எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

கதை முடிவடையவில்லை

லைன் ஆப் டூட்டி என்ற ஆங்கில நாடகம் நிறைவுபெறுகையில், ஒரு பெருங்கூட்டம், அந்த நாடகத்தில், குற்றங்களுக்கு எதிரான போராட்டம் எப்படி முடிவுபெறுமென்று காண ஆவலாய் கூடியிருந்தனர். இறுதியில் தீமையே வெல்லுமென்ற முடிவில் நிறைவடைந்த நாடகத்தால், அநேகர் ஏமாற்றமடைந்தனர். "குற்றவாளிகள் நியாயத்திற்குமுன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். எங்களுக்கு நன்மை வெல்லுகிற முடிவு வேண்டும்" என்று ஒரு ரசிகர் கூறினார்.

"நாம் நீதிக்கும் நியாயத்திற்கும் ஏங்குகிறோம், ஒருநாள் தீமையானது முற்றிலும் மேற்கொள்ளப்பட்டு, தீயவர்கள் தங்கள் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும். தீயவர்கள் ஜெயிப்பார்கள் என்பது உலகவழக்கத்திற்கு எதிரானது" என்று சமூகவியலாளர் பீட்டர் பெர்கர் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த நாடகத்தால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இந்த உலகம் மீண்டும் சீர்பெற வேண்டுமென்ற மானுட ஏக்கத்தை தங்களையறியாமலேயே வெளிக்காட்டினர்.

பரமண்டல ஜெபத்தில், இயேசுவும் தீமையைக் குறித்து எதார்த்தமுள்ளவராய் சொல்கிறார். தீமைக்கு மன்னிப்பு மட்டும் போதுமானதல்ல (மத்தேயு 6:12) மாறாகத் தீமையிலிருந்து ஒரு பெரிய விடுதலையும் தேவை (வ.13). இந்த எதார்த்தத்திற்கு ஒரு நம்பிக்கையும் உண்டு. தீமையேயில்லாத இடமொன்று உண்டு, அதுதான் பரலோகம். அந்த பரலோக ராஜ்யம் இந்த பூமிக்கு வரப்போகிறது (வ.10). ஒரு நாள் தேவனின் நியாயம் முழுமையாய் வெளிப்படும், "நன்மை ஜெயிக்கும்" என்ற முடிவு வரும், நன்மைக்கேதுவாக தீமை முற்றிலும் வேரறுக்கப்படும் (வெளிப்படுத்தல் 21:4).

ஆகவே நம் வாழ்விலும் தீயவர்கள் மேற்கொள்ளும்போது, ஏமாற்றமே நமக்கு மிஞ்சுகையில், " தேவனின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படட்டும்" என்பதை நினைவில் கொள்வோம். நமக்கு நம்பிக்கை உண்டு,ஏனென்றால் கதை இன்னும் முடிவடையவில்லை.

அடைக்கலம் புகுதல்

ஒருமுறை நானும் என் மனைவியும் பெரிய ஜன்னல்களும், தடிமனான கற்சுவர்களுமுடைய அழகான கடற்கரை விடுதியொன்றில் தங்கியிருந்தோம். ஒரு நாள் மத்தியான வேளையில், அப்பகுதியில் புயல் சூழவே, கடல் கொந்தளித்து, எங்கள் அறையின் ஜன்னல்களைச் சீற்றமான அலைகளால் மோதியது. ஆனால் நாங்கள் அமைதியாயிருந்தோம். ஏனெனில் விடுதியின் மதில்கள் வலிமையாகவும், அஸ்திபாரங்கள் உறுதியாகவும் இருந்தன. வெளியே அலைகள் கொந்தளிக்க, எங்கள் அறையே எங்களுக்குப் புகலிடமானது.

அடைக்கலம் என்பது வேதத்தின் முக்கிய கருப்பொருளாகும், ஏனெனில் அது தேவனிடமிருந்தே துவங்குகிறது. "நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்." (ஏசாயா 25:4) என்று ஏசாயா கூறுகிறார். பண்டைய இஸ்ரவேலில், அடைக்கல பட்டணங்களைக் கட்டுவதாகட்டும் (எண்ணாகமம் 35:6), அல்லது தேவையிலுள்ள அந்நியர்களை உபசரிப்பதாகட்டும் (உபாகமம் 10:19), அடைக்கலம் என்பது தேவ ஜனங்கள் கொடுக்கக் கூடியதும் கொடுக்க வேண்டியதுமான ஒன்றாகக் கருதப்பட்டது. இன்று நாம் வாழும் மனிதாபிமானமற்ற உலகில், இத்தகைய கொள்கைகள் நமக்கு வழிகாட்டும். இதுபோன்ற சூழல்களில், அடைக்கலத்தின் தேவனானவர், நம்மைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடமாக்குவாராக. 

எங்கள் விடுதியைத் தாக்கிய புயல் மறுநாளே ஓய்ந்துவிட்டது. அமைதியான கடல், வெப்பமான சூரியன், பளபளக்கும் கடற்பாசி என எல்லாம் மாறியிருந்தது. இயற்கை சீற்றங்களுக்கு அல்லது கொடுங்கோலாட்சிக்குத் தப்பியோடுபவர்களுக்கு (ஏசாயா 25:4), இன்றைக்கான அடைக்கலத்தையும், நாளைக்கான நம்பிக்கையையும் தருவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துவராக என்ற காட்சியே அப்பொழுது எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

விவாக உருவகம்

திருமணமாகி, 22 ஆண்டுகள் வாழ்ந்த பிறகும், மெரினோடு என்னுடைய வாழ்க்கை கடந்துபோன விதத்தைக் குறித்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. நான் ஒரு எழுத்தாளன். மெரின் ஒரு புள்ளியல் நிபுணர். நான் வார்த்தைகளோடு வேலை செய்கிறேன். அவளோ எண்களோடு வேலை செய்கிறாள். நான் அழகை எதிர்பார்க்கிறேன். அவளோ, செயல்பாட்டை எதிர்நோக்குகிறாள். நாங்கள் வெவ்வேறு சிந்தனை உலகத்தை சார்ந்தவர்கள். மெரின் சரியான நேரத்தை பின்பற்றுவாள். நானோ சற்று தாமதமாகவே செயல்படுபவன். ஓட்டலுக்கு சென்றால், நான் புதிய வகை உணவை சாப்பிட நினைப்பேன்; அவளோ, வழக்கமாய் சாப்பிடும் உணவையே தெரிந்தெடுப்பாள். ஆர்ட் கேலரியில் இருபது நிமிடங்களுக்கு பிறகு தான் நான் தேர்ந்தெடுக்கவே ஆரம்பிப்பேன். மெரினோ, கீழே உள்ள உணவகத்தில் அமர்ந்துகொண்டு நான் இன்னும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வேன் என்று சலித்துக்கொள்வாள். நாங்கள் இருவரும் பொறுமையை கற்றுக்கொள்வதற்கான நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம்.

நாங்கள் சேர்ந்து சிரிப்போம், பிரயாணம் செய்வோம், சேர்ந்து ஜெபிப்போம். நான் அவளுடைய முன்னேற்றத்திற்கு காரணமானேன். அவள் என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமாவாள். நாங்கள் இருவரும் சேர்ந்து தேவனுக்குள் வளர்கிறோம். பவுல், சில நல்ல நோக்கத்தோடு, திருச்சபையை திருமணத்தோடு ஒப்பிடுகிறார் (எபேசியர் 5:21-33). திருமண உறவைப்போலவே, திருச்சபையும் பலதரப்பட்ட வித்தியாசமான மனிதர்களைக் கொண்டு, அவர்களுக்குள் மனத்தாழ்மையும் நீடிய பொறுமையும் உண்டாகும்பொருட்டு, “அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (4:2) இருக்கும்படிக்கு கூறுகிறார். திருமண உறவைப்போலவே, திருச்சபையிலும் வித்தியாசமான நம்பிக்கைகளை உடையவர்கள், ஒருமன ஆவியோடு செயல்படுகிறார்கள் (வச. 11-13). உறவில் விரிசல் ஏற்படுவது திருச்சபைக்கும் திருமணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதை மேற்கொண்டு, கிறிஸ்துவைப்போல மாற முடியும்.

வளருவதற்கான அழைப்பு

கடற்குடுவை என்பது விசித்திரமான ஒரு கடல்வாழ் உயிரினம். பாறைகள் மற்றும் கடற் சிப்பிகள் மேல் ஒட்டியிருக்கும் இது, அசைவது போன்ற மென்மையான பிளாஸ்டிக் குழாய் போல் தெரிகிறது. பாய்ந்து செல்லும் நீரிலிருந்து அதன் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு, அது முன் இருந்த இளமை துடிப்பை விட்டுவிட்டு, ஒரு செயலற்ற வாழ்க்கையை வாழ்கிறது.

இந்த கடற்குடுவை உயிரினம், ஒரு பழமையான முதுகுத் தண்டு மற்றும் மூளையுடன் ஒரு தலைப்பிரட்டைப் போல் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தன் உணவைக் கண்டுபிடிக்கிறது. தன் இளம்பிரயாத்தில், அது கடலை ஆராய்வதில் தனது நாட்களைக் கழிக்கிறது. ஆனால் முதிர்ச்சியடையும் போது ஏதோ நடக்கிறது. அது ஒரு பாறையில் குடியேறி, அது ஆராய்வதையும் வளர்வதையும் நிறுத்திக்கொள்கிறது. ஒரு பயங்கரமான திருப்பத்தில், அது அதன் சொந்த மூளையை உண்டு, ஜீரணிக்கின்றது.

முதுகெலும்பில்லாத, சிந்திக்கமுடியாத, ஒளிர்கிற மின்னோட்டத்துடன் செயலற்ற முறையில் நிற்கிறது. இந்த கடற்குடுவை விதியைப் பின்பற்ற வேண்டாம் என்று அப்போஸ்தலர் பேதுரு நம்மை ஊக்குவிக்கிறார். தேவனுடைய சுபாவங்களை தரித்துக்கொள்வதே நமக்கான முதிர்ச்சி (2 பேதுரு 1:4). நீங்களும் நானும் வளர அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவைப் பற்றிய நமது அறிவில் மனரீதியாக வளருதல் (3:18); ஆவிக்குரிய ரீதியில் நன்மை, விடாமுயற்சி மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்ற பண்புகளில் வளருதல் (1:5-7); மற்றும் நடைமுறையில் புதிய வழிகளை ஆராய்வதன் மூலம் நேசித்தல், விருந்தோம்பல் வழங்குதல் மற்றும் நமது பரிசுகள் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்தல் (1 பேதுரு 4:7-11) ஆகியவற்றில் வளர அழைக்கப்பட்டிருக்கிறோம். இத்தகைய வளர்ச்சி, வீணரும் கனியற்றதுமான வாழ்க்கையை வாழ்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் என்று பேதுரு கூறுகிறார் (2 பேதுரு 1:8).

வளர்வதற்கான இந்த அழைப்பு, எழுபது வயது முதியவருக்கு எவ்வளவு இன்றியமையாததோ அதேபோன்று இளம் வயதினருக்கும் அவசியம். தேவனின் தன்மை கடல் போல் பரந்தது. நாம் சில அடிகள் கூட நீந்தவில்லை. அவரது முடிவில்லாத தன்மையை ஆராயுங்கள். புதிய ஆவிக்குரிய சாகசங்களை மேற்கொள்ளுங்கள். படியுங்கள், சேவை செய்யுங்கள், துணிந்து முயற்சி செய்யுங்கள், வளருங்கள்.

தெய்வீக மென்மை

ஒரு தொழிலதிபர் தன்னுடைய கல்லூரி நாட்களில் தான் வாழ்க்கையில் நம்பக்கையிழந்தவராகவும், உதவியற்றவராகவும் அடிக்கடி உணர்ந்ததாக பேச நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் இந்த மனச்சோர்வினை அவர் மருந்துவரிடம் பகிர்ந்துகொள்ளாமல், தற்கொலை செய்வதைக் குறித்த புத்தகத்தை தன் நூலக முகவரிக்கு அவர் ஆர்டர் செய்து, தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான தேதியைக் குறித்தார்.

வாழ்க்கையில் நம்பிக்கையிழந்தவர்களையும் திக்கற்றவர்களையும் தேவன் நேசிக்கிறார். வேதாகம கதாப்பாத்திரங்களை கடினமான சூழ்நிலைகளில் தேவன் நடத்திவந்த விதங்களை அடிப்படையாய் வைத்து இதை உறுதிசெய்யமுடியும். யோனா சாவை விரும்பியபோது தேவன் அவரிடம் மென்மையாக இடைபட்டார் (யோனா 4:3-10). எலியா தன் ஜீவனை எடுத்துக்கொள்ளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்தபோது (1 இராஜாக்கள் 19:4), தேவன் அவருக்குப் புத்துணர்ச்சி அளிக்க அப்பத்தையும் தண்ணீரையும் கொடுத்து (வச. 5-9), அவரிடம் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார் (வச. 11-13). அவர் தனிமையில் இல்லை என்பதை அவருக்கு உணர்த்துகிறார் (வச. 18). மனம் தளர்ந்தவர்களின் நடைமுறை தேவைகளை சந்திப்பதின் மூலம் தேவன் கனிவாய் அவர்களை அணுகுகிறார்.

தற்கொலையைக் குறித்த புத்தகம் நூலகத்தை வந்துசேர்ந்தது என்ற தகவல் அவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தவறுதலாய் அந்த செய்தி அவருடைய பெற்றோர்களை சென்றடைந்தது. அவருடைய தாயார் மனமுறிவோடு அன்று அவருக்கு போன் செய்து பேசியபோது தான், இந்த தற்கொலை எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்திருக்கக்கூடும் என்பது அவருக்கு தெரிந்தது. அந்த செய்தி தவறுதலாய் அவருடைய பெற்றோருக்கு போகவில்லையெனில், இன்று அவர் உயிரோடு இருந்திருக்கமாட்டார்.

இவர் காப்பாற்றப்பட்டது ஏதேச்சையாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நிகழ்ந்த சம்பவம் அல்ல. மாறாக, நம்முடைய ஆகாரமோ, தண்ணீரோ, அல்லது முகவரி தவறுதலோ, இதுபோன்ற விசித்திரமான தலையீடுகள் நம்மை காப்பாற்றும்போது, நாம் தேவனுடைய மென்மையான தழுவுதலை எதிர்கொள்கிறோம்.

தாராள குணமும் மகிழ்ச்சியும்

தாராள மனப்பான்மைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். தங்கள் பணத்தையும் நேரத்தையும் மற்றவர்களுக்கு கொடுப்பவர்கள், அப்படி செய்யாதவர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு உளவியலாளர், “கொடுப்பதை ஒரு மனிதாபிமான கடமையாக நினைப்பதை விட்டுவிட்டு, அதை மகிழ்ச்சியின் ஆதாரமாக கருதத் தொடங்குவோம்” என்று கூறுகிறார்.

கொடுப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மையென்றாலும், நம்முடைய மகிழ்ச்சியை இலக்காய் வைத்து நாம் கொடுக்கிறோமா? என்று கேள்வியெழும்புகிறது. நம்மை மகிழ்விக்கக்கூடியவர்களிடத்தில் மட்டும் நம்முடைய தயாள குணத்தை பிரதிபலித்தால், நமது உதவி தேவைப்படும் கடினமான சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு என்ன செய்வது?

கொடுக்கும் இந்த குணாதிசயத்தை வேதம் இன்னொரு கோணத்தில் மகிழ்ச்சியோடு தொடர்புபடுத்துகிறது. தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தன் சொந்தச் செல்வத்தைக் கொடுத்த பிறகு, தாவீது ராஜா இஸ்ரவேலரையும் நன்கொடை அளிக்க வலியுறுத்தினான் (1 நாளாகமம் 29:1-5). ஜனங்கள் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள் என்று மகிழ்ச்சியுடன் கொடுக்க முன்வந்தனர் (வச. 6-8). ஆனால் அவர்களின் மகிழ்ச்சி என்ன என்பதை கவனியுங்கள்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்" (வச. 9). நம்முடைய சுய மகிழ்ச்சிக்காய் கொடுக்கும்படிக்கு வேதம் ஒருபோதும் நமக்கு கட்டளையிடவில்லை. ஆனால் ஒரு தேவையைப் பூர்த்திசெய்ய மனப்பூர்வமாகவும் முழுமனதுடன் கொடுக்க உற்சாகப்படுத்துகிறது. மகிழ்ச்சி அதைத் தொடர்கிறது.
நிர்வாகத் தேவைகளை விட சுவிசேஷ தேவைக்காய் நிதி திரட்டுவது எளிது என்பது மிஷனரிகளுக்கு தெரியும். ஏனென்றால் ஊழியப்பணிக்காக கொடுப்பதற்கு கிறிஸ்தவர்கள் பொதுவாக முன்வருவார்கள். மற்றவர்களின் தேவைகளுக்கும் நாம் தாராளமாய் செயல்படவேண்டும். ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய இயேசு தன்னுடைய ஜீவனையே கொடுத்தார் (2 கொரிந்தியர் 8:9).

முடிவில்...

அநேக ஆவிக்குரிய கூட்டங்களுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தனிமையான இடத்தில் ஜெபித்தும், என் ஜீவியத்தை சுயபரிசோதனை செய்வதும் ஆழமாய் எனக்குதவியது. நிகழ்ச்சியின்போது, பங்கேற்பாளர்களிடம் சிலசமயம் ஒரு சுயபரிசோதனை ஆய்வு நடத்துவதுண்டு. அதாவது, “நீங்கள் மரித்துவிட்டீர்கள், உங்கள் கண்ணீர் அஞ்சலி விளம்பரம் பத்திரிக்கையில் பிரசுரமாகிவிட்டது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்விளம்பரம் எவ்வாறிருக்க விரும்புவீர்கள்?” என்று கேட்பதுண்டு. அதின் பலனாக சிலர் தங்கள் வாழ்வை சிறப்பாய் முடிக்கும்பொருட்டு, வாழ்வின் முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டதுமுண்டு.

2 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் அப்போஸ்தலன் பவுல் இறுதியாக எழுதிய வார்த்தைகளை பதிவுசெய்துள்ளது. பவுல் அறுபதைத்தான் கடந்திருந்தார், இதற்கு முன்னமே மரணத்தை சந்தித்திருந்தார். இருப்பினும், இப்போது தாம் மரணத்தை நெருங்குவதை அவர் உணருகிறார் (2 தீமோத்தேயு 4:6). இனி மிஷனரி பயணம் கிடையாது, திருச்சபைகளுக்கு நிருபம் எழுதப்போவதும் கிடையாது. அவர் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (வச.7) என்கிறார். அவர் குறைவுள்ளவராயிருப்பினும் (1 தீமோத்தேயு 1:15-16), எந்தளவிற்கு தேவனுக்கும், சுவிசேஷத்திற்கும் தான் உண்மையாய் வாழ்ந்துள்ளார் என்பதை நினைவுகூருகிறார். பின்னர், சீக்கிரமே அவர் இரத்தசாட்சியாய் மரித்ததாக பாரம்பரியம் கூறுகிறது. 

நம் இறுதி நாட்களைக் குறித்து சிந்திப்பது, நம்முடைய தற்போதைய வாழ்விற்கு தெளிவை உண்டாக்கும் ஒரு வழி. பவுலின் வார்த்தைகள் பின்பற்றுவதற்கு ஏற்ற நல்ல ஒரு மாதிரி. நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். ஓட்டத்தை முடியுங்கள். விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நம் ஜீவியத் தேவைக்காகவும், ஆவிக்குரிய போராட்டங்களை மேற்கொள்ளவும், ஓட்டத்தை நேர்த்தியாய் முடிக்கவும், கர்த்தரை சார்ந்துகொண்டு அவருடைய வழிகளில் உறுதியாய் நின்றிருக்கிறோமா என்பதே கடைசியில் பொருட்படுத்தப்படும். 

மீண்டும் பாடுங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபல ரீஜண்ட் தேனுண்ணி பறவையினம் ஆபத்திலுள்ளது. அதின் இன்னிசைக்குரல் குருகுகிறது. முன்னர் அதிகளவில் இருந்தவை, தற்போது வெறும் முன்னூறு பறவைகளே மீந்துள்ளனவாம். கற்றுத்தர கூடியவைகள் சிலமட்டுமே உள்ள நிலையில், ஆண்பறவைகள் தங்கள் தனித்துவமான பாடலை மறந்து, தங்கள் துணையை ஈர்க்க தவறுகின்றன.

அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இந்த தேனுண்ணிகளை மீட்க ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அவைகளுக்காக தாங்கள் பாடுவதே அந்தத் திட்டம். அதாவது, பிற தேனுண்ணிகள் பாடுவதை ஒலிப்பதிவு செய்து அவைகளைக் கேட்கச்செய்தால், தங்கள் ஆழ்மனதில் உள்ள பாடலை மீண்டும் கற்கின்றன. ஆண் பறவைகள் இசைமெட்டோடு பாடுகையில் தங்கள் ஜோடிகளை மீண்டும் ஈர்க்கும். அவ்வாறு செய்வதின் மூலம் இனவிருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தீர்க்கதரிசி செப்பனியா, உபத்திரவத்திலிருந்த ஜனங்களிடம் பேசுகிறார். தங்களுக்குள் மிகவும் சீர்கெட்டுபோனதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதாக உரைக்கிறார் (செப்பனியா 3:1–8). பிற்காலத்தில், கைப்பற்றப்பட்டு சிறையிருப்புக்குள் செல்வதின் மூலம் இது நிறைவேறுகையில், ஜனங்களும் தங்கள் பாடலை மறந்தனர் (சங்கீதம் 137:4). ஆனால் செப்பனியா, நியாயத்தீர்ப்புக்கு பின்னான காலகட்டத்தை முன்னமே பார்க்கிறார். நாடுகடத்தப்பட்ட இந்த ஜனங்களிடம் தேவன் வந்து, அவர்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுக்காக பாடுகிறார், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதின் முடிவாக, ஜனங்களின் ஆத்மார்த்தமான பாடல் மீட்டெடுக்கப்படும் (வச. 14).

நம்முடைய கீழ்படியாமையாலோ, வாழ்வின் சோதனைகளாலோ நாமும் நம் மனதிற்கினிய பாடலை இழந்திருக்கலாம். ஆனால் நமக்காக மன்னிப்பின் பாடல்களையும், அன்பின் பாடல்களையும் ஒரு குரல் பாடுகிறது. நாமும் அவருடைய இசையை கவனித்துக்கேட்டு அவரோடு சேர்ந்து பாடுவோமாக.

ஆட எழுவோம்

இந்த காணொளி அதிகம் பகிரப்பட்டது. ஒரு அழகான மூத்தபெண்மணி சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கிறார், ஒரு காலத்தில் பாலே நடனத்தில் புகழ்பெற்றவராய் திகழ்ந்த இந்த மார்த்தா, தற்போதோ மூளையை பாதிக்கும் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டார். அவரிம் ஸ்வான் லேக் (swan lake) எனும் இசையை இசைக்கையில் மட்டும், ஆச்சரியமானது நடக்கும். அந்த இசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கயில், அவருடைய பலவீனமான கரங்கள் மெல்ல உயர ஆரம்பிக்கிறது. முதல் எக்காள இசை துவங்கும்போது, தன் சக்கரநாற்காலியிலிருந்து, அவர் செய்கை காட்டத் துவங்குகிறார். அவருடைய மனமும், உடலும் செயலிழந்துக் கொண்டிருந்தாலும், அவருடைய திறமை இன்னும் அப்படியே இருக்கிறது. 

அந்த காணொளியைப் பார்த்த மாத்திரத்தில் 1கொரிந்தியர் 15ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பவுலின் உயிர்த்தெழுதல் போதனைக்கு நேராய் என் சிந்தை திரும்புகிறது. ஒரு விதை எவ்வாறு பூமியிலிருந்து துளிர்விட்டு எழும்புகிறதோ, அதேபோன்று விசுவாசிக்கிறவர்களின் சரீரம் இந்த பூமியில் அழிவுள்ளதாய், கனவீனமுள்ளதாய், பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும்;. ஆனால் அழிவில்லாததாய், மகிமையுள்ளதாய், பலமுள்ளதாய் எழுந்திருக்கும் என்று கூறுகிறார் (வச.42-44)). ஒரு விதைக்கும், தாவரத்திற்கும் இடையே ஒரு உடல் சார்ந்த இணைப்பு இருப்பது போல, நம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், நம்முடைய ஆளத்துவமும், தாலந்துகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அப்படியே செழிப்பாய் இருக்கும். 

ஸ்வான் லேக் என்னும் அந்த இசை மீட்டப்படும்போது, தான் ஒரு காலத்தில் எப்படியிருந்தோம் என்று தன்னுடைய முன்னிலைமையை நினைத்து மார்த்தா சோர்வடைந்தாள். ஆனால், ஒரு மனிதர் அவளருகே வந்து, அவளுடைய கரங்களை பற்றினார். நமக்கும் அப்படியே சம்பவிக்கும். எக்காளங்கள் தொனிக்க (வச. 52), ஒரு கரம் நம்மை பற்றிப்பிடிக்கும். இதுவரை இல்லாத வகையில் நேர்த்தியான ஒரு நடனத்தை நாமும் அப்போது ஆடுவோம்.