வான்கோழிகளிடமிருந்து ஓடிப்போதல்
இரண்டு உயரமான காட்டு வான்கோழிகள் வழிப்பாதையில் நின்றிருந்தது. எந்த அளவிற்கு அதின் அருகாமையில் போகமுடியும்? நான் ஆச்சரியப்பட்டேன். என்னுடைய காலை நடைப்பயணத்தை மெதுவாக்கி, அதின் அருகாமையில் நின்றேன். நான் எதிர்பார்த்தபடி நடந்தது. வான்கோழிகள் என்னை நோக்கி நகர்ந்து வந்தது. அதின் நீளமான தலைகள் என் இடுப்பை வருடியது. அதன் அலகுகள் எவ்வளவு கூர்மையானவை? நான் ஓட ஆரம்பித்தேன். அது என்னைத் துரத்திக்கொண்டே வந்தது.
எப்படி எல்லாம் தலைகீழானது? வேட்டையாடப்படும் விலங்கு வேட்டைக்காரனை எப்படித் துரத்தலாம்? அது என்னைப் பார்த்துப் பயப்படவில்லை. அதனிடத்தில் நான் காயப்பட விரும்பாததால், நான் ஓடத் துவங்கினேன்.
தாவீது, பயமுறுத்தும் அளவுக்கு உடல்வாகு கொண்டவனில்லை. அதனால் அவனை தன்னிடம் வரும்படிக்கு கோலியாத் அனுமதித்தான். “என்னிடத்தில் வா; நான் உன் மாமிசத்தை ஆகாயத்துப்பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்” (1 சாமுவேல் 17:44) என்று சொன்னான். ஆனால் தாவீது எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துகொண்டான். அவன் கோலியாத் இருக்கும் திசை நோக்கி ஓடினான். மதியீனமான செயல் அல்ல; மாறாக, தேவன் மீதான நம்பிக்கையினிமித்தம் அவ்வாறு ஓடுகிறான். “இன்றையதினம்... இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்” என்று உரத்த சத்தமாய் சொன்னான். இந்த சிறுவனின் செய்கையைப் பார்த்து கோலியாத் குழம்பினான். இங்கு என்ன நடக்கிறது? என்று அவன் யோசித்திருக்கக்கூடும். அதற்குள் அந்த கல் அவனுடைய கண்களுக்கு இடையேயான முன்நெற்றியைப் பதம் பார்த்தது.
சிறிய விலங்குகள் மக்களைப் பார்த்தும் மேய்ப்பர்களைப் பார்த்தும் பயந்து ஓடுவது இயல்பு. அதே போல, நாம் நம்முடைய பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிவதும் இயல்பு. ஏன் இயல்புக்கு உட்பட்டு வாழ எண்ணுகிறீர்கள்? இஸ்ரவேலில் தேவன் இல்லையா? அவருடைய வல்லமையில் எதிர்கொண்டு ஓடுங்கள்.
தேவ வார்த்தையின் வல்லமை
ஸ்டீபன், வளரும் ஒரு நகைச்சுவை கலைஞன். ஆனால் ஊதாரி. கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், தன் தந்தையின் மீதும் விமான விபத்தில் உயிரிழந்த தன்னுடைய இரண்டு சகோதரர்கள் மீதும் சந்தேகப்பட்டே வளர்ந்தான். இருபதாவது வயதில் கிறிஸ்துவை விட்டு விலகினான். ஆனால் சிகாகோ நகர வீதியின் ஒரு இடத்தில் அந்த விசுவாசத்திடம் மீண்டும் திரும்பினான். யாரோ ஒருவர் அவனுக்கு ஒரு புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்தார். அதை அவன் திறந்தான். அதின் முகப்பு பக்கத்தில், கவலையோடிருக்கிறவர்கள் இயேசுவின் மலைப்பிரசங்க பகுதியான மத்தேயு 6:27-34 ஐ வாசியுங்கள் என்று எழுதியிருந்தது.
ஸ்டீபன் அதைத் திறந்து வாசித்தபோது, அவனுடைய இருதயம் பற்றியெரிந்தது. அவன் சொல்லும்போது, “என்னுடைய வாழ்க்கை உடனடியாக ஒளிபெற்றது. குளிர்ந்த அந்த இரவில், தெருமுனையில் நின்று இயேசுவின் பிரசங்கத்தை நான் வாசித்தேன். என்னுடைய வாழ்க்கை இதுபோல இனி இருக்கப்போவதில்லை” என்று சொன்னான்.
அதுவே வேதாகமத்தின் வல்லமை. வேதமானது மற்ற புத்தகங்களைப் போன்றதல்ல; ஜீவனுள்ளது. நாம் வேதத்தை வாசிப்பதில்லை; வேதம் நம்மை வாசிக்கிறது. வேதாகமம், “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது”(எபிரெயர் 4:12).
நம்மை மறுரூபமாக்கி, ஆவியின் முதிர்ச்சிக்கு நேராய் வழிநடத்தும் பூமியின் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆற்றலாக வேதம் செயல்படுகிறது. அதைத் திறந்து சத்தமாய் வாசித்து, நம்முடைய இருதயங்களை ஒளிரச் செய்யும்படிக்குத் தேவனிடத்தில் விண்ணப்பிப்போம். அவருடைய வாயிலிருந்து புறப்படும் வசனம், “வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்று அவர் வாக்குறுதியளிக்கிறார். நம்முடைய வாழ்க்கை இப்போது இருப்பதுபோலவே இருக்கப்போவதில்லை.
ஜனத்தேவையிலுள்ள ஜனங்கள்
மிகவும் பிரசித்திபெற்ற விளையாட்டு செய்திப் பத்திரிக்கையாளர் டேவ் கிண்ட்ரேட், பல முக்கியமான போட்டிகளையும், சாதனைகளையும், முகமது அலியின் சுயசரித்திரத்தையும் தொகுத்து எழுதியுள்ளார். பணிஓய்வுபெற்றபின் சலித்துப்போன அவர், அருகேயிருந்த பள்ளியில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளைக் காணச் செல்வார். விரைவில் அந்த ஒவ்வொரு போட்டியைக் குறித்தும் எழுதி இணையத்தில் வெளியிடத் துவங்கினார். டேவின் தாயாரும், பேரனும் அடுத்தடுத்து இறந்துபோக, அவருடைய மனைவியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்தச் சூழலில், அவர் எழுதிவந்த அந்தக் கூடைப்பந்து விளையாட்டுக் குழுவினரால் சமூகப்பொறுப்பும் வாழ்வின் நோக்கமும்பெற்று ஊக்கமடைந்தார். இவருக்கு அவர்கள் தேவைப்பட்டனர், அவர்களுக்கும் இவர் தேவைப்பட்டார். “என் வாழ்வே இருளடைந்திருந்தபோது, இந்தக் கூடைப்பந்து அணியினர் தான் எனக்கு வெளிச்சமாயிருந்தார்கள்” என்று டேவ் கூறினார்.
இவ்வளவு பிரசித்திபெற்ற ஒரு நிருபர் எப்படி ஒரு கூடைப்பந்து விளையாட்டுக் குழுவைச் சார்ந்துகொள்ளும்படி மாறினார்? அப்படியே அப்போஸ்தலனாகிய பவுல், மிஷனரி பயணத்தில் தான் சந்தித்தவர்களின் ஐக்கியத்தைச் சார்ந்துகொண்டார். தன்னுடைய நிருபத்தின் முடிவுரையில் பவுல் குறிப்பிட்டு வாழ்த்திய நபர்களைக் கவனித்தீர்களா? (ரோமர் 16:3–15). "என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்."(வ.7) என்று எழுதினார். "கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்." (வ.8) என்றார். அவர் சுமார் இருபத்தைந்து நபர்களுக்கும் மேலானவர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களில் அநேகரைக் குறித்து வேதத்தில் ஒன்றுமேயில்லை. ஆனால் பவுலுக்கு இவர்கள் தேவைப்பட்டனர்.
நீங்கள் யாரைச் சாருகிறீர்கள்? உங்கள் சபையிலிருந்து இதைத் துவங்குங்கள். அங்கே யாருடைய வாழ்வாவது இருண்டுள்ளதா? இயேசுவிடம் அவர்களை நடத்தும் வெளிச்சமாக தேவன் உங்களை நடத்துவாராக. அவர்கள் ஒருநாள் உங்களுக்கும் பயன்படுவார்கள்.
ஒரு கதையாகிய திமிங்கலம்
மைக்கல் ஒரு கடல் நண்டைப் பிடிக்கப் போனபோது, ஒரு கூம்பு திமிங்கலம் அவரைக் கவ்வியது. அதின் வாயினுள், அகண்ட இருளில் சிக்கிய அவரை, திமிங்கலத்தின் தசைகள் நொறுக்கவே, தன் கதை முடிந்ததென்று நினைத்தார். திமிங்கலங்களுக்கு கடல் நண்டு பிடிப்பவர்கள் பிடிக்காது, எனவே முப்பது வினாடிகள் கழித்து, அது மைக்கலை வெளியே துப்பியது. ஆச்சரியப்படும்விதமாக, அவருக்கு எந்த எலும்பு முறிவும் இல்லை, வெளிப்புற சிராய்ப்புகள் தான் இருந்தது. அவருடைய அனுபவம் இப்பொழுது நம்முடன் பேசுகிறது.
இதை அனுபவிக்கும் முதல் நபர் இவரில்லை. யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது (யோனா 1:17), அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான், பிறகு அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது (1:17; 2:10). மைக்கலுக்கு நேர்ந்ததுபோல இதுவொரு விபத்தல்ல. யோனா, இஸ்ரவேலின் எதிரிகளை வெறுத்ததாலும், அவர்களுடைய மனந்திரும்புதலை விரும்பாததாலும், அந்தப் பெரிய மீனால் விழுங்கப்பட்டார். தேவன் யோனாவை நினிவேயில் பிரசங்கிக்கச் சொல்ல, இவரோ கப்பலேறி எதிர்த்திசையாய் போனார். ஆகவே தேவன் திமிங்கலம் போன்ற பெரிய மீனை அனுப்பி, தனக்கு செவி கொடுக்கும்படி செய்தார்.
யோனா அசீரியர்களை வெறுத்தது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. பண்டைய நாட்களில் அவர்கள் இஸ்ரவேலரை துன்புறுத்தினர், இஸ்ரவேலின் வடக்கு கோத்திரங்களைச் சிறையாக்கிக் கொண்டுபோகவே, தங்கள் அடையாளத்தையே இஸ்ரவேலர் இழந்தனர். அசீரியா மன்னிக்கப்படும் என்பதை யோனா ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இப்பொழுது நமக்குப் புரிகிறது.
யோனா தேவனை விட தேவ பிள்ளைகளுக்கு மிகவும் விசுவாசமுள்ளவனாய் இருந்தான். தேவனோ இஸ்ரவேலரின் எதிரிகளையும் நேசித்தார், அவர்கள் இரட்சிக்கப்படும்படி விரும்பினார். அவர் நம்முடைய எதிரிகளையும் நேசித்து, அவர்கள் இரட்சிக்கப்படும்படி விரும்புகிறார். தேவ ஆவியானவரின் வழிகாட்டுதலோடு, இயேசுவின் நற்செய்தியைச் சுமந்து அவர்களுக்கு நேரே விரைவோம்.
அறிவு காயப்படுத்தும்போது
கிராண்ட் கேன்யன் வழியாக, இருபத்தைந்து நாட்கள் மிதவைப் படகு பயணத்திற்கு பிறகு, சாக் எல்டரும் அவரது நண்பர்களும் கரை வந்துசேர்ந்தனர். அவர்களின் படகுகளை மீட்டெடுக்க வந்த நபர் கோவிட்-19 வைரஸ் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்கள் அதை நம்பவில்லை, அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதும் அவர்களின் தொலைபேசிகள் பெற்றோரின் அவசர செய்திகளுடன் வந்து சேர்ந்தன. சாக்கும் அவனது நண்பர்களும் திகைத்தனர். அவர்கள் மீண்டும் ஆற்று பயணத்திற்கு திரும்பிப்போய் தற்போதைய தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட எண்ணினர்.
பாவ உலகத்தில், அறிவானது வேதனையை கூட்டக்கூடியதாயிருக்கிறது. பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்” (1:18) என்று குறிப்பிடுகிறார். குழந்தையின் அறியாமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? காரணம் இனவெறி, வன்முறை மற்றும் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. நாம் வளர்ந்து, நம்முடைய பலவீனங்களையும் தீய எண்ணங்களையும் பகுத்தறிவதற்கு முன்பு மகிழ்ச்சியாக இருக்கவில்லையா?
எங்கள் மாமா ஏன் அதிகமாக குடிக்கிறார் அல்லது எங்கள் பெற்றோரின் விவாகரத்துக்கு என்ன காரணம்? போன்ற குடும்ப இரகசியங்களை அறிவதற்கு முன்பு நாம் மகிழ்ச்சியாய் இருக்கவில்லையா?
அறிவின் வேதனை விரும்பத்தக்கதல்ல. ஆனால் அவற்றை சகித்துக்கொள்ளவும், அதில் வளரவும் நம்மை ஊக்குவிக்கும், ஒரு உயர்ந்த அறிவு இருக்கிறது. இயேசு என்னும் தேவனுடைய வார்த்தையே நம்முடைய
இருளில் பிரகாசிப்பிக்கும் ஒளி (யோவான் 1:1-5). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரிந்தியர் 1:30). இயேசுவிடம் சரணடைவதற்கு உங்களுடைய வேதனையே ஒரு காரணம். அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களை பாதுகாக்கிறார்.
குணமடைந்ததைப் போல வாழுங்கள்
இந்தியாவில் இருந்த இரண்டு சகோதரிகள் பார்வையற்றவர்கள். அவர்களின் தந்தை கடின உழைப்பாளியாக இருந்தார். ஆனால் அவர்களுக்கு பார்வையை அளிக்கும் அறுவை சிகிச்சையை செய்ய அவருக்கு வசதியில்லை. பின்னர் குறுகிய கால மருத்துவ பணிக்காக ஒரு டாக்டர்கள் குழு அவர்களின் பகுதிக்கு வந்தனர். அவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் விளைவாக, காலையில், செவிலியர்கள் தங்கள் கண் கட்டுகளை அவிழ்க்கும்போது, பார்வையற்ற அந்த பெண்கள் மகிழ்ச்சியோடு சிரித்தனர். அதில் ஒருவள், “அம்மா, நான் பார்க்கிறேன்! என்னால் பார்க்க முடிகிறது!” என்று ஆனந்த கூச்சலிட்டாள்.
பிறப்பிலிருந்தே முடவனாக இருந்த ஒருவன், தேவாலய வாசலில் தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து பிச்சை கேட்டான். பேதுரு தன்னிடம் பணம் ஏதுமில்லை, ஆனால் அவரிடம் அதைவிட சிறந்த ஒன்று இருந்ததாய் கூறினார். “நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட” (அப்போஸ்தலர் 3:6) என்று சொன்னார். அந்த மனிதன் “குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்” (வச. 8).
பார்வை பெற்ற அந்த சகோதரிகளும், சுகம் பெற்ற அந்த முடவனும், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படையாய் பிரதிபலித்தனர். அந்த சகோதரிகள் ஆச்சரியத்தில் வியப்படைந்தனர். அந்த முடவன் துல்லி குதித்து நடந்தான்.
உங்கள் சொந்த திறன்களைக் கருத்தில்கொள்ளுங்கள். நீங்கள் அற்புதவிதமாக குணமடைந்திருந்தால், இந்த திறன்களை நீங்கள் எப்படி ஆச்சரியமாய் அனுபவித்திருப்பீர்கள்? அவற்றை எப்படி வித்தியாசமாகப் பயன்படுத்தியிருப்பீர்கள்? இப்போது இதை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இயேசுவை நம்பினதினால், அவர் உங்களை ஆவிக்குரிய ரீதியில் குணமாக்கியுள்ளார். அவர் உங்கள் பாவங்களிலிருந்து உங்களை மீட்டெடுத்தார்.
நம்மை உருவாக்கி காப்பாற்றியவருக்கு நன்றி செலுத்துவோம். அவர் நமக்கு வழங்கிய அனைத்தையும் அவருக்கு அர்ப்பணிப்போம்.
மற்றவர்கள் மீது முதலீடு செய்தல்
ஒரு கார்பரேஷன் நிறுவனம் தங்களுடைய உணவுப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் பத்து நபர்களில் ஒருவருக்கு 1000 மைல்கள் தூரம் விமான பயணத்தை இலவசமாய் அறிவித்தது. ஒரு நபர், அவர்களின் மிகவும் மலிவான உணவுப்பொருளான சாக்லேட் கப் கேக்கை பன்னிரண்டாயிரம் ஆர்டர் செய்தார். அதற்கு சுமார் 2.25 இலட்ச ரூபாய் செலவானது. அதினால் அவர் முக்கிய அந்தஸ்தை அடைந்து, அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுமைக்குமான விமானப் போக்குவரத்தை இலவசமாகப் பெற்றார். மேலும் அவர் வாங்கிய அந்த சாக்லேட் கேக்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அதினால் அவர் வரிவிலக்கும் பெற்றார். என்ன ஒரு புத்திசாலித்தனம்!
ஒரு அநீதியான உக்கராணக்காரனைக் குறித்து இயேசு சற்று முரண்பாடான ஒரு உவமையைச் சொல்லுகிறார். அவன் பணி நீக்கம் செய்யப்படவிருப்பதால், தன் எஜமானுக்கு போகவேண்டிய கடனை கடளானிகளுக்கு குறைக்கிறான். அவன் அவ்வாறு செய்தால், தன்னுடைய பணி நீக்கத்திற்கு பின்பு மக்கள் அவனை ஆதரிப்பார்கள் என்று எண்ணி அவன் அவ்வாறு செய்கிறான். அவனுடைய இந்த நெறியற்ற இரக்கத்தை இயேசு பாராட்டவில்லை. ஆனால் அவனுடைய புத்திசாலித்தனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா 16:9) என்று இயேசு கூறுகிறார். “அந்த சாக்லேட் கப் கேக் மனிதர்” தன்னுடைய குறைவான தொகையில் உணவுப்பொருளை வாங்கி, அதை இலாபகரமான விமான பயணமாய் மாற்றியதுபோல, உலகத்தின் ஆஸ்திகளைப் பயன்படுத்தி, நாமும் மெய்யான ஐசுவரியத்தை சுதந்தரிக்கலாம் (வச. 11).
இந்த ஆஸ்திகள் யாவை? “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை" (12:33) என்று இயேசு கூறுகிறார். நம் முதலீடு நமக்கு இரட்சிப்பை வாங்கித் தராது. ஆனால் “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 34) என்பதங்கிணங்க, அது நம்முடைய இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது (வச. 34).
தாய் போல நேசி
1943இல் வங்காளத்தின் பஞ்சத்தில் தான் வளர்ந்த விதத்தை மாலினி தன் பேரனிடத்தில் சொன்னாள். அவளுடைய ஏழ்மையான குடும்பம், பெரும்பாலும் அரிசிக்கூழையே குடித்தனர். பலநேரம் பட்டினியாய் இருந்தனர். அவள் தகப்பனார் எப்போதாவது மீன்பிடித்துக் கொண்டுவருவார். இரவு உணவு சமைத்த அவருடைய தாயார், "மீனின் தலைப்பகுதியே எனக்கு போதுமானது, அதுதான் நல்லது" என்று எடுத்துக்கொள்வாராம். ஆண்டுகள் கடந்த பின்புதான், மீனின் தலைப்பகுதியில் எந்த சதையும் இருக்காது என்பதைத் மாலினி தெரிந்துகொண்டாள். அவள் தாயார் அதை சாப்பிடவும் இல்லை. ஆனால் அது சுவையாய் இருந்தது போல காட்டிக்கொள்வாராம். “பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று அவர் அப்படிச் செய்வார். நாங்கள் அவரைக் குறித்து கவலைப்பட்டதேயில்லை.” என்றாள் மாலினி.
நாளைக்கு தாய்மார்கள் தினம் கொண்டாடப்போகிற நாம், அவர்கள் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்வோம். அவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம். அவர்களைப் போலவே நேசிக்கப் பழகுவோம்.
“பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல” (1 தெசலோனிக்கேயர் 2:7) பவுல், தெசலோனிக்கேய சபைக்கு ஊழியம் செய்தார். “வெகு போராட்டத்தோடே” அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்ததாகவும், அவர்களுக்காய் தன் ஜீவனையும் கொடுக்க ஆயத்தமாயிருப்பதாகவும் அறிவிக்கிறார் (வச. 2,8). "ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்" (வ.9). என்கிறார். ஒரு தாயைப் போல் பிரயாசப்படுகிறார்.
சிலர் தாயின் அன்பை புறக்கணிக்கக்கூடும். "ஆனால் எங்களுடைய பிரயாசம் வீணாகவில்லை" (வச. 1) என்று பவுல் குறிப்பிடுகிறார். மற்றவர்கள் எப்படி நம்மை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தியாகமாய் ஊழியம் செய்ய நம்மால் தீர்மானிக்க முடியும்ம. நம் பரம தகப்பனைப் போலவே, நம் தாயும் பெருமிதம் கொள்வாள்.
பொய்யின் பிதா
விக்டர், ஆபாச படங்களுக்கு அடிமையானான். அவன் நண்பர்கள் பலர் அத்தகைய படங்களை பார்ப்பதுண்டு. இவனும் நேரத்தை போக்க எண்ணி. அதில் சிக்கிக்கொண்டான். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறென்பதை இப்போது உணர்கிறான், அவன் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தான், மேலும் அவன் மனைவியும் அவனைப் பிரிந்தாள். எனவே, இனி அதை பார்ப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதால், அவைகளைப் பார்க்கமாட்டான். ஆனாலும், இது மிகவும் தாமதமோ என்று சந்தேகிக்கிறான். அவன் திருமண வாழ்வு மீட்கப்படுமா? அவன் முற்றிலுமாய் விடுதலைப்பெற்று, மன்னிக்கப்பட முடியுமா?
எல்லோரும் இதைச் செய்கிறார்கள். இதிலென்ன தவறு?.என்று நம் எதிரியாகிய பிசாசு, சோதனைகளை அற்ப விஷயங்களைப்போல கொண்டுவருவான். ஆனால் அவனுடைய திட்டங்களில் நாம் பிடிபட்ட மாத்திரத்தில், அவன் நம்மை விழத்தள்ளுகிறான். 'இது மிகவும் தாமதம்! நீ வெகு தூரம் சென்றுவிட்டாய்! இப்போது உனக்கு நம்பிக்கை ஏதுமில்லை!' என்றும் கூறுகிறான்.
நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடும்போது நம்மை வீழ்த்த என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ, பிசாசு அதையெல்லாம் சொல்வான். ஆனால் இயேசுவோ, “அவன் (பிசாசு) ஆதிமுதற் கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (யோவான் 8:44) என்கிறார்.
பிசாசு பொய்யனென்றால், நாம் அவனுக்கு செவிசாய்க்க கூடாது. நம்முடைய பாவம் பெரிய விஷயமல்ல எனும்போதும், நமக்கு இனி நம்பிக்கையே இல்லை எனும்போதும், நாம் செவிகொடுக்க கூடாது. இத்தீமையானவனின் வார்த்தைகளை புறக்கணிக்கவும், மாறாக அவர் சத்தத்திற்கு செவிகொடுக்கவும் இயேசு உதவிசெய்வாராக. “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (வச. 31-32) என்னும் அவருடைய வாக்குறுதியில் நாம் ஆறுதலடைவோம்.