எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெரன் பிம்போகட்டுரைகள்

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.

 

கிறிஸ்துவை உடுத்திக்கொள்ளுதல்

முதன்முறையாக எனது புதிய கண்ணாடியை அணிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு நான் அவற்றை தூக்கி எறிய விரும்பினேன். அந்த புதிய கண்ணாடியை அணிந்தபோது என் கண்களில் வலி ஏற்பட்டது மற்றும் தலை சுற்றியது. எனக்கு பழக்கமில்லாத அந்த புதிய சட்டங்களால்(பிரேம்) எனது காதுகள் புண்பட்டன. அடுத்த நாள் நான் அதை அணியவேண்டும் என்று நினைத்தபோது கூச்சலிட்டேன். அந்த கண்ணாடியை என்னுடைய சரீரம் ஏற்றுக்கொள்வதற்காக, அதை நான் மீண்டும் மீண்டும் அணியவேண்டியிருந்தது. அதற்கு பல வாரங்கள் எடுத்தது. ஆனால் அதன் பிறகு, நான் அந்த கண்ணாடியை அணிந்திருப்பதை மறந்துவிட்டேன். 

புதிதாக ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு சில மாற்றங்கள் அவசியப்படுகிறது. ஆனால் காலப்போக்கில், அதோடு நாம் பழகிவிடுகிறோம். அதுவும் நமக்கு பொருத்தமாய் மாறிவிடுகிறது. அவற்றிலிருந்து சில புதிய அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது. ரோமர் 13இல், அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் “ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்” (வச. 12) என்றும் சரியான ஜீவியம் வாழும்படிக்கும் அறிவுறுத்துகிறார். அவர்கள் இயேசுவை நம்பியிருந்தவர்கள், ஆனால் அவர்கள் தற்போது நித்திரைகொள்வதில் மனநிறைவடைந்திருக்கிறார்கள்; அவர்கள் தூக்கத்தைவிட்டு எழுந்திருக்கவும், கண்ணியமாக நடந்துகொள்ளவும், எல்லா பாவங்களையும் விட்டுவிடவும் அவர்களை அறிவுறுத்துகிறார் (வச. 11-12). பவுல் அவர்களை இயேசுவை அணிந்துகொண்டு, அவர்களுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் அவரைப் போலவே இருக்குமாறு ஊக்கப்படுத்துகிறார் (வச. 14).

இயேசுவின் அன்பான, கனிவான, இரக்கமுள்ள, கருணை நிறைந்த, உண்மையுள்ள வழிகளை நாம் ஒரே இரவில் பிரதிபலிக்கத் தொடங்குவதில்லை. அவை சங்கடமாகவோ அல்லது கடினமாகவோ தெரிந்தாலும், ஒவ்வொரு நாளும் “ஒளியின் ஆயுதங்களை" தரிந்துகொள்ள தீர்மானிப்பது என்பது ஓர் நீண்ட செயல்முறையாகும். காலப்போக்கில், அவர் நம்மை சிறப்பாக மாற்றுகிறார்.

 

அன்பினால் ஊக்கப்படல்

கல்லூரி நாட்களில் ஜிம்மும் லனிடாவும் காதலர்கள். அவர்களின் திருமண வாழ்க்கை பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் லனிடா வித்தியாசமாக நடந்துகொண்டாள், வழிப்பாதைகளையும் பணிநியமனங்களையும் மறந்தாள். அவளுடைய 47ம் வயதில், ஆரம்பக்கால அல்சைமர் நோயால் அவள் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவளது முதன்மை பராமரிப்பாளராகக் கடந்த 10 ஆண்டுகள் இருந்த ஜிம், " நான் அவளை நேசிக்கிறேன் என்று சொன்னதைக் காட்டிலும், அல்சைமர் என் மனைவியைக் கற்பனை செய்ய முடியாத வழிகளில் அன்பு கூறவும் அவளுக்குச் சேவை செய்யவும் எனக்கு வாய்ப்பளித்தது" என்றார்.

பரிசுத்த ஆவியானவரின் வரங்களை விளக்குகையில், பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 13ல் அன்பின் நற்பண்புகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடமைக்காகச் செய்யும் சேவைகளையும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் அன்பின் செயல்களையும் வேறுபடுத்துகிறார். பேச்சாற்றல் நல்லது, ஆனால் அன்பில்லாவிடில் சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும்" (வ.1) இருக்கும் என்று பவுல் எழுதினார். "என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை." (வ. 3). "அன்பே பெரியது" (வ. 13) என இறுதியில் பவுல் கூறியுள்ளார்..

தன் மனைவியைக் கவனித்துக் கொண்டதினால்  அன்பு மற்றும் சேவையைப் பற்றிய ஜிம்மின் புரிதல் ஆழமாயிற்று. ஒவ்வொரு நாளும் அவளுக்கு உதவும்  பெலனை, ஆழமான மற்றும் நிலையான அன்பு மட்டுமே அவருக்கு வழங்க முடியும். இறுதியில், தேவன் நம் மீது செலுத்தும் அன்பிலே இந்த முன்மாதிரியான தியாக அன்பை முழுமையாகக் காணலாம்.இந்த அன்பே பிதாவானவர் இயேசுவை நம் பாவங்களுக்காக மரிக்க அனுப்பக் காரணமாயிற்று (யோவான் 3:16). அன்பால் உந்தப்பட்ட இந்த தியாகச் செயல் உலகை நிரந்தரமாக மாற்றிவிட்டது..

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “சிறந்த மனிதன் உருவாக்கிய நதி" திட்டம் தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார். 

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “சிறந்த மனிதன் உருவாக்கிய நதி" திட்டம் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார்.

நீதியான பட்டணம்

2000ஆம் ஆண்டின் புத்தாண்டு முன்தினத்தில், டெட்ராய்டில் உள்ள அதிகாரிகள் நூறு ஆண்டுகள் பழமையான டைம் கேப்சூலை கவனமாக திறந்தனர். செப்புப் பெட்டியின் உள்ளே அமைந்திருந்த சில நகரத் தலைவர்களின் நம்பிக்கையூட்டும் கணிப்புகள் செழிப்பு பற்றிய தரிசனங்களை வெளிப்படுத்தின. இருப்பினும், மேயரின் செய்தி மாறுபட்ட அணுகுமுறையை வழங்கியது. அவர்;, “மற்ற எல்லாவற்றுக்கும் மேலான ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்த நாம் அனுமதிக்கப்படுவோம் . . . நீங்கள் ஒரு தேசமாகவும், மக்களாகவும், நகரமாகவும், நீதியில் வளர்ந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரலாம். ஏனென்றால் இதுவே ஒரு தேசத்தை உயர்த்துகிறது” என்று அறிவித்தார்.

வெற்றி, மகிழ்ச்சி அல்லது அமைதியை விட, எதிர்கால குடிமக்கள் உண்மையிலேயே நேர்மையாகவும் நீதியாகவும் வளரவேண்டும் என்று மேயர் விரும்பினார். கிறிஸ்துவின் நீதிக்காக ஏங்குகிற மக்களை ஆசீர்வதிக்கும் கிறிஸ்துவிடமிருந்து அவர் அந்த அறிவுரையை பெற்றிருக்கக்கூடும் (மத்தேயு 5:6). ஆனால் தேவனுடைய நேர்த்தியான தராதரத்தை நாம் கருத்தில் கொள்ளும்போது சோர்வடைவது எளிது.

நாம் வளருவதற்கு நம்முடைய சுய முயற்சியை சார்ந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், “இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படியே செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக” (எபிரெயர் 13:20-21). கிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம் அவரை விசுவாசிக்கும் தருணத்தில் அவருடைய இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்படுகிறோம் (வச. 12). அவர் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நீதியின் கனியை நம் இருதயங்களில் தீவிரமாக வளர்க்கிறார். வாழ்க்கைப் பயணத்தில் நாம் அடிக்கடி தடுமாற நேரிடலாம். ஆனாலும் தேவன் நீதியாய் ஆட்சிசெய்யும் வரப்போகிற நகரத்தையே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் (வச. 14).

இயேசுவின் சிறந்த வெற்றி

இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா முழுவதிலும் உள்ள சில இராணுவ முகாம்களில், வீடற்ற சிப்பாய்களுக்காக ஒரு அசாதாரண வகை உபகரணம் கொடுக்கப்பட்டது. அது தான், வித்தியாசமான பியானோ இசைக்கருவி. அவை சாதாரண உலோகத்தின் பத்து சதவிகிதம் மட்டுமே கொண்டிருக்கும் வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்டன. மேலும் அவை சிறப்பு நீர்-எதிர்ப்பு பசை மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டவாறு வடிமைக்கப்பட்டிருந்தன. அந்த பியானோக்கள் எளிமையானதாய் தெரிந்தாலும், இராணுவ முகாம்களில் இருந்த சிப்பாய்கள் தங்களுக்கு பிரியமான பாடல்களைப் பாடி மணிக்கணக்காய் பொழுதுபோக்கும் வாயப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. 

கிறிஸ்தவர்கள் பொதுவாக துதி பாடல்களை பாடுவது என்பது, வாழ்க்கைப் போராட்டத்தில் அமைதியை காண்பதற்கான ஒரு சிறந்த வழி. யோசபாத் ராஜா, எதிரிகளின் படையெடுப்புப் படைகளை எதிர்கொண்டபோது இதை உண்மையாக அனுபவித்தார் (2 நாளாகமம் 20). பயந்துபோன ராஜா, பிரார்த்தனைக்கும் உபவாசத்துக்கும் எல்லா மக்களையும் அழைத்தான் (வச. 3-4). அதற்குப் பதிலளித்த தேவன், அந்த எதிரிகளை எதிர்கொள்ளுவதற்கு போர்வீரர்களை அழைத்து செல்லும்படிக்கு அறிவுறுத்துகிறார். ஆனால் “இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல” (வச. 17) என்று உறுதியளிக்கிறார். யோசபாத் தேவனை நம்பினான். விசுவாசத்தில் செயல்பட்டான். வீரர்களுக்கு முன்னால் சென்று, தேவன் கொடுக்கப்போகும் வெற்றிக்காக அவரை புகழ்ந்து துதி பாடுவதற்கென்று பாடகர்களை நியமித்தான் (வச. 21). அவர்களின் இசை தொடங்கியதும், அவன் ஆச்சரியவிதமாய் எதிரிகளை தோற்கடித்து தேவ ஜனத்திற்கு மீட்பைக் கொண்டுவருகிறான் (வச. 22).

நாம் விரும்பும் வேளைகளிலோ அல்லது விதங்களிலோ வெற்றி நம்மை வந்தடைவதில்லை. ஆனால் நமக்கு ஏற்கனவே கிடைத்த பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசுவின் இறுதி வெற்றியை நாம் எப்போதும் அறிவிக்க முடியும். ஒரு போராட்டத்தில் இடையில்கூட, தேவனை ஆராதிக்கும் மனநிலையை ஏற்படுத்தி நாம் இளைப்பாறக்கூடும். 

உங்கள் தோட்டத்தை பராமரியுங்கள்

எங்கள் வீட்டின் பின்புறத்தில் காய்கனி தாவரங்களை நாங்கள் விரும்பி பயிரிட்டோம். பின்னர் நான் மண்ணில் சிறிய துளைகளை கவனித்தேன். எங்கள் தாவரத்திலிருந்து முதல் பழம் பழுத்தபோது, தீடீரென்று அது காணாமல் போய்விட்டது. ஒரு நாள் எங்களின் மிகப் பெரிய ஸ்ட்ராபெரி செடி, குழிமுயலால் முற்றிலும் பிடுங்கப்பட்டு, வெயிலால் கருகிப் போனதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். சில எச்சரிக்கை அறிகுறிகளுக்கு நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்!

உன்னதப்பாட்டில் பதிவாகியுள்ள நேசத்தின் கவிதையானது ஒரு இளைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடலை பதிவுசெய்கிறது. அந்த பெண்ணை ரூபவதி என்று அழைக்கும் நேசர், அவர்களின் நேசத்திற்கு உருவக அடையாளமான தோட்டத்தை குழிமுயல்கள் சேதப்படுத்தாதபடிக்கு பாதுகாத்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறார். “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப்  பிடியுங்கள்” (உன்னதப்பாட்டு 2:15) என்று சொல்லுகிறார். பொறாமை, கோபம், வஞ்சகம் அல்லது அக்கறையின்மை போன்ற அவர்களின் காதலை அழிக்கக்கூடிய “நரிகளின்” குழிகளை அவர் பார்த்திருக்கலாம். அவர் தனது ரூபவதியின் அழகில் மகிழ்ந்ததால் (வச. 14), ஆரோக்கியமற்ற பிரச்சனை இருப்பதை அவர் விரும்பமாட்டார். அவள் அவருக்கு “முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம்” (வச. 2) போலிருக்கிறாள். அவர்களது உறவை பாதுகாக்கும் முயற்சியில் அவர் முழுமனதுடன் ஈடுபடுகிறார். 

குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளைப் பேணிக்காப்பது என்பது எளிதல்ல என்றாலும், அவைகள் நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற பரிசுகளாகும். பொறுமையோடும், பராமரிப்போடும், சிறு குழிநரிகளிடத்திலிருந்து பாதுகாப்போடும், தேவன் நம் கனிகளை விளையச்செய்வார் என்று அவரை நம்புவோம். 

தேசத்தை ஒன்றிணைத்தல்

உலகின் மிக நீளமான சர்வதேச எல்லையை அமெரிக்காவும் கனடாவும் பகிர்ந்து கொள்ளுகிறது. இது நம்பமுடியாத 5,525 மைல் பரப்பளவுகொண்ட நிலப்பகுதியையும் நீரையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டு பகுதிக்கும் இடையில் இருக்கும் இடைக்கோடு நேர்த்தியாய் தெரியவேண்டும் என்பதற்காய் தொழிலாளர்கள், அந்த இருபுறத்திலும் பத்து அடிக்குட்பட்ட மரங்களை தவறாமல் வெட்டினர். “தி ஸ்லாஷ்” என்று அழைக்கப்படும் இந்த நீளமான நிலப்பரப்பு கோட்;டில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மைல்கற்கள் இடம்பெற்றுள்ளன. எனவே பார்வையாளர்கள் அந்த பிரிக்கும் கோடு எது என்பதை நேர்த்தியாய் அடையாளங்கண்டுகொள்ள முடிகிறது. 

அந்த கோடு மறையாமலிருப்பதற்காக அகற்றப்பட்ட மரங்களானது, இரண்டு வெவ்வேறு அரசியலமைப்பையும் கலாச்சாரத்தையும் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாமும், தேவன் அந்த சூழ்நிலையை மாற்றியமைத்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து தேசங்களையும் அவருடைய ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு காலத்தை எதிர்நோக்குகிறோம். ஏசாயா தீர்க்கதரிசி, தேவனுடைய ஆலயம் உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டு உயர்த்தப்படும் ஒரு ஆசீர்வாதமான காலகட்டத்தை முன்னறிவிக்கிறார் (ஏசாயா 2:2). எல்லா நாடுகளிலிருந்தும் ஜனங்கள் தேவனின் வழிகளைக் கற்றுக்கொள்வதற்கும், அவருடைய பாதையில் மக்கள் நடப்பதற்கும் கூடுவார்கள் (வச. 3). அமைதியைக் காக்கத் தவறிய மனித முயற்சிகளை இனி நாம் நம்ப வேண்டாம். நமது மெய்யான ராஜாவாக செயல்பட்டு, தேவன் தேசங்களுக்கு இடையில் நியாயம் விசாரித்து, ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளை நிவிர்த்திசெய்வார் (வச. 4). 

பிரிவிணையில்லாத, சச்சரவுகள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யமுடிகிறதா? அதை கொண்டுவருவதாக தேவன் நமக்கு வாக்களிக்கிறார். நம்மை சுற்றியிருக்கும் பிரிவினை பேதங்களுக்கு மத்தியிலும், நாம் “கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம்” (வச. 5). அவரையே நம்புவோம். தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை நாம் அறிவோம். அவர் ஒரு நாள், தம்முடைய ஜனங்கள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைப்பார்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

 

பார்ப்பதற்கு கண்கள்

பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளால் போராடி வந்த தன் உறவினர் சாண்டிக்காக ஜாய் கவலைப்பட்டாள். அவள் சாண்டியின் அபார்ட்மெண்டிற்குச் சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது காலியாகத் தெரிந்தது. அவளும் மற்றவர்களும் சாண்டியைத் தேடத் திட்டமிட்டபோது, “தேவனே, நான் பார்க்காததைக் காண எனக்கு உதவுங்கள்” என்று ஜாய் ஜெபித்தாள். அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஜாய் சாண்டியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த திரைச்சீலை அசைந்ததை அவள் பார்க்க நேரிட்டது. அந்த நேரத்தில், சாண்டி உயிருடன் இருப்பதை அவள் அறிந்தாள். அவளை அடைய அவசர உதவி தேவைப்பட்டாலும், இவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்ததற்காய் ஜாய் மகிழ்ச்சியடைந்தாள்.

எலிசா தீர்க்கதரிசி, தேவன் தன்னுடைய பராக்கிரமத்தை அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கும்பொருட்டு விண்ணப்பிக்கிறார். சீரிய இராணுவம் அவர்களுடைய பட்டணத்தைச் சுற்றி வளைத்தபோது, எலிசாவின் வேலைக்காரன் பயத்தில் நடுங்கினான். இருப்பினும், அவன் தேவனுடைய மனுஷனாய் இல்லாதபோதிலும், தேவனுடைய உதவியினால் காணக்கூடாததை அவன் கண்டான். எலிசா தன்னுடைய வேலைக்காரன் காணவேண்டும் என்று ஜெபிக்க, “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜாக்கள் 6:17).

எலிசாவுக்கும் அவனுடைய வேலைக்காரனுக்கும், ஆவிக்குரிய மற்றும் மாம்ச வாழ்க்கைக்கு இடையே இருந்த திரையை தேவன் விலக்கிவிட்டார். திரைச்சீலையின் சிறிய மின்னலைக் காண தேவன் ஜாய்க்கு கிருபையளித்தார் என்று அவளும் நம்புகிறாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆவிக்குரிய தரிசனத்தைக் கொடுக்கும்படி நாமும் அவரிடம் விண்ணப்பிக்கலாம். நம் அன்புக்குரியவர்களுடனோ அல்லது நமது சமூகங்களிலோ, நாமும் அவருடைய அன்பு, உண்மை மற்றும் இரக்கத்தின் பிரதிநிதிகளாக திகழமுடியும்.

 

தேவன் கொடுத்த சுபாவம் மற்றும் வரங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஓர் கல்லூரி ஓய்வு விடுதிக்குச் சென்றேன், அங்கு எல்லோரும் ஆளுமைத் தேர்வைப் பற்றி பேசினர். சில ஆங்கில குறியீட்டு எண்களைச் சொல்லி, இது தான் தங்களுடைய ஆளுமை என்று சொல்லிக்கொண்டனர். நானும் விளையாட்டிற்காய், வாய்க்கு வந்த சில எழுத்துக்களைச் சொல்லி, இது தான் என்னுடைய ஆளுமை என்று கிண்டலடித்தேன். 

அப்போதிருந்து, மேயர்-பிரிக்ஸ் மதிப்பீடு எனப்படும் ஆளுமைத் தேர்வைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவைகள் நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்வதற்கு உதவமுடியும் என்பதால், அதை கவர்ச்சிகரமானதாக நான் காண்கிறேன். நாம் அவற்றை அதிகமாய் பயன்படுத்த அவசியம் இல்லை எனினும், அவை நம்மை உருவாக்கி வளர்ப்பதற்கு தேவன் பயன்படுத்தும் ஓர் கருவியாய் நிச்சயமாய் இருக்கக்கூடும். 

நம் ஆளத்துவத்தை கண்டறியும் சோதனைகளை வேதம் வழங்கவில்லை. ஆனால் தேவனுடைய பார்வையில் ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் இது உறுதிப்படுத்துகிறது (சங்கீதம் 139:14-16; எரேமியா 1:5 ஐப் பார்க்கவும்). மேலும் சிறந்த ஆளத்துவத்தையும் வரங்களையும் தேவன் நமக்கு அருளிசெய்து அவருடைய இராஜ்யத்தில் மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய நம்மை ஊக்குவிக்கிறதையும் இது காண்பிக்கிறது. ரோமர் 12:6ல், பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே..” என்று இக்கருத்தை ஆமோதிக்கிறார். 

அந்த வரங்கள் நம்முடைய சுய ஆதாயத்திற்காக அல்லவென்றும், கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்கு ஊழியம் செய்யும் நோக்கத்தோடே நமக்கு அருளப்படுகிறது என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 5). இது நமக்குள் உள்ளும் புறம்பும் கிரியை நடப்பிக்கும் அவருடைய கிருபை மற்றும் நன்மையின் வெளிப்பாடாகும். தேவனுடைய ஊழியத்தின் பயன்படும் பாத்திரமாய் திகழுவதற்கு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது.