சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரில் வசிப்பவர்கள், நகரம் முழுவதும் சாக்லேட் சீவல் மழை பெய்ததால் ஆச்சரியமடைந்தனர். அருகிலுள்ள சாக்லேட் தொழிற்சாலையில் காற்றோட்ட அமைப்பு பழுதடைந்ததால், கோகோவை காற்றில் பரப்பியது. சாக்லேட் நன்மையால் அப்பகுதி நிறைந்தது. சாக்லேட் விரும்பிகளின் கனவு நனவாகியது.

சாக்லேட் ஒருவரின் ஊட்டச்சத்துக்கு தேவையான சக்தியை தராது, ஆனால் தேவனோ இஸ்ரவேலருக்கு தேவையான ஊட்டச்சத்தான பரலோக மழையை அளித்தார். அவர்கள் பாலைவனத்தின் வழியாகப் பயணிக்கும்போது, எகிப்தில் விட்டுச் சென்ற பலவகையான உணவைப் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அதனால் தேவன் அவர்களை நிலைநிறுத்த, “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்றார். ஒவ்வொரு நாளும் காலைப் பனி வற்றியபோது, ஓர் மெல்லிய துளி உணவு எஞ்சியிருந்தது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்கள் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். நாற்பது வருஷங்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அவர்கள், தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாகிய மன்னாவால் போஷிக்கப்பட்டனர்.

மன்னாவைப் பற்றி அதிகக் குறிப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், “அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (வ.31). மன்னா என்பது சாக்லேட்டைப்போன்று சீரான ருசிகரமான உணவாக இல்லாமல் இருந்தாலும் தனது ஜனங்கள் மீதான தேவனின் முன்னேற்பாடு அப்பட்டமாக தெரிந்தது. மன்னா என்பது தன்னை “ஜீவ அப்பம்” (யோவான் 6:48) என வெளிப்படுத்திய இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (வ. 51).