1954 இல், மார்ட்டின் லூத்தர் “வியாபாரிகளுக்கிடையே பொதுவான ஒரு விதிமுறை உண்டு, ‘மற்றவர்களைக் குறித்து எனக்கு எந்த கரிசனையும் கிடையாது. எனது லாபமும் எனது பேராசையும் நிறைவேறினபின்புதான் மற்ற எல்லாமே’. இது அவர்களுடைய பிரதானமான சட்டமாயுள்ளது” என்றார். இதற்கு இருநூறாண்டுகள் கழிந்து, நியூ ஜெர்சி மாகாணத்தின் மவுண்ட் ஹாலி பகுதியைச் சேர்ந்த ஜான் வுல்மேன் என்பவர் இயேசுவின் மீதிருந்த பற்றுதலை தனது தையற்கடை தொழிலில் வெளிக்காட்டினார். அடிமைகளின் விடுதலைக்கு ஆதரவளிக்கும் விதத்தில், கட்டாய வேலைவாங்குதலில் ஈடுபட்ட நிறுவனங்களின் பஞ்சு மற்றும் சாயப் பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். சுத்த மனசாட்சியோடு அவர் தனக்கடுத்தவரையும் நேசித்து, தனது காரியங்களில் உத்தமத்தையும் உண்மையையும் காத்து வாழ்ந்தார்.

அப்போஸ்தலன் பவுலும், “கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே” (2 கொரிந்தியர் 1:12) வாழ பிரயாசப்பட்டார். கொரிந்து பட்டணத்தில் ஒருவன், இயேசுவின் அப்போஸ்தலன் என்கிற தன்னுடைய அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டபோது, அவர்கள் மத்தியில் தான் நடந்துகொண்ட விதத்தைத் தற்காத்தார். தன்னுடைய வார்த்தைகளும் எழுத்துக்களும், நுட்பமான பரிசோதனையைக்கூட எதிர்கொள்ளக்கூடியவை என்றெழுதினார் (வ.13). தன்னையல்ல, தன்னுடைய செயல்திறனுக்குத் தேவனின் கிருபையையும் வல்லமையையும் தான் சார்ந்துகொண்டிருப்பதை வெளிக்காட்டினார் (வ.12). சுருங்கச் சொன்னால், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே பவுலின் அனைத்து காரியங்களிலும் பரவியிருந்தது.

கிறிஸ்துவின் தூதுவர்களான நாமும் தொழில், குடும்பம் என்று நமது அனைத்து காரியங்களிலும் நற்செய்தியை ஒலிக்கச்செய்வதில் கவனமாயிருப்போம். தேவனின் கிருபையாலும் வல்லமையாலும் அவருடைய அன்பைப் பிறருக்கு நாம் வெளிக்காட்டுகையில், நாம் தேவனைக் கனப்படுத்துகிறோம்; பிறரையும் நேசிக்கிறோம்.