இசை மருந்து
அமெரிக்காவில் வடக்கு டகோட்டாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது பெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சையின் ஒரு பகுதியாக இசை சிகிச்சையைப் பெற்றாள். ஏன் என்று புரிந்து கொள்ளாமல், பலர் மனதளவில் இசையின் சக்திவாய்ந்த விளைவை அனுபவித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இசையின் ஒரு மருத்துவ நன்மையை ஆவணப்படுத்தியுள்ளனர். பெல்லா போன்ற புற்றுநோய் நோயாளிகளுக்கும், நடுக்குவாத நோய், மறதி நோய் மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இசை இப்போது பரிந்துரைக்கப்படுகிறது.
சவுல் மன்னன் அவதியுற்றபோது ஒரு இசை மருந்தை அணுகினான். அவனுடைய உதவியாளர்கள் அவனுடைய அமைதியின்மையைக் கண்டு, அவனுக்காகக் கின்னரம் வாசிக்கிற ஒருவரைக் கண்டுபிடித்து, அவனுக்கு “சவுக்கியமுண்டாகும்" (1 சாமுவேல் 16:16) என்ற நம்பிக்கையில் பரிந்துரைத்தனர். அவர்கள் ஈசாயின் மகன் தாவீதை வரவழைத்தனர். சவுல், அவனது இசையால் மகிழ்ந்து, தனக்கு “முன்பாக நிற்கட்டும்" என்று கேட்டான் (வச. 22). தாவீது, சவுலின் அமைதியற்ற தருணங்களில் இசை இசைத்து, அவனுடைய வேதனையிலிருந்து அவனுக்கு நிவாரணம் அளித்தான்.
நம்மில் இசை ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து தேவன் அறிந்திருப்பதைநாம் விஞ்ஞான ரீதியாக கண்டுகொள்ள ஆரம்பித்து மட்டுமேயுள்ளோம். நமது உடல்களுக்கும், இசைக்கும் சிருஷ்டிகரும் காரணருமான தேவன் நமக்கு அளித்த, சுலபமாக கிடைக்கக்கூடிய ஆரோக்கியத்திற்கான சிறிய மருந்து சீட்டு இசையே. நாம் எந்த காலகட்டத்தில் வாழ்ந்தாலும், நமக்கு எத்தகைய மருத்துவ வசதிகள் இருந்தாலும், நமக்கு இது ஏற்றதாகும். இசையைக் கேட்க வழி இல்லாவிட்டாலும், நம்முடைய சந்தோஷங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் நாம் தேவனைப் பாடலாம், நம்முடைய சொந்த இசையை உருவாக்கலாம் (சங்கீதம் 59:16; அப்போஸ்தலர் 16:25).
உன் இதயத்தை காத்துக்கொள்
ஹங்கேரியைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆபிரகாம் வால்ட், 1938 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்த பிறகு இரண்டாம் உலகப் போரின் முயற்சிகளுக்குத் தமது திறன்களை வழங்கினார். இராணுவம் தனது விமானத்தை எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்தது, எனவே வால்ட் மற்றும் புள்ளியியல் ஆராய்ச்சி குழுவில் உள்ள அவரது சகாக்களிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து இராணுவ விமானங்களை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாப்பது என்பதைக் கண்டுபிடிக்க, திரும்பி வரும் விமானங்களை ஆய்வு செய்து அவை எங்கு அதிகம் சேதமடைந்துள்ளன என்பதைப் பார்க்கத் தொடங்கினர். அவ்வாறு திரும்பிய விமானத்தில் ஒரு பகுதியில் மட்டும் தாக்கப்பட்டும் இன்னும் இயங்கக்கூடியதாக இருந்ததைக் கண்டுபிடிக்கும் நுண்ணறிவை வால்ட் பெற்றிருந்தார். விபத்துக்குள்ளான விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளை அவர் கண்டறிந்தார். ஆனால் என்ஜின் பகுதியில் தாக்கப்பட்ட விமானங்கள் செயலிழந்துவிட்டன, அவற்றை ஆய்வு செய்ய முடியவில்லை.
நம்முடைய மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியான நமது இதயத்தைப் பாதுகாப்பது பற்றி சாலொமோன் கற்றுக்கொடுக்கிறார். அவர் தமது மகனுக்கு "[அவரது] இதயத்தைக் காத்துக்கொள்" என்று அறிவுறுத்துகிறார், ஏனென்றால் அதிலிருந்து மற்ற அனைத்தும் பாய்கின்றன. (நீதிமொழிகள் 4:23) தேவனுடைய அறிவுரைகள் வாழ்க்கை பாதையில் நம்மை நடத்துகின்றன, தவறான முடிவுகளிலிருந்து நம்மைத் திசைதிருப்புகின்றன, மேலும் நம் கவனத்தை எங்குச் செலுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கின்றன.
அவருடைய அறிவுரைகளுக்குச் செவிசாய்ப்பதன் மூலம் நாம் நம் இதயத்திற்குக் கவசம் அணிவித்தால், நாம் நம் "காலைத் தீமைக்கு விலக்கி" மேலும் தேவனுடனான நமது பயணத்தில் உறுதியாக இருப்போம் (வச. 27). நாம் ஒவ்வொரு நாளும் எதிரியின் எல்லைக்குள் நுழைகிறோம், ஆனால் தேவனின் ஞானம் நம் இதயங்களைக் காத்துக்கொண்டால், தேவனின் மகிமைக்காகச் சிறப்பாக வாழ்வதற்கான நமது பணியில் கவனம் செலுத்த முடியும்.
கூடு கட்டுமிடம்
சாண்ட் மார்டின்ஸ் என்று சொல்லப்படக்கூடிய ஒருவகையான பறவைகள் ஆற்றங்கரை மணலில் தன்னுடைய கூட்டை அமைத்துக்கொள்ளக் கூடியவைகள். தென்கிழக்கு இங்கிலாந்தின் நில மேம்பாடு வாரியத்தினரால் அவைகள் தங்கும் மணல் கூடுகளின் விகிதம் கணிசமாய் குறைந்தது. குளிர்காலத்தில் இடம்பெயரும் இப்பறவைகள் திரும்பி வரும்போது, அவைகள் தங்கள் கூடுகளை அமைத்துக்கொள்வதற்கு போதுமான இடங்கள் இல்லாமல் திணறின. அவைகளை பாதுகாக்க எண்ணிய அதின் பாதுகாவலர்கள், அவைகள் தங்குவதற்கென்று பல செயற்கையான மணல் வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். செயற்கையான மணலைக் கொண்டு மணல் சிற்பம் வடிக்கும் நிறுவனத்தின் துணையோடு பல ஆண்டுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாய் வசிக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.
இந்த இரக்கமுள்ள செய்கை, இயேசு தன் சீஷர்களை ஆறுதல்படுத்த பயன்படுத்திய வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது. அவர் இந்த உலகத்தை விட்டு பரமேறியபோது, சீஷர்கள் அவரோடு வரமுடியாததால், நான் போய் பரலோகத்தில் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துவேன் என்று வாக்களிக்கிறார் (14:2). இயேசு அவர்களை விட்டு சீக்கிரம் கடந்துபோய்விடுவார், அவர்களை அவரை பின்பற்றி செல்ல முடியாது என்னும் நிஜம் அவர்களை வருத்தப்படுத்தினாலும், அவருடைய இந்த வருகையானது அவர்களையும் நம்மையும் பரலோகத்திற்கு வரவேற்கும் தெய்வீகமான முயற்சியே.
இயேசுவின் சிலுவை தியாகம் இல்லாதிருக்குமானால், பிதாவின் வீட்டில் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் “அநேக வாசஸ்தலங்களுக்கு” (வச. 2) நமக்கு வரவேற்பு கிடைக்காமலிருந்திருக்கும். நமக்கு முன்னே அவைகளை ஆயத்தப்படுத்துவதற்காய் சென்ற இயேசு, மீண்டும் திரும்பி வந்து அவருடைய தியாகமான அன்பின் மீது விசுவாசம் வைப்பவர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் செல்வார். அவரோடு மகிழ்ச்சியாய் நித்தியத்தில் நாம் இளைப்பாறுவோம்.
இதயங்கள் ஒன்றாய் துடித்தல்
ஆதிகாலம் தொடங்கியே, கதைசொல்லும் பழக்கம் மனிதர்களிடம் இருக்கிறது. எழுத்துக்கள் புழக்கத்தில் இல்லாத காலம் தொட்டே அறிவை புகட்ட, கதைகள் வழிவகுத்தது. "'ஒருகாலத்தில்" என்று ஆரம்பிக்கும் கதையின் வரிகளைப் படிக்கும்போதும் அல்லது கேட்கும்போதும் நமக்கு உண்டாகும் மகிழ்ச்சியையும், ஈடுபாட்டையும் அனைவரும் அறிவோம். கதையின் வலிமையானது, மகிழ்ச்சி என்ற எல்லையையும் கடந்து நீள்கிறது. நாம் ஒன்றாய் கதைகேட்கும்போது, நமது இதயங்கள் ஒன்றுபடுவதை உணரலாம். ஒரு நாளைக்கே அடிக்கடி மாறும் சராசரி மனிதனின் இதயத்துடிப்பு, எப்போதாகிலும் தான் மற்றொருவருடன் ஒரேமாதிரி ஒன்றாய் துடிக்கும். ஆனால் நாம் ஒரேசமயம் ஒன்றாய் கதைகேட்கும்போது, நமது இதயத்துடிப்புகளும் கூட ஒன்றுபடுவதை சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனர்.
தேவனும் தனது கதையை, "ஆதியிலே" (ஆதியாகமம் 1:1) என்று ஆரம்பிக்கிறார். ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் சுவாசத்தைப் பெற்றுக்கொண்ட நொடியிலிருந்து (வ. 27), நமது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி அவரது பிள்ளைகளென்ற முறையில் நமதனைவரின் வாழ்வையும் வடிவமைக்க, தேவன் இந்த கதையை விவரிக்கத் துவங்குகிறார். இதுவரை எழுதப்பட்டவைகளிலே மிகவும் உன்னதமானதும் சற்றும் கற்பனையில்லாததுமான படைப்பாகிய வேதத்தின்மூலம், தேவன் தமக்குச் சொந்த ஜனங்களாக இயேசுவின் விசுவாசிகளாகிய நம்மை தமது நோக்கங்களுக்காகப் பிரித்தெடுத்து நமது இதயங்களை ஒன்றிணைத்துள்ளார் (1 பேதுரு 2:9).
அதின் விளைவாக நமது படைப்பாளியின் ஆக்கப்பூர்வமான கிரியைகளில் மகிழ்ந்து நமது இதயங்கள் ஒரேசீராகத் துடிப்பதாக. மேலும், "ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்து (சொல்லி)" (சங்கீதம் 96:3), அவர்களையும் அதிலே பங்கடைய செய்வோமாக.
பாட்டி திமிங்கலம்
ஒரு ஒர்க்கா திமிங்கலத்தை, ஆய்வாளர்கள் "பாட்டி" என்று பெயர்சூட்டியுள்ளனர். ஏனெனில் அது தனது "பேர திமிங்கலத்தின்" வாழ்வில் தனது முக்கியமான பங்கை நன்கறிந்திருந்தது. அந்த இளம் திமிங்கலத்தின் தாய் சமீபத்தில் இறந்துபோனது. அனாதையான திமிங்கலம் ஆதரவும் பாதுகாப்புமின்றி, உயிர்வாழும் அளவு முதிர்ச்சியடையவில்லை. சுமார் எண்பது வயதான இந்த "பாட்டி" திமிங்கலம் தான் இதற்கு ஆதரவாக வந்து, இது உயிர்வாழ்வதற்குத் தேவையானவற்றைக் கற்றுக்கொடுத்தது. இந்த பாட்டி திமிங்கிலம், மீன்கள் அனைத்தையும் தானே உண்ணாமல், இந்த குட்டி திமிங்கலத்திற்கும் சேகரித்துத் தந்தது. இதனால் இந்த இளம் திமிங்கலத்திற்கு உணவு கிடைத்ததுமின்றி, என்ன உணவு சாப்பிடவேண்டும், அதை எங்கே கண்டுபிடிக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டது.
நமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கும் கற்றுத்தருகிற பாக்கியம் நமக்கும் உண்டு. நமக்குப்பின் வாழப்போகிறவர்களோடு, தேவனின் குணாதிசயங்களையும் அவருடைய மகத்துவமான செயல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். முதிர்ந்துகொண்டிருந்த சங்கீதக்காரன் தேவனிடம், "வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் (அறிவிக்க)" (சங்கீதம் 71:18) அனுமதி கேட்கிறான். அவருடைய நீதியான கிரியைகளையும், நாம் செழித்தோங்குவதற்கான அவருடைய இரட்சிப்பின் செயல்களையும் (வ.15) என்று, தான் தேவனைக் குறித்து அறிந்துள்ளதைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள வாஞ்சிக்கிறான்.
நமக்கு முதிர்வயதின் நரைமுடி இல்லாமலிருக்கலாம் (வ.18), ஆயினும் தேவனுடைய அன்பையும் நம்பகத்தன்மையையும் நாம் அனுபவித்த விதத்தை பகிர்வது அவரோடு பயணிக்கும் யாருக்காவது உபயோகமாயிருக்கும். எதிர்ப்புகளின் மத்தியிலும் கிறிஸ்துவோடு முன்சென்று வாழ்வதற்கு அந்த மனிதருக்குத் தேவையான ஞானம் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் காரியத்தால் கிடைக்கக்கூடும் (வ.20).
இரண்டுமே உண்மை தான்
ஃபெங் லுலு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது நிஜமான குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டாள். சீனாவில், அவள் குழந்தையாய் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, அவள் கடத்தப்பட்டாள். ஒரு பெண்கள் குழுவினரால் அவள் மீட்கப்பட்டு அவளுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவள் கடத்தப்பட்டபோது சிறு பிள்ளையாய் இருந்தபடியால், ஃபெங் லுலுவுக்கு அந்த சம்பவம் நினைவில் இல்லை. அவளுடைய பெற்றோரால் அவளை பராமரிக்க முடியாததால் அவளை விற்றுவிட்டதாக அவள் நம்பினாள். ஆனால் உண்மை என்னவென்று தெரிந்தபின்பு, அவளுடைய பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுடன் மீண்டும் சேர்ந்தபோது, அவரும் பலதரப்பட்ட உணர்வுகளுக்குள் கடந்துபோயிருக்கலாம். அவன் ஒரு இளைஞனாக எகிப்தில் அடிமையாக அவனது சொந்த சகோதரர்களால் விற்கப்பட்டான். தொடர்ந்து பல போராட்டங்களை யோசேப்பு சந்தித்தபோதிலும், தேவன் அவனை அதிகாரத்திற்கு உயர்த்தினார். ஒரு கட்டத்தில், அவனுடைய சகோதரர்கள் தேசத்தில் பஞ்சத்தின் காரணமாக, உணவு வாங்க எகிப்துக்கு வந்தபோது, அவன் யார் என்று அறியாமலேயே அவனிடத்தில் உணவுக்காய் வேண்டி நின்றனர்.
“பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காக” தேவன் யோசேப்பைப் பயன்படுத்தினார் என்று சொல்லுவதின் மூலம் தேவன் அவர்களுடைய தப்பிதங்களை மாற்றினார் (ஆதியாகமம் 45:7). ஆயினும்கூட, யோசேப்பு அவர்கள் தமக்கு செய்த தப்பிதங்களை நினைவுபடுத்திக் காண்பிக்கவில்லை. விற்றுப்போட்டீர்கள் என்று மட்டுமே சொல்லுகிறான் (வச. 5).
நாம் சில வேளைகளில் நமக்கு நேரிடும் கடினமான சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான நல்ல காரியங்களை மட்டுமே பொருட்படுத்த முனைகிறோம். அது தோற்றுவிக்கும் உணர்ச்சிபூர்வான விளைவை பொருட்படுத்துவதில்லை. தேவன் அதை மீட்டுக்கொண்டு வந்ததால், தவறை நன்மை என்று புரிந்துகொள்ள வேண்டாம். தப்பிதங்கள் நமக்கு தோற்றுவித்த வேதனையை உணர்ந்துகொண்டே அதிலிருந்து தேவன் நன்மையைக் கொண்டுவர எதிர்நோக்குவோம். இரண்டுமே உண்மைதான்.
தேவ பெலத்தால் சுயகட்டுப்பாடு
1972ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆர்வத்தின் எல்லையைப் பரிசோதிக்கும் “மார்ஷ்மெல்லோ சோதனை” என்றழைக்கப்படும் சோதனை தோற்றுவிக்கப்பட்டது. அதில் பங்கேற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் மார்ஷ்மெல்லோ இனிப்பு ஒன்று வழங்கப்பட்டது. குழந்தைகளின் பசி நேரத்தில், அந்த இனிப்பை சாப்பிடாமல் பத்து நிமிடம் வரை அப்படியே வைத்திருந்தால் இன்னொரு மார்ஷ்மெல்லோ உங்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தங்கள் பசியைக் கட்டுப்படுத்தி, மேலான பரிசை வாங்குவதற்காகக் காத்திருந்தனர். மற்ற குழந்தைகள் முப்பது விநாடிக்குள் சாப்பிடத் துவங்கிவிட்டனர்.
நமக்கு விருப்பமான ஒன்று நமக்குக் கிடைக்கும்போது நம்முடைய சுயகட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது. காத்திருத்தல் அதிக நன்மையைக் கொடுக்கும் என்று தெரிந்தும் நம் கட்டுப்பாட்டை இழக்கிறோம். ஆகையால் நம்முடைய விசுவாசத்தோடு சுயகட்டுப்பாட்டை சேர்க்கும்பொருட்டு பேதுரு நம்மை ஊக்குவிக்கிறார் (2 பேதுரு 1:5-6). கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டவர்களாய் நற்குணம், அறிவு, பொறுமை, சுயக்கட்டுப்பாடு, தேவபக்தி, அன்பு ஆகியவற்றில் வளரும்படிக்கு சபையையும் நம்மையும் பேதுரு உற்சாகப்படுத்துகிறார் (வச.5-8).
இந்த குணாதிசயங்கள் தேவனுடைய தயவையோ, பரலோகத்தில் நமக்கென்று ஓர் இடத்தையோ உறுதிசெய்யவில்லையெனினும்; அன்றாடம் நாம் உறவாடும் மக்களிடம் நம்முடைய சுயகட்டுப்பாட்டை ஞானமாய் வெளிப்படுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே “ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினது”(வச.3).
ஞானமாய் தேர்ந்தெடுங்கள்
சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணிக்கும் குழுவின் தலைவரும் விண்வெளி வீரருமான, கிறிஸ் பெர்குசன், ஒரு கடினமான முடிவெடுத்தார். அந்த முடிவு அவர்களுடைய விண்கலத்தைக் குறித்தோ அல்லது சகவிண்வெளி வீரர்களின் பாதுகாப்புக் குறித்தோ அல்ல. மாறாக, அவர் மிகமுக்கியமானதாய்க் கருதிய அவர் குடும்பத்தைப் பற்றியதே. தன் மகளின் திருமணத்திற்காக பயணத்தை ரத்துசெய்து, பூமியிலேயே இருக்க அவர் முடிவெடுத்தார்.
கடினமான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலைகளை நாம் அனைவருமே எதிர்கொள்வோம். நமது வாழ்வில் எது மிக முக்கியமென்று நாமே முடிவுசெய்யும் காரியங்கள் அவை. ஏனெனில், ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். தன்னைச் சுற்றி இருந்த ஜனக்கூட்டத்திற்கும், தன்னை விசுவாசிப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான காரியத்தை இயேசு கூறினார். ஒருவன் அவரைப் பின்பற்ற விரும்பினால் "தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்." (மாற்கு 8:34) என்றார். கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் செய்யப்படவேண்டிய தியாகங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளாமல், மிக முக்கியமென்று தெரிவு செய்வதற்கு விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டுமென்று அவர்களுக்கு நினைப்பூட்டினார்.
நமக்கு விலையேறப்பெற்றதாய்த் தோன்றும் அநேக காரியங்களைப் பின்தொடர அடிக்கடி நாம் தூண்டப்படுகிறோம். அவை நாம் இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து நம்மை திசைதிருப்புபவையே. எனவே நமது அனுதின தெரிவுகளில் தேவனின் நடத்துதலைக் கேட்டு, ஞானமாய் தெரிவு செய்து அவரை கனப்படுத்துவோம்.
நாம் ஒன்று கூடுகையில்
2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி இந்தியாவிலேயே மகிழ்ச்சியான நகரமாகச் சண்டிகர் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின்படி, சண்டிகர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தை செலவிட்டனர். மேலும் தங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் கொண்டுள்ள உறவை அதிகம் மதித்தனர். நீங்கள் சண்டிகர் சென்றால், வாரவிடுமுறைகளில் மதிய உணவோ அல்லது இரவு உணவோ ஒன்றாக உண்ணும் அநேக குடும்பங்களை உணவகங்களில் காணலாம். தங்களுக்குப் பிரியமானவர்களுடன் ஒன்றாக அமரும் நேரங்கள் இவர்கள் உள்ளங்களைப் பூரிக்கச் செய்தது.
எபிரெய ஆக்கியோன், ஒரே சமூகமாக ஒன்றுகூடுவதை ஊக்குவிக்கிறார். கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் தங்கள் விசுவாசத்தில் பொறுமையோடிருக்க வேண்டிய கடினமான நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார். நமது இரட்சகர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்ற நிச்சயத்தை இயேசு நமக்களித்திருந்தாலும் வெட்கம், சந்தேகம் மற்றும் எதிர்ப்புகளோடு நமக்குப் போராட்டங்களுண்டு. நாம் ஒன்று கூடி வருவதால் ஒருவரையொருவர் ஊக்குவிக்கும் பாக்கியம் நமக்குண்டு. விசுவாசிகளோடு பகிர்ந்துகொள்வதால், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து" (எபிரெயர் 10:24) இருக்க முடியும். இது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்.
நண்பர்களுடன் ஒன்றுகூடுவது என்பது எப்போதும் நமக்கு சந்தோஷம் அளிக்காது. எனினும், இது வாழ்வின் விரக்திகளின் மத்தியில் நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேதம் காட்டும் ஒரு வழிமுறையாகும். நமது சபையின் சமூகமாக ஒன்றுகூடுதலுக்கும், உள்ளங்கள் பூரிக்கும் எளிய கூடுகைகளுக்கும் நமது வீடுகளைத் திறந்து கொடுப்பதற்கு இதைவிட மேலான காரணம் உண்டோ?