உண்மையான நன்றி
சேவியர், தன்னுடைய முதல் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு, தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது. என்னுடைய கணவன் ஆலன், ஒரு கட்டு நன்றி அட்டைகளை அவனிடம் கொடுத்து, வேலையினிமித்தம் அவன் சந்திக்கும் எஜமானர்களுக்கு இந்த நன்றி அட்டையை அனுப்புமாறு சொன்னார். மேலும் தன்னுடைய பல ஆண்டுகள், மேலாளர் அநுபவத்தை பயன் படுத்தி, அவனுக்கு ஒரு மாதிரி நேர்முகத் தேர்வாளர் போன்று செயல் பட்டு, அவனிடம் பல கேள்விகளைக் கேட்டார். இந்த மாதிரி தேர்வு முடிந்ததும், ஆலன் தன்னுடைய தற்குறிப்பின் பல பிரதிகளை எடுத்துக் கொண்டு, புறப்பட்டான். ஆலன் அவனிடம், நன்றி அட்டையை நினைவு படுத்திய போது, “எனக்குத் தெரியும், ஒரு உண்மையான நன்றி குறிப்பு, என்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்” என்றான்.
அந்த மேலாளர் சேவியரை வேலைக்கு தேர்ந்தெடுத்த போது, அவர், தன்னுடைய பல ஆண்டு அநுபவத்தில், தான் பெற்ற, முதல், கையால் எழுதப்பட்ட நன்றி குறிப்புக்காக நன்றி தெரிவித்தார். நன்றி சொல்வது, என்றும் நிலைத்திருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சங்கீதகாரனின் உள்ளம் நிறைந்த ஜெபங்களும், நன்றி ஆராதனைகளும் சங்கீதங்களின் புத்தகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன .நூற்றைம்பது சங்கீதங்களிலும், இந்த இரு வசனங்களுமே நன்றியைக் குறிக்கும் செய்தியை வெளிப்படுத்துகின்றது. ”கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங். 9:1-2)
தேவன் நமக்குச் செய்துள்ள அதிசயமான கிரியைகளுக்காக, நாம் நன்றியை வெளிப்படுத்துவோமாயின், அதற்கு முடிவே இருக்காது. ஆனாலும், ஜெபத்தின் மூலம் நம்முடைய உண்மையான நன்றியைத் தெரிவிக்கத் தொடங்குவோம். தேவன் நம் வாழ்வில் செய்துள்ள எல்லா நன்மைகளுக்காகவும், அவர் செய்வேன் என்று நமக்கு தந்துள்ள வாக்குத் தத்தங்களுக்காகவும், அவரைப் போற்றி, நன்றியோடு அவரை ஆராதிக்கும் வாழ்வை நாம் உருவாக்கிக் கொள்வோம்.
ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதே
என்னுடைய சிநேகிதியின் மருத்துவ அறிக்கை, அவளுக்கு புற்று நோய் என்று தெரிவித்த போது, அவளுடைய காரியங்களை ஒழுங்கு படுத்தும் படி மருத்துவர் ஆலோசனை கூறினார். தன்னுடைய கணவனையும்,சிறு குழந்தைகளையும் நினைத்து கவலை கொண்டவளாய், அழுகையோடு என்னை அழைத்தாள். நான், அவளுடைய அவசர ஜெபத் தேவையை என்னுடைய மற்ற நண்பர்களுக்கும் தெரிவித்தேன். மற்றொரு மருத்துவர் அவள் நம்பிக்கையை விடாதிருக்குமாறு அவளை ஊக்கப்படுத்தியதோடு, அவருடைய குழுவினர், அவளுக்குத் தேவையான அனைத்து உதவியையும் செய்வதாகவும் வாக்களித்தைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். சில நாட்கள் கடினமானதாக இருந்த போதிலும், தனக்கு எதிராக நடந்த காரியங்களை யெல்லாம் தள்ளி விட்டு, தேவனையே நோக்கிப் பார்த்தாள். தன் நம்பிக்கையை விடாதிருந்தாள்.
என்னுடைய சிநேகிதியின் விடாப்பிடியான நம்பிக்கை, லூக்கா 8ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மனிதரால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணை எனக்கு நினைவு படுத்துகின்றது. பன்னிரண்டு ஆண்டுகளாக சகித்து வந்த வேதனையால் சோர்வுற்று, ஏமாற்றமடைந்து, புறக்கணிக்கப்பட்ட அவள், இயேசுவின் பின் பக்கமாக வந்து, தன் கையை நீட்டி, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவளுடைய விசுவாசத்தினாலும், இயேசுவின் பேரில் கொண்டிருந்த விடாப்பிடியான நம்பிக்கையாலும், மனிதரால் கொடுக்கமுடியாத சுகத்தை, சூழ்நிலைகள் அவளுக்கு எதிராக அமைந்த போதிலும் உடனேப் பெற்றுக் கொண்டாள் (வச. 43-44).
நாம் முடிவில்லாத வேதனைகளை அநுபவித்துக் கொண்டிருக்கலாம், சூழ்நிலைகள் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யலாம், காத்திருத்தல் தாங்க முடியாததாக இருக்கலாம், நமக்கு எதிரான காரியங்கள் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டேயிருக்கலாம், நாம் தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தும், நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் சுகத்தை இன்னும் பெறாமலிருக்கலாம். எதுவாயினும், இயேசு நம்மை அவரண்டை வரவும், அவர் மீது விசுவாசமாயிருக்கவும் அழைக்கின்றார். அவராலே கூடும் எனவும், அவர் நம்பத்தகுந்தவர், நம்மருகிலிருக்கிறார் என்பதையும் நம்பும் படியும் அழைக்கின்றார்.
போர் வீரனைப் போல நட
பதினெட்டே வயது நிரம்பிய எம்மா, சமுதாய ஊடகங்களில் இயேசுவைப் பற்றி பேசி வந்தாள். வம்பர்கள், அவள் கிறிஸ்துவின் மீது வைத்துள்ள ஆழ்ந்த அன்பினையும், மகிழ்ச்சியையும் விமர்சித்த போதிலும், சிலர் அவளுடைய புறத் தோற்றத்தைக் குறித்துக் கடுமையாகச் சாடியபோதும், அவள் உண்மையாய் இருந்தாள். வேறு சிலர், அவள் தன்னுடைய நேரத்தையெல்லாம் தேவனுக்கென்று அர்ப்பணித்திருப்பது, ஒரு அறிவில்லாத செயல் என்றனர். இந்த இரக்கமில்லாத வார்த்தைகள் எம்மாவின் இருதயத்தை ஆழமாக காயப்படுத்தியிருந்த போதிலும், இயேசுவின் மீதும், பிறர் மீதுமுள்ள அன்பினால், விசுவாசத்தின் தைரியத்தோடு சுவிசேஷத்தைப் பரப்புவதை விடவில்லை. பிறர் தரும் விமர்சனங்களின் மூலம் அவளுக்குக் கிடைத்த அடையாளத்தையும், அவமதிப்பையும் நம்பும்படி தூண்டப்படும் போது, அவள் தேவனுடைய உதவியை நாடினாள், தன்னை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபித்தாள், வேத வசனங்களைத் தியானித்தாள். பரிசுத்த ஆவியானவர் தந்த தைரியத் தோடும், பெலத்தோடும் தொடர்ந்து பணி செய்தாள்.
கிதியோன், மீதியானியரின் கையினால் மிகுந்த உபத்திரவத்தைச் சந்தித்தான் (நியா. 6:1-10) தேவன் அவனை “பராக்கிரமசாலி” என்று அழைத்தபோதும் அவன் தனக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட சந்தேகங்களையும், தாழ்வு மனப்பான்மையையும், பாதுகாப்பின்மையையும் விட்டு வெளிவரப் போராடினான் (வச. 11-15). தேவனுடைய பிரசன்னம் அவனோடிருக்கின்றதை பல முறை சந்தேகித்தான். தேவனுடைய பிரசன்னத்தைக் குறித்தும், தன்னுடைய தகுதியைக் குறித்தும் கேள்விகள் கேட்டான். கடைசியாக விசுவாசத்தில் தன்னை அர்ப்பணித்தான்.
நாம் தேவனை நம்பும் போது, நம்மைக் குறித்து அவர் சொல்வது உண்மையென விசுவாசித்து வாழ வேண்டும். துன்பங்கள், நமக்குள் சந்தேகங்களைக் கொண்டு வரலாம், நம் அன்புத் தந்தை நம்மோடிருந்து, நமக்காக யுத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளார். எனவே நாம் வலிமையான போர் வீரனாக ,தேவனுடைய அன்பை ,ஆயுதமாகவும், அவருடைய முடிவில்லா கிருபை நம்மைப் பாதுகாக்க, அவருடைய உண்மையைப் பற்றிக் கொண்டு வாழ்வோம்
உன்னுடைய பெயரை அதில் எழுது
கிளெனிஸ் நெல்லிஸ்ட் எழுதிய “தேவனுடைய அன்புக் கடிதங்கள்” என்ற புத்தகங்கள் குழந்தைகளைத் தனிப்பட்ட முறையில் தேவனோடு ஆழமாக உறவாட அழைக்கின்றன. இந்தப் புத்தகங்களில் வரும் ஒவ்வொரு வேதாகமக் கதைக்கும் பின்னால், தேவனுடைய செய்தி என்ற பகுதியில் குழந்தைகள் தங்களுடைய பெயரை எழுதுவதற்கான இடம் விடப்பட்டிருக்கும். வேதாகமச் சத்தியங்களை, இளம் வாசகர்கள் தங்களுடையதாக்கிக் கொள்ளும்போது, வேதாகமம் வெறும் கதையல்ல என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். தேவன் அவர்கள் ஒவ்வொருவரோடும் உறவு வைத்துக் கொள்கின்றார், தான் மிகவும் நேசிக்கும் குழந்தைகளோடு வேதாகமத்தின் மூலம் பேசுகின்றார் என்பதையும் கற்றுக் கொள்கின்றனர்.
நான் இந்த புத்தகத்தை என்னுடைய உறவினரின் குழந்தைக்காக வாங்கி அதில், தேவனுடைய செய்தி என்ற பகுதியில் அவனுடைய பெயரை எழுதினேன். தன்னுடைய பெயரைப் பார்த்ததும் அவன் வெகுவாக மகிழ்ந்தான் அவன், “தேவன் என்னையும் நேசிக்கிறார்!” என்றான். நம் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருக்கின்ற நம்முடைய படைப்பின் கர்த்தாவைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்து கொள்வது எத்தனை ஆறுதலாகவுள்ளது.
தீர்க்கதரிசி ஏசாயாவின் மூலம் தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசிய போது, அவர்களின் கவனத்தை வானத்துக்கு நேராகத்திருப்புகின்றார். தேவன் வானத்திலுள்ள அனைத்து விண் மீன்களையும் கட்டுப் படுத்துகின்றார். அவற்றைப் பெயரிட்டு அழைக்கின்றார் (ஏசா. 40:26). ஒவ்வொரு விண் மீனுக்கும் தனிப்பட்ட மதிப்பை நிர்ணயிக்கின்றார், ஒவ்வொன்றையும் அன்போடு வழிநடத்துகிறார். அவர் தன்னுடைய ஜனங்களில் ஒருவரையும் மறப்பதில்லை, விட்டு விலகுவதுமில்லை அவர் உருவாக்கிய ஒவ்வொரு அன்பு குழந்தையையும் ஒரு நோக்கத்தோடு உருவாக்கியுள்ளார். அவர்கள் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளார்.
சர்வவல்ல தேவன், நமக்குத் தந்துள்ள வாக்குத்தத்தங்களையும், அவர் நம்மீது வைத்துள்ள அன்பையும் வேதாகமம் நமக்குக் காட்டுகின்றது .நாம் நமது பெயரை அவற்றில் எழுதிக் கொள்ளலாம். அந்தக் குழந்தை மகிழ்ந்து கூறியது போல நாமும் “தேவன் என்னையும் நேசிக்கின்றார்” என்று நம்பிக்கையோடு சொல்லுவோம்.
நாம் எதைச் செய்தாலும்
சி.எஸ். லூயிஸ் என்பவர் தான் எழுதிய “எதிர் பாராத சந்தோஷம்” (Surprised by Joy) என்ற புத்தகத்தில் தனது 33வது வயதில் எப்படி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார். “எதிர்ப்பைத் தெரிவித்தும், போராடியும், வெறுப்பைக் காண்பித்தும், ஏதாவது ஒரு வழியில் தப்பித்துக் கொள்ள வகை தேடியும்” முடியாமல் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாக தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். லூயிஸின் தனிப்பட்ட எதிர்ப்புகள், குறைபாடுகள் மற்றும் தடைகளின் மத்தியிலும், தேவன் அவரை ஒரு தைரியமான விசுவாச வீரனாக மாற்றினார். கிறிஸ்துவின் உண்மை, அன்பு ஆகியவற்றை லூயிஸ் தன்னுடைய வல்லமையான கதைகளாலும், கட்டுரைகளாலும் வெளிக் காட்டினார். அவர் மரித்த பின்னரும் ஐம்பத்தைந்து ஆண்டுகளாக அவை வாசிக்கப்பட்டும், பிறரோடு பகிர்ந்து கொள்ளப்பட்டும் வருகின்றன. அவருடைய வாழ்வு அவருடைய நம்பிக்கையை வெளிப் படுத்தியது. “ஒரு மனிதன் மற்றொரு இலக்கினை நிர்ணயிக்க அல்லது ஒரு புதிய கனவினைக் காண வயது ஒரு வரம்பல்ல” என்பதை அவருடைய வாழ்வு காட்டியது.
நாம். நமக்குத் திட்டங்களை ஏற்படுத்தி, கனவுகளைக் காணும் போது, தேவன் நம்முடைய திட்டங்களைத் தூய்மைப் படுத்தி, நாம் தேவனுக்காகச் செய்யும் காரியங்களை முழு அர்ப்பணத்தோடு செய்யும்படி நம்மை பெலப் படுத்துகின்றார் (நீதி. 16:1-3). சாதாரணப் பணியிலிருந்து மிகப் பெரிய சாதனை வரை அனைத்திலும் நம்மைப் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு மகிமையுண்டாகும்படி நம்மால் வாழ முடியும். ஏனெனில், நம்முடைய நடைகளை உறுதிப் படுத்துகின்றவர் கர்த்தர் (வச. 4,9). நம்முடைய ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு வார்த்தையையும் தேவனே கவனித்துக் கொள்வதால் (வச. 7) அவை தேவனை கனப்படுத்துவதாக இருக்கின்றன.
நம்முடைய தடைகளும், குறுக்கீடுகளும், ஓரிடத்தில் நிலைப்பட்டு விடும் தன்மையும், குறுகிய கனவுகளும் தேவனுடைய செயல்பாட்டிற்குத் தடைகளாகாது. நாம் அவருக்காக வாழ தேர்ந்து கொள்ளும் போது, நம்மை முழுமையாக அர்ப்பணித்து அவரையே சார்ந்து இருப்போமாகில், அவர் நமக்கென்று வைத்திருக்கும் திட்டங்களைச் செயல் படுத்துவார். நாம் எதைச் செய்தாலும் அவரோடும் அவருக்காகவும் அவர் மூலமாகவுமே செய்ய முடியும்.
வாழு, ஜெபி, நேசி
இயேசுவின்மேல் தன் பெற்றோர் கொண்ட ஆழமான விசுவாச வாழ்க்கையின் பலனாக, விளையாட்டு வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் சிறந்த ஒரு விசுவாச வீரராக வளர்ந்தார். 1936ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆப்பிரிக்க அமெரிக்க ஓவன்ஸ் அமெரிக்க அணியிலிருந்து விளையாடி தங்கள் இனத்திற்கு எதிரிகளான நாசிகளுக்கும், அவர்களின் தலைவனான ஹிட்லருக்கும் முன்பாக நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றார். அவர் தன்னோடு விளையாடிய விளையாட்டு வீரரான லஸ்லாங்க் என்ற ஜெர்மானியரை நண்பராக்கிக்கொண்டார். நாசிக்களின் பிரச்சாரங்களில் மூழ்கிப்போயிருந்த லஸ்லாங்க், ஓவனின் விசுவாச வாழ்க்கையினாலே பிற்காலத்தில் தொடப்பட்டார். இந்த லஸ்லாங்க் பிற்காலத்தில் ஓவன்ஸிற்கு இவ்வாறு எழுதினார், பெர்லினில் நான் முதன்முதலில் உங்களை சந்தித்து பேசும்பொழுது உங்கள் முழங்கால்கள் தரையில் முடங்கியிருந்தன. நீங்கள் ஜெபத்தில் இருந்தீர்களென நான் அறிந்தேன். நானும் அந்த தேவனை விசுவாசிக்க விரும்புகிறேன்.
ஓவன்ஸ், பவுலின், 'தீமையை வெறுக்கின்ற" அனுபவத்தை எவ்வாறு வெளிப்படுத்திக்காட்டுவது என்பதை நன்றாக அறிந்திருந்தார். 'அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்" என்கின்ற பவுலின் அறிவுரைகளையும் (ரோம. 12:9-10) அறிந்திருந்தார். அவர் தன்னைச் சுற்றியுள்ள தீமைகளுக்கு தீமை செய்ய வாய்ப்பிருந்தும், ஓவன்ஸ் தன்னுடைய விசுவாசத்தையும் அன்பையும் காட்டுவதை தெரிந்துகொண்டு, தன் நண்பனிடத்தில் அதைக்காட்டினபடியால், அவர் (லஸ்) பிற்காலத்தில் ஒரு பெரிய விசுவாசியாக மாறினார்.
தேவனுடைய பிள்ளைகள் ஜெபத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கும்போது (வச. 12) அவர் நம்மை 'மற்றவர்களோடு ஐக்கியமாய்" வாழ வல்லமையளிக்கிறார் (வச. 16). நாம் ஜெபத்தினை சார்ந்திருக்கும்பொழுது, நாம் நம்மை விசுவாசத்திற்கும், தேவசாயலில் உருவாக்கப்பட்ட எல்லாரையும் நேசிப்பதற்கும் ஒப்புக்கொடுத்து வாழ முடியும். நாம் கர்த்தரிடத்தில் கதறி அழும்போது, எல்லாத்தடைகளையும் உடைத்து, நம்முடைய அயலகத்தாரிடமும் சமாதான பாலத்தை அமைத்து அவர்களை நேசிக்க தேவன் நம்மை பெலப்படுத்துவார்.
தேவனுடைய சிருஷ்டிப்பினைக் கொண்டாடுதல்
அந்தத் திருச்சபையில் இசை முழுவதுமாக நிரப்பின போது, நிறக் குருடரான லான்ஸ் ப்ரௌன் என்கின்ற ஓவியர், ஆலயத்தின் மேடையில் ஏறி அவருக்கு முன்னிருந்த ஒரு பெரிய வெண்ணிறத் துணிக்கு முன்பாகவும், திருச்சபையாருக்குத் தன் முதுகைக் காட்டியும் நின்று கொண்டு, தன்னுடைய பிரஷ்ஷினை கருப்பு நிற வண்ணத்தில் தோய்த்து எடுத்தார். அழகான முறையில் அவர் ஒரு சிலுவையை வரைந்து முடித்தார். படிப்படியாக அவர் பிரஷ்ஷைக் கொண்டும், கைகளை உபயோகித்தும் இந்த காட்சி சொல்லுபவர் கிறிஸ்துவின் சிலுவையிலறைதலையும், உயிர்த்தெழுதலையும் வரைந்து முடித்தார். அந்தத் துணியின் மற்ற பகுதியினை கருப்பு வண்ணமிட்டு பூர்த்திசெய்தார். மேலும், நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களை உபயோகித்து, மீதமுள்ள மொத்த படத்தினையும் 6 நிமிடங்களுக்குள்ளாக வரைந்து முடித்தார். அவர் அந்தத் துணி பேனரைத் தலைகீழாகத்திருப்பி, அதில் மறைந்துள்ள ஒரு தோற்றத்தை சபையாருக்குக் காட்டினார். அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கம் நிறைந்த முகம்.
ஆலய ஆராதனையில் துரிதமான ஓவியத்தை வரைவதைக் குறித்து தனது நண்பர் கொடுத்த ஆலோசனையை ஏற்க ப்ரௌன் முதலில் தயங்கினார். ஆனால், இப்பொழுதோ அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து, தன்னுடைய ஓவியத்தின் மூலம் கிறிஸ்துவைப் பகிர்ந்து கொண்டு, மக்களை ஆராதனைக்குள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு விதவிதமாகக் கொடுத்த வரங்களைக் குறித்த தரத்தினையும், நோக்கத்தையும் குறித்து பவுல் அப்போஸ்தலன் உறுதிப் படுத்துகிறார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் தேவனுடைய நாம மகிமைக்காக, ஒவ்வொருவரையும் அன்பிலே கட்டி எழுப்ப உருவாக்கப்பட்டு இருக்கிறோம் எனவும் கூறுகிறார் (ரோம. 12:3-5). பவுல் மேலும் நம்மை நம் வரங்களைக் கண்டு பிடிக்கவும், அவைகளைப் பயன்படுத்தவும், அவற்றின் மூலம் மற்றவர்களை உருவாக்கி அவர்களை இயேசுவிற்கு நேராக வழிநடத்தவும், கருத்தோடும், சந்தோஷத்தோடும் ஊழியம் செய்ய நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச. 6-8). தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஆவிக்குரிய வரங்கள், தாலந்துகள், திறமைகள் மற்றும் அனுபவங்களைக் கொடுத்து முழு இருதயத்தோடே அவருக்கு, திரை மறைவிலோ அல்லது எல்லாருக்கும் முன்பாகவோ ஊழியம் செய்யும்படியாக அழைத்திருக்கிறார். நாம் அவருடைய சிருஷ்டிப்பினைக் கொண்டாடும்போது, அவர் நம்முடைய தனித்தன்மையை உபயோகித்து, சுவிசேஷத்தினை பரப்பவும், மற்ற விசுவாசிகளை அன்பிலே கட்டவும் நம்மைப் பயன்படுத்துகிறார்.
யார் இவர்?
நானும் என் கணவரும் தேனிலவை முடித்துவிட்டு எங்களுடைய ஊருக்குத் திரும்பும்போது, விமான நிலையத்தில் லக்கேஜ்களை ஏற்றும் பகுதியில் காத்திருந்தோம். என் கணவரை முழங்கையால் இலேசாக இடித்து, பக்கத்தில் நின்றிருந்த ஒருவரைக் காட்டினேன்.
என் கணவரும் ஓரக்கண்ணால், “யார் அவர்” என்று சைகையால் கேட்டார்.
அவர் ஒரு நடிகர், அவர் பிரபலமாகப் பேசப்படும் கதாபாத்திரங்கள் பற்றிச் சொன்னேன். பிறகு நாங்கள் இருவரும் அவரிடம் சென்று, எங்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். இருபத்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டாலும், ஒரு திரைப்பட நடிகரைச் சந்தித்த அனுபவம் இன்றும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிரபல நடிகர் ஒருவரைச் சந்திப்பது ஒரு புறத்தில் இருக்கட்டும். ஆனால் அதைவிட முக்கியமான ஒருவரை தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொண்டதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். “யார் இந்த மகிமையின் ராஜா?” (சங். 24:8). சர்வவல்ல தேவனாகிய அவரை சிருஷ்டிகர், போஷித்துக் காப்பாற்றுகிறவர், சர்வத்தை ஆளுகிறவர் என்று சங்கீதக்காரன் சுட்டிக்காட்டுகிறார். “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்” என்று புகழ்ந்து பாடுகிறார் (வச. 1-2). முற்றிலும் பிரமித்தவராக, தேவன் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும், ஆனாலும் அவரிடம் நாம் செல்லமுடியும் என்றும் தாவீது கூறுகிறார் (வச. 3-4). அவருக்காக நாம் வாழும்போது, அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாம், அவருடைய வல்லமையைப் பெறலாம், அவர் நமக்காக யுத்தம்செய்வார் என்று நம்பிக்கையோடு இருக்கலாம் (வச. 8).
தேவனைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு அவரே வாய்ப்புகளை உண்டாக்குகிறார்; அவர் மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு பிரபலமானவராக இருக்கிறார். அவரைப் பற்றி உணர்ந்துகொள்ளாதவர்கள்கூட, நம்மில் அவருடைய குணம்பிரதிபலிப்பதைப் பார்க்கும்போது, “அவர் யார்” என்று கேட்பதற்கான அதிகமான வாய்ப்புகள் உண்டாகும். தாவீதைப் போல நாமும் பிரமிப்புக்குள்ளாகி தேவனைச் சுட்டிக்காட்டலாம்; அவரைப் பற்றிச் சொல்லலாம்.
பூத்துக்குலுங்கும் பாலைவனம்
எல்லா பாலைவனங்களையும் போல மணல் மேடுகள், வறண்ட பள்ளத்தாக்குகள், செங்குத்தான மேடுகள், பெரும்பாலும் வறண்ட பகுதிகளையுடைய மலைகள் ஆகியவை உள்ளடங்கியதுதான் மொகாவி பாலைவனம். ஆனால், ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறை அங்கு அதிகளவு மழைபெய்து, “ஒவ்வோர் அடி மணலையும் அல்லது சரள் பரப்பையும் பூத்துக்குலுங்கச்செய்கிறது” என்று சொல்கிறார் அமெரிக்க உயிரியல் அறிஞரான எட்மன்ட் ஜேகர். மொ ஜேவ் மலர்கள் பூத்துக்குலுங்குவதை ஒவ்வொரு வருடமும் பார்க்கமுடியாது. வறண்ட அந்த நிலப்பகுகுதியானது சரியான காலச்சூழலில் பெலமான சூறாவளியால் ஈரமாகி, சூரியவெளிச்சத்தில் காய்ந்தால்தான் அந்தப் பாலைவனம் பூத்துக்குலுங்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
வறண்ட அந்தப் பகுதியையும்கூட தேவன் பசுமையாக்குகிறார். இந்தக் காட்சியானது ஏசாயா தீர்க்கதரிசியை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. தேசங்கள்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு உண்டாகுமெனச் சொல்லிவிட்டு, நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியையும் கூறுகிறார் ஏசாயா 35. எல்லாவற்றையும் தேவன் சரிசெய்கிற காலம் வருகிறது என்று சொல்லிவிட்டு, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்” என்கிறார். வசனம் 1. தேவனால் மீட்கப்பட்டவர்கள் “ஆனந்தக் களிப்புடன் பாடி” தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்றும், “நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” என்றும் சொல்கிறார். வசனம் 10.
நம்முடைய நித்திய வாழ்க்கை பற்றி தேவனுடைய வாக்குறுதிகளில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளன. வாழ்க்கையில் வறட்சியும் ஏற்படலாம், வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம், ஆனாலும் நாம் தேவனை நம்பலாம். அவருடைய அன்பில் வேரூன்றியிருந்தால் நாம் அவருடைய சாயலுக்கொப்பாக பூத்துக்குலுங்குகிற சமயம் வருமட்டும் வளர்ந்துகொண்டே இருக்கலாம். அந்தச் சமயம் வரும்போது இயேசு வந்து, எல்லாவற்றையும் சரிசெய்வார்.