சிறைக் காவலரிடம் இருந்து தினமும் அடிவாங்குவதை டான் சகித்துக் கொண்டார். அப்படிப்பட்ட கடினமான மனிதனை நேசிக்கும்படிக்கு கிறிஸ்துவால் உணர்த்தப்பட்டதால், ஒரு நாள் காலை நேரத்தில் அவரிடத்தில் அடிவாங்கும்போது, “ஐயா, என் வாழ்நாள் முழுவதும் நான் தினமும் உங்களைப் பார்க்கப் போகிறேன் என்றால், நாம் நண்பர்களாக மாறலாமே” என்று கூறினார். அந்த சிறைக்காவலாளியோ, “இல்லை! நாம் எப்போதும் நண்பர்களாக மாறவே முடியாது” என்றார். ஆனால் டான் வற்புறுத்தி தன் கையை அவரிடமாய் நீட்டினார். 

அந்த சிறை அதிகாரி உறைந்து நின்றார். அவர் அவருடைய கையைக் குலுக்க, அந்த அதிகாரி அவருடைய கையை உறுதியாய் பற்றிக்கொண்டார். அவருடைய கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர் “டான், என்னுடைய பெயர் ரொசாக். நான் உன் சிநேகிதனாயிருக்க விரும்புகிறேன்” என்று சொன்னாராம். அதற்கு பின்பு, அந்த சிறையதிகாரி, டானை அடிக்க தன் கையை ஓங்கியதேயில்லையாம். 

வேதம், “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்” (நீதிமொழிகள் 25:21-22) என்று சொல்லுகிறது. இந்த எரிகிற தழல் உருவகமானது, எகிப்தியர்களின் சடங்காச்சாரத்தை நினைவுகூருகிறது. அங்கு குற்றவாளி தனது தலையின் மீது சூடான நிலக்கரியின் கிண்ணத்தை சுமந்து கொண்டு தனது மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அதுபோலவே, நம்முடைய இரக்கம் நம் எதிரிகளை வெட்கத்தால் முகம் சிவக்கச் செய்யலாம், ஆனால் அது அவர்களை மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும்.

உங்கள் சத்துரு யார்? யாரை நீங்கள் வெறுக்கிறீர்கள்? டான் தன்னுடைய இருதயத்தையும் தன்னுடைய எதிரியின் இருதயத்தையும் மாற்றும் வல்லமை கிறிஸ்துவின் இரக்கத்திற்கு உண்டு என்று நம்பினார். நாமும் அவ்வாறு நம்ப முடியும்.