எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

மௌனம்

நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்த வண்டிகள், கடகடவென்ற சத்தத்தோடு, அக்கிராமத்தின் பழைய குடிசைகளை கடந்து சென்றபோது, அங்கிருந்த கோழிகளெல்லாம் பயந்து சிதறியோடின. காலணிகள் ஏதுமின்றி வெளியே இருந்த பிள்ளைகள் வண்டிகள் செல்வதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தனர். மழையினால் சேதமடைந்த “இச்சாலையில்” வண்டிகள் செல்வது மிக அரிது.

திடீரென இவ்வண்டிகளுக்கு முன்பாக ஓரு பிரமாண்ட மாளிகை தென்பட்டது. அது அவ்வூர் மேயரின் வீடு. ஆனால் அவர் இப்பொழுது அங்கு குடியிருக்கவில்லை. தன் ஜனங்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்துக்கொண்டிருக்கையில், அம்மேயர் வேறு ஊரில் ஆடம்பரமான சுகஜீவியத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.

இதுபோன்ற அநியாயங்கள் நம்மை கோபமடைய செய்கிறது. தேவனுடைய தீர்க்கத்தரிசிகளும் இவ்வாறு கோபம்கொண்டார்கள். ஆபகூக், மிகுந்த அநீதியையும் அட்டூழியத்தையும் கண்டபோது, “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!” என தேவனை நோக்கி முறையிட்டான் (ஆப:1:2). ஆனால், கர்த்தரோ இதை ஏற்கனவே அறிந்திருந்தபடியினால், “தன்னுடையதல்லாததை தனக்காக சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ...  தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தை தேடுகிறவனுக்கு ஐயோ!” எனக் கூறினார் (2:6,9). நியாயத்தீர்ப்பு வந்துகொண்டிருந்தது!

தேவனுடைய நியாயத்தீர்ப்பு பிறர் மேல் வருவதை நாம் வரவேற்கிறோம். ஆனால் ஆபகூக் புத்தகத்தில் உள்ள ஒரு முக்கிய செய்தி நம்மை நிதானிக்க செய்யும். “கர்த்தரோவென்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மவுனமாயிருக் கக்கடவது,” (2:2௦) என்னும் வசனத்தில் “பூமி எல்லாம்” எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒடுக்குகிறவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும். சில சமயம், மௌனமாய் இருக்கிற தேவனுக்கு முன்பாக நாமும் மௌனமாய் இருப்பதே ஏற்றதாயிருக்கும்!

ஏன் மௌனம்? ஏனென்றால் நாம் மிக எளிதாக நம்முடைய ஆவிக்குரிய வறுமையை காணத் தவறிவிடுகிறோம். ஆனால், தேவனுடைய பரிசுத்த சமூகத்தில் நாம் மௌனமாய் காத்திருக்கும் போது நம்முடைய பாவ சுபாவத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

தேவன் மீது நம்பிக்கை வைக்க ஆபகூக் கற்றுகொண்டது போல, நாமும் கற்றுக்கொள்வோமாக. அவருடைய வழிகளையெல்லாம் நாம் அறியாதிருப்பினும், அவர் நல்லவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோமே. அவருடைய அதிகாரத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டு எதுவுமில்லை.

நமக்கு எண்ண வேண்டும்

“மாட்டுவண்டி ஓடின காலகட்டம் முதல் மனிதன் நிலவில் கால் பதித்த காலகட்டத்தையும் நான் கடந்துவந்துள்ளேன். ஆனால் அந்நீண்ட காலக்கட்டம் இவ்வளவு குறுகியதாய் இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவே இல்லை”, என்று தன் பேத்தியிடம் ஒரு முதியவர் கூறினார். அதை அப்பெண் என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.

இவ்வாழ்க்கை குறுகியதுதான். ஆகவே நம்மில் அநேகர் என்றென்றும் வாழ விரும்பி இயேசுவண்டை செல்கிறோம். அதில் தவறேதுமில்லை, ஆனால், நித்திய ஜீவனைக் குறித்த உண்மையான புரிதலை நாம் அறிந்துகொள்ள தவறிவிடுகிறோம். நாம் தவறான காரியங்களைக் குறித்து விரும்பி ஏங்குகிறவர்களாகவே காணப்படுகிறோம். நம்மிடம் இருப்பதை விட  மேலானதைக் குறித்து வாஞ்சிக்கிறோம். அது நம் கைகள் எட்டும் துரத்தில்தான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதை அடைந்துவிட ஏங்குகிறோம். உதாரணத்திற்கு, ‘நான் பள்ளிப்படிப்பை முடித்து விட்டால் எவ்வளவு நலமாயிருக்கும்?, ‘எனக்கு அந்த வேலை கிடைத்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்?’, ‘நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றால் எவ்வளவு நலமாயிருக்கும்?, என்று அநேக எதிர்பார்ப்புகள். ஆனால் ஒரு நாள், அம்முதியவரைப் போன்று, ‘காலம் எப்படி இவ்வளவு வேகமாய் கடந்து விட்டது’ என்று அவருடைய வார்த்தைகளை நாமும் எதிரொலிப்போம்.

உண்மை என்னவெனில், இப்பொழுது’ நாம் நித்திய வாழ்வை உடையவர்களாய் இருக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல், “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே”, என்று கூறுகிறார் (ரோம. 8:2). மேலும், “மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக் குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்” (வச. 5) எனவும் கூறியுள்ளார். அதாவது, கிறிஸ்துவண்டை நாம் வரும்பொழுது, நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் மாறிவிடும். விளைவு, நாம் விரும்புவதை பெற்றுக்கொள்கிறோம். “மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமும்” (வச. 6).

நாம் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால், ‘வேறொரு’ நபரை திருமணம் செய்து கொண்டு, ‘வேறு’ இடத்தில், ‘வேறு’ நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்பது வாழ்வின் மிகப்பெரிய பொய்களில் ஒன்று. நம்முடைய வாழ்வை, நாம் கிறிஸ்துவுக்குள் காணும்பொழுது, அவ்வாழ்வின் குறுகிய காலக்கட்டத்தையும் அதன் வருத்தங்களையும் குறித்து சிந்திப்பதை விடுத்து, இன்றைக்கும், என்றென்றைக்கும் அவரோடு நாம் முழமையாய் வாழக் கூடிய வாழ்வோடு  நாம் பரிமாற்றிக்கொள்வோமாக.

ஒரு அடைக்கலான் குருவியாகிலும்!

தன் வாழ்நாள் முழுவதும் கம்பீரமாகவும் கண்ணியமாகவும் இருந்த என் தாயார், இப்பொழுது முதிர்வயதினால் சிறைப்பட்டு தளர்ந்து பலவீனமடைந்து ஒரு நலவாழ்வு மையத்தின் படுக்கையிலே படுத்திருந்தார். மூச்சுவிடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருந்த பொழுது, அதற்கு நேர் எதிர்மாறாக அவ்வறையின் ஜன்னலுக்கு வெளியே அழகான வசந்தகால நாள் நம்மை இனிதாய் வரவேற்றது. 

உணர்ச்சிமிக்க வழியனுப்புதலின் அப்பட்டமான உண்மை நிலைக்கு ஏற்றாற் போல நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இவ்வுலகத்தில் உள்ள எப்பேர்பட்ட ஆயத்தமும் நம்மை தயார் படுத்த இயலாது. இதை சிந்தித்தபொழுது சாவு என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று! என நான் எண்ணினேன்.

அப்பொழுது நான் என் பார்வையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த விதை தட்டில் உள்ள விதையை உண்ணும்படி சிறகடித்தவாறு ஒரு சிறு பறவை அதை உண்டுகொண்டிருந்ததை கண்டேன். அக்காட்சியை கண்ட உடனே “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”, என்று நான் நன்கு அறிந்த இவ்வசனம் என் மனதிலே தோன்றியது (மத். 10:29). இவ்வார்த்தைகளை இயேசு தம்முடைய சீஷர்கள் யூதேயாவுக்கு சென்று ஊழியம் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தபொழுது கூறினார். மேலும், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”, என்றும் அவர்களிடம் கூறினார் (வச. 31). இந்நியமனம் அவர்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் பொருந்தும். 

என் தாய் சற்று அசைந்து தன் கண்களைத் திறந்து பார்த்தார். அப்பொழுது அவர் தன் பால்ய வயதில் மிகுந்த அன்போடு அவரது தாயை கூப்பிடும் ஒரு டச்சு மொழிச் சொற்றொடரை கூறி, “மூயுட்டி இறந்துவிட்டார்!” என தன் தாயை குறித்து தெரிவித்தார். 

“உண்மைதான். அவர் இப்பொழுது இயேசுவுடன் இருக்கிறார்,” என்று என் மனைவி பதிலளித்தாள். அதைக் கேட்ட என் தாயார் நிச்சயமின்றி, “ஜாய்ஸ் மற்றும் ஜிம்?” என்று தன்னுடைய சகோதரியை குறித்தும் சகோதரனை குறித்தும் கேட்டார். அதற்கு என்னுடைய மனைவி, “ஆம், அவர்களும் இயேசுவோடுதான் இருக்கிறார்கள். நாமும் சீக்கிரத்தில் அவர்களோடு இருப்போம்!” என்று பதிலளித்தார். 

“ஆனால், காத்திருப்பது மிகக் கடினமாக உள்ளது,” என அமைதியாக என் தாயார் கூறினார்.

தேவனுக்கு ஆதரவாக!

ஒரு காரில் ஒட்டியிருந்த பம்பர்-ஸ்டிக்கர் ஓர் பல்கலைக்கழகப் பேராசிரியரின் கவனத்தை ஈர்த்தது. அக்காரின் சொந்தக்காரர் விசுவாசிகளை கோபமடையச் செய்யும்படியாகவே தேவனைக்குறித்து எதிர்மறையான காரியங்களை கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியிருக்கக்கூடும் என அப்பேராசிரியர் எண்ணினார். மேலும் “விசுவாசிகளின் கோபம் கடவுள் இல்லை எனக்கூறும் அந்நாத்திகனின் கொள்கையை நியாயப்படுத்தும்படி உதவுகிறது,” என விளக்குகிறார். கூடவே, “அநேகங்தரம் தான் எதிர்பார்த்ததையே அவன் பெற்றுக்கொள்ளவும் செய்கிறான்”, என அவர் எச்சரிக்கிறார். 

இப்பேராசிரியர் தன்னுடைய விசுவாச பாதையைக்குறித்து நினைவுக்கூரும்பொழுது, கிறிஸ்துவைகுறித்ததான சத்தியத்தை எண்ணி அவருடைய கிறிஸ்தவ நண்பர் ஒருவர் அக்கறையுடன் தன்னை அணுகியதை நினைவுகூருகிறார். தன் நண்பனிடம் “சத்தியத்தை எப்படியாவது தெரிவித்துவிட வேண்டும் என்கிற ஒரு அவசர உணர்வு காணப்பட்டாலும், அதை கோபத்தின் சுவடே இல்லாமல் தெரிவித்தால்,” அன்று தான் பெற்ற உண்மையான மரியாதையையும் கிருபையையும் ஒருபோதும் மறப்பதில்லை என அப்பேராசிரியர் கூறுகிறார்.

 

இயேசுவைப் பிறர் நிராகரிக்கும்பொழுது அநேகமாய் விசுவாசிகள் காயமடைந்து மனக்கசப்புக்குள்ளாகிறார்கள். ஆனால் பிறர் தன்னை நிராகரிப்பதைக்குறித்து இயேசு என்ன நினைக்கிறார்?  எப்பொழுதும் பல அச்சுறுத்தல்களையும் வெறுப்பையும் இயேசு எதிர்கொண்டபொழுதும், அவர் தன்னுடைய தெய்வசாயலை குறித்து சந்தேகித் ததேயில்லை. ஒரு சமயம் இயேசு ஒரு கிராமத்திற்கு சென்றபொழுது, அவரை ஏற்றுக்கொள்ள அக்கிராமத்தினர் மறுத்துவிட்டனர். உடனே யாக்கோபும், யோவானும் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க எண்ணி, “ஆண்டவரே, எலியா செய்தது போல வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று இயேசுவிடம் கேட்டனர் (லூக். 9:54). இயேசு அப்படி ஒன்றும் செய்ய விரும்பாததால், “திரும்பிப் பார்த்து (அவர்களை) அதட்டி(னார்)” (வச. 55). சொல்லப்போனால், “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” (யோவா. 3:17).

 

நம்முடைய சொல்லாலோ (அல்லது) செயலாலோ தேவனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியம் அவருக்கில்லை என்கிற செய்தி நமக்கு வியப்பளிக்கலாம். அவருடைய பிரதிநிதியாக அவரை பிரதிபலிப்பதையே அவர் விரும்புகிறார்! அதற்கு நம்முடைய நேரமும், முயற்சியும், நிதானமும், அன்பும் தேவைப்படும்.

ஒரே ஒரு தொடுதல்

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு தொலைவான பகுதியில் மருத்துவ ஊழியம்செய்யும் வாய்ப்பு வந்தபொழுது கைலீ(Kiley) உற்சாகமடைந்த போதிலும் மருத்துவ அனுபவம் எதுவும் தனக்கில்லையே என்று சற்றே கலக்கமடைந்தாள். ஆனாலும் அடிப்படை மருத்துவ உதவியை அவளால் தரமுடியும் என்பதை எண்ணி தைரியமடைந்தாள். 

அங்கு சென்றபொழுது, மிகவும் கொடுமையான ஓர் வியாதியையுடைய ஒரு பெண்ணை சந்தித்தாள். உருக்குலைந்து அழுகிய நிலையிலிருந்த காலைக் கண்டவுடன் கைலீயிக்கு அருவருப்பாக இருந்தது, ஆனாலும் தான் ஏதாவது செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தாள். ஆகவே அப்பெண்ணின்  காலைத் தொட்டு காயங்களை சுத்தப்படுத்தி கட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்ட அப்பெண் அழஆரம்பித்தாள். கவலை அடைந்த கைலீ, தான் வலியை ஏற்படுதிவிட்டேனோ என்று அப்பெண்ணிடம் கேட்டபொழுது, “இல்லை, கடந்த ஒன்பது வருடங்களில் இன்றைக்குத் தான் என்னை ஒருவர் தொட்டிருக்கிறார்” என்று அவள் கூறினாள்.

தொழுநோயும் அப்படிப்பட்ட ஒரு வியாதிதான். அதனால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டாலே மக்கள் முகஞ்சுழிப்பதுண்டு. அந்நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு “அவர்கள் தனித்து வாழவேண்டும். அவர்கள் கூடார முகாம்களுக்கு வெளியேதான் இருக்கவேண்டும்” என்று பண்டைய யூத கலாச்சாரத்தில் பல கடுமையான சட்டங்கள் இருந்தது (லேவி. 13:46). 

அதனால்தான் இயேசுவை நோக்கி வந்த குஷ்டரோகி சொன்ன வார்த்தைகள் மிகவும் விசேஷமானது. அவன் “ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்,” என்றான் (மத். 8:2). இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: ‘எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு’ என்றார்” (வச. 3). 

தனிமையில் வாழ்ந்துவந்த ஓர் பெண்மணியின் வியாதியுற்ற காலைத் தொட்டதினால் ஓரு இணைப்பை ஏற்படுத்தும் இயேசுவின் பயமற்ற அன்பை கைலீ வெளிப்படுத்தத் தொடங்கினாள். ஓர் சிறிய தொடுதல்தான் இவற்றையெல்லாம் செய்தது.

கொடுப்பதின் வரம்

“அவருடைய தோள்களிலிருக்கும் சட்டையைக் கழற்றி தருவார்” என்ற வரிக்கு ஒரு போதகர் உண்மையிலேயே உயிரூட்டினார். “நம்முடைய மேல்சட்டைகளை நிஜமாகவே  கழற்றி, இல்லாதவரிடம் கொடுத்தால் என்ன நடக்கும்?” என்று சபையாரிடம் ஓர் சவால் விடுத்தார். அதன் பின்னர், தமது கோட்டை(Coat) கழற்றி சபையின் முன்னால் அதை வைத்தார். அதை பார்த்தவுடன், பலர் அவரது செய்கையைப் பின்பற்றினார்கள். இந்த சம்பவம் குளிர்காலத்தில் நடந்தது, அதனால் வீட்டிற்கு திரும்பும் பயணம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. ஆனால் தேவைகளுடன் இருந்த பலருக்கு அந்த குளிர் காலம் இதமாய் இருந்தது. 

யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்திரங்களில் சுற்றித்திரிந்த போது, அவரைக் காண வந்த மக்களிடம் கடுமையாகப் பேசினார். “விரியன்பாம்பு குட்டிகளே!....மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்று அவர்களை விமர்சித்தார் (லூக். 3:7-8). “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்ட அவர்களிடம், “இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்” என பதிலளித்தார். உண்மையான மனந்திரும்புதல் பெருந்தன்மையுள்ள இருதயத்தை உண்டுபண்ணும். 

குற்றஉணர்ச்சியினாலோ பிறரின் பலவந்தத்தினாலோ ஒருவரும் கொடுக்கத் தேவையில்லை, ஏனெனில் “உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7). இலவசமாகவும் உற்சாகத்துடனும் நாம் கொடுக்க ஆரம்பித்தவுடன், ஒன்று நன்றாக விளங்க ஆரம்பிக்கும்-பெற்றுக்கொள்ளும்போது உணரும் ஆசீர்வாதத்தை விட, கொடுப்பதில்தான் அதிக ஆசீர்வாதம்.

கொஸ்ஸியின் தைரியம்

டோகோ (togo) நாட்டில் மோனோ (mono) நதியில் ஞானஸ்நானம் எடுக்க காத்திருந்த கொஸ்ஸி(kossi), கீழே கிடந்த பழைய மரச்சிற்பம் ஒன்றை குனிந்து எடுத்தான். பல தலைமுறைகளாக அவனுடைய குடும்பத்தில் அச்சிற்பத்தை வணங்கி வந்துள்ளனர். இப்பொழுதோ, அக்கோரமான உருவப் பொம்மையை இத்தருணத்திற்கென்று  ஆயத்தப்படுத்தியிருந்த நெருப்பில் கொஸ்ஸி தூக்கி எறிவதை அவனுடைய குடும்பத்தினர் உடனிருந்து கண்டனர். இனி ஒருபொழுதும் அவர்களுடைய கோழிகள் இக்கோரக் கடவுளுக்கு பலியாக படைக்கப்படபோவதில்லை.

மேற்கத்திய நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஸ்தானத்தில் வைக்கப்படும் அனைத்தையும் விக்கிரகமாக உருவகப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் மேற்கு ஆப்பிரிக்கா பகுதியிலுள்ள டோகோ தேசத்தில், பலியிட்டு திருப்திப்படுத்த வேண்டிய கடவுள்களாகவே இவ்விக்கிரகங்களை காண்கிறார்கள். ஆகவே, ஒன்றான மெய் தேவனுக்கு தன்னுடைய விசுவாசத்தைக் காண்பிக்க விரும்பும் ஒரு புதிய விசுவாசி, விக்கிரகத்தை எரித்து ஞானஸ்நானம் எடுப்பது மிகத்தைரியமான ஒரு பிரகடனமாகும்.

விக்கிரக ஆராதனையிலும் வேசித்தனத்திலும் மூழ்கியிருந்த ஒருகலாச்சார சூழ்நிலையில், எட்டு வயது யோசியா அரசனானான். யூதா தேசத்தின் மிக இழிவான வரலாற்றின் மிக மோசமான இரண்டு ராஜாக்கள் யோசியாவின் தகப்பனும் தாத்தாவுமே. ஆனால் யோசியா ராஜாவானபொழுது, பிரதான ஆசாரியர் ஆலயத்திலே நியாயப்பிரமானமாண புஸ்தகத்தை கண்டுபிடித்தான். அதை வாசித்த யோசியா அவ்வார்த்தைகளை தன் இருதயத்திலே பதித்துக்கொண்டான் (2 இரா. 22:8-13). பின்பு பாகாலுடைய பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அங்கு படைக்கப்பட்ட சகலவிதமான அருவருப்பான பொருட்களையும் அழித்து, விபச்சாரச் சடங்குகளை நடப்பிக்கும் இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளையும் இடித்துப்போட்டான் (23ஆம் அதிகாரம்). இவ்வாறான எல்லா வழக்கங்களையும் ஒழித்துவிட்டு அவ்விடத்திலே பஸ்கா பண்டிகையை கொண்டாடினான் (23:21-23).

அறிந்தோ அறியாமலோ தேவனைச் சாராமல் பதில்களை எதிர்பார்ப்போமானால், நாம் பொய்யானதொரு கடவுளைப் பின்தொடர நேரிடும். ஆகவே, நாம் யாதொரு விக்கிரகத்தையாவது, உருவகங்கள் உட்பட, நெருப்பில் வீசவேண்டுவன எதுவோ என நம்மை நாமே கேட்டுக் கொள்வது ஞானமாக இருக்கும்.

இரண்டு புகைப்படங்கள்

ஆலய நுழைவாயிலில் இரண்டு புகைப்படங்களை இறுகப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி, அவற்றைப் பெருமையுடன் தன் நண்பர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாள். முதலாவது புகைப்படம் அவளது தாய்நாடாகிய புருன்டியில் (Burundi) எடுக்கப்பட்ட அவளுடைய மகளின் படம். இரண்டாவது புகைப்படம் அம்மகளுக்கு பிறந்த அவளது மகனின் புகைப்படம். ஆனால் அப்புகைப்படத்தில் மகள் இல்லை. ஏனெனில், அவனை பிரசவிக்கும் பொழுது அவள் இறந்துவிட்டாள்.

அப்பொழுது அங்கு வந்த அவளுடைய தோழி அப்புகைப்படங்களைப் பார்த்துவிட்டு உடனே அம்மூதாட்டியின் முகத்தை அன்பாய் தன் கரங்களில் ஏந்தி கண்ணீரோடு, “எனக்குத் தெரியும். எனக்கு தெரியும்,” எனக் கூறினாள்.

அவளுக்குத் தெரியும்தான். ஏனெனில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் மகனை அவள் அடக்கம் செய்தாள்.

நம்முடைய வலி வேதனைகளை தானும் அனுபவித்தவர்கள் கூறும் ஆறுதல் விசேஷமானது. ஏனெனில் அவர்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். இயேசு கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, தன் சீஷர்களைப் பார்த்து, “நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்,” என்று கூறினார்: ஆனால் அவ்வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், “நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்,” என்னும் ஆறுதலான வார்த்தைகளையும் கூறினார் (யோவா. 16:20). இன்னும் சில மணி நேரங்களில், இயேசுவின் கைதும், சிலுவை மரணமும் அவருடைய சீஷர்களை நிலைகுலையச் செய்யும். ஆனால் தாங்கொண்ணா துயரத்தில் மூழ்கியிருந்த அவர்கள் இயேசுவை உயிரோடு கண்டவுடன் எதிர்பாராத மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேசியாவைக் குறித்து, “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,” என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார் (ஏசா. 53:4). நம்முடைய இரட்சகர் நம்முடைய
வலி, வேதனைகளை அறிந்தவர் மட்டுமன்று அவைகளை அனுபவித்தவரும் கூட. அவர் எல்லாவற்றையும் அறிவார். அவரே நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். ஒரு நாள் நம்முடைய துக்கம் சந்தோஷமாக மாறும்.

எனது எல்லாவற்றையும்!

இளம் ஐசக் வாட்ஸ் (Issac Watts) தன்னுடைய சபையின் பாடல்கள் நிறைவற்றதாக இருப்பதை எண்ணி வருந்தினான். அப்பொழுது அவனுடைய தகப்பன் சிறப்பான பாடல்களை உண்டாக்குமாறு அவனுக்கு அன்பாக ஆணையிட்டார். அப்படியே ஐசக் செய்தான். “என் அருள் நாதா இயேசுவே” (When I survey the wondrous cross) என்னும் அவருடைய பாடல் ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அப்பாடல் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அப்பாடலின் ஆராதனை ததும்பும் மூன்றாவது சரணம் கிறிஸ்துவின் சிலுவைக் காட்சிக்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கிறது.

கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பம் கலந்தே
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே!

உலக வரலாற்றின் மிக மோசமான தருணமாகிய சிலுவைக் காட்சியை வாட்ஸ் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். அன்று அச்சிலுவையின் அருகே நின்றிருந்தவர்களோடு நாமும் சற்று நேரம் சிலுவையின் அருகே செல்வோமாக. தம்முடைய சரீரத்தில் சொரசொரப்பான பெரிய ஆணிகள் பாய்ந்து, சிலுவையில் அறையப்பட்டிருந்த தேவகுமாரனாகிய இயேசு மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். சில மணிநேர சித்திரவதைகளுக்குப் பின்பு, அவ்விடமெங்கிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இருள் சூழ்ந்தது. அண்டசராசரங்களின் தேவனாகிய கர்த்தர் இறுதியாக கடும் வேதனை அடைந்து, தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது அவ்விடமெங்கிலும் நிலநடுக்கத்தின் ஆரவார சத்தம் ஒலித்தது. அதேவேளை பட்டணத்திலுள்ள ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கல்லறைகள் திறந்து, அதிலிருந்த மரித்தோர் உயிர்பெற்று பட்டணத்திலே உலாவினார்கள் (மத். 27:51-53). இச்சம்பவங்களை எல்லாம் கண்ட அதிபதி “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்!” என ஒப்புக்கொண்டான் (வச. 54).