நம் சத்துருவை நேசித்தல்
இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப் படை வீரர் லின் வெஸ்டன், எதிரிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தீவுகளைத் தாக்கியபோது கடற்படையினருடன் கரைக்குச் சென்றார். தவிர்க்க முடியாமல், பயங்கர உயிரிழப்புகள் ஏற்பட்டன. காயமுற்ற வீரர்களை வெளியேற்ற, அவர் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். ஒரு சந்தர்ப்பத்தில், அவரது படையினர் மோசமான வயிற்றுக் காயத்துடன் இருந்த எதிரி வீரனைச் சந்திக்க நேர்ந்தது. காயத்தின் தன்மை காரணமாக, அவனுக்குத் தண்ணீர் கொடுக்க இயலவில்லை. அவனை உயிருடன் காப்பாற்ற, சிறிய அதிகாரியான வெஸ்டன், நரம்பு வழியாக பிளாஸ்மாவை (இரத்தத் திரவம்) செலுத்தினார்.
"அந்த பிளாஸ்மாவை நம் ஆட்களுக்குச் சேமித்து வை, ஸ்வாபி(மாலுமி)!" என்று கடற்படை வீரர்களில் ஒருவன் கத்தினான். கடைநிலை அதிகாரி வெஸ்டன் அவனைப் புறக்கணித்தார். இயேசு என்ன செய்வார் என்பதை அவர் அறிந்திருந்தார்: "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்" (மத்தேயு 5:44). இயேசு, அந்த சவாலான வார்த்தைகளில் சொன்னதைக் காட்டிலும் அதிகம் செய்தார்; அவர் அதனை வாழ்ந்து காட்டினார். அவரை பகைத்த கூட்டம், அவரைப் பிடித்து, பிரதான ஆசாரியனிடம் அழைத்துச் சென்றபோது, "இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்(தனர்)து" (லூக்கா 22:63). போலியான நியாயவிசாரணைகள் மற்றும் மரணதண்டனை மூலம் அவர்களின் துஷ்பிரயோகம் தொடர்ந்தது. இயேசு அதைச் சகிக்க மட்டும் செய்யவில்லை, ரோமானிய வீரர்கள் அவரை சிலுவையில் அறைந்தபோது, அவர்களின் மன்னிப்புக்காக ஜெபித்தார் (23:34).
நம்மை உண்மையாகக் கொல்ல முயலும் எதிரியை நாம் சந்திக்காமலிருந் திருக்கலாம். ஆனால் ஏளனத்தையும், பரியாசத்தையும் சகிப்பது எப்படிப்பட்டதென்று அனைவரும் அறிவோம். கோபத்தில் பதிலளிப்பதே நமது இயல்பான எதிர்வினை. ஆனால், "உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44) என்று இயேசு மாற்றியமைத்தார்.
இன்று, இயேசு செய்ததைப் போல, நம் எதிரிகளிடமும் கருணை காட்டி, அத்தகைய அன்போடு வாழ்வோம்.
மிகபெரிய பிளவு
புகழ்பெற்ற "பீனட்ஸ்" என்ற நகைச்சுவை இதழில், தி கிரேட் பம்ப்கின் மீதான நம்பிக்கைக்காக 'லினஸ்' என்பவரின் நண்பர் அவரைத் திட்டுகிறார். விரக்தியுடன் விலகிச் சென்று, லினஸ் கூறுகிறார், “பிறருடன் ஒருபோதும் விவாதிக்கக் கூடாத மூன்று விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்; மதம், அரசியல் மற்றும் தி கிரேட் பம்ப்கின்!"
தி கிரேட் பும்ப்கின் என்பது லினஸின் கற்பனையில் மட்டுமே இருந்தது, ஆனால் மற்ற இரண்டு காரியங்கள் மிகவும் உண்மையானவை. அவை நாடுகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களைப் பிரிக்கிறது. இயேசுவின் காலத்திலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. பரிசேயர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்களாகப் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தை அப்படியே பின்பற்ற முயன்றனர். ஏரோதியர்கள் மிகவும் அரசியல் ரீதியானவர்கள், இருப்பினும் இரு பிரிவினரும் யூத மக்களை ரோமானிய அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்பினர். இயேசுவுக்கோ அந்த நோக்கமில்லை, எனவே அவர்கள் அவரை அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டக் குறுக்குக் கேள்வியுடன் அணுகினர்: இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? (மாற்கு 12:14-15). இயேசு ஆம் என்று சொன்னால், மக்கள் அவரை வெறுப்பார்கள். அவர் இல்லை என்று சொன்னால், ரோமர்கள் அவரை கிளர்ச்சிக்காகக் கைது செய்யலாம்.
இயேசு ஒரு நாணயம் கேட்டார். "இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?" என்று கேட்டார் (வ. 16). அது இராயனுடையது என்பது அனைவருக்கும் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: "இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்" (வ. 17). அவருடைய முக்கியத்துவங்களைச் சீராக வைத்திருந்தார், இயேசு அவர்களின் பொறியைத் மேற்கொண்டார்.
இயேசு தம் பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார். அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றி, நாமும் தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தேடலாம், எல்லா கருத்து வேறுபாடுகளிலிருந்தும் விலகி, சத்தியமானவரை நோக்கி கவனத்தைத் திருப்பலாம்.
பிரதிபலன்
1921 ஆம் ஆண்டில், கலைஞர் சாம் ரோடியா தனது வாட்ஸ் டவர்ஸ் கட்டுமானத்தைத் தொடங்கினார். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸில் பதினேழு சிற்பங்கள் முப்பது மீட்டர் உயரம் எழுப்பப்பட்டன. இசைக்கலைஞர் ஜெர்ரி கார்சியா ரோடியாவின் தலைசிறந்த படைப்பை நிராகரித்தார். ""நீங்கள் மரித்த பிறகும் இருக்கும் விஷயம் இது. அதுதான் இதன் பலன்" என்றார் கார்சியா. பிறகு, "ஆனால் இது எனக்கானதல்ல" என்றார்.
அதனால் அவருக்கு கிடைத்த பலன் என்ன? அவரது இசைக்குழு உறுப்பினர் பாப் வீா், இவ்விருவரின் கருத்தைச் சுருக்கமாகக் கூறினார்: “நித்தியத்தில், உங்களைப் பற்றி எதுவும் நினைவில் கொள்ளப்படாது. எனவே ஏன் வேடிக்கைகாக இருக்கக்கூடாது?"
ஒரு ஐசுவரியமான ஞானி ஒருமுறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து "அதற்கான பலனை" கண்டுகொள்ள முயன்றான். அவர் , "வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்" (பிரசங்கி 2:1) என்று எழுதினார். ஆனால் அவர், " மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை" (வச. 16) என்றும் குறிப்பிட்டார். அவர், "சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது" (வ. 17) என்று முடித்தார்.
இயேசுவின் வாழ்க்கையும் செய்தியும், அத்தகைய குறுகிய மனப்பான்மையான வாழ்க்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. இயேசு நமக்கு "பரிபூரண ஜீவனை " கொடுக்க வந்தார் (யோவான் 10:10) மேலும் இந்த வாழ்க்கையை நித்தியத்தின் கண்ணோட்டத்திலும் வாழக் கற்றுக் கொடுத்தார். "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்.. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" (மத்தேயு 6:19-20) என்று அவர் கூறினார். பின்னர் அவர் அதைச் சுருக்கமாக: "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (வ. 33) என்றார்.
அதுதான் சூரியனுக்குக் கீழும், அதற்கு அப்பாலும் நீடிக்கும் பலன் .
கடைசியில் ஒன்றுசேர்க்கப்படுதல்
1960 ஆம் ஆண்டில், ஓட்டோ ப்ரீமிங்கர் தனது “எக்ஸோடஸ்” திரைப்படத்தின் மூலம் சர்ச்சையைத் தூண்டினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்த யூத அகதிகளின் கற்பனைக் கதையை இந்தத் திரைப்படம் தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்ட ஒரு இளம் யூதப் பெண் மற்றும் ஒரு அரேபிய மனிதனின் உடல்கள் விரைவில் இஸ்ரவேல் தேசமாக இருக்கும் நாட்டின் அதே கல்லறையில் புதைக்கப்படுவதுடன் படம் முடிவடைகிறது.
பிரேமிங்கர் முடிவை நம்மிடத்தில் விட்டுவிடுகிறார். இது விரக்தியின் உருவகமா, என்றென்றும் புதைக்கப்பட்ட கனவா? அல்லது வெறுப்பும் குரோதமும் கொண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு மக்கள் - இறப்பிலும் வாழ்விலும் ஒன்று சேர்வதால் அது நம்பிக்கையின் அடையாளமா?
ஒருவேளை சங்கீதம் 87-ஐ எழுதியதாகக் கருதப்படும் கோராகின் புத்திரர்கள் இந்தக் காட்சியின் பிந்தைய பார்வையை எடுத்திருக்கலாம். நாங்கள் இன்னும் காத்திருக்கும் ஒரு அமைதியை அவர்கள் எதிர்பார்த்தனர். எருசலேமைப் பற்றி, “தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்” (வச. 3) என்று சொல்லுகிறது. யூத மக்களுக்கு எதிராகப் போரிட்ட வரலாற்றைக் கொண்ட தேசங்கள் ஒரே உண்மையான கடவுளை ஒப்புக்கொள்ள ஒன்றுசேரும் ஒரு நாளைப் பற்றி அவர்கள் பாடினர்: ராகாப் (எகிப்து), பாபிலோன், பெலிஸ்தியர்கள், தீரு, எத்தியோப்பியர்கள் (வச. 4). அனைவரும் எருசலேமிடமும், அதின் தேவனிடத்திற்கும் இழுக்கப்படுவார்கள்.
சங்கீதத்தின் முடிவு கொண்டாட்டமானது. எருசலேமில் உள்ள மக்கள், “எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது” (வச. 7) என்று பாடுவார்கள். அவர்கள் யாரைப் பாடுகிறார்கள்? ஜீவத் தண்ணீராக இருப்பவர், எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார் (யோவான் 4:14). நிலையான சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவரக்கூடியவர் இயேசு ஒருவரே.
காட்டிலுள்ள இருட்டறை
இராணுவத்தில் டோனி வக்காரோவுக்கு புகைப்படக் கலைஞராக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆயினும் அது அவருக்குத் தடையில்லை. பீரங்கி குண்டுகளும் வெடிகளும் மரங்களிலிருந்து மழை பொழிவது போல் தோன்றும் திகிலூட்டும் தருணங்களுக்கு இடையில், அவர் எப்படியாயினும் படங்களை எடுத்தார். பின்னர், அவரது நண்பர்கள் தூங்கும்போது, அவர்களது தலைக்கவசங்களைப் பயன்படுத்தி ரசாயனங்களைக் கலந்து தனது நிழற்படங்களை உருவாக்கினார். இரவு நேரக் காடு நிழற்படத்துக்குரிய இருட்டறையாக மாறியது, அதில் வக்காரோ இரண்டாம் உலகப் போரின் பொது ஹர்ட்ஜென் வனப் போரின் காலத்தைக் கடந்திருக்கும் நினைவுகளை உருவாக்கினார்.
தாவீது ராஜாவும் தனது பங்குக்கு யுத்தங்களிலும், இருட்டான நேரங்களிலும் வாழ்ந்தார். இரண்டு சாமுவேல் 22 கூறுகிறது, "கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது" (வ.1). தாவீது அந்த அனுபவங்களைப் பயன்படுத்தி தேவனுடைய உண்மைத்தன்மையைப் பதிவு செய்தார். அவர், “மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது” (வ.5) என்றார்.
தாவீது விரைவிலேயே விரக்தியிலிருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்தார்: "எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்” (வ.7) என்று நினைவுபடுத்திக்கொண்டார். தாவீது தேவனின் தவறாத உதவிக்காக அவரைப் புகழ்வதை உறுதிப்படுத்திக்கொண்டார். "கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்” (வ.29-30) என்றார்.
தாவீது, உலகிற்குத் தனது உண்மையுள்ள தேவனைப் பற்றிச் சொல்லத் தனது கஷ்டங்களை ஒரு வாய்ப்பாக மாற்றினார். நாமும் அதையே செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இருளை ஒளியாக மாற்றும் ஒருவரை நாம் சார்ந்துள்ளோம்.
ஒரு தேசிய முகாம்
மேற்கு ஆப்பிரிக்க வானத்துக்கும் எங்களுக்கும் இடையில் எதுவும் இல்லாதபடிக்கு, நட்சத்திரங்களின் கீழ் நாங்கள் முகாமிட்டோம். வறண்ட காலங்களில் கூடாரம் தேவையில்லை. ஆனால் நெருப்பு முக்கியமானது. “நெருப்பை அணைய விடாதே” என்று அப்பா ஒரு குச்சியால் மரக்கட்டைகளைத் தூண்டினார். நெருப்பு வனவிலங்குகளை எங்களுக்கு அருகாமையில் வரவிடாமல் தூரத்தில் வைத்திருந்தது. தேவனுடைய படைப்புகள் அற்புதமானவைகள் தான். ஆனால் உங்கள் முகாமில் சிறுத்தை அல்லது பாம்பு வந்துபோவதை நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீhர்கள்.
அப்பா கானாவின் மேல் பிராந்தியத்தில் ஒரு மிஷனரியாக பணியாற்றினார். அவருக்கு அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் பாடத்தை கற்றுக்கொடுக்கும் திறன் இருந்தது. அந்த முகாமும் விதிவிலக்கல்ல.
தேவன் தம் ஜனங்களுக்கும், முகாம்களை போதிக்கிற ஒரு ஸ்தலமாகவே அனுமதித்திருந்தார். வருடத்திற்கு ஒருமுறை, ஒரு வாரம் முழுவதும், இஸ்ரவேலர்கள் “பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும்” (லேவியராகமம் 23:40) வைத்து தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர். அதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தது. தேவன் அவர்களிடம், “நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்” (வச. 42-43) என்று சொல்லுகிறார். ஆனாலும், அந்த நாட்கள் பண்டிகையாய் ஆசரிக்கப்படவேண்டும். “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்” (வச. 40).
முகாமிடுவது என்பது உங்கள் வேடிக்கையான யோசனையாக இருக்காது. ஆனால் தேவன் தனது நன்மையை நினைவுகூர ஒரு மகிழ்ச்சியான வழியாக இஸ்ரவேலருக்கு ஒரு வார முகாமை ஏற்படுத்தினார். விடுமுறை நாட்களின் அர்த்தத்தை நாம் எளிதில் மறந்து விடுகிறோம். நம் பண்டிகைகள் நம் அன்பான தேவனின் தன்மையை நமக்கு வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான நினைவூட்டல்களாக இருக்கலாம். அவர் அதில் நமக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.
செப்னாவின் கல்லறை
தமிழ் அரசியல்வாதியான கருணாநிதி, சென்னை மெரினா கடற்கரையில் தனது ஆசான் சி.என்.அண்ணாதுரையின் அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். அவரது பகுத்தறிவு நம்பிக்கை காரணமாக, எந்த மதச் சடங்குகளும் செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை.
ஒரு பெரிய நினைவுச்சின்னம் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உண்டு என்றாலும் அவரது நம்பிக்கையானது அவரை மரணம் என்ற யதார்த்தத்திலிருந்து விலக்கி விடவில்லை என்பதுதான் உண்மை. நாம் இறந்தாலும் வாழ்க்கை கடந்து செல்கிறது என்பதே கசப்பான உண்மை.
யூதாவின் வரலாற்றில் ஒரு இக்கட்டான நேரத்தில், "அரமனை விசாரிப்புக்காரனான" செப்னா, மரணத்திற்குப் பிறகு தனக்கான மரபை நிலைநாட்ட, தனக்கென ஒரு கல்லறையை ஏற்படுத்தினான். ஆனால் தேவன், அவனுடைய தீர்க்கதரிசி ஏசாயா மூலம், "உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?" (ஏசாயா 22:16) என்றார். மேலும் தீர்க்கதரிசி, "அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்" (வ.18) என்றார்.
செப்னா தவறாகப் புரிந்துகொண்டான். நாம் எங்கே புதைக்கப்பட்டோம் என்பதல்ல, நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதே முக்கியம். இயேசுவைச் சேவிப்பவர்களுக்கு இந்த அளவிட முடியாத ஆறுதல் உண்டு: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்.. பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 14:13). நமது "மரணத்தை" ஒருபோதும் அலட்சியப்படுத்தாத தேவனை நாம் சேவிக்கிறோம். அவர் நமது வருகையை எதிர்பார்த்து நம்மை தமது வீட்டிற்கு வரவேற்கிறார்!
ஓர் தனிக் குரல்
முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.
நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12).
அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).
மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.
தேவனுடைய சமாதானத் தூதுவர்கள்
நோரா, நியாயத்தின் தேவையை உறுதியாய் அறிந்திருந்ததினால், அறப்போராட்டத்திற்குச் சென்றாள். திட்டமிட்டபடி, ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் டவுன்டவுன் என்ற பகுதியில் சத்தமேயில்லாமல் அமைதியான முறையில் ஊர்வலமாய் சென்றனர்.
அப்போது இரண்டு பேருந்துகள் திடீரென்று கொண்டுவரப்பட்டது. வெளியூர்களில் இருந்து போராட்டக்காரர்கள் வந்திருந்தனர். சடுதியில் ஓர் கலவரம் வெடித்தது. மனம் உடைந்தவளாய் நோரா அங்கிருந்து வெளியேறினாள். அவர்களின் நல்ல எண்ணம் பலனளிக்கவில்லை என்று அவளுக்கு தோன்றியது.
அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றபோது, பவுலை எதிர்த்தவர்கள் அவரை அங்கே பார்த்தனர். அவர்கள் ஆசியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் (அப்போஸ்தலர் 21:27). அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்கு இயேசுவை அச்சுறுத்தலாகக் கருதினர். பவுலைப் பற்றிய பொய்களையும் வதந்திகளையும் கூச்சலிட்டு, அவர்கள் துரிதமாய் பிரச்சனையைக் கிளப்பினார்கள் (வச. 28-29). ஒரு கலவரக் கூட்டத்தினர் பவுலை ஆலயத்திலிருந்து இழுத்து சென்று அடித்தது. காவலாளிகள் துரிதமாய் ஓடிவந்தனர்.
பவுல் கைதுசெய்யப்படுகையில், மக்களிடத்தில் பேச முடியுமா என்று ரோம தளபதியிடம் அனுமதி கேட்டார் (வச. 37-38). அனுமதி கிடைத்ததும், அவர் கூட்டத்தினரிடம் அவர்களின் சொந்த மொழியில் பேசி, அவர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்களை ஈர்த்தார் (வச. 40). பெரிய கலகத்தை, தான் எவ்விதம் பிரயோஜனமற்ற ஓர் மதத்திலிருந்து மீட்கப்பட்டேன் என்னும் இரட்சிப்பின் சாட்சியைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக பவுல் மாற்றிக்கொண்டார் (22:2-21).
சிலர் வன்முறை மற்றும் பிரிவினையை விரும்புகிறார்கள். சோர்ந்துபோகாதிருங்கள். அவர்கள் ஜெயங்கொள்ளமாட்டார்கள். இந்த அவநம்பிக்கையான உலகத்தில் தம் ஒளியையும் அமைதியையும் பிரதிபலிக்க தைரியமான விசுவாசிகளை தேவன் தேடுகிறார். ஓர் நெருக்கடியான சூழ்நிலை, தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அழகான வாய்ப்பாக இருக்கக்கூடும்.