தோழமையான இலட்சியம்
நாசியன்சஸின் கிரிகோரி மற்றும் சிசேரியாவின் பேசில் ஆகியோர் நான்காம் நூற்றாண்டில் பெரிதும் மதிக்கப்பட்ட திருச்சபை தலைவர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். தத்துவ பாட மாணவர்களாகத்தான் முதலில் இவர்கள் சந்தித்தனர், பின்னர் கிரிகோரி, அவர்கள் "ஈருடல் ஓருயிர்" போல ஆனதாகக் கூறினார்.
அவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் ஒத்ததாக இருந்ததால், கிரிகோரிக்கும் பேசிலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளாலான வாழ்க்கையைத் தங்களின் "ஒரே லட்சியமாக" கொண்டு, மேலும் இந்த லட்சியத்தில் தன்னை காட்டிலும் மற்றவர் சிறக்க வேண்டுமென்று "ஒருவரையொருவர் ஊக்குவித்த" காரணத்தால் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக கிரிகோரி விளக்கினார். இதன் விளைவாக, இருவரும் நம்பிக்கையில் வளர்ந்தனர் மற்றும் போட்டியின்றி உயர் மட்ட திருச்சபை தலைமைக்கு உயர்ந்தனர்.
எபிரேயர் புத்தகம், நாம் விசுவாசத்தில் வலுவாக இருக்க உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது (எபிரேயர் 2:1), நாம் "நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்" அசைவில்லாமல் உறுதியாயிருக்கவும், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்" (10:23-24) ஊக்குவிக்கவும் ஏவுகிறது. இந்த கட்டளை ஒரு சபைக்கென்று கொடுக்கப்பட்டிருந்தாலும் (வ. 25), அதை தங்கள் நட்புக்குப் பயன்படுத்தியதின் மூலம், கிரிகோரியும் பேசிலும் எவ்வாறு நண்பர்கள் ஒருவரையொருவர் வளர ஊக்குவிக்கலாம் என்றும், அவர்களுக்கு இடையே வளரக்கூடிய போட்டி மனப்பான்மை போன்ற "கசப்பான வேரை" (12:15) தவிர்க்கலாம் என்பதையும் காட்டினார்கள்.
விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளை நமது சொந்த நட்பின் லட்சியமாகக் கொண்டு, இந்த இலட்சியத்தில் நம்மைக் காட்டிலும் நமது நண்பர்கள் சிறக்கும்படி அவர்களை ஊக்குவித்தால் என்ன? இரண்டையும் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார்.
தேவனுடன் பங்காளி ஆகுதல்
என் தோழியும் அவளது கணவரும் கருத்தரிக்கச் சிரமப்பட்டபோது, மருத்துவச் சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அவளுக்குப் பரிந்துரைத்தனர். ஆனால் என் தோழி தயங்கினாள். "நம்முடைய பிரச்சனையைத் தீர்க்க ஜெபம் போதுமல்லவா? எனக்கு உண்மையிலே மருத்துவச் சிகிச்சை அவசியமா?" எனக் கேட்டாள். தேவன் செயல்படுவதைப் பார்க்க, மனித பங்களிப்பை உணர முடியாமல் என் தோழி போராடினாள்.
இயேசு, திரளான ஜனங்களுக்கு உணவளித்த சம்பவம் இதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும் (மாற்கு 6:35-44). அந்த கதை எப்படி நிறைவடைந்தது என்பதை நாம் அறிந்திருக்கலாம்; ஆயிரக்கணக்கான மக்கள் சில அப்பம் மற்றும் மீன்களால் அற்புதமாகப் போஷிக்கப்படுகிறார்கள் (வ. 42). ஆனால் கூட்டத்திற்கு உணவளிப்பது யார் என்பதைக் கவனியுங்கள்? சீஷர்கள் (வ. 37). மேலும், யார் உணவு வழங்குகிறார்கள்? சீஷர்கள் (வ. 38). உணவை விநியோகித்து, பிறகு சுத்தம் செய்வது யார்? சீஷர்கள் (வ. 39-43). "நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்" என்று இயேசு கூறினார் (வ. 37). இயேசு அற்புதம் செய்தார், ஆனால் சீஷர்கள் செயல்பட்டபோதுதான் அது நிகழ்ந்தது.
நல்ல பயிர் என்பது தேவனின் ஈவு (சங்கீதம் 65:9-10), ஆனால் ஒரு விவசாயி நிலத்தில் உழைத்தாக வேண்டும். இயேசு, பேதுருவிடம் "மீன் அகப்படும்" என வாக்களித்தார், ஆனால் மீனவரும் வலைகளை வீச வேண்டியிருந்தது (லூக்கா 5:4-6). தேவனால் நம்மையன்றி பூமியைப் பராமரிக்கவும், அற்புதங்களைச் செய்யவும் முடியும். ஆனால், பெரும்பாலும்மனிதனோடு இனைந்து செயல்படவே தேவன் விரும்புகிறார்.
என் தோழியும் சிகிச்சை பெற்று, பின்னர் வெற்றிகரமாகக் கருத்தரித்தார். இது அற்புதம் நடப்பதற்கான விதிமுறை இல்லை என்றாலும், என் தோழிக்கும் எனக்கும் இது ஒரு பாடமாக இருந்தது. தேவன் நம் கரங்களில் வழங்கியுள்ள முறைகளைக்கொண்டே, தமது அதிசயமான கிரியைகளை அடிக்கடி செய்கிறார்.
மகிழ்ச்சியின் வேகம்
"மகிழ்ச்சியின் வேகத்தில் செல்லுங்கள்" ஒரு நாள் காலையில் வரவிருக்கும் ஆண்டை குறித்து நான் ஜெபத்துடன் சிந்தித்தபோது, இந்த வாக்கியம் என் மனதில் பட்டது, அது பொருத்தமானதாகத் தோன்றியது. எனக்கு அதிக வேலை செய்யும் நாட்டம் இருந்தது, அது என் மகிழ்ச்சியை அடிக்கடி பறித்தது. எனவே, இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, நண்பர்கள் மற்றும் சநதோஷகாரமான செயல்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில், வரும் ஆண்டில் மகிழ்ச்சிகரமான வேகத்தில் பணியாற்ற நிச்சயித்தேன்.
இந்த திட்டம் பலன் கொடுத்தது; மார்ச் வரை! பின்னர் நான் உருவாக்கும் ஒரு பாடத் திட்டத்தின் சோதனையை மேற்பார்வையிட ஒரு பல்கலைக்கழகத்துடன் கூட்டுச் சேர்ந்தேன். மாணவர் சேர்க்கை மற்றும் பாடம் தயாரித்தல் என்று நான் விரைவில் நீண்ட நேரம் உழைத்தேன். இப்போது நான் எப்படி மகிழ்ச்சியின் வேகத்தில் செல்வேன்?
இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களுக்குச் சந்தோஷத்தை வாக்களிக்கிறார், அது அவருடைய அன்பில் நிலைத்திருப்பதன் மூலமும் (யோவான் 15:9) ஜெபத்துடன் நம்முடைய தேவைகளை அவரிடம் கொண்டு செல்வதன் மூலமும் வருகிறது என்று கூறுகிறார் (16:24). "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்" (15:11) என்கிறார். இந்த மகிழ்ச்சி அவருடைய ஆவியானவர் மூலம் ஒரு கனியாக வெளிப்படுகிறது, அவருடன்தான் நாம் நடக்க வேண்டும் (கலாத்தியர் 5:22-25). ஒவ்வொரு இரவும் இளைப்பாறுதலான, நம்பிக்கையான ஜெபத்தில் நேரத்தைச் செலவழித்தபோதுதான் என்னுடைய வேலை மிக்க காலத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
மகிழ்ச்சி மிகவும் அவசியமானதால், நமது முக்கியத்துவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஞானமுள்ள காரியம். ஆனால் வாழ்க்கை முழுவதுமாக நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், மகிழ்ச்சியின் மற்றொரு ஆதாரமான ஆவியானவர் நமக்குக் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, இப்போது மகிழ்ச்சியின் வேகத்தில் செல்வது என்பது ஜெபத்தின் வேகத்தில் செல்வதைக் குறிக்கிறது; மகிழ்ச்சியைத் தருபவரிடமிருந்து பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குவதாகும்
ராஜ வருகை
உலகளாவிய பார்வையாளர்கள் பில்லியன்களில் மதிப்பிடப்பட்ட நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட ஒளிபரப்பாக இருக்கலாம். அன்று ஒரு மில்லியன் மக்கள் லண்டனின் தெருக்களில் வரிசையாக நின்றனர், மேலும் 250,000 பேர் அந்த வாரத்தில் ராணியின் சவப்பெட்டியைப் பார்க்க மணிக்கணக்கில் வரிசையில் நின்றனர். ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஐந்நூறு மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள் மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் ஒரு வலிமை மற்றும் பண்புக்காக அறியப்பட்ட ஒரு பெண்ணுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.
உலகம் தனது பார்வையை கிரேட் பிரிட்டன் மற்றும் அதன் ராணியின் பக்கம் திரும்பியபோது, என் எண்ணங்கள் வேறொரு நிகழ்வை நோக்கி திரும்பியது - ஒரு ராஜ வருகை. ஒரு நாள் வரப்போகிறது; அப்பொழுது தேசங்கள் ஒன்று கூடி ஒரு மிகப் பெரிய ராஜாவை அங்கீகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 45:20-22). வலிமையும் பண்பும் கொண்ட ஒரு தலைவர் (வச. 24). அவருக்கு முன்பாக “முழங்கால் யாவும்... முடங்கும், நாவு யாவும் (அவரை) முன்னிட்டு ஆணையிடும்” (வச. 23). உலகத் தலைவர்கள் உட்பட, அவருக்குக் காணிக்கை செலுத்தி தங்கள் நாடுகளை அவருடைய வெளிச்சத்தில் நடக்கவைப்பார்கள் (வெளிப்படுத்துதல் 21:24,26). இந்த ராஜாவின் வருகையை அனைவரும் வரவேற்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறவர்கள் அவருடைய ஆளுகையை என்றென்றும் அனுபவிப்பார்கள் (ஏசாயா 45:24-25).
ஒரு ராணி வெளியேறுவதைப் பார்க்க உலகம் கூடியது போல், ஒரு நாள் அதன் இறுதி ராஜா திரும்பி வருவதைக் காணும். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை வணங்கி அவரை ஆண்டவராக அங்கீகரிக்கும் அந்த நாள் எப்பேற்பட்ட நாளாய் இருக்கப் போகிறது! (பிலிப்பியர் 2:10-11).
இராஜ்ய வடிவ பணித்தளம்
விக்டோரியன் இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் இருண்ட இடங்களாக இருந்தன. இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தன. தொழிலாளர்கள் பெரும்பாலும் வறுமையில் வாழ்ந்தனர். “சேரியில் வசிக்கும் உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இலட்சியங்களை வளர்த்துக் கொள்ள முடியும்," என்று எண்ணிய ஜார்ஜ் கேட்பரி, தனது விரிவடையும் சாக்லேட் வணிகத்திற்காக ஒரு புதிய வகையான தொழிற்சாலையை உருவாக்கினார். அது அவரது தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளித்தது.
இதன் விளைவாக, முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட போர்ன்வில்லே என்ற அந்த குக்கிராமம், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் கேட்பரியின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேவாலயங்கள் என்று வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு நல்ல ஊதியமும் மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது. இவை அனைத்திற்கும் கேட்பரி கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையே காரணம்.
தேவனுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார் (மத்தேயு 6:10). காட்பரி செய்தது போல், இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் அடிப்படையில், நம்முடைய பணியிடங்கள் அன்றன்றுள்ள ஆகாரத்தை சம்பாதிக்கும் இடமாகவும் கடனாளிகளை மன்னிக்கிற இடமாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது (வச. 11-12). ஒரு வேலையாளுக்கு, “கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து” (கொலேசெயர் 3:23) வேலை செய்ய ஊக்குவிக்கிறது. முதலாளிகளாக, ஊழியர்களுக்கு “வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்ய” (4:1) ஊக்குவிக்கிறது. நமது பங்கு எதுவாக இருந்தாலும், ஊதியமாக இருந்தாலும் சரி, தன்னார்வமாக இருந்தாலும் சரி, நாம் சேவை செய்பவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதைக் குறிக்கிறது.
ஜார்ஜ் கேட்பரியைப் போலவே, தேவன் நம் சுற்றுப்புறங்களுக்கும் பணியிடங்களுக்கும் பொறுப்பாக இருந்தால், விஷயங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். ஏனெனில் அவர் இருக்கும் போது மக்கள் செழித்து வளர்கிறார்கள்.
உதவிக்காய் தாழ்மையுடன் அணுகுதல்
எங்கள் விருந்துக்கு நாள் நெருங்கியதும், நானும் என் மனைவியும் திட்டமிட ஆரம்பித்தோம். நிறைய பேர் வருவதால், சமையல்காரரிடம் பணம் கொடுத்து சமைக்க வேண்டுமா? சமையலை நாமே செய்தால் பெரிய அடுப்பு வாங்க வேண்டுமா? அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், நாம் கூடாரம் ஏதும் போட வேண்டியிருக்குமா? விரைவில் எங்கள் விருந்தின் செலவு உயர்ந்தது. எல்லாவற்றையும் நாமே வழங்க முயற்சிப்பதால், மற்றவர்களின் உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்கிறோம்.
சமூகத்தைப் பற்றிய வேதாகமத்தின் தரிசனம், கொடுக்கல் வாங்கல் இரண்டியும் உடையதாகும். பாவத்தில் விழுவதற்கு முன்பே, ஆதாமுக்கு உதவி தேவைப்பட்டது (ஆதியாகமம் 2:18). மற்றவர்களின் ஆலோசனையைப் பெறவும் (நீதிமொழிகள் 15:22) மற்றும் நமது சுமைகளைப் பகிர்ந்து கொள்ளவும் (கலாத்தியர் 6:2) நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆதித்திருச்சபை “சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்” (அப்போஸ்தலர் 2:44-45). சுயநலமாய் வாழ்வதற்குப் பதிலாக, அழகான ஒன்றையொன்று சார்ந்து பகிர்ந்து கொண்டார்கள், பெற்றுக்கொண்டனர், கொடுத்தனர்.
எங்கள் விருந்துக்கு ஒரு பலகாரம் அல்லது இனிப்பை கொண்டு வரும்படி விருந்தினர்களிடம் கேட்டோம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் பெரிய அடுப்பைக் கொண்டு வந்தார்கள், ஒரு நண்பர் கூடாரம் போட உதவிசெய்தார். உதவி கேட்பது நெருங்கிய உறவுகளை உருவாக்க எங்களுக்கு உதவியது, மேலும் மக்கள் செய்த உணவு வகைகளையும் மகிழ்ச்சியையும் தந்தது. நம்மைப் போன்ற ஒரு காலத்தில், தன்னிறைவு பெற்றிருப்பது பெருமைக்குரியதாக இருக்கும். ஆனால் தேவனிடத்தில் தாழ்மையோடு உதவிகேட்பவர்களுக்கு, தேவன் தம்முடைய கிருபையை கொடுக்கிறார் (யாக்கோபு 4:6).
ஞானமான கரிசனை
அந்தக் காட்சி மனதைக் கனக்கச் செய்தது. ஐம்பத்தைந்து பைலட் திமிங்கிலங்கள் ஸ்காட்லாந்தின் கடற்கரையில் சிக்கித் தவித்தன. ஆர்வலர்கள் அவற்றைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் இறுதியில் அவை இறந்தன. இதுபோன்ற திரளான மரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இது திமிங்கிலங்களின் வலுவான சமூக பிணைப்பு காரணமாகக் கூட இருக்கலாம். ஒன்று சிக்கலில் சிக்கும்போது, மீதமுள்ளவை உதவிக்கு வரும், ஒரு அக்கறையுள்ள உள்ளுணர்வு தான் ஆனாலும் முரண்பாடாகத் தீங்கு விளைவிக்கிறது.
பிறருக்கு உதவும்படி வேதாகமம் தெளிவாக நம்மை அழைக்கிறது, ஆனால் நாம் எப்படிச் செய்கிறோம் என்பதில் ஞானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பாவத்தில் சிக்கிய ஒருவரை மீட்டெடுக்க நாம் உதவும்போது, அந்த பாவத்தால் நாமே இழுக்கப்படாமல் கவனமாக இருக்க வேண்டும் (கலாத்தியர் 6:1), மேலும் நாம் நம் அண்டை வீட்டாரை நேசிக்கும்போது, நாம் நம்மையும் நேசிக்க வேண்டும் (மத்தேயு 22:39). நீதிமொழிகள் 22:3, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறது, பிறருக்கு உதவுகையில் நமக்குத் தீங்கு உண்டாகலாம் என்ற எச்சரிப்பான நினைவூட்டல் இது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் தேவையோடிருந்த இருவர் எங்கள் சபைக்கு வரத் தொடங்கினர். விரைவில், கரிசனைகொண்ட சபையார் அவர்களுக்கு உதவியதால் நோந்துகொண்டனர். தீர்வாக அந்த தம்பதியரை ஒதுக்காமல், ஆனால் உதவி செய்பவர்கள் பாதிக்கப்படாத வகையில் எல்லைகளை வகுத்துக் கொள்வதென்று முடிவானது. ஆதிகாரண உதவியாளரான இயேசுவும் இளைப்பாற நேரம் ஒதுக்கிக் கொண்டார் (மாற்கு 4:38) மேலும் தம் சீடர்களின் தேவைகள் பிறரின் தேவைகளால் மறைக்கப்படாமல் பார்த்துக் கொண்டார் (6:31). ஞானமான அக்கறைக்கு அவரே முன்மாதிரி. நமது சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு நாம் அதிக அக்கறை செலுத்த முடியும்.
முதலாவது ஆராதனை
வயது வந்தோருக்கான நட்பைப் பற்றி ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைத் தொடங்க நான் ஒருபோதும் திட்டமிடவில்லை. அவ்வாறு செய்ய நான் அழைக்கப்பட்டபோது, எனக்குள் பல கேள்விகள் இருந்தன. தொண்டு நிறுவனம் எவ்வாறு நிதியளிக்கப்படும், அதை உருவாக்க எனக்கு யார் உதவ வேண்டும்? இந்த விஷயங்களில் எனக்கு வணிகப்புத்தகத்தைக் காட்டிலும் வேதாகமத்திலிருந்தே அதிக உதவிகள் கிடைத்தது.
எதையாவது கட்டியெழுப்ப தேவனால் அழைக்கப்பட்ட எவருக்கும் எஸ்றா புத்தகம் இன்றியமையாத வாசிப்பாகும். இப்புத்தகம் யூதர்கள் சிறையிருப்பிற்கு பின்பு தங்கள் எருசலேம் நகரத்தை மீண்டும் எவ்வாறு கட்டியெழுப்பினார்கள் என்பதையும் அதை கட்டுவதற்கு தேவையான பொருளாதார தேவைகளை தேவன் எவ்வாறு சந்தித்தார் என்பதையும் விவரிக்கிறது (எஸ்ரா 1:4-11; 6:8-10). மேலும் தன்னார்வலர்களும் ஒப்பந்தக்காரர்களும் எவ்வாறு வேலையைச் செய்தார்கள் (1:5; 3:7) என்பதையும் விவரிக்கிறது. இது ஆயத்தமாகும் நேரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. யூதர்கள் சிறையிருப்பிலிருந்து மீண்டு திரும்பி, இரண்டு ஆண்டுகளாய் தங்கள் கட்டுமானப்பணியை துவக்கவில்லை (3:8). எதிர்ப்பு எவ்வாறு வரக்கூடும் என்பதை இது காட்டுகிறது (அதி. 4). ஆனால் கதையில் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. எந்தவொரு கட்டிடமும் தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, யூதர்கள் பலிபீடத்தை கட்டியெழுப்பினர் (3:1-6). “கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை” என்றாலும் ஜனங்கள் தேவனை ஆராதித்தனர் (வச. 6). முதலாவது ஆராதனை நடைபெற்றது.
புதிதாக ஏதாவது தொடங்க தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினாலும், ஒரு வேதப்பாட படிப்பைத் தொடங்கினாலும், ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தொடங்கினாலும் அல்லது ஏதேனும் ஒரு புதிய வேலையைத் தொடங்கினாலும் எஸ்றாவின் கொள்கையானது முக்கியத்துவம் வாய்ந்தது. தேவன் கொடுத்த திட்டம் கூட நம் கவனத்தை அவரிடமிருந்து விலக்கிவிடலாம். எனவே முதலில் தேவன் மீது கவனம் செலுத்துவோம். நாம் வேலை செய்வதற்கு முன், அவரை ஆராதனை செய்வோம்.
வாழ்வின் யாத்திரை
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப் பலர் கருதுகின்றனர்.
எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.
இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).
நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக.