும். நாம் பிழைக்கும்படி இயேசு மரித்தார். நாம் ஒரு நாள் மரித்தாலும், அவருடைய ஜீவனில் பங்கடைவதால், நாம் மீண்டும் உயிர்த்தெழுவோம் என்பதையும் அறிவோம். அதுதான் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், பவுலின் கேள்வியை நாமும் நம்பிக்கையுடன் உறுதிப்படுத்தச் செய்கிறது, “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?" மேலும், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (வ.55-57) எனலாம்.
உயிர்த்தெழுதல் ஞாயிறு என்பது பாவம் மற்றும் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியின் கொண்டாட்டமாகும், மேலும் இது நாம் பெறக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. 4 ஆம் நூற்றாண்டின் சபை முற்பிதா ஜான் கிறிசோஸ்டம், "கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், நீ (மரணம்) தூக்கி எறியப்பட்டாய்! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், பேய்கள் வீழ்ந்தன! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், தேவதூதர்கள் களித்தனர்! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், ஜீவன் ஆள்கிறது! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், கல்லறையில் ஒருவர் கூட மரித்திருக்கவில்லை!" என்றார். எதிர்பாராத அல்லது காலத்திற்கு முன்னான இழப்பை நாம் சந்திக்கும்போது, இயேசு ஜீவிப்பதால் அவருடைய ஜெயமான உயிர்த்தெழுதலில் களிகூர முடியும் என்ற இந்த உறுதியையே மையமாகக் கொண்டு நமது நம்பிக்கை இருப்பதாக.