
பெருமதிப்புமிக்க பயம்
“எனக்கு மரண பயத்தைப்பற்றி கொஞ்சம் தெரியும். ஏழு ஆண்டுகளுக்குமுன் எனக்குக் குணமாகாத புற்றுநோய் இருப்பதை நான் அறிந்தபோது.. கடுமையான, அலைக்கழிக்கிற, நிலைகுலையச்செய்து மூழ்கடிக்கும் பயத்தை உணர்ந்தேன்" என்று ஜெரமி எழுதுகிறார். ஆனால் தேவனுடைய பிரசன்னத்தைச் சார்ந்துகொள்ளவும், தனது மரணபயத்திலிருந்து தேவனுக்கேற்ற பயபக்திக்குக் கடந்துபோகவும் அவர் கற்றுக்கொண்ட பிறகு, தனது பயத்தைக் கையாள அறிந்துகொண்டார். ஜெரமியை பொறுத்தமட்டில் அதின் பொருள், “மரணத்தை ஜெயமாக விழுங்கு(ம்)வார்” (ஏசாயா 25:8) இந்த அண்ட சராசரத்தின் சிருஷ்டிகரைப் பற்றின வியப்போடு இருப்பதும், அதேநேரம் தேவன் தன்னை அறிந்து நேசிக்கிறார் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதுமே.
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்; அதாவது நமது பரிசுத்த தேவனைக் குறித்த ஆழமான மரியாதையும், வியப்புமே. வேதாகமம் முழுவதும் இழைந்தோடும் கருப்பொருள் இதுவே. நீதிமொழிகள் எனும் தொடர்ச்சியான ஞான வார்த்தைகளால் தனது மகனைக் கர்த்தருக்குப் பயப்படும்படி சாலொமோன் ராஜா அறிவுறுத்தினார். தனது மகன், அவனுடைய “செவியை ஞானத்திற்குச் சாய்த்து” அதை “புதையல்களைத் தேடுகிறதுபோல்” தேடும்போது, அவன் “கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று.. உணர்ந்து, தேவனை அறியும் அறிவை” (நீதிமொழிகள் 2:2,4-5) கண்டடைவான். ஞானம் மற்றும் அறிவோடும், நல்யோசனையையும் புத்தியையும் பெறுவான் (வ.10-11).
நாம் பலவகையான சவால்களைச் சந்தித்து, நடுக்கத்தையும் பயத்தையும் அனுபவிக்கும்போதுதான் நாம் பெலவீனர்களென்று நினைவூட்டப்படுகிறோம். ஆனால் நாம் தேவனிடம் திரும்பி, அவரிடம் உதவி கேட்டு, அவருக்கு முன் நம்மைத் தாழ்த்தி, அவரை பயபக்தியோடு பணிந்துகொள்ளுகையில்; நாம் நமது பயத்தைக் கடந்து அவரைப்பற்றிய ஆரோக்கியமான பயத்திற்கு நேராக நடக்க அவர் நமக்கு உதவுவதைக் காண்போம்.

தேவனின் முழுமையான பராமரிப்பு
டேவிட் வெட்டெர் தனது வாழ்நாளெல்லாம் ஒரு குமிழியில் வாழ்ந்து, தனது பன்னிரண்டாம் வயதில் மரணமடைந்தார். “குமிழ் சிறுவன்” என்று செல்லப் பெயரிடப்பட்ட டேவிட், ஒருவகையான கடும் நோயெதிர்ப்பு குறையோடு பிறந்தார். அவனுடைய பெற்றோர் தங்களது மூத்த மகனை நோய்க்குப் பலிகொடுத்ததால், இளையவனின் உயிர்காக்க மனவுறுதியோடிருந்தனர். அவனுடைய ஆயுளை நீட்டிக்க, நாசாவின் விஞ்ஞானிகள் நெகிழியிலான ஒரு பாதுகாப்பு குமிழியை உண்டாக்கினர், மேலும் அவன் பெற்றோருக்கு விண்வெளி கவச உடையையும் அளித்தனர். இதனைக்கொண்டு, அவர்கள் டேவிட்டை வெளியிருந்து பராமரிக்க முடியும். நாம் நேசிப்பவர்களைப் பாதுகாக்க நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்.
அபிகாயிலின் முட்டாள் கணவனான நாபாலினால் தாவீது ராஜா தவறிழைக்கப்பட்டார். கோபம் தலைக்கேறிய நிலையில், தனது சொந்த கைகளால் பழிதீர்க்க தாவீது வகைத்தேடினார். அபிகாயிலோ அவரை துரிதமாகச் சந்தித்து, “உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்” (1 சாமுவேல் 25:29) என்று ஞானமாக நினைப்பூட்டினாள். எஜமானன் தனது விலையேறப்பெற்றவற்றை ஒன்று சேர்த்து, பத்திரமாகச் சுமக்கும் செயலே “கட்டிலே கட்டுப்படுதல்” ஆகும். தேவன் தாவீதை பத்திரமாக “கட்டிலே” சுமக்க சித்தம் கொண்ட, அபிகாயில் நினைப்பூட்டினாள். தன்னுடையவற்றில் அல்ல, தேவனின் கரத்தில்தான் அவர் பாதுகாப்பாக இருப்பார். “நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது” (வ.31).
பிறருக்குப் பாதுகாப்பு தேவைப்படுகையில், நாம் சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆனாலும், தேவனின் பூரணமான பராமரிப்பில்தான் அவர்கள் உண்மையாகப் பாதுகாக்கப்படுவார்கள்.

இயேசுவே பிரதானம்
எனக்கும் என் மனைவிக்கும் கண்ணியமான, இதமான காதல் திரைப்படங்கள் பிடிக்கும். அவளுக்குச் சற்று அதிகம் பிடிக்கும், எனக்கும் கொஞ்சம் பிடிக்கும். இதுபோன்ற திரைப்படங்களின் தனித்துவமே அவற்றின் மனோரம்மியமான முடிவுதான். சமீபத்தில் நாங்கள் பார்த்த ஒரு திரைப்படத்திலோ சற்று ஆட்சேபனையான அறிவுறுத்தல்கள் இருந்தன. அதில், அன்பு ஒரு உணர்வு, உன் மனதில் பட்டதைச் செய், உன் தனிப்பட்ட சந்தோஷமே பிரதானம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. நம் உணர்வுகள் முக்கியம்தான், ஆனால் சுயத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிகள் நீடிக்கும் திருமணங்களைக் கட்டியெழுப்பாது.
பொதுவான கலாச்சாரம், ஏற்றதாகத் தோன்றும் பல ஆலோசனைகளை அளித்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவை சிதைந்துவிடும். கொலோசெயர் 2 இல் பவுலின் மனதிலிருந்ததெல்லாம் கவனமான கருத்தாய்வு பற்றிய சிந்தனையே. அதில் அவர், “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) வேர்கொண்டவர்களாகவும்.. விசுவாசத்தில் உறுதிப்பட்டு (ம்)” (வ.6-7) இருப்பதே நமது கலாச்சாரத்தில் உள்ள பொய்களை இனங்காணும் வழியென்பதை அடிக்கோடிட்டுள்ளார். அத்தகைய பொய்களை அப்போஸ்தலன் லௌகிக ஞானம், மாயமான தந்திரம் என்று அழைத்து, அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயம் மற்றும் உலகவழிபாடுகள் (வ.8) மேல் கட்டப்பட்டது என்கிறார்.
ஆகவே அடுத்தமுறை நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்கையில், உங்களிடமோ அல்லது பிறரிடமோ “இந்த திரைப்படம் அறிவுறுத்தும் ஆலோசனை ஞானமானதா? சத்தியமென்று வேதாகமம் சொல்லுபவற்றோடு இது ஒத்துப்போகிறதா?” என்று கேட்டுக்கொள்ளுங்கள். மேலும் கிறிஸ்துவே பிரதானம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அவருக்குள் மட்டுமே நாம் மெய்யான ஞானத்தையும், தேவத்துவத்தின் பரிபூரணத்தையும் (வ.9-10) காணமுடியும்.

தேவனின் வாக்குத்தத்தங்கள்
என் தந்தைக்கு நினைவாற்றல் குறைவதைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது. ஞாபகமறதி நோய் கடூரமானது, இது ஜனங்களின் நினைவாற்றலை அளித்து அவர்களுடைய வாழ்க்கையைக் குறித்த ஞாபகங்களை முற்றிலும் அழிக்க வல்லது. ஒரு இரவு, ஒரு கனவு கண்டேன். அதன்மூலம் தேவன் என்னைத் திடப்படுத்தினார் என்று நான் நம்புகிறேன். அந்த கனவில், தேவனின் கரத்தில் ஒரு சிறிய பொக்கிஷ பெட்டி இருந்தது, அவர் என்னிடம் “உன் தந்தையின் நினைவுகள் எல்லாம் பத்திரமாக இதில் வைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இது என்னிடமே இருக்கட்டும், பின் ஒருநாள் பரலோகத்தில் அவரிடமே இதைக் கொடுத்து விடுகிறேன்” என்றார்.
பின்வந்த ஆண்டுகளில், என் தந்தைக்கு நான் யாரென்றே மறந்துபோனபோதும்கூட, இந்த கனவு என்னைத் தேற்றியது. அவருடைய இந்த வியாதி தற்காலிகமானது என்பதையும் நினைவுகொள்வேன். அவர் தேவனுடைய பிள்ளையாக இருப்பதினால், அவர் ஒருநாளில் முழுமையாக புதுப்பிக்கப்படுவார்.
உபத்திரவத்தை பவுல் இலேசானதென்றும் தாற்காலிகமானதென்றும் (2 கொரிந்தியர் 4:17) விவரித்ததையும் நான் நினைவில்கொள்ள இது உதவியது. அப்போஸ்தலன் உபத்திரவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை, அவரும் அநேக உபத்திரவங்கள் பட்டிருந்தார் (வ.7-12). நித்தியத்தின் வெளிச்சத்திலும், கிறிஸ்துவிலுள்ள நமது எதிர்கால மகிமையிலும் நமது பாடுகள் எல்லாம் தற்காலிகமாகவும், இலேசானதாகவும் தோன்றும் என்பதையே அவர் வலியுறுத்தினார். இயேசுவுக்குள் நாம் இப்போது பெற்றிருக்கும் அனைத்து மகிமையான ஆசீர்வாதங்களும், ஒருநாளில் நாம் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களும் நித்தியகாலத்திற்கும் பாடுகளைக்காட்டிலும் பெரிதானவையாக இருக்கும் (வ.17)
நாம் மனந்தளர வேண்டியதில்லை, காரணம் தேவனும் அவரின் வாக்குத்தத்தங்களும் நமக்குண்டு. நாம் பாடுபட்டாலும், நம்மை நாளுக்குநாள் புதிதாக்கும் (வ.16) அவரது வல்லமையை நம்பி விசுவாசத்தில் நாம் வாழமுடியும். அவருடைய நித்திய வாக்குகளை (வ.18) நோக்கியிருப்போமாக.
