எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிரிஸ்டன் ஹொம்பெர்க்கட்டுரைகள்

இரண்டுமே உண்மை தான்

ஃபெங் லுலு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது நிஜமான குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டாள். சீனாவில், அவள் குழந்தையாய் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, அவள் கடத்தப்பட்டாள். ஒரு பெண்கள் குழுவினரால் அவள் மீட்கப்பட்டு அவளுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவள் கடத்தப்பட்டபோது சிறு பிள்ளையாய் இருந்தபடியால், ஃபெங் லுலுவுக்கு அந்த சம்பவம் நினைவில் இல்லை. அவளுடைய பெற்றோரால் அவளை பராமரிக்க முடியாததால் அவளை விற்றுவிட்டதாக அவள் நம்பினாள். ஆனால் உண்மை என்னவென்று தெரிந்தபின்பு, அவளுடைய பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்தது. 

யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுடன் மீண்டும் சேர்ந்தபோது, அவரும் பலதரப்பட்ட உணர்வுகளுக்குள் கடந்துபோயிருக்கலாம். அவன் ஒரு இளைஞனாக எகிப்தில் அடிமையாக அவனது சொந்த சகோதரர்களால் விற்கப்பட்டான். தொடர்ந்து பல போராட்டங்களை யோசேப்பு சந்தித்தபோதிலும், தேவன் அவனை அதிகாரத்திற்கு உயர்த்தினார். ஒரு கட்டத்தில், அவனுடைய சகோதரர்கள் தேசத்தில் பஞ்சத்தின் காரணமாக, உணவு வாங்க எகிப்துக்கு வந்தபோது, அவன் யார் என்று அறியாமலேயே அவனிடத்தில் உணவுக்காய் வேண்டி நின்றனர். 

“பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காக” தேவன் யோசேப்பைப் பயன்படுத்தினார் என்று சொல்லுவதின் மூலம் தேவன் அவர்களுடைய தப்பிதங்களை மாற்றினார் (ஆதியாகமம் 45:7). ஆயினும்கூட, யோசேப்பு அவர்கள் தமக்கு செய்த தப்பிதங்களை நினைவுபடுத்திக் காண்பிக்கவில்லை. விற்றுப்போட்டீர்கள் என்று மட்டுமே சொல்லுகிறான் (வச. 5). 

நாம் சில வேளைகளில் நமக்கு நேரிடும் கடினமான சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான நல்ல காரியங்களை மட்டுமே பொருட்படுத்த முனைகிறோம். அது தோற்றுவிக்கும் உணர்ச்சிபூர்வான விளைவை பொருட்படுத்துவதில்லை. தேவன் அதை மீட்டுக்கொண்டு வந்ததால், தவறை நன்மை என்று புரிந்துகொள்ள வேண்டாம். தப்பிதங்கள் நமக்கு தோற்றுவித்த வேதனையை உணர்ந்துகொண்டே அதிலிருந்து தேவன் நன்மையைக் கொண்டுவர எதிர்நோக்குவோம். இரண்டுமே உண்மைதான்.

தேவ பெலத்தால் சுயகட்டுப்பாடு

1972ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆர்வத்தின் எல்லையைப் பரிசோதிக்கும் “மார்ஷ்மெல்லோ சோதனை” என்றழைக்கப்படும் சோதனை தோற்றுவிக்கப்பட்டது. அதில் பங்கேற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் மார்ஷ்மெல்லோ இனிப்பு ஒன்று வழங்கப்பட்டது. குழந்தைகளின் பசி நேரத்தில், அந்த இனிப்பை சாப்பிடாமல் பத்து நிமிடம் வரை அப்படியே வைத்திருந்தால் இன்னொரு மார்ஷ்மெல்லோ உங்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தங்கள் பசியைக் கட்டுப்படுத்தி, மேலான பரிசை வாங்குவதற்காகக் காத்திருந்தனர். மற்ற குழந்தைகள் முப்பது விநாடிக்குள் சாப்பிடத் துவங்கிவிட்டனர்.
நமக்கு விருப்பமான ஒன்று நமக்குக் கிடைக்கும்போது நம்முடைய சுயகட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது. காத்திருத்தல் அதிக நன்மையைக் கொடுக்கும் என்று தெரிந்தும் நம் கட்டுப்பாட்டை இழக்கிறோம். ஆகையால் நம்முடைய விசுவாசத்தோடு சுயகட்டுப்பாட்டை சேர்க்கும்பொருட்டு பேதுரு நம்மை ஊக்குவிக்கிறார் (2 பேதுரு 1:5-6). கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டவர்களாய் நற்குணம், அறிவு, பொறுமை, சுயக்கட்டுப்பாடு, தேவபக்தி, அன்பு ஆகியவற்றில் வளரும்படிக்கு சபையையும் நம்மையும் பேதுரு உற்சாகப்படுத்துகிறார் (வச.5-8).
இந்த குணாதிசயங்கள் தேவனுடைய தயவையோ, பரலோகத்தில் நமக்கென்று ஓர் இடத்தையோ உறுதிசெய்யவில்லையெனினும்; அன்றாடம் நாம் உறவாடும் மக்களிடம் நம்முடைய சுயகட்டுப்பாட்டை ஞானமாய் வெளிப்படுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே “ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினது”(வச.3).

ஞானமாய் தேர்ந்தெடுங்கள்

சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணிக்கும் குழுவின் தலைவரும் விண்வெளி வீரருமான, கிறிஸ் பெர்குசன், ஒரு கடினமான முடிவெடுத்தார். அந்த முடிவு அவர்களுடைய விண்கலத்தைக் குறித்தோ அல்லது சகவிண்வெளி வீரர்களின் பாதுகாப்புக் குறித்தோ அல்ல. மாறாக, அவர் மிகமுக்கியமானதாய்க் கருதிய அவர் குடும்பத்தைப் பற்றியதே. தன் மகளின் திருமணத்திற்காக பயணத்தை ரத்துசெய்து, பூமியிலேயே இருக்க அவர் முடிவெடுத்தார்.

கடினமான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலைகளை நாம் அனைவருமே எதிர்கொள்வோம். நமது வாழ்வில் எது மிக முக்கியமென்று நாமே முடிவுசெய்யும் காரியங்கள் அவை.  ஏனெனில், ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். தன்னைச் சுற்றி இருந்த ஜனக்கூட்டத்திற்கும், தன்னை விசுவாசிப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான காரியத்தை இயேசு கூறினார். ஒருவன் அவரைப் பின்பற்ற விரும்பினால் "தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்." (மாற்கு 8:34) என்றார். கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் செய்யப்படவேண்டிய தியாகங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளாமல், மிக முக்கியமென்று தெரிவு செய்வதற்கு விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டுமென்று அவர்களுக்கு நினைப்பூட்டினார். 

நமக்கு விலையேறப்பெற்றதாய்த் தோன்றும் அநேக காரியங்களைப் பின்தொடர அடிக்கடி நாம் தூண்டப்படுகிறோம். அவை நாம் இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து நம்மை திசைதிருப்புபவையே. எனவே நமது அனுதின தெரிவுகளில் தேவனின் நடத்துதலைக் கேட்டு, ஞானமாய் தெரிவு செய்து அவரை கனப்படுத்துவோம்.

நாம் ஒன்று கூடுகையில்

2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி இந்தியாவிலேயே மகிழ்ச்சியான நகரமாகச் சண்டிகர் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின்படி, சண்டிகர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தை செலவிட்டனர். மேலும் தங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் கொண்டுள்ள உறவை அதிகம் மதித்தனர். நீங்கள் சண்டிகர் சென்றால், வாரவிடுமுறைகளில் மதிய உணவோ அல்லது இரவு உணவோ ஒன்றாக உண்ணும் அநேக குடும்பங்களை உணவகங்களில் காணலாம். தங்களுக்குப் பிரியமானவர்களுடன் ஒன்றாக அமரும் நேரங்கள் இவர்கள் உள்ளங்களைப் பூரிக்கச் செய்தது.

எபிரெய ஆக்கியோன், ஒரே சமூகமாக ஒன்றுகூடுவதை ஊக்குவிக்கிறார். கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் தங்கள் விசுவாசத்தில் பொறுமையோடிருக்க வேண்டிய கடினமான நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார். நமது இரட்சகர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்ற நிச்சயத்தை இயேசு நமக்களித்திருந்தாலும் வெட்கம், சந்தேகம் மற்றும் எதிர்ப்புகளோடு நமக்குப் போராட்டங்களுண்டு. நாம் ஒன்று கூடி வருவதால் ஒருவரையொருவர் ஊக்குவிக்கும் பாக்கியம் நமக்குண்டு. விசுவாசிகளோடு பகிர்ந்துகொள்வதால், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து" (எபிரெயர் 10:24) இருக்க முடியும். இது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்.

நண்பர்களுடன் ஒன்றுகூடுவது என்பது எப்போதும் நமக்கு சந்தோஷம் அளிக்காது. எனினும், இது வாழ்வின் விரக்திகளின் மத்தியில் நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேதம் காட்டும் ஒரு வழிமுறையாகும். நமது சபையின் சமூகமாக ஒன்றுகூடுதலுக்கும், உள்ளங்கள் பூரிக்கும் எளிய கூடுகைகளுக்கும் நமது வீடுகளைத் திறந்து கொடுப்பதற்கு இதைவிட மேலான காரணம் உண்டோ?

சத்தியத்தை பறைசாற்றுதல்

கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில், முதியவர்கள் பலர் தங்கள் பேரப்பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். அதிலிருந்து மீளுவதற்கு அவர்கள் புதிய வழியை கண்டுபிடித்தனர். முதியவர்களில் பலர் சமூக ஊடகங்களின் உதவியோடு தங்கள் பேரப்பிள்ளைகளோடு தங்களுடைய உறவை வலுப்படுத்தினர். காணொலி ஊடகங்கள் வாயிலாக பலர் குடும்ப ஜெபங்களையும் செய்தனர். வேதாகமத்தின் சத்தியத்தை பெற்றோரும், முதியவர்களும் அடுத்த தலைமுறையினருக்கு நேர்த்தியான வழியில் கொடுப்பதென்பது, தங்களுடைய சந்ததிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழியாகும். உபாகமம் 4இல், “உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும்,” “அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும்” (வச. 10) என மோசே ஜனங்களை எச்சரிக்கிறார். மேலும் இந்த

காரியங்களை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சொல்லுவதின் மூலம் அவர்கள் தேவனை கனப்படுத்துவார்கள், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் சத்தியத்தின்படி வாழ்வார்கள் என்றும் வலியுறுத்தினார் (வச. 10).

நம்முடைய குடும்ப உறவுகளை நம்முடைய மகிழ்ச்சிக்காய் தேவன் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில், அவ்வுறவு தேவனுடைய ஞானத்தை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவும் “நீதியைப் படிப்பிக்குதலுக்கும்” “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக(வும்)” (2 தீமோத்தேயு 3:16-17) வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி, செல் அழைப்பு, காணொலி மூலம் அல்லது நேரடியாகவோ, அடுத்த தலைமுறையினருக்கு நாம் தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் தேவனை ருசிபார்க்க நாம் உதவுகிறோம்.

கனவு அணி

நண்பர்களான மெலனி மற்றும் ட்ரெவோர், இருவரும் சேர்ந்து மைல் கணக்கான மலைப் பாதைகளில் பயணம் செய்துள்ளனர். இருப்பினும், இருவராலும் தனித்தனியாக அவ்வாறு செய்ய முடியாது. ஸ்பைனா பிஃபிடா என்னும் குறைபாடுடன் பிறந்த மெலனி சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். ட்ரெவோர், கிளாகோமா என்னும் வியாதியினால் தனது கண் பார்வையை இழந்தார். கொலராடோ வனப்பகுதியை அனுபவிப்பதற்கு தாங்கள் ஒருவருக்கு ஒருவர் சரியான துணை என்பதை இருவரும் உணர்ந்தனர். அவர்கள் பாதைகளில் நடக்கும்போது, ட்ரெவர் மெலனியை முதுகில் சுமந்து செல்கிறார்;. அவளோ, அவளின் வார்த்தைகளின் மூலம் அவனுக்கு வழிகாட்டுகிறாள். அவர்கள் தங்களை ஒரு “கனவு அணி” என்று சொல்லிக்கொள்கிறார்கள். 

கிறிஸ்துவின் சரீரமான இயேசுவை விசுவாசிப்பவர்களை, இதே போன்ற “கனவு அணி” என்று பவுல் விவரிக்கிறார். பவுல், ரோம விசுவாசிகள் தங்களின் தனிப்பட்ட தாலந்துகள் எவ்வாறு அந்த குழுவிற்கு உபயோகமாய் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வலியுறுத்திகிறார். நமது உடல் பல உறுப்புகளால் ஆனது. வெவ்வேறு செயல்பாடுகளுடன் நாம் “ஒரு ஆவிக்குரிய சரீரத்தை உருவாக்குகிறோம்." நம்முடைய வரங்கள், சபையின் சேவைக்காய் பயன்படவேண்டும் (ரோமர் 12:5). கொடுப்பது, ஊக்குவித்தல், கற்பித்தல் அல்லது வேறு எந்த ஒரு ஆவிக்குரிய வரங்களாக இருந்தாலும், அவைகளை அனைவருக்கும் சொந்தமானதாகக் கருதுமாறு பவுல் அறிவுறுத்துகிறார் (வச. 5-8).

மெலனி மற்றும் ட்ரெவோர், ஆகிய இருவரும் தங்களின் இயலாமையில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவருடன் ஒப்பிட்டு, தங்களிடம் இருப்பதைக் குறித்து அவர்கள் மேன்மைப்பாராட்டவும் இல்லை. மாறாக, அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களால் இயன்ற சேவையை ஒருவருக்கொருவர் கொடுத்து, இருவரின் ஒத்துழைப்பால் எவ்வளவு சிறப்பாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். நம்முடைய தாலந்துகளையும் மற்றவர்களுடன் இணைத்து, கிறிஸ்துவின் நாம மகிமைக்காய் பயன்படுத்துவோம். 

தேவையை சந்திக்கும் செல்வம்

பள்ளிகளின் மதிய உணவு கேண்டீன்கள், தேவையை சரியாகக் கணிக்க முடியாததால், அளவுக்கதிகமான உணவைத் தயாரிக்கின்றன. மீதமுள்ள உணவுகள் குப்பையில் கொட்டப்படுகிறது. இன்னும் வீட்டில் சாப்பிடுவதற்கு போதிய உணவு கிடைக்காமல், வாரயிறுதி நாட்களில் பட்டினி கிடக்கும் மாணவர்கள் ஏராளம். ஒரு மாவட்டத்தின் பள்ளி நிர்வாகம், அங்கிருந்த சேவை நிறுவனத்துடன் இணைந்து அதற்கான தீர்வைக் கண்டறிய தீர்மானித்தது. அவர்கள் மீந்த உணவுகளை பொட்டலமாகக் கட்டி மாணவர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கையில் கொடுத்தனுப்பினர். உணவு வீணாவது மற்றும் பசி ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு கண்டனர்.

அதிகமான உணவை நாம் வீணாகப் பார்ப்பதுபோல், அதிகமான பணத்தை மக்கள் வீண் என்று எண்ணுவதில்லை. அந்த பள்ளி நிர்வாகம் தீர்வு கண்டதற்கு பின்பாக இருக்கும் அதே கொள்கையை பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் வலியுறுத்துகிறார். மக்கதொனியாவில் உள்ள திருச்சபைகள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர்களுடைய செல்வத்தை தந்து உதவுமாறு கொரிந்து சபையை பவுல் ஊக்கப்படுத்துகிறார் (2 கொரிந்தியர் 8:14). அவருடைய நோக்கம் திருச்சபைகளுக்கிடையேயான நல்லுறவை பலப்படுத்துவதேயாகும். ஆகையால் ஒருவர் கஷ்டப்படும்போது, மற்றவர்கள் அதிக செல்வத்தை அனுபவிப்பதை அவர் விரும்பவில்லை.

கொரிந்திய திருச்சபை மக்கள் தங்களுடையதை கொடுத்துவிட்டு வறுமையில் வாடவேண்டும் என்று பவுல் எதிர்பார்க்கவில்லை. மாறாக, எதிர்காலத்தில் அவர்களுக்கும் இதே போன்ற பணத்தேவை ஏற்படலாம் என்பதை உணர்ந்து, மக்கதோனியர்களின் இக்கட்டில் அவர்களுக்கு தாராளமாய் கொடுத்து உதவும்படி ஊக்குவிக்கிறார். தேவையில் இருப்பவர்களை நாம் பார்க்கும்போது, அவர்களுக்கு ஏதாகிலும் உதவிசெய்ய முடியுமா என்று நாம் நிதானிப்போம். நாம் கொடுப்பது பெரியதோ அல்லது சிறியதோ, அது ஒருபோதும் வீணாகாது!

இயேசுவில் புதிய டி.என்.ஏ

கிறிஸ், தனது உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இரத்தத்தை பரிசோதனை செய்தார். அவருடைய சிகிச்சைக்கு தேவைப்பட்ட மஜ்ஜை நன்கொடையளித்தவரிடமிருந்து அவருக்கு கிடைத்தது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில், கிறிஸின் இரத்தத்தில் உள்ள டி.என்.ஏ அவரது நன்கொடையாளருடையது, அவருடையது அல்ல. பலவீனமான இரத்தத்தை நன்கொடையாளரின் ஆரோக்கியமான இரத்தத்துடன் மாற்றுவதே செயல்முறையின் குறிக்கோளாக இருந்ததால், இது அர்த்தமுள்ளதாகவே தென்பட்டது. ஆனாலும், கிறிஸின் கன்னங்கள், உதடுகள் மற்றும் நாக்கு அகியவை கூட நன்கொடையாளரின் டி.என்.ஏவையே காண்பித்தது. அவருடைய வெளிப்புறத்தோற்றம், எண்ணங்கள் ஆகியவைகளில் அவர் அவராகவே இருந்தாலும், ஏதோ சில வழிகளில் அவர் வேறொருவராக மாறிவிட்டார்.

கிறிஸின் அனுபவம் இரட்சிக்கப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதற்கு ஏறத்தாழ ஒத்துள்ளது. நாம் கிறிஸ்துவை நம்பும்போது, நம்முடைய ஆவி மறுரூபமடைந்து, நாம் புது சிருஷ்டியாய் மாற்றப்படுகிறோம் (2 கொரிந்தியர் 5:17). எபேசு சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தில், அந்த உள்ளான மறுரூபத்தை பிரதிபலிக்கவும், “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு... மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களை ஊக்குவிக்கிறார் (எபேசியர் 4:22,24). கிறிஸ்துவுக்காக பிரித்தெடுக்கப்பட வேண்டும்.

இயேசுவின் மறுரூபமாக்கும் வல்லமை நமக்குள் கிரியை செய்வதை பார்ப்பதற்கு, டி.என்.ஏ பரிசோதனையோ அல்லது இரத்தப் பரிசோதனையோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த மறுரூபமாக்கப்பட்ட உள்ளான மனிதன், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தோடு நாம் எவ்விதத்தில் தொடர்புகொள்ளுகிறோம் என்பதை அடிப்படையாய் வைத்து தீர்மானிக்கப்படுகிறது. நாம் “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன்” நமக்கு மன்னித்ததுபோல, நாமும் மற்றவர்களை மன்னிக்கிறோமா என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது (வச. 32).

அன்பின் ஈகை

ஆயுஷ் தன்னுடைய காலை சிற்றுண்டியை அனுதினமும் அருகில் இருக்கும் கடையில் வாங்குவது வழக்கம். அதேபோன்று ஒவ்வொரு நாளும் தேவையிலிருப்பவர்களின் காலை சிற்றுண்டிக்கான தொகையையும் செலுத்தி, அவர்களை வாழ்த்துமாறு கேஷியரிடம் சொல்லுவதும் வாடிக்கை. அந்த உதவியை பெறுபவர்களுக்கும் ஆயுஷ_க்கும் நேரடியான தொடர்பு ஏதும் இல்லை. உதவியைப் பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அவர் பார்ப்பதில்லை. இதை அவரால் செய்ய முடிந்த சிறிய உதவி என்று அவர் நம்புகிறார். இருப்பினும் தன்னுடைய உள்ளுர் பத்திரிக்கை ஆசிரியருக்கு வந்த முகவரியில்லாத ஒரு கடிதத்தை படித்தபோது, அவருடைய செய்கையின் தாக்கத்தை அவர் அறிந்துகொண்டார். தன்னுடைய வாழ்க்கையை மாய்த்துக்கொள்ள எண்ணிய ஒரு நபரின் தீர்மானத்தை அவருடைய அந்த சிறிய உதவி எப்படி மாற்றியது என்பதை அவர் கண்டறிந்தார்.

ஆயுஷ் எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் யாரோ ஒருவருக்கு காலை உணவை பரிசளிக்கிறார். அதின் பாதிப்பையும் அவர் பார்க்க நேர்ந்தது. இயேசு, “உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது” (மத்தேயு 6:3) என்று சொல்லுகிறார். ஆயுஷ் செய்தது போல, அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் உதவிசெய்யுமாறு அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
மற்றவர்களின் பாராட்டுகளை எதிர்பார்க்காமல், தேவன் மீதுள்ள அன்பினால் நாம் செய்யும் சிறியதோ அல்லது பெரிய உதவியோ, அதைப் பெறுபவர்களுக்கு நிச்சயமாய் அது உதவும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.