தேவனின் திசைகாட்டி
இரண்டாம் உலகப்போரின்போது வால்டெமெர் செமெனோவ் ஒரு உதவி பொறியாளராய், எஸ்.எஸ் ஆக்கோவா கைடு என்ற கப்பலில் பணியாற்றினார். வடக்கு கரோலினாவுக்கு ஏறத்தாழ 300 மைல் தூரத்தில் நங்கூரமிட்ட ஜெர்மானியர்களின் நீhமூழ்கிக் கப்பல் ஒன்று இந்த கப்பலை நோக்கி குண்டுகளை வீசின. கப்பல் தாக்கப்பட்டு, தீப்பிடித்து, நீரில் மூழ்க ஆரம்பித்தது. செமெனோவும் அவருடைய குழுவினரும் உயிர்காப்புப் படகின் மூலமாக தப்பித்து, திசைகாட்டியின் உதவியுடன் கப்பல் பாதையை நோக்கிச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்களை கண்டுபிடித்த கண்காணிப்பு விமானம், ப்ரும் என்ற அமெரிக்க கப்பலின் மூலம் அடுத்த நாளே அவர்களை மீட்டது. அந்த திசைகாட்டிக்காக நன்றி. செமெனோவும், 26பேர் கொண்ட அவருடைய குழுவினரும் உயிர் பிழைத்தனர்.
தேவனுடைய ஜனங்கள் வேதாகமம் என்னும் வாழ்க்கையின் திசைகாட்டியைக் கொண்டு வழிநடத்தப்படுகின்றனர் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். அவர் வேதத்தை “தீபம்” என்று ஒப்பிட்டு (சங். 119:105), தேவனைத் தேடுவோரின் பாதைக்கு வெளிச்சமளிக்கக்கூடியதாய் சித்தரிக்கிறார். வாழ்க்கையின் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட சங்கீதக்காரன், வேதத்தைக் கொண்டு ஆவிக்குரிய அச்சரேகையையும் தீர்க்கரேகையையும் கொண்ட நமக்கு திசைகாட்டவும் உயிர்பிழைக்கவும் செய்ய தேவனால் கூடும் என்று அறிந்திருந்தார். ஆகையினால், அவர் நடப்பதற்கு தேவையான ஒளியையும், தேவனுடைய பிரசன்னத்தில் கரைசேர்க்கும்படியாகவும் தேவனிடத்தில் விண்ணப்பிக்கிறார் (43:3).
கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நம்முடைய பாதைகளை தவறவிடும்போது, பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தில் உள்ள பாதையில் தேவன் நம்மை நடத்தமுடியும். வேதாகமத்தை வாசிக்கும்போதும், கற்றுக்கொள்ளும்போதும், அதின் ஞானத்தை கைக்கொள்ளும்போதும் தேவன் நம் இருதயத்தையும் சிந்தையையும் மறுரூபமாக்குவார்.
நேர்த்தியான பெயர்
ஆகஸ்ட் மாதத்தின் உஷ்ணமான ஒருநாளில் என் மனைவி என்னுடைய இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் போராடிக்கொண்டிருந்த வரை அவன் பெயரில்லாமலேயே இருந்தான். ஐஸ்கிரீம் கடைகளில் அமர்ந்தும், நீளமான கார் பயணம் மேற்கொண்டும் அவனுக்கு பெயரை தீர்மானிக்க முயன்றோம். எங்களால் முடியவில்லை. அவனுக்கு மீகா என்று பெயர் சூட்டும் வரைக்கும் அவனை “வில்லியம்ஸின் குழந்தை” என்றே அழைத்தோம்.
நேர்த்தியான ஒரு பெயரை தேர்ந்தெடுப்பது சற்று வெறுப்பான ஒன்று. உலகத்தை நித்திய மாற்றத்திற்குள் கொண்டுவரும் இலக்குடன் இவ்வுலகத்திற்கு வந்த தேவனைப்போல் நாம் இல்லை. ஆகாஸ் ராஜாவின் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளும்பொருட்டு ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் தேவனிடத்தில் ஒரு அடையாளத்தைக் கேட்கும்படிக்கு தேவன் ஆகாஸை ஏவினார் (ஏசாயா 7:10-11). அடையாளத்தைக் கேட்க ராஜா மறுத்தாலும், தேவனாகவே ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (வச. 14). தேவன் அந்த பிள்ளைக்குப் பெயரிடுகிறார். அந்த பிள்ளையானது நம்பிக்கையிழந்திருக்கிற மக்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாய் இருப்பார். இயேசுவின் பிறப்பைப் பதிவுசெய்யும் மத்தேயு அந்த பெயருக்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார் (மத்தேயு 1:23). இயேசு இம்மானுவேலாய் இருப்பார். அவர் தேவனுடைய ஸ்தானாதிபதியாக மட்டுமல்லாது, பாவத்தினால் நம்பிக்கையிழந்திருந்த மக்களை மீட்கும்பொருட்டு, மாம்சத்தில் உதித்த தேவனாயிருப்பார்.
தேவன் நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். அவருடைய குமாரனே அந்த அடையாளம். அவருடைய குமாரனுடைய பெயர் இம்மானுவேல் - தேவன் நம்மோடிருக்கிறார். அவருடைய பிரசன்னத்தையும் அன்பையும் பிரதிபலிக்கும் பெயர். அந்த இம்மானுவேலை நாம் இன்று பற்றிக்கொள்ளும்படியாகவும், அவர் நம்மோடு இருக்கிறார் என்று அறியவும் அவர் நம்மை அழைக்கிறார்.
அவர் வெறுமையானதை நிரப்புகிறார்
பதினைந்து வயது நிரம்பிய இளம்பெண்ணின் மேலாடையின் கைகளை பாதி இழுத்துவிட்டுக்கொண்டதை, உளவியல் நிபுணர் கவனித்தார். அது பொதுவாக, சுய தீங்கில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் நீளமான கையுறைகள் கொண்ட ஆடை. அவள் தன் சட்டையின் கையுறையை மேலே தூக்கி, ஒரு பிளேடைக் கொண்டு தன் முன்னங்கையில் “வெறுமை” என்று கீறிக்கொண்டதைப் பார்த்த லெவின் திடுக்கிட்டார். அவள் சோகமாயிருந்தாள், ஆனால் அவளுக்குத் தேவையான உதவியை பெறுவதற்கு அவள் ஆயத்தமாயிருந்தாள்.
இன்று அந்தப் பெண்ணைப்போலவே தங்கள் இருதயங்களில் “வெறுமை” என்று கீறிக்கொண்ட அநேகர் உண்டு. இந்த வெறுமைகள் “பரிபூரணப்பட” (யோவான் 10:10) இயேசு வந்திருக்கிறார் என்று யோவான் அறிவிக்கிறார். பரிபூரணப்பட விரும்பும் இருதயத்தை தேவன் ஒவ்வொருவருக்குள்ளும் வைத்து, அவர்கள் தன்னுடைய உறவில் பிரியப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதே நேரத்தில், ‘திருடன்’ மக்களையும் சூழ்நிலைகளையும் பயன்படுத்தி, அவர்களை கொள்ளையிடுவதற்கே வருவான் என்றும் எச்சரிக்கிறார் (வச. 1,10). இருவரின் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும் சாயலாகவும் இருக்கிறது. ஆனால் இயேசு கொடுக்கும் “நித்திய ஜீவன்” நிஜமானது, “ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” என்றும் வாக்களிக்கிறார் (வச. 28).
நம்முடைய இருதயத்தில் இருக்கும் வெறுமையை கிறிஸ்துவாலேயே பரிபூரணமடையச் செய்ய முடியும். நீங்கள் வெறுமையாய் உணர்ந்தால், இன்றே அவரைக் கூப்பிடுங்கள். தொடர்ச்சியாய் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால், தேவனுடைய ஆலோசனைக்கு செவிகொடுங்கள். நிறைவுள்ள பரிபூரணமான வாழ்க்கையை கிறிஸ்துவால் மட்டுமே கொடுக்கமுடியும். வாழ்க்கையின் முழுமையான அர்த்தம் அவரிடத்திலேயே உண்டு.
மாயையில் மகிழ்ச்சியைத் தேடுதல்
“சலிப்பு எனக்கு பிடிக்கும்” என்ற வலைப்பதிவின் உரிமையாளர் ஜேம்ஸ் வார்டு, 2010ல் “சலிப்புக் கருத்தரங்கு” என்று ஒன்றை ஒழுங்குசெய்திருந்தார். அது யாராலும் கவனிக்கப்படாத மிகவும் சாதாரணமான, ஒரு நாள் கொண்டாட்டம். இதற்கு முன்பாக, அந்த கருத்தரங்குகளில், தும்மல், வெண்டிங் இயந்திரத்தில் ஏற்படும் சத்தம் மற்றும் 1999ன் இங்க் பிரிண்டர்கள் போன்றவற்றில் ஏன் சத்தம் வருகிறது போன்ற சலிப்பான தலைப்புகள் விவாதிக்கப்பட்டது. வார்டுக்கு அவைகள் மிகவும் சலிப்பானவைகள் என்பது நன்றாய் தெரியும். ஆகையினால் அந்தக் கருத்தரங்கில், ஆர்வமூட்டக்கூடிய, அர்த்தமுள்ள, ரசிக்கக்கூடிய தலைப்புகளை தெரிந்தெடுக்கும்படி செய்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அர்த்தமற்ற காரியங்களில் மகிழ்ச்சியைத் தேடும் முயற்சியில், ராஜாக்களில் ஞானியான சாலமோன் முயற்சித்தான். அவன் பெரிய வேலைகளை செய்தான், மந்தைகளை வாங்கினான், வீடுகளைக் கட்டினான், பாடகர்களை சேகரித்தான், கட்டடங்களைக் கட்டினான் (பிரசங்கி 2:4-9). இவற்றில் சில மதிப்பு மிக்கவைகள், சில மதிப்புக் குறைந்தவைகள். அவற்றில் அர்த்தத்தைத் தேட முயன்ற ராஜா, சலிப்பைத் தவிர வேறொன்றையும் பெறவில்லை (வச. 11). தேவனை சேர்த்துக்கொள்ளாமல், மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஓரு உலகப் பார்வையை சாலமோன் தனக்காக தேட முயன்றார். ஆனால் தேவனை நினைப்பதின் மூலமாகவும் அவரை ஆராதிப்பதின் மூலமாகவுமே மகிழ்ச்சியை கண்டுபிடிக்கமுடியும் என்ற முடிவுக்கு வருகிறார் (பிரசங்கி 12:1-7).
இந்த சலிப்பின் சூறாவளியில் சிக்கியிருக்கும் நாம், நம்முடைய சிருஷ்டிகரை நினைத்து (வச. 1), நம்முடைய சிறிய கருத்தரங்கைத் துவக்குவோம். தேவன் அதை அர்த்தமுள்ளதாய் மாற்றுவார். அவரை நினைத்து அவரையே ஆராதிக்கும்போது, சாதாரணமானவற்றில் ஆச்சரியத்தையும், வழக்கமாய் செய்வதில் நன்றியுணர்ச்சியையும், அர்த்தமற்றவைகளில் மகிழ்ச்சியையும் கர்த்தர் நமக்குக் கட்டளையிடுவார்.
துவக்ககால வாழ்க்கைக் கையேடு
என்னுடைய தாயாரின் திடீர் மரணத்திற்கு பின்பு, நான் ஆன்லைனில் கருத்துக்களை பதிவிட விரும்பினேன். எனவே அதை செய்வது எப்படி என்று பழகும் அறிமுகக் கையேட்டை புரட்ட ஆரம்பித்தேன். எதிலிருந்து துவக்குவது, தலைப்பை எப்படி தேர்ந்தெடுப்பது, ஈர்க்கக்கூடிய பதிவுகளை எப்படி பதிவிடுவது என்று கற்று, 2016ஆம் ஆண்டு என் முதல் பதிவை வெளியிட்டேன்.
நித்திய ஜீவனை பெறுவது எப்படி என்னும் ஆரம்பகால கையேட்டை பவுல் எழுதியுள்ளார். ரோமர் 6:16-18ல் நாமெல்லோரும் பாவிகளாய் பிறந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்க முடியும் (வச.18) என்னும் நிஜத்தைப் பிரதிபலிக்கிறார். அதைத் தொடர்ந்து, பாவத்திற்கு அடிமையாயிருப்பதையும் தேவனுக்கு அடிமையாயிருப்பதையும், அவருடைய ஜீவனுக்கேதுவான வழிகளோடு விவரிக்கிறார் (வச. 19-20). மேலும் “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (வச.23) என்று கூறுகிறார். மரணம் என்பது தேவனிடத்திலிருந்து நித்தியமாய் பிரிந்திருப்பது. கிறிஸ்துவை மறுதலிப்பதினால் நமக்கு நேரிடக்கூடிய அவலம் இது. ஆனால் தேவன் நமக்கு கிறிஸ்துவில் புதுவாழ்வை வாக்களித்துள்ளார். அது பூமியில் துவங்கி பரலோகத்தில் முடிவில்லாமல் அனுபவிக்கக்கூடிய நித்திய வாழ்வு.
நித்திய ஜீவனைக் குறித்த பவுலின் இந்த ஆரம்பகால கையேடு நமக்கு இரண்டு தேர்வுகளை முன்வைக்கிறது. பாவத்தைத் தேர்ந்தெடுத்தால் மரணம் அல்லது இயேசுவின் பரிசை தேர்ந்தெடுத்தால் நித்திய ஜீவன். நீங்கள் இந்த ஜீவனுக்கேதுவான வரத்தை பெற்றுக்கொள்ள பிரயாசப்படுங்கள். ஒருவேளை நீங்கள் கிறிஸ்துவை ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்களாயிருந்தால் இன்று அந்த பரிசை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்பின் மகா பெரிய செயல்
ஒரு தேசிய வனப்பகுதியில், தேன் காளான் என்று பரவலாக அறியப்படும் ஒரு வகை பூஞ்சை 2,200 ஏக்கர் பரப்பளவில் மரத்தின் வேர்வழியாகப் பரவுகிறது. இது, இதுவரை கண்டிராத மிகப் பெரிய உயிரினமாகும். இது ஆயிரம் மடங்கிற்கு மேலாக தன்னுடைய கருப்பு குறுகு நீள்படிவ இழைகளை வனத்திற்கு இடையில் நெய்து, மரங்கள் வளரும்போதே அவைகளை கொன்றுவிடுகிறது. “ரைஸோமார்ஃப்ஸ்” என்று இந்த குறுகு நீள்படிவ இழைகள், மண்ணுக்குள் சுமார் பத்து அடி ஆழம் மட்டும் சுரங்கம் போல் ஊடுறுவுகிறது. இந்த உயிரினம் நம்ப முடியாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தாலும், அது ஒரு ஒற்றை நுண்துளை போல ஆரம்பமானது.
ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் - ஆதாம் மற்றும் இயேசு – ஆகிய இரு நபர்களை வேறுபடுத்திக் காண்பிக்கிறார் (ரோமர் 5:14-15). ஆதாமுடைய பாவம் எல்லா மனுஷருக்கும் ஆக்கினையும் மரணமும் கொண்டுவந்தது (வச. 12). ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷரும் பாவிகளாகி, தேவனுக்கு முன்பாக ஆக்கினைக்கு நிற்கவேண்டியிருந்தது (வச. 17). ஆனால் மனுக்குலத்தின் பாவப் பிரச்சனையை கையாள அவருக்கு ஒரு வழி இருந்தது. சிலுவையில் இயேசுவின் நீதியான செயலினிமித்தம் தேவன், நித்திய ஜீவனையும், அவர் முன் நிற்கும்படியான உரிமையையும் கொடுக்கிறார். கிறிஸ்துவின் அன்பு மற்றும் கீழ்படிந்த செயல், ஆதாமின் ஒரே கீழ்படியாமையை மேற்கொள்ளும் வல்லமையுடையதாயும், எல்லாருக்கும் ஜீவனைக் கொடுக்க வல்லமை வாய்ந்ததாயும் இருந்தது (வச. 18).
இயேசு தம்முடைய சிலுவை மரணத்தினால், அவரை விசுவாசிக்கும் யாவருக்கும் நித்திய ஜீவனை அளிக்கிறார். நீங்கள் இன்னும் அவருடைய மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெறவில்லையென்றால், இன்றைக்கே அதைச் செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு விசுவாசியாயிருந்தால், அன்பினிமித்தம் அவர் செய்த மகா பெரிய செயலுக்காக அவரைத் துதியுங்கள்.
நம்பிக்கையோடு காத்திருப்பது
ஹச்சி: எ டாக்ஸ் டேல் (Hachi: A Dog's Tale) என்ற ஆங்கில திரைப்படத்தில், கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஹச்சி என்ற தெரு நாய்க்குட்டியுடன் நட்பு கொண்டிருந்தார். பேராசிரியர் வேலையிலிருந்து திரும்புவதற்காக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் காத்திருந்து நாய் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. ஒரு நாள், பேராசிரியருக்கு ஆபத்தான பக்கவாதம் ஏற்பட்டது. ஹச்சி ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தது. அடுத்த பத்து வருடங்களுக்கு ஒவ்வொரு நாளும் அது திரும்பத் திரும்ப வந்தது. அதனுடைய அன்பான எஜமானருக்காக காத்திருந்தது.
தன் எஜமானரின் வருகைக்காக பொறுமையாகக் காத்திருந்த சிமியோன் என்ற மனிதனின் கதையை லூக்கா சொல்கிறார் (லூக்கா 2:25). மேசியாவைக் காணும் வரை அவர் மரணத்தைக் காணமாட்டார் என்று பரிசுத்த ஆவியானவர் சிமியோனுக்கு வெளிப்படுத்தினார் (வச. 26). இதன் விளைவாக, கடவுளின் மக்களுக்கு “இரட்சிப்பை” அளிப்பவருக்காக சிமியோன் காத்திருந்தார் (வச. 30). மரியாளும் யோசேப்பும் இயேசுவோடு ஆலயத்திற்குள் நுழைந்தபோது, பரிசுத்த ஆவியானவர் சிமியோனிடம் இவர்தான் அவர் என்று கிசுகிசுத்தார்! காத்திருப்பு இறுதியாக முடிந்தது! சிமியோன் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை, இரட்சிப்பு மற்றும் ஆறுதலுமான கிறிஸ்துவை தன் கைகளில் வைத்திருந்தார் (வச. 28-32).
காத்திருக்கும் பருவத்தில் நாம் நம்மைக் கண்டால், ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை புதிய காதுகளால் கேட்கலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). இயேசுவின் வருகைக்காக நாம் காத்திருக்கும்போது, ஒவ்வொரு புதிய நாளுக்கும் நமக்குத் தேவையான நம்பிக்கையையும் பலத்தையும் அவர் அளிக்கிறார்.
தேவனின் வழிகாட்டுதல்
அவர்களது வங்கி தற்செயலாக 90 லட்சம் ரூபாயை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்த போது, அந்த தம்பதியினர் பொருட்கள் வாங்குவதற்கு தீவிரமாகிவிட்டனர். அவர்கள் கடன்களை அடைத்தது மட்டுமல்லாமல் ஒரு சொகுசு கார், ஒரு புதிய வீடு, இரண்டு நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கினர். டெபாசிட் பிழையைக் கண்டறிந்த வங்கி, தம்பதியரிடம் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். துரதிர்ஷ்;டவசமாக அந்த கணவனும் மனைவியும் ஏற்கனவே பணத்தை செலவழித்து விட்டனர். பின்னர் அவர்கள் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தம்பதியினர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது ஒரு நிருபரிடம் 'நாங்கள் சில மோசமான சட்ட ஆலோசனைகளை எடுத்தோம்" என்று கூறினார். மோசமான ஆலோசனைகளை பின்பற்றுவதும் (தங்களுடையது அல்லாதவைகளை செலவிடுவதும்) தங்களுடைய வாழ்க்கையில் குழப்பத்தை உண்டுபண்ணும் என்று கற்றுக்கொண்டனர்.
இதற்கு நேர்மாறாக, சங்கீதக்காரன், வாழ்க்கையில் குழப்பத்தை தவிர்க்க உதவும் புத்திசாலித்தனமான ஆலோசனைகளை பகிர்ந்துக்கொண்டார். நேர்மையான நிறைவேற்றத்தைக் கண்டவர்கள் - ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்- தேவனை சேவிக்காத மக்களின் ஆலோசனைகளின்படி செல்ல மறுக்கின்றனர் (சங்கீதம் 1:1). விவேகமற்ற, தேவபக்தியற்ற ஆலோசனைகள் நாம் எதிர்பாராத ஆபத்துகளையும் மிகப்பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அறிவார்கள். மேலும், அவர்கள் வேதாகமத்தின் மாறாத மற்றும் அசைக்கமுடியாத சத்தியத்தில் பிரியமாயிருப்பதும், ஆர்வமாய் தியானிப்பதிலும் உந்தப்படுகிறார்கள் (வச. 2). தேவனுடைய வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொடுப்பது ஸ்திரத்தன்மை மற்றும் பலனளிப்பதற்கு வழிவகுக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் (வச. 3).
நம்முடைய தொழில், பணம், உறவுகள், மற்றும் அனேக காரியங்களில், சிறிதாயிருந்தாலும் பெரிதாயிருந்தாலும் நாம் முடிவுகளை எடுக்கும்போது, வேதாகமத்திலுள்ள தேவனுடைய ஞானத்தையும், தெய்வீக ஆலோசனைகளையும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும் நாடுவோமாக. நாம் குழப்பமில்லாமல், நிறைவான வாழ்க்கை வாழ அவருடைய வழிநடத்துதல் நமக்கு அவசியமும், நம்பகமானதுமாயிருக்கிறது.
திரும்பும் இனிமை
ரஷ்ய நாட்டு திருமணங்கள் மிகவும் அழகுள்ளதாய் தனித்துவம் வாய்ந்ததாய் நடைபெறும். அதிலும் குறிப்பிட்ட ஒரு வழக்கமுறை என்னவென்றால் - நலம் பாராட்டுபவர் எழுந்திருந்து தம்பதியினரின் நலன்களை கூறி முடித்த பின்பு அனைவரும் தங்கள் கையில் இருக்கும் பானத்தை குடித்து "கசப்பு!! கசப்பு !!" என்று கூறுவார்கள். புது தம்பதியினர் எழுந்து ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அந்த பானத்தை மறுபடியும் இனிமையாக்குவார்கள்.
ஏசாயா 24ல் தீர்க்கதரிசனம் உரைத்தது போல் கசப்பு நிறைந்த இப்பூமியில் மேல் விழுந்த சாபமும், அழிவும் இனி நமக்கு வரவிருக்கும் இனிமையுள்ள நம்பிக்கையான புதிய வானமும் புதிய பூமிக்கும் வழி திறக்கிறது (அதி 25). தேவன் நமக்கு அருமையான விருந்தையும், இனிமையான பானத்தையும் ஆயத்தம் பண்ணி கொண்டிருக்கிறார். அவருடைய இராஜ்ஜியத்தில் இடைவிடாத ஆசிர்வாதங்களும், கனி நிறைந்த வாழ்க்கையும் குறைவில்லாமல் எல்லோர்க்கும் வழங்கப்படும். சேனைகளின் கர்த்தரின் அரசாட்சியில் மரணம் ஜெயிக்கப்படும், கண்ணீர் துடைக்கப்படும், நிந்தைகள் நீக்கப்படும் (வ. 7-8). அவர் பிள்ளைகளோ "இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்" என்று களிகூறுவார்கள் (வச. 9).
ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் தேவனோடு நாம் ஒரு நாள் வாசம்பண்ணுவோம். சபையாகிய மணவாட்டியை அவர் சேர்த்துக் கொள்ளும்போது ஏசாயா 25 நிறைவேறுகிறது. கசப்பு நிறைந்த நம் வாழ்வும் மதுரமாகும்.