கிறிஸ்துமஸ் உற்சாகம்
சர்வதேச விருந்தினர்களின் கலாச்சாரங்களைக் கொண்டாட எங்கள் சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் இரவு விருந்தில், மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடல் குழுவினர், பாரம்பரியமான கிறிஸ்துமஸ் பாடலான "லைலத் அல்-மிலாத்"தை, தர்புகா (ஒரு வகை மேளம்) மற்றும் ஊட் (நரம்பு இசைக்கருவி) ஆகியவற்றின் இசையுடன் பாடிட, நான் மகிழ்ச்சியுடன் கைதட்டினேன். இசைக்குழுவின் பாடகர், பாடல் தலைப்பின் பொருள் "நேட்டிவிட்டி நைட் (இயேசுவின் பிறப்பிடத்தின் இரவு)" என்று விளக்கினார். கிறிஸ்துமஸின் உற்சாகமே தாகத்தால் வாடுபவருக்குத் தண்ணீர் வழங்குதல் அல்லது அழுகிறவருக்கு ஆறுதல் அளித்தல் போன்று பிறருக்குச் சேவை செய்வதிலேயே உள்ளதென்று இப்பாடல் வரிகள் கேட்பவர்களுக்கு நினைவூட்டுகின்றன.
அவர்: தான் பசியாயிருந்தபோது உணவளித்தது, தாகமாயிருந்தபோது தண்ணீர் கொடுத்தது, நோய்வாய்ப்பட்டு தனிமையிலிருந்தபோது தோழமையையும் பராமரிப்பையும் அளித்தது என்று, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் தமக்காகவே செய்த செயல்களென்று பாராட்டும் ஒரு உவமையிலிருந்து (மத்தேயு 25:34-36) இந்தக் கிறிஸ்துமஸ் பாடலின் கருத்து எடுக்கப்பட்டிருக்கலாம். இயேசுவின் பாராட்டுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்த உவமையில் கூறப்பட்டவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்; அவர்கள் உண்மையில் கிறிஸ்துவுக்காக இதைச் செய்யவில்லை என்று நினைக்கிறார்கள். அவரோ, "மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (வ.40) என்று பதிலளித்தார்.
விடுமுறைக் காலத்தில், பண்டிகை மனப்பான்மையைக் கொண்டிருப்பதே கிறிஸ்துமஸ் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக பொதுவாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் "லைலத் அல்-மிலாத்", பிறர் மீது கரிசனை கொள்வதே உண்மையான கிறிஸ்துமஸ் உற்சாகத்தைச் செயல்படுத்தும் முறை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, நாம் அவ்வாறு செய்யும்போது, நாம் பிறருக்கு மட்டுமல்ல, இயேசுவுக்கும் ஊழியம் செய்கிறோம்.
தேவனால் மன்னிக்கப்படுதல்
தேசிய விடுமுறையான நன்றிசெலுத்தும் நாளையொட்டி, அமெரிக்க ஜனாதிபதி கருணை மன்னிப்பு வழங்கும் முன், இரண்டு வான்கோழிகளை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறார். நன்றியறிதல் நாளுக்கான பாரம்பரிய உணவில் பிரதானமாக வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவை தங்கள் ஆயுளெல்லாம் பாதுகாப்பாக ஒரு பண்ணையில் வளர்கின்றன. வான்கோழிகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், வித்தியாசமான இந்த வருடாந்திர பாரம்பரியமானது, மன்னிப்பிலுள்ள ஜீவனளிக்கும் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.
எருசலேமில் மீந்திருந்த இஸ்ரவேலர்களுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை எழுதியபோது, மன்னிப்பின் முக்கியத்துவத்தைத் தீர்க்கதரிசி மீகா புரிந்துகொண்டார். தீமையை விரும்பி; பேராசை, அநீதி மற்றும் கொடுமையில் ஈடுபட்டதற்காக (6:10-15) ஒரு சட்டப்பூர்வமான புகாரைப் போலவே,தேவன் தேசத்திற்கு எதிராக சாட்சியமளிப்பதை மீகா பதிவு செய்தார் (மீகா 1:2).
இத்தகைய கலகங்கள் மத்தியிலும், தேவன் என்றென்றைக்கும் கோபமாக இரார், மாறாக "அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னி(ப்பார்)க்கிற" (7:18) என்ற வாக்கில் வேரூன்றிய நம்பிக்கையுடன் மீகா முடிக்கிறார். சர்வத்திற்கும் சிருஷ்டிகரும் நியாயாதிபதியுமாக, ஆபிரகாமுக்கு அவர் அளித்த வாக்கின் பொருட்டு (வ. 20) நமக்கு எதிரிடையாக நம்முடைய செயல்களை அவர் கணக்கிட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அவராலேயே அறிவிக்க முடியும். இறுதியில், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் இது நிறைவேற்றப்பட்டது.
தேவனுடைய தரத்திற்கேற்ப வாழத் தவறிய எல்லா வழிமுறைகளிலிருந்தும் மன்னிக்கப்படுதல் என்ற பரிசுக்கு நாம் பாத்திரர் அல்லவே, எனினும் இது நமக்கு மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. அவருடைய முழுமையான மன்னிப்பின் பலன்களை நாம் மேலும் மேலும் புரிந்து கொண்டு, நன்றியறிதலுடன் அவரை துதிப்போமாக.
மேய்ப்பனிடமிருந்து துணிவு
2007 டீ20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால், ஜோகன்னஸ்பர்க் மைதானத்திலிருந்த சுமார் 1,00,000 பேர் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். மிஸ்பா முதலில் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் சிக்ஸர் விளாசினார். இருப்பினும், ஜோகிந்தர் ஷர்மா இன்னும் அமைதியாக அடுத்த பந்து வீசினார். இந்த முறை பந்தை ஒரு ஜோடி இந்திய கைகள் கவ்வின, ஒரு விக்கெட் விழுந்தது. மிஸ்பா ஆட்டமிழந்தார், அரங்கம் ஆர்ப்பாட்டத்தில் வெடித்தது, இந்தியா தனது முதல் டீ20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
இதுபோன்ற உணா்ச்சிமிக்க தருணங்களில்தான் சங்கீதம் 23:1 போன்ற வேதாகம வசனங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்" என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். நமக்குப் பெலனும் உறுதிப்பாடும் தேவைப்படும்போது, தேவனை ஒரு மேய்ப்பனாக உருவகப்படுத்துகையில், ஆழ்ந்த தனிப்பட்ட முறையில் அவற்றைப் பெறலாம்.
சங்கீதம் 23 ஒரு பிரியமான சங்கீதம், ஏனென்றால் நம்மை அயராமல் பராமரிக்கும் அன்பான மற்றும் நம்பகமான மேய்ப்பன் இருப்பதால், நாம் ஆறுதலையும் அல்லது சமாதானத்தையும் பெறலாம் என்று இது நமக்கு உறுதியளிக்கிறது. தீவிரமான அல்லது கடினமான சூழ்நிலைகளில் உண்டாகும் அச்சம் மற்றும் தேவன் வழங்கும் ஆறுதல் ஆகிய இரண்டிற்கும் தாவீது சாட்சியமளித்தார் (வ. 4). "தேற்றும்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை உறுதியைக் குறிக்கிறது, அல்லது அவரது வழிநடத்தும் பிரசன்னத்தால் உண்டாகும் தொடர்ந்து முன்னேறுவதற்கான நம்பிக்கை மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது.
சவாலான சூழ்நிலைகளில், விளைவு என்னவாக இருக்கும் என்று தெரியாத நிலையில், நல்ல மேய்ப்பன் நம்முடன் நடப்பார் என்ற இதமான நினைவூட்டலைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி நாம் தைரியம் பெறலாம்.
கிளையாகிய இயேசு
சிவப்பாய் காட்சியளித்த மலைகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கிறது அழகிய ஹோலி கிராஸ் சிற்றாலயம். அதற்குள் நுழைந்தவுடன், சிலுவையில் இயேசுவின் வித்தியாசமான சிற்பம் உடனடியாக ஈர்த்தது. ஒரு பாரம்பரிய சிலுவைக்குப் பதிலாக, இயேசு ஒரு மரத்தின் கிளைகளில் இரண்டு தண்டுகளில் சிலுவையில் அறையப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது. கிடைமட்டமாகத் துண்டிக்கப்பட்ட, காய்ந்த தண்டு, தேவனை நிராகரித்த பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குறிக்கிறது. மற்ற தண்டு மேல்நோக்கி வளர்ந்து கிளைகள்; யூதாவின் செழிப்பான கோத்திரத்தையும், தாவீது ராஜாவின் குடும்ப வம்சத்தையும் குறிக்கிறது.
குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலை, இயேசுவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூதாவின் கோத்திரம் சிறையிருப்பில் வாழ்ந்தாலும், எரேமியா தீர்க்கதரிசி தேவனிடமிருந்து ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொடுத்தார்: "நான்.. சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்" (எரேமியா 33:14) "அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (வ. 15) என்று மீட்பரை குறித்தது. அவரை ஜனங்கள் அடையாளம் காண்பதற்கான ஓர் வழி, "தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்" (வ. 15) என்பதே. அதாவது, மீட்பர் தாவீது ராஜாவின் வழித்தோன்றலாக இருப்பார்.
இயேசுவின் வம்சாவளியின் விவரங்களில், தேவன் வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்ற முக்கியமான உண்மையை இச்சிற்பம் திறமையாக வெளிக்காட்டுகிறது. அதிலும், கடந்த காலத்தில் அவருடைய உண்மைத்தன்மையானது எதிர்காலத்தில் நமக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்ற உறுதியளிக்கிறது என்பதற்கான நினைவூட்டல்.
கல்லறையில் இல்லையா?
நாட்டுப்புற இசைஞானியான ஜானி கேஷ் மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோதும், தொடர்ந்து இசையமைப்பதில் உறுதியாக இருந்தார். அவரது இறுதி ஆல்பம், “அமெரிக்கன் 6: ஐன்ட் நோ கிரேவ்,” அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்டது. காஷின் ஒரு பாடலின் தலைப்புப் பாடலானது, அவர் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையைப் பாடுவதைக் கேட்கும்போது அவரது இறுதி எண்ணங்களைப் பற்றிய நுண்ணறிவைத் தருகிறது. அவரது புகழ்பெற்ற ஆழமான குரல், அவரது உடல்நலக் குறைவால் பலவீனமடைந்தாலும், விசுவாசத்தின் சக்திவாய்ந்த சாட்சியை அறிவிக்கிறது.
ஈஸ்டர் ஞாயிறு காலையில், ஜானியின் நம்பிக்கையானது வெறும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதில் மட்டுமில்லாமல், தன்னுடைய சரீரமும் உயிர்த்தெழும் என்பதை அவர் நம்பியிருந்தார்.
இது ஒரு முக்கியமான சத்தியம், ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பவுலின் நாட்களில் கூட, மக்கள் மரணத்திற்கு பின்னான உயிர்தெழுதல் என்னும் நம்பிக்கையை மறுதலித்தனர். பவுல் அவர்களின் வாதத்தை கடுமையாக விமர்சித்தார், “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:13-14).
இயேசுவின் சரீரத்தை கல்லறையால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதுபோல், அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிற அனைவரும் ஒரு நாள் “உயிர்பிக்கப்படுவார்கள்" (வச. 22). மேலும் உயிர்த்தெழுந்த சரீரத்தோடு ஒரு புதிய பூமியில் அவருடன் நித்தியத்தை அனுபவித்து மகிழ்வோம். அதுவே நம்முடைய துதிகளுக்கான காரணம்!
பரலோகம் பாடுகிறது
அந்த உயர்நிலைப் பள்ளி பாடகர்கள் அர்ஜென்டினா பாடலான "எல் சியோலோ கான்டா அலெக்ரியா" பாடியபோது அவர்களின் குரல்களில் மகிழ்ச்சி பொங்கியது. அதை ரசித்தேன், ஆனால் எனக்கு ஸ்பானிஷ் தெரியாததால் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாடகர் குழு "அல்லேலூயா!" என்று மகிழ்ச்சியுடன் பிரகடனப்படுத்த தொடங்கியதும், எனக்கு பரீட்சயமான அந்த வார்த்தையை விரைவிலேயே என் செவியில் விழுந்தது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மொழிகளில் ஒரே மாதிரியாக ஒலிக்கும் தேவனுக்கான துதிப் பிரகடனமான “அல்லேலூயா” என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். பாடலின் பின்னணியை அறிய ஆவலுடன், நிகழ்ச்சிக்குப்பின் இணையத்திற்குச் சென்றேன், "பரலோகம் சந்தோஷத்தால் பாடுகிறது" என்று மொழிபெயர்க்கப்பட்டதைக் கண்டுபிடித்தேன்.
வெளிப்படுத்துதல் 19 இல் உள்ள ஒரு கொண்டாட்டம் நிறைந்த பத்தியில், அந்தப் பாடலில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைநிலையின் ஒரு துளி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; பரலோகம் முழுவதும் மகிழ்ச்சி! புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்தில் அப்போஸ்தலன் யோவானின் எதிர்காலத்தைப் பற்றிய தரிசனத்தில், தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் மகத்தான ஜனத்திரள் மற்றும் தேவதூதர்கள் பரலோகத்தில் கூடியிருந்ததைக் கண்டார். தீமையையும் அநீதியையும் வென்ற தேவனின் வல்லமையையும், முழு பூமியின் மீதும் அவருடைய ஆளுகையையும், அவருடன் என்றென்றும் வாழும் நித்திய வாழ்க்கையையும் அந்த பாடல் குழுவின் குரல்கள் கொண்டாடுகிறது என்று யோவான் எழுதினார். மீண்டும் மீண்டும், பரலோகவாசிகள் அனைவரும் “அல்லேலூயா!” அல்லது “தேவனைத் துதியுங்கள்!” என்று அறிவிக்கிறார்கள் (வ. 1, 3, 4, 6).
ஒரு நாள் "சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து" (5:9) வரும் மக்கள் தேவனின் மகிமையை அறிவிப்பார்கள். மேலும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு மொழியிலும் நம் குரல்கள் அனைத்தும் ஒன்றாக “அல்லேலூயா!" என்று முழங்கும்.
பரலோக மிகுதி
எட்டு வாழைப்பழங்கள் இருக்கும் என்று நினைத்தேன். அதற்குப் பதிலாக, எனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மளிகைப் பைகளைத் திறந்தபோது, இருபது வாழைப்பழங்களைக் கண்டுபிடித்தேன்! நான் இங்கிலாந்துக்குச் சென்றதன் அர்த்தம், மளிகைப் பொருட்களை பவுண்டுகளில் ஆர்டர் செய்வதிலிருந்து கிலோகிராமில் அவற்றைக் கோருவதற்கும் மாறினேன் என்பதை நான் விரைவாக உணர்ந்தேன். மூன்று பவுண்டுகளுக்குப் பதிலாக, மூன்று கிலோகிராம் (கிட்டத்தட்ட ஏழு பவுண்டுகள்!) வாழைப்பழங்களை ஆர்டர் செய்திருந்தேன்.
தாராளமாய் பழங்கள் இருந்ததினால் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்பொருட்டு நான் வாழைப்பழ ரொட்டியை அதிகமாய் செய்தேன். அதற்காக நான் பழத்தை பிசைந்தபோது, எனது வாழ்க்கையின் மற்ற பகுதிகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அங்கு நான் எதிர்பாராத மிகுதியை அனுபவித்தேன். மேலும் ஒவ்வொரு பாதையிலும் தேவனை நான் சாட்சியிட்டேன்.
பவுல் தனது வாழ்க்கையில் தேவனுடைய மிகுதியைப் பற்றி பிரதிபலிக்கும் இதேபோன்ற அனுபவத்தை பெற்றதாக தோன்றுகிறது. தீமோத்தேயுவுக்கு எழுதிய தனது முதல் கடிதத்தில், பவுல் இயேசுவுக்கு முன்பாக தனது வாழ்க்கையை விவரிக்கிறார். தான் “தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன்” என்றும் தன்னை “பிரதான பாவி” என்றும் விவரிக்கிறார் (1 தீமோத்தேயு 1:13,16). பவுலின் உடைந்த நிலையில், தேவன் கிருபையையும், விசுவாசத்தையும், அன்பையும் தாராளமாக ஊற்றினார் (வச. 14). அவருடைய வாழ்வில் உள்ள அனைத்து மிகுதிகளையும் விவரித்த பிறகு, பவுல் அப்போஸ்தலரால் தேவனுக்கு துதி செலுத்தாமல் இருக்க முடியவில்லை. தேவனுக்கே “கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக” என்று அறிவிக்கிறார் (வச. 17).
பவுலைப் போலவே, பாவத்திலிருந்து மீட்பதற்கான இயேசுவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டபோது, நாம் அனைவரும் ஏராளமான கிருபையைப் பெற்றோம் (வச. 15). விளைந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பற்றி சிந்திக்க நாம் இடைநிறுத்தும்போது, அபரிவிதமாய் நம்மை ஆசீர்வதிக்கும் நமது தேவனுக்கு நன்றியுள்ள துதியில் பவுலுடன் இணைவதைக் காண்போம்.
கிறிஸ்துவின் தயவை தொடரச்செய்தல்
தயவா அல்லது பழிவாங்கலா? லிட்டில் லீக் பிராந்திய சாம்பியன்ஷிப் பேஸ்பால் விளையாட்டின்போது ஏசாயா தன்னுடைய தலையில் பலத்த காயம் அடைந்தான். அவர் தன் தலையை பிடித்துக்கொண்டு தரையில் விழுந்தான். அதிர்ஷ்டவசமாக, அவரது ஹெல்மெட் அவனை கடுமையான காயத்திலிருந்து பாதுகாத்தது. ஆட்டம் மீண்டும் தொடங்கியதும், ஏசாயா தனது தற்செயலான பிழையால் பந்து எறிபவர் பாதிக்கப்பட்டதை உணர்ந்தான். அந்த நேரத்தில், ஏசாயா மிகவும் அசாதாரணமான ஒன்றைச் செய்தான். அந்த வீடியோ மிகவும் பிரபலமானது. அவன் பந்து எறியும் நபரிடம் சென்று, அவரை ஆறுதல்படுத்தும் வகையில் கட்டிப்பிடித்து, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
பழைய ஏற்பாட்டில், ஏசா தனது இரட்டை சகோதரன் யாக்கோபை பழிவாங்கும் நீண்டகால திட்டங்களை கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாக இருந்தாலும், இதேபோன்ற ஓர் செய்கையை செய்வதை நாம் காணமுடியும். ஊரை விட்டுசென்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு யாக்கோபு வீடு திரும்பியதும், அவன் தனக்கு அநீதி இழைத்த வழிகளுக்குப் பழிவாங்குவதற்குப் பதிலாக ஏசா தயவையும் மன்னிப்பையும் தெரிந்தெடுத்தான். ஏசா யாக்கோபைக் கண்டதும், “எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்” (ஆதியாகமம் 33:4). ஏசா யாக்கோபின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவன் அவனுடன் நலமாக இருப்பதாக அவனுக்குத் தெரியப்படுத்தினான் (வச. 9-11).
நமக்கு எதிராக செய்த தவறுகளுக்காக யாராவது வருத்தம் காட்டினால், நமக்கு ஓர் தேர்வு உள்ளது: தயவு அல்லது பழிவாங்குதல். அவர்களை தயவுடன் அரவணைப்பது, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறது (ரோமர் 5:8) மற்றும் ஒப்புரவாகுதலின் பாதையாகவும் இருக்கிறது.
தேவனின் மென்மையான அன்பு
2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.
வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார்.
தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).