Kenneth Petersen | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கென்னத் பீட்டர்சன்கட்டுரைகள்

இயேசுவிலான அன்பின் சொத்து

ஸ்வீடனில், தோஸ்தத்னிங் எனப்படும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. இதன் பொருள் "மரண சுத்திகரிப்பு". நமக்கு வயதாகும்போது, ​​​​"பொருட்களை" குவிப்பதை நிறுத்திவிட்டு, நம் வாழ்நாள் முழுவதும் வாங்கி குவித்துள்ள தேவையற்றவைகளை அகற்றிட ஆரம்பிக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. "ஸ்வீடிஷ் மரண சுத்திகரிப்பு" என்பது, உண்மையில் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்குமான நமது அன்பின் பரிசாகும், ஏனென்றால் இது நாம் விட்டுச்செல்லும் விஷயங்களை வைத்துக்கொண்டு அவர்கள் அலைந்து திரிவதைத் தடுக்கிறது.

இயேசுவின் விசுவாசிகளாக, ஒரு குறிப்பிட்ட வயதில் நமக்கு எஞ்சியிருக்கும் நம் சொத்துக்களைப் பற்றிச் சிந்திக்கிறோம். இது பெரும்பாலும் பணம், பரம்பரை சொத்து அல்லது தானம் செய்வதின் (இதைக்குறித்து நிறையச் சொல்லலாம்) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் இயேசுவின் கடைசி நேரத்தில், அவருடைய சீடர்களுடன் அவர் உரையாடியதைப்  பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்: "நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய்" (யோவான் 13:36). இரண்டு வசனங்களில் (வ.34-35), அவர் அன்பைக் குறிக்கும்  வார்த்தைகளை நான்கு முறை பயன்படுத்துகிறார். அவருடைய சொத்து அன்பே. அவர் அவர்களிடம் கூறினார்: "நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்" (வ.34).

ஒழுங்கீனத்தை நீக்கி, மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே விட்டுச்செல்லும்படி நம் வாழ்விலும் சில "ஸ்வீடிஷ் மரண சுத்திகரிப்பு" செய்வது நல்லது. ஆனால் அது உண்மையில் பொருட்களையோ பணத்தையோ பற்றியது அல்ல. நீங்கள் விட்டுச் செல்லக்கூடிய மிக முக்கியமான சொத்து, இயேசுவின் மீதான உங்கள் அன்பே. குழந்தைகளும் நண்பர்களும் உங்களை இயேசுவை நேசிப்பவராக நினைவுகூரும்போது, ​​அதுவே சிறந்த பரிசு. "விட்டுச் செல்லுதல்" என்ற சொற்றொடருக்கு இது புதிய அர்த்தத்தை அளிக்கிறது.

கிறிஸ்துவின் காட்சிப்படுத்தப்பட்ட முரண்பாடு

காலத்திற்கும் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஐசக் வாட்ஸ், "நான் அதிசயமான சிலுவையை ஆராய்கையில்" பாடலை எழுதினார். அதன் பாடல் வரிகளை எழுதுவதில், அவர் கவிதையில் முரண்பாடென்னும் யுத்தியைப் பயன்படுத்தி கருப்பொருள்களில் ஒரு மாறுபாட்டைக் காட்டினார்: "எனது செழிப்பான ஆதாயத்தை நான் நஷ்டமாக எண்ணுகிறேன்" மற்றும் "என் பெருமையின் மீது அவமதிப்பை ஊற்றுங்கள்" என்று வரிகள் இருக்கும். நாம் சில சமயங்களில் இதை ஆக்ஸிமோரான் (முரண்தொகை) அதாவது "முரண்பட்ட இரட்டைகளை இணைக்கும் வார்த்தைகள்" என்று அழைக்கிறோம். "கசப்பான இனிப்பு" மற்றும் "இருண்ட வெளிச்சம்" போன்றவை. வாட்ஸின் பாடல் வரிகளைப் பொறுத்தவரை, இந்த யுத்தி மிகவும் ஆழமானது.

இயேசு அடிக்கடி முரண்பாட்டைப் பயன்படுத்தினார். "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:3), நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பெறுவார்கள் என்று அவர் கூறினார். நீங்களோ அல்லது நானோ, நாம் நேசித்த ஒருவரின் இழப்பிற்காகத் துக்கமடைந்து துயரப்படுகையில், ​​​​நாம் ஆறுதலடைவோம் (வ.4) என்று இயேசு கூறுகிறார். பொதுவான இவ்வாழ்க்கைக்குரிய விதிகள் தேவனுடைய ராஜ்யத்தில் எவ்வாறு பொருந்தாது என்பதைக் கிறிஸ்து காட்டினார்.

கிறிஸ்துவுக்குள் வாழ்வது, எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறுகிறது என்று இந்த முரண்பாடுகள் நமக்குக் கூறுகின்றன: அடையாளமற்றிருந்த நாம் யாரோ ஒருவராகப் போற்றப்படுகிறோம். சிலுவையிலும் இயேசு ஒரு முரண்பாட்டைக் காட்சிப்படுத்தினார்; அங்கே முள் கிரீடத்தை அணிந்திருந்தார். ஐசக் வாட்ஸ் இந்த ஏளனச் சின்னத்தை எடுத்து, முரண்பாடாக, அதற்கு மிகவுயர்ந்த அழகைக் கொடுத்தார்: "இத்தகைய அன்பும் சோகமும் சந்தித்ததா, அல்லது முட்கள் இத்தனை விலையேறப்பெற்ற கிரீடத்தை உருவாக்கினதா?".இந்த மெய்சிலிர்க்கும் வரிகள், நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றன: "இந்த அன்பு மிகவும் அற்புதமானது, மிகவும் தெய்வீகமானது; என் ஆன்மா, என் வாழ்க்கை, என் அனைத்தையும் கோருகிறது"

நம்மைக் குறித்த தேவனின் பார்வை

அது 1968, அமெரிக்கா வியட்நாமுடனான போரில் மூழ்கியது, நகரங்களில் இன வன்முறை வெடித்தது, இரண்டு பிரபலமான நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு வருடத்திற்கு முன்பு, ஏவுதளத்தில் மூன்று விண்வெளி வீரர்களின் உயிரை நெருப்பு பறித்தது, நிலவுக்குச் செல்வது ஒரு பகற்கனவாகத் தோன்றியது. ஆயினும்கூட, அப்பல்லோ 8 கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு விண்ணில் பாய முடிந்தது.

இது சந்திரனுக்கு மனிதர்களை முதன்முறையாக அனுப்பிய திட்டமாய் மாறியது. விண்கல குழுவினரான, போர்மன், ஆண்டர்ஸ், மற்றும் லவல் என்று அனைவருமே விசுவாசிகள். கிறிஸ்துமஸ் நாளுக்கு முன்னான செய்தியாக: "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" (ஆதியாகமம் 1:1) என்பதை ஒளிபரப்பினர். அந்த நேரத்தில், இது உலகில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வாக இருந்தது, மேலும் மில்லியன் கணக்கானவர்கள் பூமியைத் தேவனின் பார்வையில் இருப்பதுபோன்ற இப்போதும் உள்ள நினைவுச் சின்னமான புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஃபிராங்க் போர்மன் படித்து முடித்தார்: "தேவன் அது நல்லது என்று கண்டார்." (வ.10).

சில நேரங்களில் நம் நிலையை எண்ணி, நாம் சிக்கிக்கொண்டிருக்கும் அனைத்து கஷ்டங்களையும் உணர்ந்து, ஒரு நன்மையும் இல்லாததுபோல்  உணரலாம். ஆனால் நாம் சிருஷ்டிப்பின் நிகழ்வுக்குத் திரும்பி, நம்மைப் பற்றிய தேவனின் கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்: "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்" (வ.27). அதை மற்றொரு தெய்வீகக் கண்ணோட்டத்துடன் இணைப்போம்: "இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). இன்று, தேவன் உங்களைப் படைத்தார் என்பதையும், பாவம் இருந்தபோதிலும் நன்மையைக் காண்கிறார் என்பதையும், அவர் உங்களை எவ்வாறு உருவாக்கினாரோ அவ்வாறே உங்களை நேசிக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தடை உத்தரவு

நீதிமன்றத்தில், ஒரு நபர் தேவனுக்கு எதிரான தடை உத்தரவிற்காக மனுத்  தாக்கல் செய்தார். தேவன் தன்னிடம் குறிப்பாக இரக்கமற்றவராகவும், கடுமையான எதிர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். தலைமை நீதிபதி, இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார். அந்த நபருக்கு நீதிமன்றத்தின் உதவி அல்ல, மாறாக அவருக்கு மனநல உதவி தேவை என்று கூறினார். இது ஒரு நகைச்சுவையான உண்மைக் கதை, ஆனால் சோகம் நிறைந்தது.

நாம் என்ன விதிவிலக்கானவர்களா? நமக்கும் சில சமயங்களில், "எனக்கு போதும் தேவனே, தயவாய் நிறுத்தும்" என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? இதையே யோபு செய்தார். அவர் தேவனை வழக்கிற்குட்படுத்தினார். சொல்லொண்ணா துயரங்களைத் தனிப்பட்ட முறையில் சகித்த பிறகு, யோபு, "தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்" (யோபு 13:3) என்கிறார், தேவனோடு நீதிமன்றத்தில் வழக்காடுவதைக் கற்பனை செய்கிறார் (9:3). "உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக" (13:21) என்று அவர் ஒரு தடை உத்தரவையும் போடுகிறார். தான் குற்றமற்றவர் என்பது மட்டும் யோபின் வழக்கு வாதம் அல்ல, ஆனால்,"நீர் என்னை ஒடுக்கி.. பார்க்கிறது நமக்கு நன்றாயிருக்குமோ?" (10:3) என்று தேவன் தன்னிடம் நியாயமற்ற கடுமையோடு இருப்பதாகப் பார்த்தார்.

சில சமயங்களில் தேவன் நியாயமற்றவர் என்பதுபோல உணர்கிறோம். உண்மையில், யோபின் கதை சிக்கலானது, எளிதான பதில்கள் அதிலில்லை. இறுதியில் தேவன் யோபுக்குண்டான அனைத்தையும் மீட்டெடுக்கிறார், ஆனால் அது எப்போதும் நமக்கான அவரது திட்டம் அல்ல. யோபுவின் இறுதி ஒப்புதலில் சில தீர்ப்பை நாம் காணலாம்: "ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்" (42:3). கருப்பொருள் யாதெனில், நாம் அறியவே முடியாத காரணங்கள் தேவனிடம் உள்ளன, அதில் அற்புதமான நம்பிக்கை இருக்கிறது.

சிறை கம்பிகளின் பின்

ஒரு நட்சத்திர தடகள வீரர் மேடையில் ஏறினார், அது விளையாட்டரங்கம் அல்ல. சிறைச்சாலையில் உள்ள முந்நூறு கைதிகளிடம் ஏசாயாவின் வார்த்தைகளைப் 

பகிர்ந்துகொண்டார்.

எனினும் இந்த தருணம், ஒரு பிரபலமான விளையாட்டு வீரரைக் காட்சிப்படுத்தல் பற்றியது அல்ல, மாறாக உடைந்து புண்பட்டிருக்கும் கடலளவு ஆத்துமாக்களைப் பற்றியது. இந்த சிறப்பான தருணத்தில், தேவன் கம்பிகளுக்குப் பின்பே காட்சியளித்தார். ஒரு பார்வையாளர் கீச்சகத்தில், "தேவாலயம் ஆராதனையாலும், துதியாலும் பொங்கி வழிந்தது" என்று பதிவிட்டார். ஆண்கள் ஒன்றாக அழுது ஜெபித்தனர். இறுதியில், சுமார் இருபத்தேழு கைதிகள் கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்தனர்.

ஒருவகையில் நாம் எல்லோருமே பேராசை, சுயநலம் மற்றும் அடிமைத்தனத்தின் கம்பிகளுக்குப் பின்னால் சிக்கி, நாமே உருவாக்கிய சிறைகளில் இருக்கிறோம். ஆனால் ஆச்சரிய விதமாக, தேவன் காட்சியளிக்கிறார். அன்று காலையில்  சிறையில் முக்கிய வசனம், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா?" (ஏசாயா 43:19) என்பதே. "முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்" (வ.18) என்று இந்த பகுதி நம்மை ஊக்குவிக்கிறது, ஏனெனில் தேவன், "நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (வ.25) என்று கூறுகிறார்.

ஆயினும் தேவன் தெளிவாகக் கூறுகிறார்: "என்னையல்லாமல் ரட்சகர் இல்லை" (வ.11). கிறிஸ்துவுக்கு நம் வாழ்வைக் கொடுப்பதன் மூலமே நாம் விடுதலை பெறுகிறோம். நம்மில் சிலர் அதைச் செய்ய வேண்டும்; நம்மில் சிலர் அதைச் செய்துள்ளோம், ஆனாலும் நம் வாழ்வின் எஜமான் யார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்து மூலம் தேவன் உண்மையிலேயே "ஒரு புதிய காரியத்தை" செய்வார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அப்படியானால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

 

வெற்றி இலக்கு

பிப்ரவரி 5, 2023 அன்று, துருக்கியில் நடந்த ஒரு போட்டியில் கிறிஸ்டியன் அட்ஸ_ தனது கால்பந்து (கால்பந்து) அணிக்கான வெற்றி இலக்கை தொட்டார். ஒரு நட்சத்திர சர்வதேச வீரர், அவர் தனது சொந்த நாடான கானாவில், வெறுங்காலுடன் ஓடும் குழந்தையாக இருந்து விளையாட்டைக் கற்றுக்கொண்டார். கிறிஸ்டியன் இயேசுவின் விசுவாசியாக இருந்தார். “என் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயம் இயேசுவே” என்று அவர் கூறியிருக்கிறார். அட்ஸ_ சமூக ஊடகங்களில் வேதாகமத்தின் வசனங்களை அவ்வப்போது பதிவிட்டார். இயேசுவைக் குறித்து வெளிப்படையாகப் பேசினார். மேலும் ஆதரவற்றோருக்கான பள்ளிக்கு நிதியளிப்பதன் மூலம் அதை செயல்படுத்தினார்.

அவர் வெற்றி இலக்கை அடைந்த மறுநாளே, ஒரு காலத்தில் வேதாகம நகரமாயிருந்த அந்தியோகியா பட்டணத்தில் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்ஸ_வின் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அவர் மரித்து தனது இரட்சகருடன் இருக்கச் சென்றார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அந்தியோகியா ஆரம்பகால தேவாலயத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்தது: “முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று” (அப்போஸ்தலர் 11:26). அப்போஸ்தலன் பர்னபாஸ், “நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்.” கிறிஸ்துவிடம் மக்களைக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தார்: “அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்” (வச. 24).

கிறிஸ்டியன் அட்ஸ_வின் வாழ்க்கையை நாம் மாதிரியாக்குவதற்காக அல்ல; மாறாக, வாய்ப்பாக பார்க்கிறோம். நம் வாழ்வில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தேவன் நம்மை எப்போது தன்னுடன் அழைத்துச் செல்வார் என்பது நமக்குத் தெரியாது. கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்குக் காட்டுவதில் நாம் எப்படி பர்னபாஸாகவோ அல்லது கிறிஸ்டியன் அட்சுவாகவோ இருக்க முடியும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதுவே வெற்றியின் இலக்கு.

 

வார்த்தைகளுக்கான பொறுப்பேற்றல்

ஒரு சோகமான நிகழ்வுக்கு பின்னர் நிறுவனங்கள் அந்த குற்றத்தை ஒப்புக்கொள்வது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று. ஆனால் ஒரு பதினேழு வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு புகழ்பெற்ற பள்ளி அவனைப் பாதுகாப்பதில் “துரதிர்ஷ்டவசமாக தவறிவிட்டோம்” என்பதை ஒப்புக்கொண்டது. அந்த மாணவர் இடைவிடாமல் கொடுமைப்படுத்தப்பட்டார். பள்ளித் தலைவர்கள், அவருடைய தவறான சிகிச்சையைப் பற்றி அறிந்திருந்தாலும், அவரைப் பாதுகாக்க சிறிதும் முயற்சிக்கவில்லை. கொடுமைப்படுத்துதலை எதிர்த்துப் போராடுவதற்கும், மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்க பள்ளி நிர்வாகம் தற்;போது உறுதியளித்துள்ளது.

கொடுமைப்படுத்துதலால் ஏற்படும் பாதிப்புகள் என்பது வார்த்தைகளின் வலிமைக்கு அப்பட்டமான உதாரணம். நீதிமொழிகள் புத்தகத்தில், வார்த்தைகளின் தாக்கத்தை ஒருபோதும் இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கற்பிக்கப்படுகிறோம். ஏனென்றால், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” (நீதிமொழிகள் 18:21). நாம் சொல்லுவம் ஒரு வார்த்தை, ஒரு காரியத்தை உயர்த்தலாம் அல்லது நசுக்கலாம். கடுமையான சில வார்த்தைகள் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. 

நாம் சொல்வதைக் கொண்டு வாழ்வது எப்படி? நம்முடைய வார்த்தைகள் ஞானம் அல்லது மதியீனம் (15:2) என்று வேதம் போதிக்கிறது. ஞானத்தின் உயிரைக் கொடுக்கும் சக்தியின் ஆதாரமான தேவனிடம் நெருங்கி வருவதன் மூலம் நாம் ஞானத்தைக் காண்கிறோம் (3:13, 17-19).

வார்த்தைகள் மற்றும் செயல்களில் - வார்த்தைகளின் தாக்கத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும், மற்றவர்கள் கூறியவற்றால் காயமடைந்தவர்களைக் கவனித்துப் பாதுகாப்பதற்கும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. வார்த்தைகள் கொல்லலாம், ஆனால் இரக்கமுள்ள வார்த்தைகள் குணப்படுத்தலாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு “ஜீவ விருட்சமாய்” (15:4) மாறும்.

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் "எதேச்சையான பயம்" என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, "இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று" (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: "பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்" (வ. 20). "பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்" என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, ​​​​நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய  ஆறுதலை நமக்களிக்கிறார்.

 

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஜூலை 12, 2022 அன்று, புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆழமான விண்வெளியின் முதல் படங்களை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிகளைவிட இதன் மூலம் பிரபஞ்சத்தை வெகு தொலைவில் பார்க்க முடியும். திடீரென்று ஒரு மூச்சடைக்கக்கூடிய படம் வெளிப்படுகிறது: கரினா நெபுலாவின் ஓர் வண்ண இடைவெளி, இதுபோல் இதுவரை பார்த்ததில்லை. அப்போது நாசா விஞ்ஞானி ஒருவர், “எங்கேயோ, நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது" என்று ஓர் பிரபலமான நாத்திகர் கார்ல் சாகனின் வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சில சமயங்களில் மக்கள் தேவனைக் கண்ணால் கண்டும் உணராதிருக்கிறார்கள். ஆனால் சங்கீதக்காரன் தாவீது வானத்தைப் பார்த்து, “உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்” (சங்கீதம் 8:1) என்று அவன் பார்த்ததை சரியாய் அடையாளம் கண்டுகொண்டான். “நம்பமுடியாத ஒன்று காத்திருக்கிறது” என்று சாகன் சொன்னது சரிதான். ஆனால் தாவீது பார்த்ததை அவர் பார்க்க தவறிவிட்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (வச. 3-4). 

ஆழமான விண்வெளியின் படங்களைப் பார்க்கும்போது, நாம் வியப்படைகிறோம். தொழில்நுட்பத்தின் காரணமாக அல்ல, மாறாக, தேவனுடைய கரத்தின் கிரியையை நாம் சாட்சியிடுவதினால். ஏனென்றால் அவருடைய கரத்தில் கிரியைகளின்மீது தேவன் நமக்கு ஆளுகைக் கொடுத்திருக்கிறார் (வச. 6). உண்மையில் “நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவரிடமாய் ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இதுவே ஆச்சரியமான வெளிப்பாடாகும். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மாற்றத்தின் விளையாட்டு

1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக  "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.

ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.

கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான்.  ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.

மேலானவைகளுக்காக ஓடுதல்

என் தோழி இரா அலைபேசியில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நான் நொறுங்கிப்போனேன். உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான கீவிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு 2022 இல், ஒரு ஓட்டபந்தயத்தை முடித்த பிறகு தனது நாட்டின் கொடியை உயர்த்தி பிடித்து அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதினார், " நாம் அனைவரும் வாழ்வென்னும் மாரத்தானில் இயன்றமட்டும் சிறப்பாக ஓடுகிறோம். இந்நாட்களில் இன்னும்கூட சிறப்பாக ஓடுவோம். நமது இதயங்களில் அணையாத ஒன்றைப் பற்றிக்கொள்வோம்”. தொடர்ந்து வந்த நாட்களில், அவள் குறிப்பிட்டுச்சொன்ன ஓட்டத்தை பல வழிமுறைகளில் ஓடுவதைக் கண்டேன்.  அவள் தன் நாட்டில் துன்பப்படுபவர்களுக்காக எப்படி ஜெபிப்பது மற்றும் ஆதரவளிப்பது என்று எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இராவின் வார்த்தைகள், எபிரெயர் 12ல் விசுவாசிகள் "பொறுமையோடே ஓடக்கடவோம்" (வ.1)  என்ற அழைப்புக்கு புதிய ஆழத்தைக் கொண்டுவந்தது. அந்த அழைப்பு அதிகாரம் 11 இன் விசுவாச வீரர்களின் பட்டியலைத் தொடர்கிறது. “மேகம் போல இத்தனை திரளான சாட்சிகளான” (12:1) அவர்கள் தைரியமாக எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உயிர் போகும் ஆபத்திலும் கூட நீடியபொறுமையான விசுவாசத்தோடு (11:33-38) தங்கள் கண்களுக்குத் தூரமான, என்றும் அழியாத நித்திய காரியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர் (வ.13).

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் அவ்வாறே வாழ அழைக்கப்பட்டுள்ளனர். விரிவடையும் வளர்ச்சியும், அமைதியுமான ஷாலோமெனும் சமாதானமான தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் எதையும் இழக்கலாம். ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியும் வல்லமையும் தான் நம்மைத் தாங்குகிறது (12:2-3).

நண்பர்கள் மற்றும் எதிரிகள்

அறிஞர் கென்னத்.இ.பெய்லி, சர்வதேச கூடுகையில் ஒரு வித்தியாசமான போக்கைப் பின்பற்றிய ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவரைப் பற்றிக் கூறினார். அவர் இஸ்ரேலுடனும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தினார். இந்த ஆபத்தான சமநிலையை அவரது நாடு எவ்வாறு கையாள்கிறது என்று யாரோ அவரிடம் கேட்டபோது, ​​அவர் "எங்கள் நண்பர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் எதிரிகளை [எங்களுக்காக] தேர்ந்தெடுக்க எங்கள் நண்பர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

அது புத்திசாலித்தனமானது மற்றும் யதார்த்தமான நடைமுறை. அந்த ஆப்பிரிக்க நாடு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருந்ததை போல, பவுல் தன் வாசகர்களும் தனிப்பட்ட விதத்தில் செய்ய ஊக்குவித்தார். கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்க்கையின் குணாதிசயங்களைப் பற்றிய நீண்ட விளக்கத்தின் மத்தியில், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18” என்றார். நாம் பிறரிடம் கொண்டிருக்கும் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி, நம் எதிரிகளை நாம் நடத்தும் விதம் கூட (வவ. 20-21) தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் சார்ந்திருப்பை வெளிப்படுத்துகிறதென வலியுறுத்துகிறார்.

எல்லோருடனும் சமாதானமாக வாழ்வது எப்போதும் சாத்தியமாகாது (ஆகையால்தான், பவுல் "கூடுமானால்" என்கிறார்). ஆனால் தேவனுடைய ஞானம் நம் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதே இயேசுவின் விசுவாசிகளாகிய நமது பொறுப்பு (யாக்கோபு 3:17-18), அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு சமாதானம் செய்பவர்களாக நாம் உறவாடுகிறோம் (மத்தேயு 5:9). சமாதான பிரபுவைக் கௌரவிக்க இதைவிட வேறு என்ன வழி இருக்க முடியும்?