எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

பெருகும் உதாரத்துவம்

பீஸ்ஸா ஆர்டர் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு ‘டோர் டெலிவரி’ செய்யும் வேலையை டேவி செய்துவந்தாள். அடுத்த டெலிவரி ஒரு வீடாயிருக்கும் என்று நினைத்தவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது வீடல்ல ஒரு தேவாலயம். டேவி குழப்பத்தோடு அந்த பெப்பரோனி பிஸ்ஸாவை எடுத்துக் கொண்டு தேவாலயத்தினுள் நுழைந்தபொழுது போதகர் அவளைச் சந்தித்தார்.

‘வாழ்க்கை உனக்கு எளிதாக இல்லையென்று சொல்லலாம் அல்லவா?’ என்று கேட்டார். அதற்கு டேவி ‘அப்படித்தான் ஐயா’ என்றாள். போதகர் சபையினர் கொடுத்த காணிக்கையாகிய 750 டாலரை இரண்டு தட்டுகளில் கொண்டுவந்து அவளுக்கு ஒரு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவளுக்குத் தெரியாமல் பிஸ்ஸா கடையினரிடம், மிகுந்த பண நெருக்கடியிலுள்ள ஒருவரிடம் பிஸ்ஸா கொடுத்தனுப்பக் கேட்டிருந்தார். டேவி மலைத்துப் போனாள். சில கடன்களை இப்பொழுது அவளால் அடைக்க முடியும்.

எருசலேமிலிருந்த ஆதி கிறிஸ்தவர்கள் பணக்கஷ்டத்தில் இருந்தபொழுது, ஒரு சபை அவர்களுக்கு உடனடியாக உதவியது. அவர்களே தரித்திரத்திலிருந்தும், கொடுப்பதை ஒரு சிலாக்கியம் என்று எண்ணி, தியாகமாகக் கொடுத்தார்கள் (2 கொரி 8:1-4). கொரிந்தியரும் நாமும் அவ்வாறே மனமுவந்து கொடுப்பதற்காக அவர்களை முன்மாதிரியாகப் பவுல் சுட்டிக் காட்டினார். நாம் நம் அபரிவிதமான செல்வத்திலிருந்து தேவையிலுள்ளவர்களுக்குக் கொடுக்கும் போது, தமது ஐஸ்வரியத்திலிருந்து நம்முடைய ஆவிக்குரிய தரித்திரத்தைப் போக்கக் கொடுத்த இயேசுவைப் பிரதிபலிக்கிறோம் (வச. 9).

டேவி அன்றைய தினம் சந்தித்த வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் தேவாலயத்தின் அன்பையும், உதாரத்துவத்தையும் பற்றி கூறினாள். மேலும் அதை முன்மாதிரியாக கொண்டு அன்று தனக்குக் கிடைத்த அன்பளிப்பை தேவையுள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டாள். தயாளம் பெருகியது. கிறிஸ்து மகிமைப்பட்டார்.

தேவனது பிரகாசிக்கும் அழகு!

ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பாலுள்ள லார்ட் ஹோவே தீவு வெண்மை நிறமணலும் தெளிந்த தண்ணீரும் உள்ள ஒரு சிறிய அழகிய இடம். அத்தீவின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது. இத்தீவில் மிகவும் சாதாரணமாக நீங்கள் கடல் ஆமைகளோடும் மீன்களோடும் பயமின்றி நீந்தலாம். உங்களருகே பெரிய எலும்பையுடைய மூன் இராஸே மீன்கள் தங்களது ஒளிரும் வண்ணங்களை வெளிப்படுத்தி விளம்பரப் பலகைகளை போலத் தோற்றமளிக்கும். அந்தக் கடலில் காயல் பகுதிகளில் பவளப்பாறைகளை நான் கண்டுபிடித்தேன். அங்கே சிவப்பு நிற க்ளவுன் மீன்களையும் மஞ்சள் கட்டங்கள் நிறைந்த வண்ணத்துப்பூச்சி மீன்களையும் என் கைகளால் தொட்டுப் பார்த்தேன். அவ்வாறான இயற்கை மேன்மையினால் உள்ளம் கிளர்ந்தெழுந்து தேவனை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை.

எனது இவ்வித உணர்ச்சியின் எழுச்சிக்கு அப்போஸ்தலனாகிய பவுல் காரணம் கூறுகிறார். மிகவும் உன்னதமான படைப்புகள் தேவனுடைய சுபாவத்தை சற்று நமக்கு வெளிப்படுத்துகின்றன (ரோம. 1:20) லார்ட் ஹோவே தீவின் அற்புதங்கள் தேவனுடைய வல்லமையையும் அழகையும் வெளிப்படுத்தின.

தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தேவனை தரிசித்தபோது, நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தில் மகிமையான வண்ணங்களால் சூழப்பட்ட ஒருவர் அவருக்குக் காணப்பட்டார் (எசே. 1:25-28). அப்போஸ்தலனாகிய யோவான் இது போன்ற ஒரு காட்சியைக் கண்டார். மரகதம் போன்ற வானவில்லால் சூழப்பட்ட விலையேறப் பெற்ற கற்களைப் போல ஜொலிக்கும் தேவனை அவர் கண்டார் (வெளி. 4:2-3). தேவன் தம்மை வெளிப்படுத்தும்போது அவர் நல்லவராகவும் வல்லமை மிக்கவராகவும் மட்டுமல்ல, அழகானவராகவும் வெளிப்படுகிறார். ஒரு சிற்பமானது அதை செய்தவரை பிரதிபலிப்பதைப்போல, சிருஷ்டியானது தேவனின் இந்த அழகை எடுத்துரைக்கிறது.      

தேவனுக்குப் பதிலாக இயற்கையை பல இடங்களில் மனிதர் தொழுதுகொள்ளுகிறார்கள் (ரோம. 1:25). இது மிகவும் துக்ககரமானது! பூமியின் தெளிவான தண்ணீர்களும் மினுமினுக்கும் உயிரினங்களும் அவற்றுக்குப் பின்னாலுள்ள கடவுளை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும்விட அதிக வல்லமையுள்ளவர், அதிக அழகுள்ளவர் அவர் மட்டுமே!

அனைத்திற்காகவும் நன்றி செலுத்துதல்!

ஆஸ்திரேலியாவின் நகரங்களுக்கிடையில் காரில் செல்ல பல மணி நேரம் ஆகும். உடல் சோர்வு பல கொடிய விபத்துகளுக்குக் காரணமாகலாம். எனவே நெருக்கம் நிறைந்த விடுமுறை நாட்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு தன்னார்வத் தொண்டர்கள் இலவசமாக காப்பி வழங்குகின்றனர். நெடுந்தூரம் காரில் பயணம் செய்கையில் நானும் எனது மனைவி மெரினும் இவ்வித நிறுத்தங்களை மிகவும் ரசித்து நேசிக்கலானோம்.

ஒரு சமயம் காரை ஒரு ஓய்வு நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, காப்பி அருந்தச் சென்றோம். ஒரு பணியாளர் இரு கோப்பை காப்பியை நீட்டி, இரு டாலர்கள் தருமாறு கேட்டாள். ஏன் என்று கேட்டேன். அங்கிருந்த விளம்பர அட்டையைப் படிக்குமாறு கூறினாள். இந்நிறுத்தத்தில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே இலவச காப்பி, மற்ற பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எரிச்சலடைந்த நான் இது ஒரு போலி விளம்பரமென அவளிடம் கூறினேன். இரண்டு டாலரைப் செலுத்திவிட்டு எங்கள் காரை நோக்கி நடந்து சென்றேன். காருக்குச் சென்றபோது என் மனைவி மெரின் எனது பிழையைச் சுட்டிக் காண்பித்தாள்: பரிசு ஒன்றை எனது உரிமைப் பொருளாக எண்ணிக்கொண்டு நான் பெற்றுக்கொண்டதற்கு நன்றி செலுத்தத்தவறிவிட்டேன். அவள் மிகச்சரியாய்ச் சொன்னாள்.

வாக்குத்தத்த தேசத்தை நோக்கி இஸ்ரவேலரை நடத்திச் சென்ற மோசே நன்றியுள்ள மக்களாய் விளங்கும்படி  அவர்களை கேட்டுக்கொண்டார் (உபா. 8:10) தேவனுடைய ஆசிர்வாதத்தால் அந்த தேசம் நிறைந்திருந்தது என்றாலும், இந்த செழிப்பு நிலைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதுபோல அம் மக்கள் நடந்து கொண்டனர் (வச. 17,18). இதன் அடிப்படையில், யூத மக்கள் தங்களது ஒவ்வொரு சாப்பாட்டுக்காகவும் சிறிதோ பெரிதோ தேவனைத் நன்றி கூற ஆரம்பித்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டும் எல்லாமே இலவசப் பரிசு.

நான் திரும்பிச் சென்று அந்தப் பெண் பணியாளரிடம் மன்னிப்புக் கேட்டேன். தகுதியற்ற எனக்கு ஒரு கோப்பை காப்பி என்பது ஒரு இலவசப் பரிசு, அதற்காக நான் நன்றிசெலுத்த வேண்டும்.

மிகவும் நுணுக்கமான விபரங்கள்

இந்த அண்டசராசரம் வியக்கத்தக்க அற்புதமாக உள்ளது. இந்த நேரத்தில்தானே மணிக்கு 2300 மைல் வேகத்தில் சந்திரன் நம்மை சுற்றிக் கொண்டு இருக்கிறது; நமது பூமி மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாகவும், நமது பால் வழியிலுள்ள எண்ணிக்கைக்கு அடங்காத கோள்களில் ஒன்றாகவும் நமது சூரியன் உள்ளது. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பால் வெளிகளில் நமது பால் வழியும் ஒன்று. என்ன ஆச்சரியம்!

இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நமது சிறிய பூமி, ஒரு சிறிய கூழாங்கல்லைப் போன்றுள்ளது. நாம், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு மணல் துகளைவிட பெரிதல்ல. ஆனால், வேதாகமத்தின்படி அண்டசராசரங்களின் தேவன் மிகச் சிறியவர்களாகிய நம்மில் ஒவ்வொருவருடைய நுணுக்கமான விபரங்களையும் அறிந்திருக்கிறார். நாம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே அவர் நம்மை அறிந்திருக்கிறார் (சங். 139:13-16). அவர் நமது போக்கையும், வரத்தையும் அறிந்திருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு நினைவையும் அவர் அறிந்திருக்கிறார் (வச. 1-6).

சில சமயங்களில் இது நமக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். இந்தச் சிறிய கூழாங்கல் போன்ற நமது பூமியில் யுத்தம், பஞ்சம் போன்ற மிகப் பெரிய பிரச்சனைகள் உண்டு. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் துன்ப நேரங்களில், நாம் தேவனுடைய கரிசனையோடு கூடிய கண்காணிப்பைப்பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்கலாம். ஆனால், தாவீது ராஜா 139ம் சங்கீதத்தை எழுதிய பொழுது பல் வேறு துன்பங்கள் ஊடாகத் சென்று கொண்டிருந்தான் (வச. 19,20). நமது தலையிலுள்ள முடிகளெல்லாம் தேவனால் எண்ணப்பட்டிருக்கிறது என்று இயேசு கூறிய பொழுது (மத். 10:30) அவர் சிலுவையில் அறையப்பட இருந்த காலக்கட்டத்தில் இருந்தார். தேவனுடைய கரிசனையோடு கூடிய கண்காணிப்பைப்பற்றி வேதம் கூறுவது, ஓர் அனுபவ முதிர்ச்சியற்ற கூற்றல்ல அது உலகிலுள்ள உண்மையான சத்தியமாகும்.

அண்ட சராசரங்களை சுழலவைக்கும் தேவன் நம்மைப்பற்றிய நுணுக்கமான விபரங்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார்.

தழைத்தோங்கும் தருணம்

எங்கள் பின் வாசல் பக்கம் உள்ள ரோஜாச் செடியை வெட்டிவிட வேண்டுமென கடந்த இளவேனிற் காலத்திலேயே தீர்மானித்தேன். நாங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இம்மூன்று வருடங்களிலும், அச்செடி பூக்கள் பூக்கவே இல்லை. பூக்களற்ற அசிங்கமான அதன் கிளைகள் எல்லா திசைகளிலும் இப்பொழுது படர்ந்துள்ளது.

என் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிட்டதால், என் தோட்டத்தைக் குறித்த திட்டங்கள் தாமதமாயிற்று. அதன் பின் சில வாரங்களில், அந்த ரோஜா செடி திடீரென பூத்து குலுங்கியது. அப்படியொரு காட்சியை நான் இதற்கு முன் கண்டதே இல்லை. நறுமணம் வீசும் நூற்றுக்கும் அதிகமான வெள்ளைப்பூக்கள் பின்வாசற் கதவில் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் அவை முற்றம் வரையிலும் கூட படர்ந்து அத்தரை பகுதியை அழகான இதழ்களால் மூடின.

எங்கள் ரோஜா செடியின் மறுமலர்ச்சி, இயேசு கூறிய அத்திமர உவமையை எனக்கு நினைவூட்டியது (லூ:13:6-9). அத்திமரம் காய்ப்பதற்கு மூன்றாண்டு கால அவகாசம் கொடுப்பது இஸ்ரவேல் தேசத்திலே வழக்கம். ஆனால், அவை மூன்று ஆண்டுகளில் காய்க்கவில்லை என்றால் அந்நிலத்தை வேறு விதத்தில் பிரயோஜனப்படுத்தும்படி அம்மரத்தை வெட்டிவிடுவார்கள். இயேசு கூறிய உவமையிலே, ஓர் தோட்டக்காரன் ஒரு மரத்திற்காக தன் எஜமானிடம் இன்னும் ஓர் ஆண்டுகால அவகாசம் கேட்பான். இந்த முழு உவமையின் பொருள் என்னவெனில், ‘தாங்கள் வாழ வேண்டிய விதத்திலே இஸ்ரவேலர் வாழவில்லை. ஆகையால் தேவனால் நீதியாய் அவர்களை நியாயந்தீர்க்க முடியும்.’ ஆனால் இரக்கமுள்ள தேவன், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புபெற்று பூத்து குலுங்கும்படி அவர்களுக்கு இரக்கம் பாராட்டி, கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார்.

நாம் அனைவரும் தழைத்தோங்க வேண்டுமென தேவன் விரும்புவதால், நம் அனைவருக்கும் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார். நாம் விசுவாசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் சரி, இரட்சிக்கப்படாத உற்றார் உறவினர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாலும் சரி, அவர் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்பது நம் அனைவருக்கும் நற்செய்தி அல்லவோ!

இனிய நறுமணம்

இங்கிலாந்து தேசத்தின் டோவர் (Dover) மாநிலத்திலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு எழுத்தாளர் ரீட்டா ஸ்நோடன் (Rita Snowden) சென்றபொழுது ஏற்பட்ட குதூகலமான அனுபவத்தை விவரிக்கிறார். ஒரு மதியவேளை சாலையோர உணவகத்தில், டீ அருந்திக் கொண்டிருந்தபொழுது ஒரு அருமையான நறுமணம் வீசக்கண்ட ரீட்டா, உணவகப் பணி யாளர் ஒருவனிடம் அந்நறுமணத்தை குறித்து கேட்டாள். அதற்கு அவன் அங்கு நடந்து செல்பவர்களிடமிருந்து தான் அந்நறுமணம் வீசுவதாக கூறினான். ஏனெனில் அக்கிராமத்தி லுள்ள அநேகர் அருகிலுள்ள நறுமணத்தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதால், அவர்களுடைய உடைகளில் அந்நறுமணம் கலந்து, அவர்கள் வீடு திரும்பும் பொழுது அந்நறுமணத்தை போகும் இடமெங்கும் சுமந்து சென்றார்கள். 

இது கிறிஸ்தவ வாழ்வைப் பிரதிபலிக்கும் அருமையான காட்சி அல்லவா! அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதைப்போல, நாம் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருந்து, அவருடைய நறுமணத்தை எவ்விடமும் பரப்புகிறோம் (2 கொரி:2:15). மேலும் போரிலே வெற்றி சிறந்த அரசன் நாடு திரும்பும் பொழுது, தன்னுடைய யுத்த வீரர்களோடு, சிறைப்பிடிக்கப்பட்டவர்களை இழுத்து வரும் வேளையில் அவ்வெற்றியையும் அரசனுடைய மகத்துவத்தையும் கொண்டாடும் விதமாக வீசும் தூபவர்க்கத்திற்கு ஒப்பாக கிறிஸ்தவ வாழ்வை பவுல் காட்சிப்படுத்துகிறார் (வச. 14). 

பவுலைப் பொறுத்தவரை நாம் கிறிஸ்துவின் நறுமணத்தை இரண்டு விதமாக பரப்புகிறோம். முதலாவது நம்முடைய வார்த்தைகளின் மூலம் பூரண அழகுடையவரை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளும் பொழுது நறுமணம் வீசுகிறோம். இரண்டாவதாக, கிறிஸ்துவின் தன்னல மற்ற தியாகச்செயல்களை நம் வாழ்வில் நாம் செய்வதின் மூலம் நறுமணம் வீசுகிறோம் (எபே. 5:1-2) நாம் வீசும் தெய்வீக நறுமணத்தை அனைவரும் விரும்பாமல் போனாலும், அந்நறுமணம் அநேகரை கிறிஸ்துவண்டை கொண்டு வரும். 

சிறிது நறுமணத்தை முகர்ந்த ரீட்டா ஸ்நோடன் அதன் ஆதாரத்தை அறிந்துக்கொள்ள முயன்றாள். நாம் இயேசுவை பின்பற்றும் பொழுது, நாமும் அவருடைய வாசம் நிறைந்தவர்களாய், செல்லும் இடமெங்கும், நம்முடைய சொல்லாலும் செயலாலும் நற்கந்தம் வீசுவோமாக!

பிம்பத்தைக் கையாளுதல்

வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 80வது பிறந்தநாளைக் கொண்டாட, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கிரஹாம் சதர்லேண்ட் (Graham Sutherland) என்ற பிரபலமான ஓவியரை அவரது உருவ படத்தை வரைவதற்கு நியமித்தது. “நீங்கள் எப்படி என்னை வரையப்போகிறீர்கள்? அழகிய தேவதூதன் போலவா அல்லது பயங்கரமான நாய் (Bulldog) போலவா?” என்று சர்ச்சில் அவரிடம் கேட்டதாக கூறப்படுகின்றது. அவரை குறித்த இந்த இரண்டு பிரபலமான கருத்துகளும் அவருக்கு பிடித்திருந்தது. எனினும், சதர்லேண்ட், தான் பார்த்தபடி வரையப்போவதாக கூறினார்.

சர்ச்சிலுக்கு தன் உருவப்படம் திருப்தியளிக்கவில்லை. சதர்லாந்தின் உருவப் படத்தில் நாற்காலியில் சரிந்த நிலையில் அமர்ந்திருந்து, தனக்கே உரித்தான முத்திரை கோபத்துடன் காணப்பட்டார் - அதுதான் நிஜமும்கூட, ஆனால் அது நன்றாயிருக்காதல்லவா? ஆதிகாரப்பூர்வமாக அப்படம் திறக்கப்பட்ட பின்பு, சர்ச்சில், அந்த ஓவியத்தை மறைத்து வைத்தார். பின்னர் அது இரகசியமாக அழிக்கப்பட்டது.

சர்ச்சில் போல், நம்மில் பலர் நமக்குள் நம்மை பற்றிய ஓர் பிம்பத்தை வரைந்துள்ளோம். அதைத்தான் பிறரும் காணவேண்டும் என்றும் விரும்புகிறோம். அது வெற்றி, தெய்வபக்தி, அழகு அல்லது வலிமை போன்ற காரியங்களை குறித்ததாக இருக்கலாம். நாம் நமது ‘அசிங்கமாக’ பக்கங்களை மறைக்க மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை நம்முடைய நிஜமான முகத்தை பிறர் கண்டால் நம்மை நேசிக்காமல் போய் விடுவார் என்ற பயத்தினால்தான் இவ்வாறு செய்கிறோம்.

பாபிலோன் இஸ்ரவேலரை சிறைபிடித்து சென்ற போது, அவர்கள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதை நாம் காண்கிறோம். அவர்களுடைய பாவத்தின் நிமித்தமாகத் தான் தேவன் அவர்களுடைய எதிரிகள் அவர்களை கைப்பற்ற அனுமதித்தார். ஆயினும் அவர்களை பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொருவரின் பெயர்களையுமறிந்த தேவன், அவர்களது அவமானகரமான சோதனைகளிலும் கூடவே இருந்தார் (ஏசா. 43:1-2). அவருடைய கரத்தில் அவர்கள் ‘விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும்’ (வச. 4), பாதுகாக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் (வச. 13). அவர்கள் பாவங்களினால் கறைப்பட்டிருந்தபோதிலும், தேவன் அவர்களை நேசித்தார்.

இந்த உண்மை நமக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டால், பிறர் ஒப்புதலுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் நாம் ஏங்கித் தவிக்க மாட்டோம். நாம் யார் என்கிற உண்மையை தேவன் முற்றிலுமாக அறிந்தபொழுதும், நம்மை அளவற்ற அன்பினால் நேசிக்கிறார் (எபே. 3:18).

அலைகளின் அதிபதி

அரசனாகிய கன்யூட் (Canute) 11ஆம் நூற்றாண்டில் பூமியில் வாழ்ந்த மிக சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர். அவரைப்பற்றி புகழ்பெற்ற ஒரு கதை உண்டு. அதாவது, அவர் தன்னுடைய நாற்காலியை கடற்கரையோரமாக போடக் கட்டளையிட்டு, பின்பு சீறும் கடலைப் பார்த்து, “நீ என் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறாய். ஆகவே என்னுடைய தேசத்திலே நீ எழும்பவும் கூடாது என்னுடைய ஆடைகளையோ, கை, கால்களையோ நனைக்கவும் கூடாது என உனக்கு நான் ஆணையிடுகிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் அலை எழும்பி ராஜாவின் கால்களை நனைத்தது.

கன்யூட்டின் பெருமையை குறித்து உரைக்கவே இக்கதை அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது தாழ்மையை குறித்ததான கதை. ஏனென்றால், “அவரையன்றி வானமும், பூமியும், கடலும் கீழ்ப்படியாது, ராஜாக்களின் வல்லமை வெறுமையானது என்று உலகமனைத்தும் அறிந்து கொள்ளட்டும்,” என அச்சம்பவத்திற்கு பின்பு கன்யூட் கூறினார். தேவன் ஒருவரே ஒப்பற்ற வல்லமை பொருந்தியவர் என்பதை கன்யூட்டின் கதை குறிப்பிடுகிறது.

இதைத்தான் யோபுவும் கண்டறிந்தான். பூமியின் அஸ்திபாரங்களை போட்டவரோடு (யோபு 38:4-7), காலைப்பொழுது தோன்றவும், இரவு நேரம் முடியவும் கட்டளையிட்டவரோடு (வச. 12-13), பனியை பண்டசாலையில் சேர்த்து வைப்பவரோடு (வச. 22), நட்சத்திரங்களை வழிநடத்துபவரோடு (வச. 31-33) நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் மிகவும் அற்பமானவர்களே. அலைகளை அரசாளுபவர் ஒருவரே. கண்டிப்பாக அது நாமல்ல (வச. 11; மத். 8:23-27).

ஒருவேளை நம்மை நாமே மிஞ்சின அறிவாளியாகவோ, பெருமையாகவோ எண்ணத் தொடங்கினால், கன்யூட்டின் கதையை நமக்கு நாமே நடித்துக் காட்டிக்கொண்டால் நலமாயிருக்கும். கடலோரம் சென்று அலைகளை நிற்கச் சொல்லுங்கள் அல்லது சூரியனை சற்று நகரச்சொல்லுங்கள். அப்பொழுது எல்லோரிலும் மேன்மையானவரை நினைவுகூர்ந்து, நம்முடைய வாழ்வை அவர் அரசாளுவதற்காக நன்றி கூறுவோம்.