மனிதன் வடிவில் தேவன்
என்னுடைய கணவர் ஒரு மாதம் வெளியூர் செல்ல நேரிட்டதால், நான் என்னுடைய வேலை, வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு என அதிக வேலைப் பளுவால் கஷ்டப்பட்டேன். நான் எழுதிக் கொண்டிருந்த ஒன்றினை முடிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. புல் வெட்டும் கருவி பழுதடைந்தது. என்னுடைய குழந்தைகள் பள்ளி விடுமுறையிலிருந்த படியால் வீட்டில் முடங்கிக் கிடந்தனர். எப்படி நான் ஒருத்தியாக இத்தனை காரியங்களையும் கவனிக்க முடியும்?
சீக்கிரத்தில் நான் தனிமையாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எங்கள் ஆலயத்தைச் சேர்ந்த நண்பர்கள் உதவ முன் வந்தனர். ஜோஸ் புல் வெட்டும் கருவியை சரி செய்ய உதவினார். ஜான் எனக்கு மதிய உணவு கொண்டு வந்தார், அபி என்னுடைய குழந்தைகளை அவளின் குழந்தைகளோடு விளையாட அழைத்துச் சென்றாள். எனவே நானும் என்னுடைய வேலையை முடிக்க உதவியாக இருந்தது. தேவன் இந்த ஒவ்வொரு நண்பர் மூலமாகவும் என் தேவைகளைச் சந்தித்தார். இவர்களனைவரும் ரோமர் 12ல் பவுல் குறிப்பிட்டுள்ள சமுதாயத்தை வாழ்ந்து காட்டினர். அவர்கள் உண்மையாய் நேசித்தார்கள் (வச. 9) இவர்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து (வச. 10), நான் தேவையிலிருந்த போது என்னோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுடைய உபசரிக்கும் குணத்தைக் காட்டினர் (வச. 13).
என்னுடைய நண்பர்கள் காட்டிய அன்பினால் நான் ‘‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்கவும்,” ‘‘உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கவும் (வச. 12) தனிமையாக, ஒரு மாதத்திற்கு சில துன்பங்களையும் சகிக்கவும் முடிந்தது. என்னுடைய ஒரு சிநேகிதி சொன்னது போல, கிறிஸ்துவுக்குள் சகோதர, சகோதரிகள் மனித வடிவில் வந்த கடவுளாக எனக்கிருந்தனர். அவர்கள் காட்டிய உண்மையான அன்பை, நாமும் பிறரிடம் காட்ட வேண்டும். முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு (கலா. 6:10) காட்ட வேண்டும். நானும் அவர்களைப் போல இருக்க விரும்புகின்றேன்.
ஆரம்பத்திற்கு முன்பு
‘‘தேவனுக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவர் எப்பொழுதும் இருக்கிறாரெனின் நம்மைப் படைப்பதற்கு முன் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவருடைய நேரத்தை எவ்வாறு செலவிட்டார்?” தேவனுடைய நித்திய வாழ்வைப் பற்றி விளக்கும் போது, ஒரு முன் யோசனையுள்ள ஞாயிறு பள்ளி மாணவன் இக்கேள்விகளைக் கேட்டான். நான் அவனிடம், இது சற்று விளங்கிக்
கொள்ளமுடியாத கருத்து என பதிலளித்தேன். ஆனால், சமீபத்தில் இக்கேள்விக்கான விடையை வேதாகமத்திலிருந்து கற்றுக் கொண்டேன்.
யோவான் 17ல் இயேசு பிதாவிடம் ஜெபிக்கும்போது ‘‘பிதாவே, உலகதோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தீர்” (வச. 24) எனக் குறிப்பிடுகிறார். இதில் இயேசு நமக்குப் பிதாவை வெளிப்படுத்துகின்றார். அவர் இவ்வுலகை படைத்து, அதை அரசாட்சி செய்யுமுன்னரே தேவன் தன் குமாரனை ஆவியில் நேசித்த ஒரு தந்தையாயிருந்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது தேவன் தம்முடைய ஆவியை ஒரு புறாவைப் போல அனுப்புகின்றார். மேலும் ‘‘இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத். 3:17) என்றும் சொல்கின்றார். தேவனின் அடிப்படைப் பண்பு இந்த வாழ்வு தரும் அன்பில் வெளிப்படுகின்றது.
தேவனைப் பற்றிய இந்த உண்மை நமக்கு எத்தனை அன்பையும், ஊக்கத்தையும் தருவதாகவுள்ளது. திருத்துவத்திலுள்ள பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இம்மூவரும் ஒருவரிலொருவர் செலுத்தும் அன்பு தான் நாம் தேவனின் தன்மையைப் புரிந்து கொள்ளக்கூடிய முக்கிய கருத்தாகும். காலத்தின் துவக்கத்திற்கு முன்பாக பிதாவாகிய தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? தன்னுடைய குமாரனை பரிசுத்த ஆவியின் மூலம் அன்பு செய்தார். தேவன் அன்பாகவேயிருக்கிறார்” (1 யோவா. 4:8). இந்தக் காட்சி நாம் இதனைப் புரிந்து கொள்ள உதவியாயிருக்கிறது.
துயரத்தின் பாதை வழியே
பரிசுத்த வாரத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையிலே அறையப்படுவதற்கு முன்னான நாட்களை நினைவு கூருவோம். எருசலேமின் வீதிகள் வழியே இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்ற பாதையை துயரத்தின் பாதை என அழைக்கின்றனர்.
எபிரெயர் நிருபத்தை எழுதியவர் இயேசு சென்ற பாதையை துயரத்தின் பாதையையும் விட மேலாகக் கருதுகின்றார். இயேசு துயரத்தின் பாதை வழியே கொல்கொதாவை நோக்கிச் செல்வதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டதினால், நாம் தேவனுடைய பிரசன்னத்தை நோக்கிச் செல்ல ஒரு ‘‘புதிய வாழும் வழி”யைத் திறந்துள்ளார் (எபி. 10:20).
பல நூற்றாண்டுகளாக யூத ஜனங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்குள் வருவதற்கு மிருகங்களை பலியிடுவதன் மூலம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டனர். ஆனால் இந்த சட்டங்களெல்லாம் வரப் போகிற நன்மையான காரியங்களின் ஒரு நிழலாகவேயிருந்தது. ஏனெனில் ஒரு காளை அல்லது வெள்ளாட்டுக்கடா, இவைகளின் ரத்தம் நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய முடியாது (வச. 1,4).
இயேசு மேற்கொண்ட துயரத்தின் வழியேயான பாதை, அவருடைய மரணத்திற்குப் பின்பு உயிர்த்தெழுதலுக்கும் வழி வகுத்தது. அவரை விசுவாசிக்கும் போது அவராலேயே நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று, அவருடைய தியாகத்தினாலேயே பரிசுத்தமாக்கப்படுகிறோம். அவருடைய நியாயப் பிரமாணங்களையும் கட்டளைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க முடியாமற் போனாலும், தேவனுடைய பிரசன்னத்தண்டை பயமில்லாமலும், தைரியமாகவும் வரும்படி நாம் அன்போடு அழைக்கப்படுகின்றோம் (வச. 10,22).
கிறிஸ்துவினுடைய துயரத்தின் பாதை, தேவனிடம் செல்ல நமக்கு ஒரு புதிய வாழும் வழியைத் திறந்துள்ளது.
நினைவு கற்கள்
சில காலை வேளைகளில் நான் ஆன்லைனில் செல்லும் போது, முகநூல் என்னுடைய “நினைவுகள்” பகுதியில் முந்திய ஆண்டு அதே நாளில் நான் பதிவு செய்தவற்றைக் காட்டும். இந்த நினைவுகளில் என்னுடைய சகோதரனின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள், என் மகள் என்னுடைய பாட்டியோடு விளையாடும் காட்சிகள், இவை பொதுவாக எனக்குள் ஒரு புன்னகையைத் தரும். சில வேளைகளில் ஆழ்ந்த உணர்வுகளையும் தருவனவாக அமையும். என்னுடைய மைத்துனரின் கீமோதெரபி சிகிச்சையைக் குறித்த ஒரு குறிப்பையோ அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயாரின் மூளை அறுவைசிகிச்சையால் தலையில் ஏற்பட்ட இணைப்பு தழும்புகளையோ நான் பார்க்கும் போது, கடினமான சூழ்நிலைகளில் தேவனுடைய உண்மையான பிரசன்னம் இருந்ததை நினைவுப்படுத்தின. இந்த முகநூல் நினைவுகள் என்னை ஜெபத்திற்கும் நன்றியறிதலுக்கும் நேராக உந்தித்தள்ளின.
தேவன் நமக்குச் செய்தவற்றை மறந்து போவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. நமக்கும் நினைப்பூட்டுதல் தேவை, தேவனுடைய ஜனங்களை அவர்களுடைய புதிய இருப்பிடத்திற்கு யோசுவா வழிநடத்தின போது யோர்தான் நதியைக் கடக்க நேர்ந்தது (யோசுவா 3:15-16). தேவன் தண்ணீரைப் பிரிக்க, அவருடைய ஜனங்கள் உலர்ந்த தரை வழியாக நடந்து சென்றனர் (வச. 17). இந்த அற்புதத்தை நினைவுகூரும் வகையில் அவர்கள் பன்னிரெண்டு கற்களை நதியின் மையப்பகுதியிலிருந்து எடுத்து நதியின் மறுகரையில் சேர்த்து வைத்தனர் (4:3,6-7). இந்த கற்கள் ஏதென்று பிறர் கேட்கும்போது தேவனுடைய பிள்ளைகள் தேவன் அவர்களுக்கு அன்று செய்ததை அவர்களுக்குச் சொல்லுவார்கள்.
வெளிப்புறமான நினைப்பூட்டிகள், கடந்த காலங்களில் தேவன் நமக்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதை நினைப்பதற்கும், இப்பொழுதும் எதிர்காலத்திலும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும் உதவுகின்றன.
மனக்கிழர்ச்சியை உண்டாக்கும் நம்பிக்கை
கம்பியில்லாமல் ரேடியோ தொடர்பு ஏற்படுத்த, ரெஜினால்ட் ஃபெசன்டன் பல வருடங்களாக முயன்று கொண்டிருந்தார். பிற விஞ்ஞானிகள், அவருடைய எண்ணங்கள் வித்தியாசமாகவும் வழக்கமான முறைகளுக்கு மாறுபட்டதாகவும் இருந்ததால் வெற்றி பெற மாட்டார் என்று சந்தேகித்தனர். ஆனால் 1906, டிசம்பர் 24ம் தேதியில், ரேடியோவில் இசையை ஒலிபரப்பிய உலகின் முதல் மனிதன் நான் என்று அறிவித்தார்.
எங்கு, வாழைப்பழங்கள் அறுவடையாகிறது, எங்கு விற்கவேண்டும் என்று தன் கப்பல்களுக்குத் தெரிவிக்க, யுனைட்டட் பழக் கம்பெனி, பன்னிரண்டு கப்பல்களில் ரேடியோ பொருத்தியிருந்தது. ஃபசன்டன் இந்தக் கம்பெனியோடு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். கிறிஸ்துமஸூக்கு முந்தின நாளில் ரேடியோ அறிவிப்பை கவனமாய்க் கேட்கச் சொல்லி இருந்தார். இரவு 9 மணிக்கு அவர் சத்தத்தைக் கப்பலிலுள்ளவர்கள் அனைவரும் கேட்டனர்.
பின் அவர் ஓர் நீண்ட இசைப் பாடலுக்குப் பின் தன் வயலினை எடுத்து “ஓ ஹோலி நைட்”
(O HOLY NIGHT) என்ற பாடலை இசைத்துக் கொண்டே பாடினார். கடைசியாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி, லூக்கா 2ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்து, பெத்லகேமில் பிறந்ததை தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்த பகுதியை வாசித்தார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெத்லகேம் மேய்ப்பர்களும் 1906ல் யுனைட்டெட் கம்பெனி கப்பல்களிலிருந்தவர்களும், அந்த இருண்ட இரவில் எதிர்பாராத நம்பிக்கையூட்டும் ஓர் செய்தியைக் கேட்டனர். இன்றும் அதே நம்பிக்கையூட்டும் செய்தியை தேவன் நமக்கும் சொல்லுகிறார். நமக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்… ஆண்டவராகிய கிறிஸ்து! (லூக். 2:11) நாமும் வானதூதர்களோடும், நமக்கு முன் சென்ற விசுவாசிகளோடும் சேர்ந்து, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி,” தேவனைத் துதிப்போம் (வச. 14).
சமாதானமான குடும்பம்!
அறுபத்து ஐந்து மில்லியன். இன்றைய உலகில், சண்டைகள் மற்றும் உபத்திரவங்களினால் தங்களது வீடுகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை அது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானதாகும். ஒவ்வொரு பிள்ளையும் கல்வி வாய்ப்பைப் பெறும்படியாகவும், ஒவ்வொரு பெரியவரும் அர்த்தமுள்ள ஒரு வேலையில் அமரும்படியாகவும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீட்டில் வாழும்படியாகவும் அகதிகளாக்கப்பட்டவர்களை ஏற்று உதவ வழிமுறைகளை இயற்றுமாறு உலகத் தலைவர்களை ஐக்கிய நாடுகள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
அசிரிய அகதிகளுக்காக வீடுகளை உருவாக்கும் கனவுத்திட்டத்தை நான் யோசிக்கையில், பலம் படைத்த இராணுவம் யூதா தேசத்தாரை வீடுகளை விட்டு பயமுறுத்தும்போது தேவன் அளித்த வாக்குறுதியை நான் நினைவுகூருகிறேன். தீர்க்கதரிசியாகிய மீகாவை அனுப்பிய தேவன், ஜனங்கள் தங்களது ஆலயத்தையும் அன்பான எருசலேம் நகரத்தையும் இடிக்கப்போகிறார்களென எச்சரித்தார். ஆயினும் இழப்பிற்கு அப்பால் ஒரு அழகான எதிர்காலத்தை தேவன் வாக்குத்தத்தம் செய்தார்.
ஒரு நாள் வரும் அப்போது உலக மக்கள் அனைவரையும் தேவன் தம்மிடம் அழைப்பாரென்று மீகா கூறினார். யுத்த ஆயுதங்கள் விவசாயக் கருவிகளாக மாற்றப்படும் தேவ சத்தத்தைக் கேட்கும் எவனும், அவரது இராஜ்யத்தில் ஒரு சமாதானமான குடும்ப வாழ்வையும் பயனுள்ள வாழ்க்கையையும் கண்டடைவான் (4:3-4).
இன்று உலகிலுள்ள பலருக்கு, ஒருவேளை உங்களுக்கும், சமாதானமிக்க ஒரு குடும்பமென்பது ஒரு தூரத்துக் கனவாக இருக்கலாம். அனைத்து தேசத்தாருக்கும் ஒரு வீடு உண்டென்னும் அந்த பண்டைய தேவ வாக்குறுதியை நாம் சார்ந்துகொள்ளும்போது, அதற்காக காத்திருந்து அதற்காக உழைத்து அதற்காக ஜெபிக்கும்போது அது ஒரு நடைமுறையாக மாறுவதை நாம் காணக்கூடும்.
முற்றுப்பெறாத பணிகள்
மிகச் சிறந்த கலைஞராகிய மைக்கெலேஞ்ச (Michelangelo) இறந்தபொழது, அநேக நிறைவு பெறாத பணிகளை விட்டுச்சென்றார். ஆயினும், அவற்றில் நான்கு சிற்பங்கள் நிறைவு செய்யும் நோக்கத்தில் செதுக்கப்படவில்லை. ‘த பியர்டட் ஸ்லேவ்’ (The Bearded Slave – தாடி வைத்த அடிமை), ‘த அட்லஸ் ஸ்லேவ்’ (The Atlas Slave – பூமியை தோளில் சுமக்கும் அடிமை), ‘த அவேக்கனிங் ஸ்லேவ்’ (The Awakening Slave – விழித்தெழ முயலும் அடிமை), மற்றும் ‘த யங் ஸ்லேவ்’ (The Young Slave – இளம் அடிமை) ஆகிய சிற்பங்கள் நிறைவுபெறாதது போல காட்சியளித்தாலும், அவை அப்படிதான் இருக்கவேண்டுமென மைக்கெலேஞ்ச எண்ணினார். ஏனெனில் என்றென்றும் அடிமைப்பட்டிருப்பவனின் உணர்வுகளை அவர் வெளிக்காட்ட விரும்பினார்.
சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பது போன்ற உருவங்களை செதுக்குவதற்கு பதில், பளிங்கு கற்களில் வெளிவர முடியாதபடி பதிந்து மாட்டிக்கொண்டிருக்கும் உருவங்களை செதுக்கினார். அப்பாறைகளிளிருந்து உடல்கள் வெளிவர முயல்வது போலவும், ஆனால் முழுமையாக வர இயலாதது போலவும் அவை செதுக்கப்பட்டுள்ளது. தசைகளெல்லாம் வளைந்தும் நெளிந்தும் மடங்கியும் காணப்பட்டாலும் அவ்வுருவங்களால் தங்களைத் தாங்களே ஒருபோதும் விடுவித்துக் கொள்ள இயலாது.
அந்த ‘அடிமைச்’ சிற்பங்களை கண்டபோது, அவற்றின் மீது எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. ஏனெனில், பாவத்தோடு எனக்கிருக்கும் போராட்டத்திற்கும், அவர்களுடைய அவலநிலைக்கும் எவ்வித வித்தியாசமில்லை. அச்சிற்பங்களைப் போலவே என்னை நானே விடுவித்துக்கொள்ள முடியாதபடி மாட்டிக்கொண்டுள்ளேன். அதாவது, “என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவ பிரமாணத்திற்கு [நான்] சிறையா[கினேன்]” (ரோ. 7:23). நான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் என்னால் என்னை மாற்ற இயலவில்லை. ஆனாலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக. ஏனெனில் நீங்களும் நானும் ஒருபோதும் முற்றுப்பெறாத கிரியை போல இருக்க மாட்டோம். நாம் பரலோகம் செல்லும் வரை முழுமையடையாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரை வரவேற்போமாக. ஏனென்றால் அவர் நம்மை மாற்றுவார். நம்மில் நற்கிரியை தொடங்கின தேவன் தாமே அதை செய்து முடிப்பாரென அவரே வாக்குப்பண்ணியுள்ளார் (பிலி. 1:5).
பாட ஒரு காரணம்
நாம் பாடும்பொழுது, நம் மூளையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன! நாம் பாடும்பொழுது, மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நீக்கக்கூடிய ஹார்மோன்கள் நம் உடலில் சுரப்பதாக சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், மக்கள் ஒன்றுகூடி இசைந்து பாடும்பொழுது, அவர்களுடைய இதயத்துடிப்பும் ஒத்திசைப்பதாக வேறுசில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சபையானது, ஒருவரோடொருவர் சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் உரையாடும்படி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார் (எபே. 5:19). மேலும் வேதத்தில், ஐம்பது முறைக்கும் மேலாக ‘பாடித் துதியுங்கள்’ என எழுதப்பட்டுள்ளது.
2 நாளாகமம் 20ஆம் அதிகாரத்தில், தேவன் மீது தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, பாடிக்கொண்டு யுத்தத்திற்கு சென்ற ஜனத்தைக் குறித்துக் காணலாம். யூதாவை நோக்கி எதிரிகள் படையெடுத்து வந்தபொழுது, ராஜாவாகிய யோசபாத் மிகவும் பயந்து, தேவனிடம் மன்றாடும்படி ஜனங்களை அழைத்தான். அப்பொழுது ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடி உபவாசித்து, தீவிரமாய் ஜெபித்தார்கள். “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்கு தெரியவில்லை, ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கின்றது,” என்றார்கள் (வச. 12). மறுநாள் அவர்கள் யுத்தத்திற்கு சென்றார்கள். ஆனால், வலிமையான போர்வீரர்களுக்கு பதில் பாடகர் குழுவினர் அவர்களை யுத்த களத்திற்கு நேராக வழிநடத்திச் சென்றார்கள். அவர்கள் யுத்தம் செய்யாமலேயே வெற்றி பெறுவார்கள் என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசித்தார்கள் (வச. 17).
அவர்கள் பாடித் துதித்து யுத்தத்ததை நோக்கி செல்கையில், அவர்களுடைய எதிரிகள் ஒருவரோடொருவர் வெட்டுண்டு மடிந்துபோனார்கள்! தேவஜனம் யுத்தக்களத்தை சென்றடையும் முன் எதிரிகளின் சண்டை முடிந்துப்போயிற்று. சம்பவிக்கப்போவது இன்னதென்பதை அறியாதிருந்தபோதிலும், தேவன்மீது விசுவாசம் வைத்து அவரைப் பாடித் துதித்து சென்ற பொழுது, தேவன் அவர்களை இரட்சித்தார்.
நன்மையான காரணங்களுக்காகவே தேவனை நாம் துதித்துப் போற்றும்படி அவர் நம்மை ஊக்குவிக்கிறார். யுத்தத்தை நோக்கி சென்றாலும் செல்லாவிட்டாலும், நம்முடைய எண்ணங்களையும் இருதயத்தையும் வாழ்வையும் மாற்றும் வல்லமை, நாம் ஏறெடுக்கும் துதிக்கு உண்டு.
கண்சிமிட்டி தேவனை எண்ணிப் பார்
என்னுடைய தோழி ரைலி (Ryley) “தேவன் கண் இமையைப் போன்றவர்” என்று கூறியதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் முழித்தேன். அவள் கூறியதின் பொருள் என்ன?
வேதாகமத்தில் தேவனைக் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ள படங்களைக் கடந்த சில நாட்களாக நாங்கள் இருவரும் சேர்ந்து ஆராய்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு வேதத்தில் தேவனை பிரசவிக்கும் தாயாகவும் (ஏசா. 42:14), தேனீ வளர்ப்பவராகவும் (7:18) காணலாம். ஆனால் என் தோழி கூறியது எனக்கு புதிதாக இருந்தது. ஆகவே அவளைப் பார்த்து, “அதைப்பற்றி மேலும் கூறு”, என்றேன். உடனே உபாகமம் 32ஆம் அதிகாரத்தை அவள் சுட்டிக்காட்டினாள். தன் ஜனத்தை தேவன் பராமரிக்கும் விதத்தை எண்ணி மோசே தேவனை போற்றி துதிப்பதை அவ்வதிகாரத்தில் காணலாம். அவர்களை “தமது கண்மணியைப்போல” தேவன் பாதுகாத்து காத்தருளினார் என்று 10ம் வசனம் விவரிக்கிறது.
கண்மணியைச் சூழ்ந்து பாதுகாப்பது எது? கண் இமை தானே! ஆம், தேவன் கண் இமையை போன்றவர். மென்மையான கண்களை பாதுகாப்பதையே தன் இயற்கையான பண்பாக கொண்ட கண்ணிமையை போன்றவர் நம் தேவன். கண்ணிமைகள் அபாயத்திலிருந்து கண்களை பாதுகாப்பது மட்டுமன்றி நாம் கண் சிமிட்டும்பொழுது, அழுக்கையும் தூசியையும் வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை உட்புகாமல் பாதுகாக்கிறது, கண்கள் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இறுதியாக கண்களை மூடி இளைப்பாற உதவி செய்கிறது.
தேவனை கண்ணிமையாக சித்தரித்துப் பார்த்தபொழுது, அவர் நம்மீது வைத்துள்ள அன்பை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர் நமக்களித்த அநேக உருவகங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தினேன். இரவிலே கண்களை மூடி காலையில் விழிக்கும்பொழுது, தேவனுடைய மென்மையான பாதுகாப்பையும் பராமரிப்பையும் எண்ணி அவரை போற்றித் துதிப்போமாக.