உண்மை ஒருபோதும் மாறாது
என் மகன் சேவியர் சிறுவனாக இருந்தபோது, நானும் அவனும் ஒரு கற்பனையான சிறுவர் கதையைப் படித்தோம். அதில் ஒரு சிறுவன் தனது ஆசிரியருக்கு எதிராக, பேனாவிற்கு தானே சொந்தமாக ஒரு மாற்றுப் பெயரை வைக்கிறான். அவன் தனது சக ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பேனாக்களுக்குத் தான் உருவாக்கிய புதிய பெயரைப் பயன்படுத்தச் சொல்கிறான். சிறுவனின் இந்த மாற்றுப் பெயர் பற்றிய செய்தி ஊர் முழுவதும் பரவியது. இறுதியில், நாடு முழுவதும் உள்ள மக்கள் பேனாக்களைக் குறிப்பிடும் முறையை மாற்றிக்கொண்டனர், காரணம் எல்லோரும் ஒரு சிறுவன் ஏற்படுத்திய மாற்றுப் பெயரை உலகளாவிய உண்மையாக ஏற்றுக்கொண்டனர்.
சரித்திரம் முழுவதும், குறையுள்ள மனிதர்கள் மாற்றமடைந்து கொண்டேயிருக்கும் நிஜத்தின் பரிமாணங்கள் அல்லது தங்களுக்குச் சவுகரியமான யதார்த்தங்களை தங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தழுவிக்கொண்டனர். இருப்பினும், வேதகமாம் ஒரே சத்தியத்தையும், ஒரே மெய் தேவனையும், இரட்சிப்புக்கான ஒரே வழியையும் சுட்டிக்காட்டுகிறது. அது கிறிஸ்துவே. அவர் மூலமே "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்" (ஏசாயா 40:5). சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் போலவே மனிதர்களும் தற்காலிகமானவர்கள், தவறிழைக்கக்கூடியவர்கள் மற்றும் நம்பத்தகாதவர்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி உறுதிப்படுத்தினார் (வ.6-7). அவர், "புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்" (வ.8) என்றார்.
வரப்போகும் கிறிஸ்துவை பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நம்பகமான அடித்தளத்தையும், பாதுகாப்பான புகலிடத்தையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறது. இயேசுவே வார்த்தையாக இருப்பதால் நாம் தேவனுடைய வார்த்தையை நம்பலாம் (யோவான் 1:1). இயேசுவே என்றும் மாறாத உண்மை.
நம்பத்தகுந்த நமது தகப்பன்
எனது ஆறடி மூன்றங்குலம் உயரமான மகன் சேவியர், சிரித்து குறுநடை போடும் தனது குழந்தையான ஆனந்தை எளிதாக உயரே தூக்கினான். அவன் தனது மகனின் சிறிய கால்களைத் தனது பெரிய கைகளால் சுற்றிப் பிடித்து, அவற்றைத் தனது உள்ளங்கையில் உறுதியாகப் பற்றினான். தன் நீண்ட கையை நீட்டி, தன் மகன் தன்னிச்சையாக சமநிலைப்பட ஊக்குவித்தான், ஆனால் தேவைப்பட்டால் அவனைப் பிடிக்க மற்றொரு கையை தயாராக வைத்திருந்தான். ஆனந்த், கால்களை நிமிர்த்தி நின்றான். பரந்த புன்னகையுடன், கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, அவனது கண்கள் தந்தையின் பார்வையில் பதிந்தன.
நமது பரலோகத் தகப்பன் மீது கவனம் செலுத்துவதன் நன்மைகளை ஏசாயா தீர்க்கதரிசி அறிவித்தார்: “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3). அவரை வேத வாக்கியங்களின் மூலம் தேடுவதற்கும், ஜெபத்தினாலும் ஆராதனையினாலும் அவருடன் இணைந்திருக்கவும் தங்களை அர்ப்பணித்திட தேவஜனங்களை அவர் ஊக்குவித்தார். அத்தகைய உண்மையுள்ளவர்கள், தகப்பனுடனான தங்கள் உறுதியான ஐக்கியத்தின் மூலம் கட்டப்பட்ட ஒரு திடமான நம்பிக்கையை அனுபவிப்பார்கள்.
தேவனின் பிரியமான பிள்ளைகளாகிய நாம், "கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்." (வ.4) என்று தைரியமாக அபயமிடலாம். ஏன்? ஏனென்றால் பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதா நம்பத்தக்கவர். அவரும், அவா் வாா்த்தைகளும் ஒருபோதும் மாறாது.
நாம் நம் பரலோகத் தகப்பன் மீது நம் கண்களைப் பதிக்கும்போது, அவர் நம் கால்களை அவருடைய கரங்களில் உறுதியாக வைப்பார். அவர் எப்போதும் அன்பாகவும், உண்மையாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று நாம் உறுதி கொள்ளலாம்!
தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார்
நான் நினைவுகளுக்காக சேமித்தவற்றின் பெட்டியைத் திறந்து, பத்து வாரக் கருவில் இருக்கும் குழந்தையின் கால்களின் சரியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு சிறிய, வெள்ளி சட்டகத்தை வெளியே எடுத்தேன். பத்து சிறு கால்விரல்களைத் தடவியபடியே, எனது முதல் கருச்சிதைவையும், நான் "அதிர்ஷ்டசாலி, அவ்வளவாய் துன்பப்பட வேண்டியதில்லை" என்று சொன்னவர்களையும் நினைவு கூர்ந்தேன். என் வயிற்றில் ஒருமுறை துடித்த இதயம் போல என் குழந்தையின் பாதங்கள் உண்மையானவை என்பதை அறிந்து நான் துக்கமடைந்தேன். என்னை மனச்சோர்விலிருந்து விடுவித்ததற்காகவும், குழந்தையை இழந்து வருந்தும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் எனது கதையைப் பயன்படுத்தியதற்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் கருச்சிதைவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நானும் என் கணவரும் இழந்த குழந்தைக்குக் காய் என்று பெயரிட்டோம், சில மொழிகளில் "மகிழ்ச்சி" என்று பொருள். எனது இழப்பால் நான் இன்னும் வேதனைப்பட்டாலும், என் இதயத்தைக் குணப்படுத்தியதற்காகவும், மற்றவர்களுக்கு உதவ எனது கதையைப் பயன்படுத்தியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.
107-ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய மாறாத தன்மையால் களிகூர்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.” (வ.1). "கர்த்தரால்.. மீட்கப்பட்(டவர்கள்)டு" "அப்படிச் சொல்லக்கடவர்கள்" (வ. 2 ,3), "அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக" (வ. 9) என்று அவர் வலியுறுத்தினார். தேவன் ஒருவரே "தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று" (வ. 8) என்ற வாக்குத்தத்தத்துடன் அவர் நம்பிக்கை அளித்தார்.
கிறிஸ்துவின் சிலுவை பலியின் மூலம் மீட்கப்பட்டவர்களாயினும் கூட, துக்கத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எவரும் தப்ப இயலாது. எவ்வாறாயினும், தேவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்க முடியும், ஏனெனில் அவர் நம் கதைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை தமது மீட்கும் அன்பிற்கு நேராய் நடத்துகிறார்.
தேவன் நமக்கு செவிகொடுக்கிறார்
முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் அவசர உதவிக்கான எண்ணை அழைத்தான். அவசரகால ஆபரேட்டர் பதிலளித்தார். “எனக்கு உதவி தேவை" என்றான் சிறுவன். ஒரு பெண் அறைக்குள் நுழைந்து, "ஜானி, நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்கும் வரை, ஆபரேட்டர் அவனுக்கு உதவினார். ஜானி தனது கணித வீட்டுப்பாடத்தை செய்ய முடியாது என்று விளக்கினான். எனவே அவனுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் உதவி எண்ணை தொடர்புகொள் என்று அவனது தாயார் கற்றுக் கொடுத்ததைச் செய்தான். அவசர எண்ணை அழைத்தான். ஜானிக்கு, வீட்டுப்பாடத்தை செய்வதே தற்போதையை தேவையாய் இருந்தது. கருணையுடன் கேட்கும் அந்தச் சிறுவனின் வீட்டுப் பாடங்களுக்கு உதவுவதே அந்தத் தருணத்தில் முதன்மையானதாய் இருந்தது.
சங்கீதக்காரனாகிய தாவீதுக்கு உதவி தேவைப்பட்டபோது, “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” (சங்கீதம் 39:4). தேவனை “நீரே என் நம்பிக்கை” (வச. 7) என்கிறார். “என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்” (வச. 12) என்று கெஞ்சுகிறார். பின்னர் தன்னிடத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறார் (வச. 13). தாவீதின் தேவைகள் பேசப்படாவிட்டாலும், வேதாகமம் முழுவதும் தேவன் தன்னுடன் இருப்பார் என்றும், தன்னுடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பார் என்றும் தாவீது அறிவித்தார்.
கர்த்தருடைய நிலைத்தன்மையில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையானது, நமது நிலையற்ற உணர்வுகளைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. அதே சமயம் மாறாத ஒரு தேவனுக்கு மிகப் பெரிய அல்லது சிறிய கோரிக்கை என்று எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர் நமக்குச் செவிசாய்க்கிறார், நம்மீது அக்கறை காட்டுகிறார், நாம் செய்யும் ஒவ்வொரு ஜெபத்திற்கும் பதிலளிக்கிறார்.
அதிகம் இயேசுவைப் போலத் தோன்றுதல்
தேவன் பெரிய சாம்பல் ஆந்தையை உருமறைப்பில் வல்லதாக வடிவமைத்துள்ளார். அதன் வெள்ளியும் சாம்பலுமான இறகுகள் ஒரு வண்ணமயமான வடிவ அமைப்பைக் கொண்டுள்ளன, இது அவை மரங்களில் அமரும் போது அவற்றின் பட்டையுடன் இரண்டற கலக்க உதவுகிறது. ஆந்தைகள் தன்னை மறைத்துக்கொள்ள விரும்பினால், அவை மேலான பார்வையிலிருந்து ஒளிந்துகொள்கின்றன, அவற்றின் இறகு உருமறைப்பு உதவியுடன் அவற்றின் சூழலோடு ஒன்றாகக் கலக்கின்றன.
தேவஜனங்களும் பெரும்பாலும் பெரிய சாம்பல் ஆந்தையைப் போன்றவர்களே. விருப்பத்தோடு அல்லது விருப்பமின்றியே எவ்வாறாயினும் நாமும் உலகத்தோடு எளிதில் கலந்து, கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கான அடையாளத்தை மறைக்க முடியும். பிதாவானவரால்
"உலகத்தில் தெரிந்தெடுத்து" அவருக்காகத் தரப்பட்டவர்களும், தம்முடைய "வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறவர்களுமான" தமது சீடர்களுக்காக (யோவான் 17:6) இயேசு ஜெபித்தார். குமாரனாகிய தேவன், பிதாவாகிய தேவனிடம் தாம் அவர்களை விட்டுப் பிரிந்த பிறகு, அவர்களைப் பரிசுத்தத்திலும் நிலைத்திருத்தலிலும் சந்தோஷமாக வாழ அவர்களைப் பாதுகாத்து அதிகாரமளிக்கும்படி வேண்டினார் (வ. 7-13). அவர் கூறினார், "நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்" (வ. 15). தம்முடைய சீஷர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பிரித்தெடுக்கபட வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார், அதனால் அவர் அவர்களை நிறைவேற்றும்படி அனுப்பிய நோக்கத்தை அவர்களால் நிறைவேற்ற முடியும் (வ. 16-19).
உலகத்துடன் கலக்கும் உருமறைப்பில் சிறந்தவர்களாக மாறும்படியான தூண்டுதலிலிருந்து மீள, பரிசுத்த ஆவியானவரால் நமக்கு உதவ முடியும். நாம் தினமும் அவருக்கு அடிபணியும்போது, நாம் அதிகம் இயேசுவைப் போல மாற முடியும். நாம் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழும்போது, அவர் தமது சகல மகிமையோடும் பிறரை கிறிஸ்துவிடம் இழுப்பார்.
கிரியையில் அன்பு
கணவனைப் பிரிந்த அந்த தாயார், ஐந்து வருடங்களுக்கும் மேலாக நற்குணசாலியான முதியவரின் வீட்டருகே வசித்து வந்தார். ஒரு நாள், அவள் நலனில் அக்கறை கொண்டு, அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். "ஒரு வாரமாக உன்னைப் பார்க்கவில்லையே, உன்னை நலம் விசாரிக்கவே வந்தேன்" என்று அவர் கூறினார். அவரது "கரிசனையான விசாரிப்பு" அவளை ஊக்கப்படுத்தியது. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அன்பான மனிதனைப் பாராட்டினாள்.
இலவசமாகக் கொடுப்பதற்கும் விலையேறப்பெற்றதாய் பெறுவதற்குமான இரக்கம் எனும் வெகுமதியால், வெறுமனே நலலவர்களாக இருப்பதைக் கடந்து கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு ஊழியம் செய்கிறோம். எபிரேயரின் எழுத்தாளர், இயேசுவை விசுவாசிப்பவர்களிடம், “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபிரெயர் 13:15) என்றார். பின்னர் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்து காண்பிக்கும் பொருட்டு, "அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்" (வ. 16) என்று ஆக்கியோன் எழுதினார்.
இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு, அவரை ஆராதிப்பது மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும். ஆனால் இயேசுவைப் போல நாம் அன்பு செலுத்தும்போது, தேவன் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறோம். நம் சொந்தக் குடும்பங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் பிறரை நன்றாக நேசிக்க நம்மை ஆற்றல் படுத்தவும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறித்து உணர்வுள்ளவர்களாக்கவும் பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடலாம். அத்தகைய ஊழிய தருணங்களின் மூலம், கிரியை செய்யும் அன்பின் வல்லமையான செய்தியின் மூலம் இயேசுவைப் பகிர்ந்து கொள்வோம்.
அர்த்தமுள்ள ஹைபன்
என் அம்மாவின் வாழ்நாளின் சேவையை கொண்டாடும் கொண்டாட்டத்திற்கு நான் தயாராகும்போது, அவளுடைய “ஹைபன் வருடங்கள்,” அதாவது, அவளுடைய பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வருடங்களைக் குறித்த விவரிக்க சரியான வார்த்தைகளுக்காக நான் ஜெபித்தேன். எங்கள் உறவில் இருந்த நல்ல மற்றும் மிகவும் நல்ல நேரங்களை நான் பிரதிபலித்தேன். என் ஜீவியத்தை தேவன் மாற்றுவதை உணர்ந்த பின்பு என்னுடைய தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்ட நாளுக்காய் நான் தேவனை துதிக்கிறேன். நாங்கள் ஒன்றாக விசுவாசத்தில் வளர உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் என் அம்மா அவர்களுக்கு எப்படி ஊக்கமளித்தார் மற்றும் அவர்களுக்காக ஜெபித்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டவர்களுக்காக நான் நன்றி தெரிவித்தேன். என் அம்மா ஆண்டவராகிய இயேசுவுக்காய் வாழ்ந்த ஒரு அர்த்தமுள்ள ஹைபனை அனுபவித்து மகிழ்ந்தார்.
இயேசுவை விசுவாசிக்கிறவர்களில் ஒருவர் கூட சரியானவர் இல்லை. இருப்பினும், பரிசுத்த ஆவியானவர், “தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்” (கொலோசெயர் 1:10) நமக்கு உதவ முடியும். அப்போஸ்தலர் பவுலின் கூற்றுப்படி, கொலோசே பட்டணத்தின் திருச்சபை விசுவாசத்திற்கும் அன்பிற்கும் பெயர்பெற்றது (வச. 3-6). பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு ஞானத்தையும் புத்தியையும் அளித்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து, ஒவ்வொரு நற்கிரியையிலும் பெருக அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் (வச. 9-10). பவுல் அந்த விசுவாசிகளுக்காக ஜெபித்து, பாராட்டியபோது, “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (வச. 14) என்று அவர் இயேசுவின் நாமத்தை அறிவித்தார்.
நாம் பரிசுத்த ஆவியிடம் சரணடையும் போது, நாமும் தேவனைக் குறித்த நமது அறிவில் வளரவும், அவரையும் மக்களையும் நேசிக்கவும், நற்செய்தியைப் பரப்பவும், இயேசுவுக்காக நன்றாக வாழ்ந்த வாழ்க்கை என்ற அர்த்தமுள்ள ஹைபனை அனுபவிக்கவும் முடியும்.
வாழ்க்கை மாற்றும் தெய்வீக பரிசு
நானும் எனது கணவரும் எங்களது இளைஞர் குழுவினரை பாராட்டி அவர்களுக்கு வேதாகமங்களை பரிசளித்தோம். “உங்கள் வாழ்க்கையை மாற்ற கடவுள் இந்த விலைமதிப்பற்ற பரிசுகளைப் பயன்படுத்துவார்” என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். அன்றிரவு, ஒரு சில மாணவர்கள் யோவானின் சுவிசேஷத்தை ஒன்றாக வாசிக்க தீர்மானித்தனர். எங்கள் வாராந்திர கூட்டங்களில் நாங்கள் அவர்களுக்குக் கற்பித்தபோது, வீட்டில் வேதத்தை வாசிக்க குழுவை தொடர்ந்து உற்சாகப்படுத்தினோம். பத்து ஆண்டுகள் கழித்து, எங்கள் மாணவர் ஒருவரை நான் சந்திக்க நேரிட்டது. அவள் என்னிடத்தில் “நீங்கள் கொடுத்த பைபிளை நான் இன்னும் பயன்படுத்துகிறேன்,” என்று சொன்னாள். அவளுடைய நம்பிக்கை நிரம்பிய வாழ்க்கையில் நான் ஆதாரங்களைக் கண்டேன்.
வேதத்தின் வசனங்களைப் படிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவன் தம் ஜனத்திற்கு அதிகாரம் கொடுக்கிறார். வேதவாக்கியங்களின்படி (சங்கீதம் 119:9) வாழ்வதன் மூலம் தூய்மையின் பாதையில் இருக்க அவர் நமக்கு உதவுகிறார். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கவும், நம்மை மாற்றவும் அவர் தம் மாறாத சத்தியங்களைப் பயன்படுத்தும்போது, நாம் அவரைத் தேடிக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (வச. 10-11). தேவனை அறிந்துகொள்ளவும், வேதாகமத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்படி தினமும் தேவனிடத்தில் விண்ணப்பிக்க பிரயாசப்படுவோம் (வச. 12-13).
தேவனுடைய வழியில் வாழ்வதன் விலைமதிப்பற்ற மதிப்பை நாம் அடையாளம் காணும்போது, ஒருவன் “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல” (வச. 14-15) அவருடைய ஆலோசனையில் நாம் மகிழ்ச்சியடைய முடியும். சங்கீதக்காரனைப் போலவே நாமும் “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (வச. 16) என்று பாடலாம். நம்மை பலப்படுத்த பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, தேவன் நம்முயை வாழ்க்கை மாற்றும் பரிசாக நமக்குக் கொடுத்திருக்கிற வேதத்தை ஜெபத்துடன் வாசிக்கும் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவிக்க முடியும்.
ஒவ்வொரு நொடியும் முக்கியம்
ஏப்ரல் 1912 இல் டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதியபோது, போதகர் ஜான் ஹார்பர் தனது ஆறு வயது மகளுக்கு, உயிர்காக்கும் சிறிய படகுகளிலிருந்த மிகக்குறைந்த காலியிடங்களில் ஒன்றைப் பெற்றார். அவர் சக பயணிக்குத் தனது உயிர் காக்கும் மிதவை ஆடையைக் கொடுத்து, கேட்கும் எவருடனும் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கப்பல் மூழ்கியது . நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு சாத்தியமற்ற மீட்புக்காக காத்திருந்தபோது, ஹார்பர் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நீந்தினார், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31) என்றார்.
கனடாவின் ஒன்டாரியோவில் டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்களுக்கான சந்திப்பு கூட்டத்தில், ஒருவர் தன்னை "ஜான் ஹார்பரின் கடைசி மாற்றம்" என்று குறிப்பிட்டார். ஹார்பரின் முதல் அழைப்பை அவர் நிராகரித்தாலும்,ஹார்பர் மீண்டும் அவரிடம் வேண்டிக்கொண்ட பின்னர், அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். தாழ் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு பனிக்கட்டி நீரின் மேற்பரப்பில் மூழ்குவதற்கு முன்பும், இயேசுவைப் பகிர்ந்துகொள்வதற்காக ஹார்பர் தனது வாழ்க்கையின் கடைசி தருணங்களை அர்ப்பணித்ததை அவர் பார்த்தார்.
தீமோத்தேயுவிடம் பொறுப்பளிக்கையில், அப்போஸ்தலன் பவுல் தன்னலமற்ற சுவிசேஷ பணியில் இதேபோன்ற அவசரத்தையும் அர்ப்பணிப்பையும் ஊக்குவிக்கிறார். தேவனின் நிலையான பிரசன்னத்தையும், இயேசுவின் தவிர்க்க முடியாத வருகையையும் உறுதிசெய்து, நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணிப் பிரசங்கிக்குமாறு தீமோத்தேயுவுக்கு பவுல் கட்டளையிடுகிறார் (2 தீமோத்தேயு 4:1-2). சிலர் இயேசுவை நிராகரித்தாலும், இளம் பிரசங்கிக்குக் கவனம் செலுத்தும்படி அப்போஸ்தலன் நினைவூட்டுகிறார் (வ.3-5).
நம் நாட்கள் குறுகியவை, எனவே ஒவ்வொரு கணமும் முக்கியம். “இயேசு இரட்சிக்கிறார்!” என்று நாம் அறிவிக்கையில், நம்முடைய பிதா பரலோகத்தில் நமக்கான இடத்தை உறுதிப்படுத்தினார் என்பதில் நாம் நிச்சயம் கொள்கிறோம்.