நாம் தனியாக இல்லை
ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான "நாக்" இல், அவர் எழுதினார், "பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.
நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.
நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார். ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், "ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்" (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.
உன் பெயர் என்ன?
முதல் கணவர் இறந்த பிறகு ஜீனா மறுமணம் செய்து கொண்டார். அவளுடைய புதிய கணவரின் குழந்தைகள் அவளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது அவரும் இறந்துவிட்டதால், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவ வீட்டில் தங்கியதற்காக அவளை வெறுக்கிறார்கள். அவளுடைய கணவன் அவளுக்காக ஒரு சிறிய தொகையை விட்டுச் சென்றான்; அவள் தங்கள் ஆஸ்தியைத் திருடுகிறாள் என்று அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள். ஜீனா மிகவும் சோர்ந்துவிட்டாள், மேலும் அவள் வெறுத்தும் போனாள்.
நகோமியின் கணவர், குடும்பத்தை மோவாபுக்கு மாற்றினார். அங்கு அவரும் அவர்களது இரண்டு மகன்களும் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நகோமி தம் மருமகள் ரூத்தைத் தவிர, வெறுங்கையுடன் பெத்லகேமுக்குத் திரும்பினார். நகரமே கலங்கி, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள் (ரூத் 1:19). "எனது இனிமையானவள்" என்று பொருள்படும் அந்தப் பெயரை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அவள் சொன்னாள். அவர்கள் அவளை "மாரா" என்று அழைக்க வேண்டும், அதன் அர்த்தம் "கசப்பு" ஏனெனில், "நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்" (வ. 20–21) என்றாள்.
உங்கள் பெயர் கசப்பாக இருக்க வாய்ப்பு உள்ளதா? நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உடல்நலக் குறைவால் நீங்கள் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். நீங்கள் சிறப்பாகத் தகுதி பெற்றீர்கள். ஆனால் அத்தகுதிக்குரிய நன்மையைப் பெறவில்லை. இப்போது நீங்கள் கசப்பாக இருக்கிறீர்கள்.
நகோமி கசந்துபோய் பெத்லகேமுக்குத் திரும்பி வந்தார், ஆனால் அவர் திரும்பி வந்தார். நீங்களும் திரும்ப வீட்டுக்கு வரலாம். பெத்லகேமில் பிறந்த ரூத்தின் வம்சாவளியான இயேசுவிடம் வாருங்கள். அவருடைய அன்பில் இளைப்பாறுங்கள்.
காலப்போக்கில், தேவன் நகோமியின் கசப்பிற்குப் பதிலாக தம் பரிபூரணத் திட்டத்தின் நிறைவேற்றத்தின் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் (4:13-22). அவரால் உங்கள் கசப்பையும் மாற்ற முடியும். அவரிடம் வீட்டிற்கு வாருங்கள்.
மகிழ்ச்சியை தேர்வுசெய்!
ஜனவரி 15, 1919 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மூல சர்க்கரை பாகை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் வாகனம் வெடித்தது. 75 லட்சம் லிட்டர் மூல சர்க்கரை பாகு, பதினைந்து அடி அலையாய் 30 மைல் வேகத்தில் தெருவில் பாய்ந்து, ரயில் வண்டிகள், கட்டிடங்கள், மக்கள் மற்றும் விலங்குகளை மூழ்கடித்தது. இந்த மூல சர்க்கரை பாகு அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று 21 பேரின் உயிரைக் குடித்து, 150 பேருக்கு மேலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த மூல சர்க்கரைப் பாகைப் போன்று, சில நல்ல விஷயங்கள் கூட நம்மை எதிர்பாராத விதமாய் முழ்கடிக்கலாம். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணிய தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே அவர்களைப் பார்த்து, தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது அது தங்களுடைய சாமர்த்தியத்தினால் வந்தது என்று சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்: “நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி... உன் இருதயம் மேட்டிமையடையாமலும்… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்” இருக்கும் படிக்கும் இந்த ஐசுவரியத்திற்கு அவர்களின் சாமர்த்தியம் காரணம் என்று சொல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:12-14, 17-18) என்று அறிவுறுத்துகிறார்.
நம்முடைய சரீர ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார தேவைகள் போன்ற அனைத்து காரியங்களும் தேவனுடைய கரத்தினால் அருளப்பட்ட ஈவுகள். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், அவரே நம்மை தாங்குகிறவர். திறந்த கைகளோடு நம்முடைய ஆசீர்வாதத்தை பற்றிக்கொண்டு, நம் மீதான அவருடைய இரக்கங்களுக்காய் அவரை துதிப்போம்.
ஹின்னோமிலிருந்து நம்பிக்கை
1979 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேப்ரியல் பார்கே இரண்டு சிறிய வெள்ளி சுருள்களைக் கண்டுபிடித்தார். அந்த உலோகச் சுருளை நுணுக்கமாக அவிழ்க்க பல ஆண்டுகள் ஆனது. அதில் ஒவ்வொரு சுருள்களிலும், எண்ணாகமம் 6:24-26லிருந்து ஆசீர்வாதம் எபிரெய மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.” அச்சுருள்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதுவே கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான வேதாகம ஆதாரங்களில் ஒன்று.
அவைகள் கண்டெடுக்கப்பட்ட இடமும் சுவாரஸ்யமானது. ஹின்னோம் பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குகையில் பார்கே அதை தோண்டிக் கண்டுபிடித்தார். அதே இடத்தில்தான், தங்கள் பிள்ளைகளை நரபலியிட்டால் தேவன் உங்களை அழித்துவிடுவார் என்று எரேமியா தீர்க்கதரிசி மக்களை எச்சரித்தார் (எரேமியா 19:4-6). அதுபோன்ற அக்கிரமங்கள் நடந்தேறிய பள்ளத்தாக்கு அது என்பதினால், இயேசு அதை “கெஹென்னா” ("ஹின்னோம் பள்ளத்தாக்கு" என்ற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம்) என்ற வார்த்தையை நரகத்தைக் குறிக்க பயன்படுத்தினார் (மத்தேயு 23:33).
இந்த இடத்தில், எரேமியா தனது தேசத்தின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பை அறிவிக்கும் தருணத்தில், யாரோ ஒருவர் தனது எதிர்கால ஆசீர்வாதத்தை வெள்ளி சுருள்களில் பொறித்திருக்கிறார். இது அவர்களின் வாழ்நாட்களுக்குள் நடக்காது. ஆனால் பாபிலோனிய சிறையிருப்பைக் கடந்து, தேவன் அவர்கள் பக்கமாய் தம்முடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடுவார்.
நமக்கு போதிக்கப்படுகிற பாடம் தெளிவாக உள்ளது. நமக்கு சம்பவிக்கப்போகிறவைகளுக்கு நாம் பாத்திரவான்களாய் இருந்தாலும், நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோம். தேவனுடைய இருதயம் அவருடைய ஜனங்களுக்காய் எப்போதும் ஏங்குகிறது.
பலவீனம் பலமாகும்போது
நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன? எரேமியா 20:18
ட்ரூ, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ததற்காய் இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். சிறைச்சாலையில் அடைபட்டு மகிழ்ச்சியாயிருந்த பல மிஷனரிகளின் வாழ்க்கை சரிதையை அவன் படித்திருக்கிறான். ஆனால் தன்னுடைய அனுபவம் அதுபோலில்லை என்று அவன் சொன்னான். தேவன் அவருக்காய் பாடனுபவிக்கும்பொருட்டு தவறான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அவன் மனைவியிடத்தில் சொன்னான். அவனது மனைவியோ, “இல்லை, அவர் சரியான நபரையே தெரிந்தெடுத்திருக்கிறார்; அது ஏதேச்சையானது அல்ல” என்று சொன்னாள்.
யூதேயா ஜனங்கள் பாவம் செய்ததினிமித்தம் அவர்களைத் தேவன் தண்டிப்பார் என்று எச்சரித்த எரேமியா தீர்க்கதரிசியோடு ட்ரூவை ஒப்பிடலாம். எரேமியா முன்னறிவித்த நியாயத்தீர்ப்பு இன்னும் தேசத்தின் மீது வரவில்லை. ஆனால் அவனைச் சிறையிலடைத்தனர். “கர்த்தாவே, நீர் என்னை இணங்கப்பண்ணினீர்” (வச.7) என்று எரேமியா தேவனைக் குற்றப்படுத்துகிறான். தேவன் தன்னை விடுவிக்கத் தவறிவிட்டார் என்பதைத் தீர்க்கதரிசி நம்ப நேரிட்டது. “நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று” (வச.8) என்று கூறுகிறான். “நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக” (வச.14) என்று சலித்துக்கொள்கிறான். “நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?” (வச.18).
ட்ரூ, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஆனால் அவனுடைய மிகுந்த பாடுகளின் மூலம், அவன் பலவீனமானவன் என்பதினால் தேவன் அவனை எரேமியாவைப் போலவே தெரிந்தெடுத்திருக்கிறார். ட்ரூவும் எரேமியாவும் இயல்பில் பலவான்களாக இருந்திருப்பார்களாகில், அவர்களுடைய வெற்றிக்கு அவர்களுடைய திறமை பாராட்டப்பட்டிருக்கும். அவர்கள் பலவீனர்களாயிருந்தபடியினால் அவர்களின் பொறுமையினால் உண்டான மகிமை தேவனுக்கே போகிறது (1 கொரிந்தியர் 1:26-31). அவனுடைய பெலவீனமே, இயேசுவுக்காய் பயன்படும் நேர்த்தியான மனிதனாய் அவனை மாற்றியது.
வான்கோழிகளிடமிருந்து ஓடிப்போதல்
இரண்டு உயரமான காட்டு வான்கோழிகள் வழிப்பாதையில் நின்றிருந்தது. எந்த அளவிற்கு அதின் அருகாமையில் போகமுடியும்? நான் ஆச்சரியப்பட்டேன். என்னுடைய காலை நடைப்பயணத்தை மெதுவாக்கி, அதின் அருகாமையில் நின்றேன். நான் எதிர்பார்த்தபடி நடந்தது. வான்கோழிகள் என்னை நோக்கி நகர்ந்து வந்தது. அதின் நீளமான தலைகள் என் இடுப்பை வருடியது. அதன் அலகுகள் எவ்வளவு கூர்மையானவை? நான் ஓட ஆரம்பித்தேன். அது என்னைத் துரத்திக்கொண்டே வந்தது.
எப்படி எல்லாம் தலைகீழானது? வேட்டையாடப்படும் விலங்கு வேட்டைக்காரனை எப்படித் துரத்தலாம்? அது என்னைப் பார்த்துப் பயப்படவில்லை. அதனிடத்தில் நான் காயப்பட விரும்பாததால், நான் ஓடத் துவங்கினேன்.
தாவீது, பயமுறுத்தும் அளவுக்கு உடல்வாகு கொண்டவனில்லை. அதனால் அவனை தன்னிடம் வரும்படிக்கு கோலியாத் அனுமதித்தான். “என்னிடத்தில் வா; நான் உன் மாமிசத்தை ஆகாயத்துப்பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்” (1 சாமுவேல் 17:44) என்று சொன்னான். ஆனால் தாவீது எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துகொண்டான். அவன் கோலியாத் இருக்கும் திசை நோக்கி ஓடினான். மதியீனமான செயல் அல்ல; மாறாக, தேவன் மீதான நம்பிக்கையினிமித்தம் அவ்வாறு ஓடுகிறான். “இன்றையதினம்... இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்” என்று உரத்த சத்தமாய் சொன்னான். இந்த சிறுவனின் செய்கையைப் பார்த்து கோலியாத் குழம்பினான். இங்கு என்ன நடக்கிறது? என்று அவன் யோசித்திருக்கக்கூடும். அதற்குள் அந்த கல் அவனுடைய கண்களுக்கு இடையேயான முன்நெற்றியைப் பதம் பார்த்தது.
சிறிய விலங்குகள் மக்களைப் பார்த்தும் மேய்ப்பர்களைப் பார்த்தும் பயந்து ஓடுவது இயல்பு. அதே போல, நாம் நம்முடைய பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிவதும் இயல்பு. ஏன் இயல்புக்கு உட்பட்டு வாழ எண்ணுகிறீர்கள்? இஸ்ரவேலில் தேவன் இல்லையா? அவருடைய வல்லமையில் எதிர்கொண்டு ஓடுங்கள்.
தேவ வார்த்தையின் வல்லமை
ஸ்டீபன், வளரும் ஒரு நகைச்சுவை கலைஞன். ஆனால் ஊதாரி. கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், தன் தந்தையின் மீதும் விமான விபத்தில் உயிரிழந்த தன்னுடைய இரண்டு சகோதரர்கள் மீதும் சந்தேகப்பட்டே வளர்ந்தான். இருபதாவது வயதில் கிறிஸ்துவை விட்டு விலகினான். ஆனால் சிகாகோ நகர வீதியின் ஒரு இடத்தில் அந்த விசுவாசத்திடம் மீண்டும் திரும்பினான். யாரோ ஒருவர் அவனுக்கு ஒரு புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்தார். அதை அவன் திறந்தான். அதின் முகப்பு பக்கத்தில், கவலையோடிருக்கிறவர்கள் இயேசுவின் மலைப்பிரசங்க பகுதியான மத்தேயு 6:27-34 ஐ வாசியுங்கள் என்று எழுதியிருந்தது.
ஸ்டீபன் அதைத் திறந்து வாசித்தபோது, அவனுடைய இருதயம் பற்றியெரிந்தது. அவன் சொல்லும்போது, “என்னுடைய வாழ்க்கை உடனடியாக ஒளிபெற்றது. குளிர்ந்த அந்த இரவில், தெருமுனையில் நின்று இயேசுவின் பிரசங்கத்தை நான் வாசித்தேன். என்னுடைய வாழ்க்கை இதுபோல இனி இருக்கப்போவதில்லை” என்று சொன்னான்.
அதுவே வேதாகமத்தின் வல்லமை. வேதமானது மற்ற புத்தகங்களைப் போன்றதல்ல; ஜீவனுள்ளது. நாம் வேதத்தை வாசிப்பதில்லை; வேதம் நம்மை வாசிக்கிறது. வேதாகமம், “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது”(எபிரெயர் 4:12).
நம்மை மறுரூபமாக்கி, ஆவியின் முதிர்ச்சிக்கு நேராய் வழிநடத்தும் பூமியின் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆற்றலாக வேதம் செயல்படுகிறது. அதைத் திறந்து சத்தமாய் வாசித்து, நம்முடைய இருதயங்களை ஒளிரச் செய்யும்படிக்குத் தேவனிடத்தில் விண்ணப்பிப்போம். அவருடைய வாயிலிருந்து புறப்படும் வசனம், “வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்று அவர் வாக்குறுதியளிக்கிறார். நம்முடைய வாழ்க்கை இப்போது இருப்பதுபோலவே இருக்கப்போவதில்லை.
ஜனத்தேவையிலுள்ள ஜனங்கள்
மிகவும் பிரசித்திபெற்ற விளையாட்டு செய்திப் பத்திரிக்கையாளர் டேவ் கிண்ட்ரேட், பல முக்கியமான போட்டிகளையும், சாதனைகளையும், முகமது அலியின் சுயசரித்திரத்தையும் தொகுத்து எழுதியுள்ளார். பணிஓய்வுபெற்றபின் சலித்துப்போன அவர், அருகேயிருந்த பள்ளியில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளைக் காணச் செல்வார். விரைவில் அந்த ஒவ்வொரு போட்டியைக் குறித்தும் எழுதி இணையத்தில் வெளியிடத் துவங்கினார். டேவின் தாயாரும், பேரனும் அடுத்தடுத்து இறந்துபோக, அவருடைய மனைவியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்தச் சூழலில், அவர் எழுதிவந்த அந்தக் கூடைப்பந்து விளையாட்டுக் குழுவினரால் சமூகப்பொறுப்பும் வாழ்வின் நோக்கமும்பெற்று ஊக்கமடைந்தார். இவருக்கு அவர்கள் தேவைப்பட்டனர், அவர்களுக்கும் இவர் தேவைப்பட்டார். “என் வாழ்வே இருளடைந்திருந்தபோது, இந்தக் கூடைப்பந்து அணியினர் தான் எனக்கு வெளிச்சமாயிருந்தார்கள்” என்று டேவ் கூறினார்.
இவ்வளவு பிரசித்திபெற்ற ஒரு நிருபர் எப்படி ஒரு கூடைப்பந்து விளையாட்டுக் குழுவைச் சார்ந்துகொள்ளும்படி மாறினார்? அப்படியே அப்போஸ்தலனாகிய பவுல், மிஷனரி பயணத்தில் தான் சந்தித்தவர்களின் ஐக்கியத்தைச் சார்ந்துகொண்டார். தன்னுடைய நிருபத்தின் முடிவுரையில் பவுல் குறிப்பிட்டு வாழ்த்திய நபர்களைக் கவனித்தீர்களா? (ரோமர் 16:3–15). "என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்."(வ.7) என்று எழுதினார். "கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்." (வ.8) என்றார். அவர் சுமார் இருபத்தைந்து நபர்களுக்கும் மேலானவர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களில் அநேகரைக் குறித்து வேதத்தில் ஒன்றுமேயில்லை. ஆனால் பவுலுக்கு இவர்கள் தேவைப்பட்டனர்.
நீங்கள் யாரைச் சாருகிறீர்கள்? உங்கள் சபையிலிருந்து இதைத் துவங்குங்கள். அங்கே யாருடைய வாழ்வாவது இருண்டுள்ளதா? இயேசுவிடம் அவர்களை நடத்தும் வெளிச்சமாக தேவன் உங்களை நடத்துவாராக. அவர்கள் ஒருநாள் உங்களுக்கும் பயன்படுவார்கள்.
ஒரு கதையாகிய திமிங்கலம்
மைக்கல் ஒரு கடல் நண்டைப் பிடிக்கப் போனபோது, ஒரு கூம்பு திமிங்கலம் அவரைக் கவ்வியது. அதின் வாயினுள், அகண்ட இருளில் சிக்கிய அவரை, திமிங்கலத்தின் தசைகள் நொறுக்கவே, தன் கதை முடிந்ததென்று நினைத்தார். திமிங்கலங்களுக்கு கடல் நண்டு பிடிப்பவர்கள் பிடிக்காது, எனவே முப்பது வினாடிகள் கழித்து, அது மைக்கலை வெளியே துப்பியது. ஆச்சரியப்படும்விதமாக, அவருக்கு எந்த எலும்பு முறிவும் இல்லை, வெளிப்புற சிராய்ப்புகள் தான் இருந்தது. அவருடைய அனுபவம் இப்பொழுது நம்முடன் பேசுகிறது.
இதை அனுபவிக்கும் முதல் நபர் இவரில்லை. யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது (யோனா 1:17), அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான், பிறகு அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது (1:17; 2:10). மைக்கலுக்கு நேர்ந்ததுபோல இதுவொரு விபத்தல்ல. யோனா, இஸ்ரவேலின் எதிரிகளை வெறுத்ததாலும், அவர்களுடைய மனந்திரும்புதலை விரும்பாததாலும், அந்தப் பெரிய மீனால் விழுங்கப்பட்டார். தேவன் யோனாவை நினிவேயில் பிரசங்கிக்கச் சொல்ல, இவரோ கப்பலேறி எதிர்த்திசையாய் போனார். ஆகவே தேவன் திமிங்கலம் போன்ற பெரிய மீனை அனுப்பி, தனக்கு செவி கொடுக்கும்படி செய்தார்.
யோனா அசீரியர்களை வெறுத்தது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. பண்டைய நாட்களில் அவர்கள் இஸ்ரவேலரை துன்புறுத்தினர், இஸ்ரவேலின் வடக்கு கோத்திரங்களைச் சிறையாக்கிக் கொண்டுபோகவே, தங்கள் அடையாளத்தையே இஸ்ரவேலர் இழந்தனர். அசீரியா மன்னிக்கப்படும் என்பதை யோனா ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இப்பொழுது நமக்குப் புரிகிறது.
யோனா தேவனை விட தேவ பிள்ளைகளுக்கு மிகவும் விசுவாசமுள்ளவனாய் இருந்தான். தேவனோ இஸ்ரவேலரின் எதிரிகளையும் நேசித்தார், அவர்கள் இரட்சிக்கப்படும்படி விரும்பினார். அவர் நம்முடைய எதிரிகளையும் நேசித்து, அவர்கள் இரட்சிக்கப்படும்படி விரும்புகிறார். தேவ ஆவியானவரின் வழிகாட்டுதலோடு, இயேசுவின் நற்செய்தியைச் சுமந்து அவர்களுக்கு நேரே விரைவோம்.