வகை  |  odb

எப்போதும் ஜெபியுங்கள்

தேர்வில் எனக்கு 84 மதிப்பெண் கிடைத்தது! என் வாலிப மகளின் குறுஞ்செய்தியை என் அலைபேசியில் படித்த போது அவளது உற்சாகத்தை உணர்ந்தேன். அவள் உயர்நிலைப் பள்ளியில் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினாள், மதிய உணவு இடைவெளியில் அவளுடைய அலைபேசியைப் பயன்படுத்தினாள். என் மகள் ஒரு சவாலான தேர்வில் சிறப்பாகச் செய்ததால் மட்டுமல்ல, அதை என்னிடம் தெரிவிக்க அவள் விரும்பியதால்  என் அம்மாவின் இதயம் துள்ளியது. அவள் தன்னுடைய நல்ல செய்தியை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாள்!

அவளுடைய செய்தி எனது நாளை மகிழ்ச்சியாக்கியதை உணர்ந்து, நான் தேவனை அணுகும்போது அவர் எவ்வாறு உணர கூடும் என்று நான் பின்னர் சிந்தித்தேன். நான் அவருடன் பேசுகையில் அவர் மகிழ்வாரா? ஜெபம் என்பது நாம் தேவனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதும், "இடைவிடாமல்"  (1 தெசலோனிக்கேயர் 5:17) செய்யச் சொல்லப்பட்ட ஒன்றுமாகும். அவருடன் பேசுவது, நன்மை தீமையில் அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் நம்மைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் நம் காரியங்களைத் தேவனுடன் பகிர்வது  நம் கவனத்தைத் திசைதிருப்பி, அவரைப் பற்றிச் சிந்திக்க உதவுகிறது. ஏசாயா 26:3 கூறுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” நாம் தேவனிடமாய் கவனத்தைத் திரும்புகையில், நமக்குச் சமாதானம் காத்திருக்கிறது.

நாம் எதை எதிர்கொண்டாலும், தேவனுடன் தொடர்ந்து பேசி,  நம் சிருஷ்டிகரும் இரட்சகருமானவருடன் இணைப்பில் இருப்போமாக. ஒரு ஜெபத்தை முணுமுணுத்து, "நன்றி செலுத்தவும்", மகிழ்ச்சி கொள்ளவும்  மறவாதிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பவுல் கூறுகிறார், இது நம்மைக் குறித்து "தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 தெசலோனிக்கேயர் 5:18).

எல்லைகளைக் கடந்த அன்பு

“தேவன் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருந்தார்! எங்கள் திருமண  ஆண்டுவிழாவிற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்"  ராதாவின் குரல் சீராக இருந்தது, அவள் கண்களில் கண்ணீர் அவளது உண்மையைக் காட்டியது. எங்களுடைய சிறிய குழுவிலிருந்தவர்கள் மிகவும் மனம் நெகிழ்ந்தனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் கடந்த வருடங்களில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு விசுவாசி என்றாலும், ராகுல் திடீரென கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டார் மேலும் அவர்களின் நான்கு வயது மகளின் உயிரைப் பறித்தார். அவர் பல ஆண்டுகள் மனநல காப்பகத்தில் இருக்க வேண்டியிருந்தது, ஆனால் ராதா அவரைச் சந்தித்தார், மேலும் தேவன் அற்புதமாகக் குணப்படுத்தினார், அவளை மன்னிக்க உதவினார். ஆழ்ந்த மனவேதனைகள் இருந்தபோதிலும், அவர்களுக்கிடையேயான அன்பு வளர்ந்தது.

அத்தகைய அன்பும் மன்னிப்பும் ஒரே ஒரு ஆதாரத்திலிருந்து மட்டுமே வர முடியும். தாவீது தேவனைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார், “அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும்.. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.” (சங்கீதம் 103:10, 12).

தேவன் நமக்குக் காண்பிக்கும் இரக்கமானது அவருடைய அளவிடப்படமுடியா அன்பின் மூலம் வருகிறது: “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ.. அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” (வ.11). அந்த மிகவும் ஆழமான அன்பு அவரை சிலுவை மற்றும் கல்லறையின் ஆழத்திற்குச் சென்று நம்முடைய பாவங்களைப் போக்கும்படி தூண்டியது, இதனால் "அவரை ஏற்றுக்கொண்டவர்கள்" (யோவான் 1:12) அனைவரையும் அவர் தம்மிடமாய் கொண்டு வர முடியும்.

"தேவன் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருக்கிறார்!" ராதா சொன்னது சரிதான். அவருடைய அன்பும் மன்னிப்பும் நினைத்துப்பார்க்க முடியாத எல்லைகளுக்கு அப்பால் சென்று நித்திய வாழ்வை நமக்களிக்கிறது.

பொறுமையில் படிப்பினைகள்

பாப் சலம் தனது மூக்கின் மூலம் (அல்லது ஒரு கரண்டியைத் தனது முகத்தில் இணைத்துக்கொண்டு) ஒரு வேர்க்கடலையை 'பைக்' சிகரத்தின் மேலே நகர்த்திய வேகச் சாதனையைப் படைத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் இடையூறு ஏற்படாமல் இருக்க, இரவில் உழைத்து ஏழு நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த விதையை முடிக்கும் நான்காவது நபர் பாப், அதாவது இன்னும் மூன்று பேர் இதைப் பொறுமையாகச் செய்திருக்கிறார்கள்

அவர்களின் பொறுமைக்கான தேவை சுயமாக ஏற்படுத்தப்பட்டது என்று நாம் கூறலாம், ஆனால் வாழ்க்கையில் பெரும்பாலும் அவ்வாறு இருக்காது. நமக்குப் பொறுமை வேண்டும். இது ஆவியின் கனியாகும் (கலாத்தியர் 5:22) மேலும் "ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி" (யாக்கோபு 1:4) ஆக இதுவே அத்தியாவசியமான நற்பண்பு. சுற்றியுள்ள அனைவரும் முழு பீதியில் இருக்கும்போது பொறுமைசாலிகளோ அமைதி காப்பர் . அவர்களும் நிலைமை சீராக விரும்புவர், அது சீராகாவிடினும் அவர்களுக்குக் கவலையில்லை. விவேகமாய் செயல்பட ஞானத்திற்காகத் தேவனை நம்பி, அவர்கள் நிலையான போக்கில் பயணிப்பர் (வ. 5).

பொறுமையிலுள்ள பிரச்சனை என்னவென்றால், அதைக் கற்றுக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உண்டு. யாக்கோபு கூறுகிறார் "உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று" (வ. 3). இத்தகைய பரீட்சையானது பெரிய மற்றும் சிறிய வழிகளில் வருகிறது. விமான நிலையத்திலிருந்து இதை எழுதுகிறேன். எனது இரவு 11:00 மணி விமானம் 2:00 மணி வரை தாமதமானது, பின்னர் ரத்து செய்யப்பட்டது. ஒரு இரவு தூக்கம் இல்லாமல், நான் காபி குடித்துக்கொண்டிருக்கிறேன், எப்போதாவது வீட்டிற்கு வருவேன் என்று நம்புகிறேன். விமான நிலையத்தில் ஒரு நாள் முழுவதையும் தூக்கத்தில் கழிப்பது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் என் அன்பான தகப்பன் எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறார்.

இன்றைய நாளுக்கான எனது படிப்பினை முடிந்திட ஜெபிக்கிறேன், ஆனால் யார் அறிவார்? அடுத்த விமானத்திற்கான காத்திருப்புப் பட்டியலைச் சரிபார்க்கும் நேரம் இது.

இயேசுவுக்காக ஓடுதல்

100 மீட்டர் விரைவோட்டத்தை பற்றி நாம் குறிப்பிடுகையில், ​​தற்போதைய உலக சாதனையாளரான உசைன் போல்ட் நினைவுக்கு வரலாம். ஆனால் ஜூலியா "ஹரிக்கேன்" ஹாக்கின்ஸை நாம் மறக்க முடியாது. 2021 ஆம் ஆண்டில், லூசியானா முதியோருக்கான விளையாட்டுப் போட்டியில் ஜூலியா 100 மீட்டர் விரைவோட்டத்தில் மற்ற அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் முன்பாக இறுதிக் கோட்டைக் கடந்து வெற்றி பெற்றார். அவரது நேரம் போல்ட்டின் 9.58 வினாடிகளை விடச் சற்று குறைவு;  60 வினாடிகளுக்கு மேல். ஆனால் அவளுக்கு 105 வயது!

ஒரு பெண் இந்த வயதிலும் வேக ஓட்டம் ஓடிக்கொண்டிருப்பது பெரிய காரியம். மேலும் இயேசுவை தங்கள் இலக்காகக் கொண்டு ஓடுவதை நிறுத்தாத விசுவாசிகளைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு இன்னும் நிறைய உண்டு (எபிரெயர் 12:1-2). வாழ்க்கையின் முதுமையிலும் உண்மையுள்ளவர்களைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்: “நீதிமான் பனையைப் போல் செழித்து . . . அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (92:12-14).

இவ்வகையான தரத்தையுடைய முதிர்ந்த விசுவாசிகள், அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் மேலும் அறிவுறுத்தலைக் காணலாம். முதிர்வயதுள்ள புருஷர்கள் "விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி" (தீத்து 2:2), முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் "நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும்" (வ. 3) சொல்கிறார்.

ஓட்டத்தை நிறுத்துவதற்கு முதிர்ந்த விசுவாசிகளுக்கு அழைப்பு இல்லை. தடகள பாதையில் ஜூலியா செய்வது போல் அல்ல, ஆனால் அவர்களுக்குத் தேவையான பெலனை அவர் வழங்குவதால் தேவனை மகிமைப்படுத்தும் வழிகளில் ஓடவேண்டும். அவருக்கும் பிறருக்கும் நன்றாக ஊழியம் செய்ய அனைவரும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவோம்.