எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

வேற்றுமையைக் கொண்டாடுதல்

பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில், 608 மாணவர்கள் அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள தயாரானார்கள். கல்லூரி முதல்வர், மாணவர்களின் தேசங்களின் பெயர்களை வாசித்து அவர்களை வரிசையில் நிற்கும்படி கூறினார். அப்கானிஸ்தான், பொலிவியா, போஸ்னியா... என்று அறுபது நாடுகளின் பெயர்களை முதல்வர் வாசித்தார். அந்தந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், மகிழ்ச்சியோடு வரிசையில் நின்றனர். அறுபது நாடுகள்; ஒரே பல்கலைக்கழகம். 

வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அழகான உதாரணங்கள், ஒற்றுமையில் வாழும் மக்களை எதிர்பார்க்கும் தேவனுடைய இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. 

சங்கீதம் 133ல் தேவ ஜனத்தின் ஒற்றுமை முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் எருசலேமுக்கு பண்டிகையை ஆசரிக்கப்போகும் இஸ்ரவேலர்களால் பாடப்பெறுகிற சங்கீதம். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிற வேற்றுமைகள் இருந்தாலும், ஒருமித்து வாசம்செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது (வச. 1). சகோதர சிநேகம், பனிக்கும் (வச. 3), ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்களை அபிஷேகம் செய்யும்போது (யாத்திராகமம் 29:7), அவர்களின் தலையிலிருந்து தாடி வழியாக வஸ்திரத்தின் மீது விழும் அபிஷேக தைலத்துக்கும் ஒப்பிடப்பட்டள்ளது (வச. 2). இந்த உருவகங்கள் இணைந்து, ஒற்றுமை என்பது தேவனுடைய அபரிவிதமான ஆசீர்வாதத்தை வழிந்தோடச்செய்யக் கூடியது என்பதை உணர்த்துகிறது.

இனம், தேசம், வயது என்பதில் கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் வேற்றுமைகள் இருந்தாலும் ஆவியில் ஓர் ஆழமான ஒற்றுமை இருக்கிறது (எபேசியர் 4:3). இயேசு நம்மை நடத்துகிற அந்த பொதுவான பிணைப்பை நாம் கொண்டாடும்போது, தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட வேற்றுமைகளை தழுவி, மெய்யான ஒற்றுமையின் மேன்மையை நாம் அனுபவிக்கக்கூடும். 

எதிர்ப்பின் மத்தியில் தேவனை நம்புதல்

பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவைக் குறித்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத கோத்திரத்தில் பிறந்தவள், எஸ்தர். அவளுடைய வியாதியின் மரண போராட்டத்திலிருந்து அவளின் அத்தையின் ஜெபத்தின் மூலம் விடுதலைப்பெற்றதினால் இரட்சிக்கப்பட்டாள். இன்று எதிர்ப்புகள் மற்றும் மரண பயத்தின் மத்தியிலும் அவளுடைய மக்கள் கூட்டத்திற்கு வேதபாட வகுப்பு எடுக்கிறாள். “நான் என்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமை, அன்பு, நன்மை, உண்மைத்துவம் என்று அனுபவித்த இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது” என்று அவரை மகிழ்ச்சியோடு பிரஸ்தாபப்படுத்துகிறாள். 

பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ என்னும் வைராக்கியமான இஸ்ரவேலர்களைப்போன்று பாடுகளின் மத்தியில் தேவனை ஆராதிக்கிறவர்கள் அதிகம். தானியேல் புத்தகத்தில், நேபுகாத்நேச்சாரின் பொற்சிலையை வணங்கவில்லையென்றால் மரணம் என்றபோதிலும் இவர்கள் அதை வணங்க மறுத்தனர். தங்களுடைய தேவன் இந்த இக்கட்டிலிருந்து தங்களை காக்க வல்லவர், அவர் அவர்களை “விடுவிக்காமற்போனாலும்” அவரை ஆராதிப்பதையே தெரிந்துகொண்டனர் (தானியேல் 3:18). அவர்கள் அக்கினியில் போடப்பட்டபோது, அவர்களின் உபத்திரவத்தில் தேவன் அவர்களோடு சேர்ந்துகொண்டார் (வச. 25). அவர்களின் தலை மயிர் கூட கருகாமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டதை எண்ணி அங்கிருந்த அனைவரும் வியந்தனர் (வச. 27).

நம்முடைய விசுவாசத்திற்காக நாம் பாடு அனுபவிக்கும்போது, நாம் நம்பினது நடக்காமற்போனாலும், நம்மை பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் நம்மோடு இருக்கும் தேவனுடைய ஆவிக்கு கிழ்ப்படியும்படிக்கு, பழைய மற்றும் புதிய உதாரணங்கள் நம்மை ஊக்குவிக்கிறது. 

தேவையானது ஞானமே

அப்பா இல்லாமல் வளர்ந்ததால், ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு கொடுக்கவேண்டிய நடைமுறை ஞானத்தை ராப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதுபோன்ற வாழ்க்கையின் அத்தியாவசியமான ஞானத்தை எவரும் இழந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், “இதை எப்படி செய்வது, அப்பா!” என்ற பெயரில் அலமாரியை ஒழுங்குசெய்வதிலிருந்து வாகன சக்கரத்தை மாற்றுவது வரைக்கும் அனைத்தையும் காணொலிகளாய் வெளியிட்டார். அவருடைய மென்மையான அணுகுமுறையினால் யூடியூப் வட்டாரத்தில் லட்சக்கணக்கான வாசகர்களை சேகரித்தார்.

நம்முடைய வாழ்க்கையின் மதிப்புமிக்க திறமைகளை கற்றுத்தரவும், கடினமான பாதைகளில் நமக்கு ஆலோசனை கூறவும், அனுபவமிக்க பெற்றோரின் உதவியை நாம் அநேக வேளைகளில் எதிர்பார்க்கிறோம். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி தங்களை தேசமாய் ஸ்தாபிக்க முயற்சித்த மோசேக்கும் ஞானம் தேவைப்பட்டது. மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் மீது சுமத்தப்பட்ட பாரமான சுமையைப் பார்க்கிறார். எனவே தலைமைத்துவத்தை பகிர்ந்துகொடுக்கும்படிக்கு அவனுக்கு ஆலோசனை கொடுக்கிறார் (யாத்திராகமம் 18:17-23). “மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்” (வச. 24). 

நம் எல்லோருக்கும் ஞானம் தேவை என்பதை தேவன் அறிவார். சிலருக்கு கர்த்தருக்குள் இருக்கிற பெற்றோர்கள் இருப்பதினால் அவர்களின் துணையை நாடலாம். அப்படியில்லையென்றால், கேட்கிற யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிற தேவனை சார்ந்துகொள்ளலாம் (யாக்கோபு 1:5). அவர் வேதம் முழுவதிலும் ஞானத்தைக் பிரதிபலித்துள்ளார். அதற்கு தாழ்மையோடும் உண்மையோடும் செவிகொடுக்கும்போது, நாமும் ஞானமுள்ளவர்களாய் மாறி (நீதி. 19:20), நம் ஞானத்தை மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்ள முடியும். 

சுதந்திரத்தோடு அலைவது

மூன்றாம் தலைமுறை விவசாயியான பாலா, “என் நாமத்துக்கு பயந்திருக்கும்... நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள்” (மல்கியா 4:2), என்பதை வாசிக்கும்போது மிகவும் உற்சாகமடைந்து, தேவன் அளிக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஜெபித்தார். தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட கன்றுகள் துள்ளி குதித்து அதி வேகமாக, உற்சாகத்தோடு வெளியேறுவதை தெளிவாக நினைவுக்கூர்ந்த பாலா தேவன் வாக்குப் பண்ணின உண்மையான சுதந்திரத்தைக் குறித்து புரிந்துகொண்டார். 

தேவனுடைய நமத்துக்குப் பயந்தவர்கள் மற்றும் அவருக்கு உண்மையாயிருக்கிறவர்களுக்கும், தங்களை மட்டுமே நம்பியிருக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி தீர்க்கதரிசி, மல்கியா 4ல் கொடுக்கப்பட்டுள்ள கற்பனைகளைப் பற்றி நானும் பாலாவின் மகளும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் இந்தக் கதையைப் பற்றி என்னிடம் கூறினாள் (4:1-2). மத போதகர்கள் உட்பட பலர் தேவனையும் அவருடைய நம்பிக்கையுள்ள வாழ்க்கைத் தரங்களையும் புறக்கணித்த நேரத்தில், இந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களை தேவனைப் பின்பற்றுமாறு ஊக்குவித்தார் (1:12-14; 3:5-9). இந்த இரண்டு விதமான மக்களிடையே தேவன் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் நாள் வருமென்று சொல்லி மக்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ மல்கியா அழைத்தார். சுதந்திரமான கன்றைப் போல, விசுவாசமுள்ளவர்கள் “நீதியின் சூரியன், செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடு உதிக்கும்போது” அனுபவிக்கும் சொல்லிமுடியாத மகிழ்ச்சியை எதிர்பாராத விதத்தில் இந்தப் பகுதியில் மல்கியா ஒப்பிட்டுக் காட்டுகிறார் (4:2).

உண்மையுள்ள சுதந்திரம் எல்லா மக்களுக்கும் கிடைக்கப்பெறும் நல்லச் செய்தியைக் கொண்டுவரும் இயேசுவே இந்த வாக்குத்தத்தத்தை இறுதியாக நிறைவேற்றுபவர் (லூக்கா 4:16-21). ஒரு நாள் தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட கிரியைகளாய், இந்த சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். அங்கே சுதந்திரமாய் இருப்பது விவரிக்கமுடியாத மகிழ்ச்சியாய் இருக்கும்!

மீண்டும் எழு

ரயன் ஹால் என்னும் அமெரிக்காவின் ஒலிம்பிக் ஓட்டக்காரர், மாரத்தானின் பாதி ஓட்டத்தில் சாதனை படைத்துள்ளார். 13.1 மைல் தூரத்தை (21 கி.மி.) 59 நிமிடங்கள் 43 விநாடிகளில் கடந்து, அமெரிக்க தடகள வரலாற்றில் ஒரு மணி நேரத்திற்குள் இவ்வளவு தூரத்தைக் கடந்தவர் என்று சாதனைப் படைத்தார். ஆனாலும் அந்த ஓட்டத்தை அவரால் சரியாய் முடிக்கமுடியவில்லை. 

வெற்றியையும் தோல்வியையும் ருசிபார்த்தபோதிலும், அவரைப் பாதுகாத்தது இயேசுவின் மீதான விசுவாசம் என்று சொல்லுகிறார். நீதிமொழிகள் புத்தகத்தில் அவருக்கு பிடித்த வார்த்தை, “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும், திரும்பவும் எழுந்திருப்பான்” (24:16) என்பதே. தேவன் மீது நம்பிக்கை வைத்து, தேவனோடு சரியான உறவில் இருக்கும் நீதிமானுக்கும் பாடுகளும் துன்பங்களும் உண்டு என்பதை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது. ஆனாலும் அந்த துன்பத்தின் மத்தியிலும் தொடர்ந்து தேவனை பற்றிக்கொள்ளும்போது மீண்டும் எழுந்து நிற்க தேவன் பெலன் தருவார். 

நீங்கள் சமீபத்தில் பாதிக்கக்கூடிய மனச் சோர்வுக்கும் தோல்விக்கும் ஆளாகி, மீளுவது சாத்தியமேயில்லை என்று எண்ணியதுண்டா? வேதாகமம் நம்முடைய பலத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தேவன் மீதும் அவர் வாக்குத்தத்தத்தின் மீதும் நம்பிக்கை வைக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவரை நம்பும்போது வாழ்க்கையில் நேரிடுகிற பிரச்சனையிலிருந்து கடினமான பிரச்சனைகள் வரை அனைத்தையும் மேற்கொள்ள தேவனுடைய ஆவியினாலே நாம் பெலப்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:9). 

வாழ்க்கையின் புயல்களை திசைதிருப்புதல்

ஜான் கென்னடி ஜூனியர் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மகன்), 1999 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி, சிறிய விமானத்தில் பறக்கும்போது, விபத்து நேரிட்டு, விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. விபத்திற்கு காரணம், பாதை சரியாய் தெரியவில்லை என்ற வழக்கமான குறைபாடுதான் என்று கண்டறிப்பட்டது. அதாவது, விமானத்தைத் தரையிறக்கும்போது, பாதை தெளிவாய் தெரியாத பட்சத்தில் கருவிகளை நம்புவதை விட்டுவிட்டு, விமானத்தை திசைதிருப்பி தரையிறக்க முயற்சிப்பார்கள். 

வாழ்க்கையின் காரியங்கள் நம்மை அடிக்கடி மேற்கொள்ளும்போது, நாம் திசைதிருப்பப்பட்டதாக உணருகிறோம். புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுதல், நேசிக்கிறவர்களின் மரணம், வேலை இழப்பு, நண்பனின் துரோகம் போன்ற வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை தோற்கடிக்கவும் குழப்பவும் செய்கிறது. 

இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் கடந்துசெல்லும்போது சங்கீதம் 43ஐ ஜெபமாக ஏறெடுக்கலாம். இந்த சங்கீதத்தில், சங்கீதக்காரன் தீமையினாலும் அநீதியினாலும் சூழப்பட்டவராய் தோல்வியின் பாதையில் தொலைந்துபோனவராய் உணருகிறார். விரக்தியில் சங்கீதக்காரன் தேவனுடைய வழிநடத்துதலைச் சார்ந்து, தான் அதிகம் விரும்பும் தேவனுடைய சமுகத்திற்கு பத்திரமாய் தன்னை திசைதிருப்பும்படி விண்ணப்பிக்கிறான் (வச. 3-4). தேவ சமுகத்தில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் புதுப்பிக்கப்படுவதை சங்கீதக்காரன் அறிந்திருக்கிறான். 

வழிநடத்துதலுக்கு சங்கீதக்காரனுக்கு தேவைப்பட்ட கருவிகள் யாவை? சத்தியத்தின் வெளிச்சமும், பரிசுத்த ஆவியின் மூலம் உறுதியளிக்கப்பட்ட தேவனுடைய சமுகமுமே. 

நீங்கள் திசைமாறி தொலைந்துபோனவர்களாய் உணரும்போது, தேவன் தன்னுடைய ஆவியின் மூலமாகவும் சமுகத்தின் மூலமாகவும் உங்களை வழிநடத்தி, உங்களை தேற்றவும் உங்கள் பாதைக்கு வெளிச்சத்தைக் காட்டவும் முடியும். 

விசுவாசப் பாதை

உலகக்கோப்பை கால்பந்தின் 2017ஆம் ஆண்டின் தகுதிச் சுற்றில், அமெரிக்காவுடன் டிரினிடாட் மற்றும் டொபாகோ மோதியது. பெயர் அறியப்படாத இந்த சிறிய தீவு நாடுகள், அமெரிக்காவை அபாரமாக வீழ்த்தி, உலகத்தையே ஆச்சரியப்படுத்தியது. தகுதி வரிசை பட்டியலில் 56 தேசங்களைக் கடந்து முன்னிலைப் பெற்றது. 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2018ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் பெயர் இடம்பெற முடியாத அளவிற்கு அதை பின்னுக்குத் தள்ளியது.

டிரினிடாட் மற்றும் டொபாகோவின் இந்த வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அமெரிக்காவோடு ஒப்பிடும்போது, இந்த சிறிய கரீபியன் தீவு நாடுகள் ஒன்றுமில்லை. ஆனால் எவ்வளவு பெரிய தேசமானாலும் வாஞ்சையோடு விளையாடும் குழுவை தோற்கடிப்பது சாத்தியமில்லை.

மீதியானுக்கு விரோதமாக கிதியோனின் யுத்தமும் இதைப்போன்றதே. ஒரு பெரிய இராணுவத்திடம் ஒரு சிறு கூட்டம் மோதியது. இஸ்ரவேலில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கையை வைத்தோ, பொருளாதாரத்தை வைத்தோ, அல்லது திறமையான தலைவர்களை வைத்தோ யுத்தத்தில் வெற்றியடைந்தால் மகிமை தேவனுக்கு போகாது என்பதினால், அவர்களின் இராணுவத்தை முந்நூறாகக் குறைக்கிறார் (நியாய. 7:1-8).

நம்மால் பார்க்க, அளவிட முடிந்த காரியங்களில் மட்டுமே நம்பிக்கை வைக்க தூண்டப்படுகிறோம். ஆனால் அது விசுவாச பாதையல்ல. கடினமான சூழ்நிலை நமக்கு அனுமதிக்கப்பட்டாலும் தேவனைச் சார்ந்து “கர்த்தரிலும் அவரின் சத்துவத்தின் வல்லமையிலும்” பலப்படும்போது (எபேசியர் 6:10), நம்மால் சமாளிக்கமுடியாத பிரச்சனைகளையும் நாம் துணிச்சலோடும் நம்பிக்கையோடும் மேற்கொள்ளமுடியும். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் நமக்குள் பெரிய காரியங்களைச் செய்யும்.

வெகுசிறப்பான வாழ்க்கை

ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த மருத்துவ நிபுணரான கேத்ரீன் ஹம்லினைக் குறித்து பத்திரிக்கையில் வெளியான அவருடைய இரங்கல் செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன். குழந்தைப் பிறப்பின்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களைத் தாக்கும் ஒருவகையான மகப்பேறு வியாதிக்கு சிகிச்சையளிக்கும் உலகின் முதல் மருத்துவமனையை எத்தியோப்பியாவில் நிறுவியவர்களே இந்த கேத்ரீனும் அவருடைய கணவரும். அதில் 60,000க்கும் அதிகமான பெண்களுக்கு சிகிச்சையளித்த பெருமை இவரைச் சேரும்.

மருத்துவசேவை புரிந்துகொண்டிருந்த தன்னுடைய 92ஆம் வயதிலும், தன்னுடைய ஒவ்வொரு நாளையும் தேனீர் கோப்பையுடனும் வேதபாடத்துடனும் துவங்குவது கேத்ரீனின் வழக்கம். அவரை பேட்டியெடுத்தவர்களிடம், தான் தேவன் கொடுத்த வேலையைச் செய்யும் ஒரு சாதாரண விசுவாசி என்று பதிலளித்தார்.

அவருடைய சிறப்பான வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில், தேவனை மறுதலிப்பவர்களும் நம்முடைய “நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம்... தேவனை மகிமைப்படுத்தும்படி” (1 பேதுரு 2:12), என்று வேதம் விசுவாசிகளை வாழத் தூண்டும் வெகுச் சிறப்பான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

நம்மை அந்தகார இருளிலிருந்து அழைத்து அவருக்கு சொந்தமாக்கிக் கொண்ட தேவனுடைய ஆவியின் வல்லமையினால், நம்முடைய சேவைகளையெல்லாம் வல்லமையுள்ள விசுவாச சாட்சிகளாக மாற்றமுடியும். தேவன் நமக்கு கொடுத்துள்ள வாஞ்சையையும் திறமைகளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றக்கூடிய வகையில், தேவ ஜனத்தை அவரண்டை திருப்புவதற்கு அவைகளை நேர்த்தியாய் பயன்படுத்துவோம்.

அன்பால் தொடரப்பட்டது

“இரவும் பகலும் நான் அவரை விட்டு ஓடினேன்” என்னும் வரிகள் ஆங்கிலக் கவிஞர் பிரான்சிஸ் தாம்சனின் “தி ஹவுண்ட் ஆஃப் ஹெவன்” என்ற புகழ்பெற்ற கவிதையின் துவக்க வரிகள். தேவனிடமிருந்து மறைக்க அல்லது ஓட முயற்சித்தபோதிலும், இயேசுவின் தொடர்ச்சியான தேடலை தாம்சன் விவரிக்கிறார். “அவர் என்னைத் தான் தேடுகிறார்!" என்று கவிஞர் முடிக்கிறார். 

தேவனின் தேடிவரும் அன்பே யோனா புத்தகத்தின் மையக் கருப்பொருள். நினிவே மக்களுக்கு (இஸ்ரவேல் ஜனங்களின் மோசமான எதிரிகள்) தேவனிடம் திரும்ப வேண்டிய அவசியம் குறித்து சொல்லும்படியான ஒரு பணியை தீர்க்கதரிசி பெற்றார். ஆனால் அதற்கு பதிலாக “யோனா கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி” (யோனா 1:3), நினிவேயின் எதிர்திசையில் பயணிக்கும் ஒரு கப்பலில் பயணம் செய்கிறார். ஆனால் கப்பல் பெருங்காற்றில் சிக்கியது. கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக, பெரிய மீனினால் விழுங்கப்படுவதற்காக, யோனா கடலில் வீசப்பட்டான் (1:15-17).

தேவனிடமிருந்து ஓடுவதற்கு பல முயற்சிகள் எடுத்தபோதிலும், தேவன் அவனை பின்தொடர்ந்தார் என்று யோனா தனது அழகான கவிதையில் விவரிக்கிறார். மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட யோனாவுக்கு மீட்பு அவசியப்படும்போது, அவன் ஜெபத்தில் தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய அன்பை நோக்கி திரும்புகிறார் (2:2,8). தேவன் யோனாவுக்கு மட்டுமல்லாது அவனுடைய அசீரிய எதிரிகளுக்கும் மீட்பை கட்டளையிட்டார் (3:10).

இரண்டு கவிதைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, நாம் தேவனிடமிருந்து ஓட முயற்சிக்கும் பல பருவங்கள் நம் வாழ்வில் இருக்கலாம். எனினும் இயேசு நம்மை நேசிக்கிறார், அவருடனான மீட்டெடுக்கப்பட்ட உறவுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறார் (1 யோவான் 1:9).