எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

கிருபையும் இரக்கமும்

தேசிய நெடுங்சாலையின் நடுவில் இருந்த திட்டில் ஒரு சூரியகாந்தி பூ ஒன்று தனித்து ஓங்கி வளர்ந்திருந்தது. அதுவும் வேகப்பாதையின் மிக அருகாமையில் வளர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சூரியகாந்தி பூவும் தென்படாத பட்சத்தில், இந்த ஒற்றைப் பூவைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நெடுஞ்சாலையின் நடுவில் இப்படியொரு செடியை தேவனால் மட்டுமே வளர்க்கமுடியும். அவ்வழியாய் அவசர அவசரமாய் கடந்து செல்லும் பயணிகளை புன்முறுவலோடு வரவேற்று, மென்மையாய் வழியனுப்பிக் கொண்டிருந்தது. 

அதைப்போன்று ஆச்சரியப்படும் நேர்மையான ஓர் யூதேய ராஜாவைக் குறித்து பழைய ஏற்பாடு அறிவிக்கிறது. அவனுடைய தகப்பனும் தாத்தாவும் விக்கிரக  வழிபாட்டில் திளைத்திருந்தனர். யோசியா ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்களில், “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட” ஆரம்பித்தான் (2 நாளாகமம் 34:3). “ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு” கட்டளையிட்டான். பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆலயத்திலிருந்து நியாயப்பிரமாண புத்தகத்தை கண்டெடுக்கின்றனர் (பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள்) (வச. 14). பின்பு தேவன் யோசியாவின் ஆவியை எழுப்பி, தேசத்தின் மக்களை அவர்களின் முற்பிதாக்களின் தேவனுக்கு நேராய் திரும்பும்படி செய்தார். யோசியா “உயிரோடிருந்த நாளெல்லாம்” (வச. 33) மக்கள் கர்த்தரை சேவிக்கும்படி செய்தான். 

கற்பனை செய்துபார்க்க முடியாத இரக்கங்களினால் நிரப்பகிறவர் நம் தேவன். வாழ்க்கையின் சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் சிறப்பான நன்மை ஒன்றை ஆச்சரியப்படும் வகையில் பூக்க வைக்க அவரால் முடியும். அவரை நோக்கிப் பாருங்கள். அதை இன்றும் அவரால் செய்யமுடியும். 

கேட்பது முக்கியம்

“சீக்கிரம் வாருங்கள், நாங்கள் பனிப்பாறையை மோதிவிட்டோம்.”RMSகார்பாத்தியா கப்பலின் செய்தித் தொடர்பாளர் ஹெரால்ட் காட்டம், 1912 ஏப்ரல் 15ஆம் தேதி, காலை 12:25க்கு, மூழ்கிக்கொண்டிருந்த டைட்டானிக் கப்பலிலிருந்து பெற்றுக்கொண்ட முதல் செய்தி இதுவே. அந்த பேரிடரிலிருந்து டைட்டானிக் கப்பலை விரைந்து சென்று அதில் பயணம்செய்த 706 உயிர்களை காப்பாற்றிய முதல் கப்பல் இந்த கார்பாத்தியா தான். 

சில நாட்கள் கழித்து, அமெரிக்காவின் சட்டசபை உறுப்பினர்கள் கேட்க, கார்பாத்தியாவின் கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரான், “இவை அனைத்துமே ஆச்சரியமாய் நடந்தேறிய தெய்வீகச் செயல்” என்றாராம். “வயர்லஸ் கருவியை இயக்கும் கருவி அந்த நேரத்தில் தன்னுடைய கேபினில் இருந்தது... அவர் சாதாரணமாய் உடை மாற்றும்போதே அந்த தகவலை கேட்க நேர்ந்தது... இன்னும் பத்து நிமிடத்தில் அவர் தன் படுக்கைக்கு போயிருந்திருப்பார்.. அந்த செய்தியை கேட்க முடியாமல் போயிருந்திருக்கும்.” 

கேட்பது அவசியம்; குறிப்பாய் தேவனுடைய சத்தத்தை கேட்பது மிக அவசியம். சங்கீதம் 85ன் ஆசிரியர் கோராகின் புத்திரர்கள், “கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன் ; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது” (வச. 8-9) என்று கீழ்ப்படிதலுக்கு வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய எச்சரிக்கை கடுமையானது. ஏனென்றால் அவர்களின் முற்பிதாவாகிய கோராகு தேவனுக்கு விரோதமாய் முரட்டாட்டம் பண்ணி வனாந்திரத்தில் அழிந்துபோனவர் (எண். 16:1-35). 

டைட்டானிக் மூழ்கிய அன்றிரவு அருகிலிருந்த வேறொரு கப்பலின் வயர்லெஸ் செய்தி தொடர்பாளர் தூங்கச் சென்றுவிட்டார். அவர் அந்த செய்தியை கேட்டிருந்தால் இன்னும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருந்திருக்கக்கூடும். கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவோமாகில் இன்றும் கடினமான வாழ்க்கைப் பாதையினூடாய் கடந்துபோகும் நம்மை அவர் திசைதிருப்புவார். 

ஜெபமும் மணலும் நட்சத்திரங்களும்

அதீதியும் ஆகாஷும் குழந்தைக்காய் ஏங்கினர். ஆனால் அவர்களுடைய மருத்துவர் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அதீதி தன் சிநேகிதியிடம் “நான் தேவனோடு நேர்மையாக பேசவிரும்புகிறேன்” என்றாள். அவ்வாறு பேசியதின் விளைவாய், அவளும் ஆகாஷும் அவர்களின் போதகரை சந்தித்து, சபையில் குழந்தை தத்தெடுக்கும் ஊழியத்தைத் துவங்க ஆலோசித்தார்கள். சரியாய் ஒருவருடம் கழித்து, அவர்கள் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர்.

ஆதியாகமம் 15இல், ஆபிராமுக்கும் தேவனுக்கும் இடையில் நேர்மையான உரையாடல் ஒன்று நிகழ்கிறது. தேவன் அவனிடம், “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்கு… மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்” (வச. 1). ஆனால் தன் எதிர்காலத்தைக் குறித்து நிச்சயமில்லாதிருந்த ஆபிராம், “கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே” என்று வெளிப்படையாய் பேசுகிறான் (வச. 2). 

ஆபிராமுக்கு ஏற்கனவே தேவன், “உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்” என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் (13:16). தற்போது தேவன் அதை மீண்டும் அவனுக்கு நினைவுபடுத்துகிறார். இங்ஙனம் தேவனுடைய பதிலைப் பாருங்கள்: தேவன் அவனை வானத்தை அண்ணாந்து பார்க்கும்படி செய்து, “நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு” என்று சொல்லி, அதைப்போலவே எண்ணக்கூடாத அளவு அவனுடைய சந்ததி இருக்கும் என்று குறிப்பிடுகிறார் (15:5).

பின்பாக, தேவன் அவனுடைய பெயரை ஆபிரகாம் (ஜாதிகளுக்கு தகப்பன்) என்று மாற்றுகிறார். ஆபிரகாமைப் போல் நீங்களும் நானும் நேர்மையாய் நம்மை வெளிப்படுத்தி, நமக்கும் மற்றவர்களுக்கும் அவர் நன்மை செய்வார் என்று பூரணமாய் நம்புவோம். 

தேவனை மட்டும் நம்புதல்

சிலர் நம்மைப் பார்த்து, “இந்த அதிர்ஷ்டம் தான்” எனக்கு நன்மையைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். சில குறிப்பிட்ட மீன் வகைகள், நாணயங்கள், குடும்ப வாரிசுகள், அல்லது மங்களகரமான நாள் என்று பல காரியங்களை தங்கள் அதிர்ஷ்டமாய் கருதலாம். அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது என்று நம்பப்படும் பொருட்கள் மக்களுடைய கவனத்தை அதிகமாய் ஈர்க்கிறது. 

அதிர்ஷ்டத்தை நம்புகிற இந்த நம்பிக்கை உலகத்தின் எல்லா கலாச்சாரத்திற்கும் பொதுவானது. அது நம்மை தேவனை நம்புவதிலிருந்து வழிவிலகச்செய்து, பணத்தையோ, மனித பெலத்தையோ, மார்க்க சடங்காச்சாரங்களையோ நம்புவதற்குத் தூண்டுகிறது. இஸ்ரவேலர்கள் அசீரியர்களால் அச்சுறுத்தப்படும்போது, தேவனிடத்திற்கு திரும்புவதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடின தன்னுடைய ஜனத்திற்கு தேவன் இதை எச்சரிக்கிறார்: “நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்; அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள்!” (ஏசாயா 30:15-16).

தேவன் சொன்னதுபோல அவர்களின் ஓட்டம் முடிந்துவிட்டது; யூதேயா அசீரியாவினால் மேற்கொள்ளப்பட்டது. “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்” என்றும் தேவன் தன் ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். நம்முடைய கொஞ்சத்தில் தேவனை நம்பும்போது, தேவன் தன்னுடைய கரங்களை விரித்து நம்மிடத்திற்கு திரும்புகிறார். “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (வச. 18). 

நீதியின் தேவன்

வரலாற்றின் மிக பிரபலமான “பலிமாடு” அநேகமாக இவளாகத்தான் இருக்கவேண்டும். அவளின் பெயர் டெய்சி, மேட்லின், அல்லது க்வெண்டோலின் (ஒவ்வொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டது) போன்றவற்றில் எதுவென்று சரியாய்  தெரியவில்லை. ஆனால் 1871ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களை வீடில்லாதவர்களாய் மாற்றிய பெரும் தீ விபத்திற்கு காரணம், ஒ லிரி என்பவருக்கு சொந்தமான இந்த பசுமாடுதான் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. வீசிய காற்றினால் மளமளவென்று மரவீடுகளில் பரவிய நெருப்பு, மூன்று நாட்கள் எரிந்து, முன்னூறுபேரை பலியாக்கியது.

மாட்டுக்கொட்டகையில் இருந்த விளக்கை இந்த பசுமாடு தட்டிவிட்டதினால்தான் தீ பற்றிக்கொண்டது என்று பல ஆண்டுகளாய் நம்பப்பட்டு வந்தது.  மேற்படியான விசாரணையில், 126 ஆண்டுகள் கழித்து, இந்த பசுமாடும் அதின் உரிமையாளரும் குற்றமற்றவர்களென்று நிருபிக்கப்பட்டனர். அவர்களின் பக்கத்து வீட்டிலிருந்தே தீ பரவியுள்ளது என்று நகரத்தின் தீயணைப்பு மற்றும் காவல் துறையினரால் கண்டறியப்பட்டது.

நீதி, உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அது எவ்வளவு கடினம் என்பதை வேதாகமமும் ஒப்புக்கொள்கிறது. சங்கீதம் 13இல் “எதுவரைக்கும்?” என்னும் கேள்வி மீண்டும் மீண்டும் நான்கு தரம் இடம்பெற்றுள்ளது: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?” (வச. 1-2). தன்னுடைய புலம்பலின் இடையில் விசுவாசிப்பதற்கும் நம்புவதற்குமான காரணத்தை தாவீது கண்டறிகிறார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;.  உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.” (வச. 5).

நீதி தாமதித்தாலும், தேவனுடைய கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை. அவரை நம்பி அவரில் நாம் தற்காலிகமாய் அல்ல, நிரந்தரமாய் இளைப்பாறுதலடையலாம்.

எனக்கு தகுதியானதா அல்லது நான் தகுதியுள்ளவனா?

ஆப்பிரிக்க நாட்டின் காங்கோ பகுதியில் ஆங்கில மிஷனரி மருத்துவரான ஹெலன் ரோஸ்வேர் 1964இல் ஏற்பட்ட சிம்பா கிளர்ச்சியின்போது கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அவர் அவர்களால் தாக்கப்பட்டு, தவறாய் கையாளப்பட்டதால், அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். தொடர்ந்த நாட்களில், “இது எனக்கு தகுதியானதா?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டார்.

இயேசுவைப் பின்தொடர்வதற்கான கிரயத்தை அவள் சிந்திக்கத் தொடங்கினபோது, தேவன் அதைப் பற்றி அவளிடம் பேசுவதை உணர்ந்தாள். பல வருடங்கள் கழித்து அவள் ஒரு நேர்காணலுக்கு பேட்டியளிக்கும்போது, “கிளர்ச்சியின் மிகவும் மோசமான தருணங்களில், கர்த்தர் என்னிடம், “இது எனக்கு தகுதியானதா?” என்னும் கேள்வியை மாற்றி “நான் இதற்கு தகுதியானவளா?” என்று கேட்கும்படி எனக்கு உணர்த்தினார். அவளுடைய வலி மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் “ஆம்! அவர் தகுதியானவர்” என்னும் முடிவுக்கு தான் வந்ததாக அறிவித்தார். 

தனது துன்பகரமான சோதனையின்போது அவளுக்குள் இருந்த தேவ கிருபையின் மூலம், ஹெலன் ரோஸ்வேர், அவருக்காக மரணத்தை கூட அனுபவித்த மீட்பருக்காக எதையும் சகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். “அவர் தகுதியானவர்” என்ற அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவின் சிங்காசனத்தைச் சுற்றியுள்ளவர்களின் அழுகையை எதிரொலிக்கின்றன: “அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்!” (5:12).

நம்முடைய இரட்சகர் நமக்காக துன்பப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார்; நித்திய ஜீவனையும் நம்பிக்கையையும் இலவசமாக நாம் பெறுவதற்காக, தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய அனைத்துமே நம் அனைவருக்கும் தகுதியானவை. அவர் தகுதியானவர்!

கடினமான களம் மற்றும் கனிவான இரக்கம்

 ஜேம்ஸுக்கு வெறும் ஆறு வயதாக இருந்தபோது, ​​அவரது மூத்த சகோதரர் டேவிட் ஒரு விபத்தில் பரிதாபமாக இறந்தார். அது டேவிட்டின் பதினான்காம் பிறந்தநாளுக்கு முந்தைய நாள். அதை தொடர்ந்த ஆண்டுகளில், சில சமயங்களில் தனது மூத்த மகன் வளர்ந்து வரும் போது சவால்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை நினைவூட்டிய ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் தனது தாயான மார்கரெட்டை ஜேம்ஸ் ஆறுதல்படுத்த பெரிதும் முயன்றார். ஜேம்ஸ் பாரியின் வளமான கற்பனையில், பல பத்தாண்டுகளுக்கு பிறகும், அவரது யோசனை மிகவும் விரும்பப்படும், ஒருபோதும் பழையதாகாத குழந்தைகளின் கதை கதாபாத்திரம் ஒன்றிற்கு உத்வேகம் அளிக்கும்: பீட்டர் பான். நடைபாதையின் ஊடே ஒரு பூ தன் வழியில் வெளிவருவது போல, நினைத்துப்பார்க்க முடியாத மன வேதனையின் கடினமான களத்திலிருந்து கூட நல்லது வெளிப்பட்டது.

தேவன், எல்லையற்ற படைப்பாற்றலின் வழியில், நம்முடைய மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து நல்லதை வெளியே கொண்டு வர முடியும் என்ற எண்ணம் எவ்வளவு ஆறுதலளிக்கிறது. பழைய ஏற்பாட்டிளுள்ள ரூத்தின் சரித்திரத்தில் இது ஒரு அழகான எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. நவோமி தனது இரண்டு மகன்களையும் இழந்து அவளுக்கு எந்த ஆதரவும் இல்லாமல் போனது. அவளுடைய விதவை மருமகள் ரூத் நவோமியுடன் தங்குவதற்கும் தன்னுடைய தேவனைச் சேவிப்பதற்கும் தேர்ந்தெடுத்தாள் (ரூத் 1:16). இறுதியில், தேவன் அவர்களின் தேவைகளை சந்தித்தவிதம் அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்தது. ரூத் மறுமணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்றாள், “அவர்கள் அவருக்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள். அவர் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தந்தை” (4:17). அவரும் இயேசுவின் மூதாதையர்களிள் ஒருவராக பட்டியலிடப்படுட்டார் (மத்தேயு 1: 5).

தேவனின் கனிவான இரக்கம் நமது திறனுக்கு அப்பாற்பட்டு, ஆச்சரியமூட்டும் இடங்களில் நம்மைச் சந்திக்கிறது. பார்த்துத்துக்கொண்டே இருஙகள்! ஒருவேளை நீங்கள் இன்று அதைப் பார்ப்பீர்கள்.

நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம்

ஜார்ஜ் வைட்ஃபீல்ட் (1714-1770) வரலாற்றில் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள போதகர்களில் ஒருவராகவும், ஆயிரக்கணக்கானோரை இயேசுவின் விசுவாசத்தில் வழிநடத்தினவராகவும் இருந்தார். ஆனால் அவரது வாழ்க்கை சர்ச்சைக்குரியதாய் இல்லாமல் இல்லை. வெளி இடங்களில் பிரசங்கிக்கும் அவரது நடைமுறை (மிகப் பெரிய கூட்டத்திற்கு) சில சமயங்களில் அவருடைய நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியவர்களாலும், அவர் ஒரு தேவாலய கட்டிடத்தின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே பிரசிங்கிக்க வேண்டும் என்று நினைத்தவர்களாலும் விமர்சிக்கப்பட்டது.. வைட்ஃபீல்டின் கல்லறை வாசகங்கள் மற்றவர்களின் “கடுமையான வார்த்தைகளுக்கு” அவர் அளித்த பதிலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: “எனது பண்பை காட்ட நீயாத்தீர்ப்பு நாள் வரை காத்திருப்பதில் நான் திருப்தி அடைகிறேன்; நான் இறந்த பிறகு, இதைத் தவிர வேறு எந்தப் கல்லறை வாசகத்தையும் நான் விரும்பவில்லை, 'ஜார்ஜ் வைட்ஃபீல்ட் இங்கே இருக்கிறார்-அவர் எப்படிப்பட்ட மனிதர் அவர், என்பதை அந்த பெரிய நாள் வெளிப்படுத்தும்.”

பழைய ஏற்பாட்டில், தாவீது மற்றவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது, ​​அவரும் தன்னை தேவனிடம் ஒப்படைத்தார். தாவீது ஒரு கிளர்ச்சியை வழிநடத்தியதாக சவுல் பொய்யாகக் குற்றம் சாட்டியபோது, ​​சவுலின் இராணுவம் நெருங்கியபோது ஒரு குகையில் மறைந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தாவீது இருந்தபோது, ​​தாவீது “சிங்கங்களுக்கு நடுவே” இருப்பதை விவரித்தார், “அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 57: 4). ஆனால் அந்த இக்கட்டான இடத்திலும் கூட, அவர் தேவனை நோக்கிப் பார்த்து அவரிடத்தில் ஆறுதல் பெற்றார்: “உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது” (வச.. 10). 

மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்ளும்போதும் அல்லது நம்மை நிராகரிக்கும்போதும், ​​தேவனே  நம் “அடைக்கலம்” (வச.. 1). அவருடைய தவறாத மற்றும் இரக்கமுள்ள அன்பிற்காக அவர் என்றென்றும் ஸ்தோத்தரிக்கப்படுவாராக!

பாதுகாப்பது

செடிகளை நட நான் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, குளிர்கால களைகளின் பெரிய கொத்து ஒன்றை நான் பிடுங்கி… அதை காற்றில் எறிந்தேன். எனது கைகளின் கீழே இருந்த அடர்த்தியான புதரில் ஒரு விஷ பாம்பு படுத்து மறைந்திருந்தது- ஒரு அங்குலம்
கீழே வைத்திருந்தால் தவறுதலாக நான் அதை பிடித்திருப்பேன். அந்த கொத்தை மேலே எடுத்தவுடனே நான் அதின் வண்ணமயமான அடையாளங்களை கண்டேன், அதன் மற்ற பகுதி என் கால்களுக்கு இடையில் இருந்த களைகளில் சுருண்டிருந்தது.

சில அடிகள் தள்ளி என் கால்கள் தரையை அடைந்தபோது, நான் கடிபடாததைக் குறித்து தேவனுக்கு நன்றி செலுத்தினேன். நான் அறியாத மற்ற நேரங்களில் எத்தனை முறை அவர் என்னை பாதுகாத்திருப்பார் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன்.

தேவன் தன் ஜனத்தை காக்கிறவர். வாக்குத்தம்பண்ணப்பட்ட தேசத்தில் நுழைவதற்கு முன்பு மோசே இஸ்ரவேலர்களிடம்   “கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்” .  (உபாகமம் 31:8) அவர்கள் தேவனை காணவில்லை ஆயினும்கூட அவர் அவர்களுடன் இருந்தார்.
 
சில சமயங்களில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத கஷ்டமான காரியங்கள் நடக்கின்றன, ஆனாலும் எண்ணிமுடியாதமுறை நாம் விழிப்புடன் இல்லாதபோதும் தேவன் நம்மை பாதுகாத்ததை நாம் பிரதிபலிக்கலாம்.

அவரது ஜனங்கள் மீது அவரது பரிபூரண, தெய்வீக பராமரிப்பு ஒவ்வொரு நாளும் உள்ளது என வேதம் நமக்கு நினைப்பூட்டுகிறது. அவர் எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார் (மத்தேயு 28:20).