எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

எஜமானனா அல்லது ஊழியனா

“நான் எஜமானனா அல்லது ஊழியனா?”, பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது குடும்பத்திற்கு எது சிறந்தது என்று ஆராயும்போது இந்தக் கேள்வியை தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். திரளான செல்வத்தால் வரக்கூடிய சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்த அவர், அந்த சவாலை தனது வாரிசுகளும் எதிர்கொள்ள விரும்பவில்லை. எனவே அவர் தனது நிறுவனத்தின் உரிமையை கைவிட்டு, தனது அதிகார பங்குகளில் 100 சதவீதத்தையும் ஒரு அறக்கட்டளைக்கு கையளித்தார். தனக்குச் சொந்தமான அனைத்தும் தேவனுக்கே சொந்தமானது என்பதை அவர் புரிந்துகொண்டது, தனது குடும்பம் வேலை செய்து சம்பாதிக்கும்படி தீர்மானிக்க அவருக்கு உதவியது. அதே நேரத்தில் வருங்கால லாபத்தை தேவனின் ஊழியத்திற்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தவும் உதவியது.

சங்கீதம் 50:10 இல் தேவன் தனது ஜனங்களிடம், “சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்” என்கிறார். சர்வத்தையும் சிருஷ்டித்தவரான அவருக்கு நம்மிடம் ஒன்றும் தேவையுமில்லை, அவர் யாரிடமும் கடன்பட்டவருமல்ல. “உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை” (வ.9) என்கிறார். நமக்குள்ளவற்றையும், நாம் பயன்படுத்தும் அனைத்தையும் அவர் தாராளமாக வழங்குகிறார். மேலும் வேலை செய்ய பெலனையும் திறனையும் அளிக்கிறார். இப்படியிருக்க, சங்கீதம் சொல்வதுபோல அவரே நமது மனமார்ந்த ஆராதனைக்கு பாத்திரர்.

தேவனே அனைத்துக்கும் சொந்தக்காரர். ஆனால் அவருடைய நற்குணத்தின் காரணமாக, அவர் தன்னைத் தானே கொடுக்கத் தெரிந்துகொண்டார். தம்மிடம் வரும் எவருடனும் உறவை ஏற்படுத்துகிறார். இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்” (மாற்கு 10:45). ஈவுகளை காட்டிலும் ஈந்தவரை நாம் மதித்து ஈவுகளைக் கொண்டு அவருக்கு ஊழியஞ்செய்கையில், அவருக்குள் என்றென்றும் களிகூரும் பாக்கியமடைவோம்.

எண்ணிமுடியாத அன்பு

“நான் உன்னை எப்படி நேசிப்பது? அதற்கான வழிகளை யோசிக்கிறேன்.” போர்ச்சுகீஸிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட எலிசபெத் பாரெட் பிரவுனிங்கினின் அந்த வார்த்தைகள் ஆங்கில மொழியில் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும். அவர்கள் திருமணத்திற்கு முன்பு ராபர்ட் பிரவுனிங்கிற்கு அவ்வாறு கவிதை எழுதினாராம். அக்கவிதையைப் பார்த்து ராபர்ட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அந்த முழு கவிதைத் தொகுப்பையும் பிரசுரிக்குமாறு ஊக்குவித்தாராம். அக்கவிதை தொகுப்பின் மொழியானது மிகவும் மென்மையாக இருப்பதினாலும் தனிப்பட்ட ரீதியில் இருப்பதினாலும், பாரெட் அவற்றை போர்ச்சுகீஸிய எழுத்தாளரின் எழுத்துக்களைப் போல அவற்றை வெளியிட்டாராம்.

மற்றவர்களிடம் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்தும்போது சில சமயங்களில் நாம் சங்கடமாக உணரலாம். ஆனால் வேதாகமம், தேவனுடைய அன்பை பிரபல்யப்படுத்துவதில் சற்றும் தயங்கவில்லை. எரேமியா தீர்க்கதரிசி, “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமியா 31:3) என்று தேவன் தன் ஜனத்தின் மீது வைத்திருக்கும் மென்மையான அன்பை விளங்கப்பண்ணுகிறார். ஜனங்கள் தேவனை விட்டு திரும்பினாலும், தேவன் அவர்களை மீண்டும் தன்னிடமாய் சேர்த்துக்கொள்ளுகிறார். “இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன்” (வச. 2) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார்.

இயேசு, தேவனுடைய மறுசீரமைக்கும் அன்பின் இறுதி வெளிப்பாடாக இருக்கிறார். அவரிடம் திரும்பும் அனைவருக்கும் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அருளுகிறார். தொழுவத்திலிருந்து சிலுவை வரை, வெறுமையான கல்லறை வரை, வழிதப்பிப் போன உலகத்தை தம்மிடமாய் சேர்க்கும் தேவனுடைய சித்தத்தின் திருவுருவமாய் இயேசு திகழ்கிறார். வேதத்தை முழுவதுமாய் படியுங்கள், அப்போது தேவனுடைய அன்பை எண்ணுவதற்கான அநேக வழிகளை தெரிந்துகொள்வீர்கள். அவைகள் நித்தியமானவைகள் என்பதினால், அவற்றை நம்மாய் எண்ணி முடியாது. 

- ஜேம்ஸ் பேங்க்ஸ்

கிறிஸ்மஸ் நட்சத்திரம்

“நீ அந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டால், வீட்டிற்கு வரும் வழியை நீ கண்டுபிடித்துவிடலாம்.” சிறுவயதில் வடக்கு நட்சத்திரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தபோது சொன்ன வார்த்தைகள் இது. என்னுடைய அப்பா போர்க்காலத்தில் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் இரவு நேர பயணங்களாய் இருந்த தருணங்கள் அவைகள். அதனால் பல விண்மீன்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றை எனக்கு கற்றுக்கொடுத்து, அதை நான் சரியாய் தெரிந்திருக்கிறேனா என்பதை அவ்வப்போது உறுதிசெய்துகொள்வார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொலாரிஸ் நட்சத்திரத்தைக் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் இருப்பிடத்தை அறிந்தால், நான் எங்கிருந்தாலும் திசையின் உணர்வைப் பெற முடியும்; நான் இருக்க வேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். 
முக்கியமான மற்றொரு நட்சத்திரத்தைப் பற்றி வேதம் கூறுகிறது. “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” (இன்று ஈரான் மற்றும் ஈராக்கைச் சூழ்ந்துள்ள ஒரு பகுதியிலிருந்து) ராஜாவாகப் பிறந்திருக்கிறவரின் பிறப்புக்கான அறிகுறிகளை வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்தேயு 2:1-2). 
பெத்லகேமின் நட்சத்திரம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று வான சாஸ்திரிகளுக்குத் தெரியாது. ஆனால் இயேசுவை உலகத்திற்கு விடிவெள்ளி நட்சத்திரமாய் சுட்டிக்காட்ட தேவன் அதை உண்டாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது (வெளிப்படுத்துதல் 22:16). கிறிஸ்து நம் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், நம்மை மீண்டும் தேவனிடம் வழிநடத்தவும் வந்தார். அவரைப் பின்தொடர்வதே நம் வீட்டிற்கு செல்லும் ஒரே வழி.  

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை. 

தடைகள் உடைந்தது

“குஞ்சு பறவைகள் நாளை பறக்கும்!” எங்கள் முன் வராந்தாவில் தொங்கும் கூடையில் சிட்டுக்குருவிகள் குடும்பம் செய்து வரும் முன்னேற்றம் குறித்து என் மனைவி காரி மகிழ்ச்சியடைந்தாள். அவள் தினமும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா குருவி கூட்டிற்கு உணவைக் கொண்டு வருவதைப் புகைப்படம் எடுத்தாள். 
காரி மறுநாள் அதிகாலையில் எழுந்து அவைகளைப் பார்க்க முயற்சித்தாள். அதற்கு அவள் கூட்டை மூடியிருந்த சில பசுமையை ஒதுக்கி நகர்த்தினாள். ஆனால் குஞ்சு பறவைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு பாம்பின் குறுகிய கண்கள் அவளை சந்தித்தன. ஒரு பாம்பு செங்குத்தான சுவற்றின் மீது ஏறி, கூட்டிற்குள் நுழைந்து, குஞ்சுகள் அனைத்தையும் விழுங்கியது. 
காரி மனம் உடைந்து, கோபமடைந்தார். நான் அப்போது வெளியூருக்கு சென்றிருந்தபடியால், பாம்பை அகற்ற அவளுடைய தோழியின் உதவியை நாடினாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.  
தன் பாதையில் அழிவை விட்டுச் சென்ற மற்றொரு பாம்பைப் பற்றி வேதம் கூறுகிறது. ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளை ஏமாற்றியது: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5).  
ஏவாள் மற்றும் ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” வலுசர்ப்பத்தினால் (வெளிப்படுத்தல் 20:2) பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன. ஆனால் “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). அவர் மூலமாகவே தேவனுடனான நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுகிறது. அவர் ஒரு நாளில் சகலத்தையும் புதிதாக்குவார் (வெளிப்படுத்தல் 21:5).  

தேவனுடைய எதிர்பாராத வழிகள்

போதகர் தன்னுடைய பிரசங்க காகிதத்தை தன் கண்களுக்கு அருகாமையில் கொண்டுவந்து அதைப் பார்த்து படித்தார். அவர் கிட்டப்பார்வை கொண்டவர் என்பதினால், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கவனமாய் படிக்கும்பொருட்டு அவ்வாறு செய்தார். ஆகிலும் ஜோனத்தன் எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள், எழுப்புதல் தீயை பரவச்செய்து, ஆயிரக்கணக்கானோரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தது.

தேவன் அடிக்கடி எதிர்பாராத காரியங்களைக் கொண்டு அவருடைய நேர்த்தியான சித்தத்தை நிறைவேற்றுகிறார். மக்களை தேவனுடைய சிலுவை அன்பிற்கு நேராய் ஈர்க்கும் முயற்சியில் எழுத்துப்பணியை ஏறெடுத்த பவுல் அப்போஸ்தலர், “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) என்று எழுதுகிறார். தெய்வீக ஞானமானது தவிர்க்கமுடியாத சக்தியுடன் வரும் என்று உலகம் எதிர்பார்த்தது. மாறாக, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு சாதாரணமாகவும் தாழ்மையின் ரூபத்திலும் வந்தார். அதனால் “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30).

நித்தியமான, அனைத்து ஞானமுமுள்ள தேவன் ஒரு மனிதக் குழந்தையாக இவ்வுலகத்தில் அவதரித்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் நமக்குக் காண்பிப்பதற்காக, அவர் வளர்ந்து, துன்பப்பட்டு, மரித்து, உயிரோடு எழுத்தளுளினார். நம்முடைய சொந்த பலத்தில் நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்கு அவர் தாழ்மையான வழிகளையும் மக்களையும் பயன்படுத்த விரும்புகிறார். நாம் சித்தமாயிருந்தால், அவர் நம்மையும் பயன்படுத்தக்கூடும்.  

“எல்லாம் எனக்கு எதிராய் இருக்கிறது”

“இன்று காலையில் பணத்திற்கு பெரிய மதிப்பு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது என்னிடத்தில் ஒரு டாலர் கூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” முன்னாள் அமெரிக்க அதிபர் யுலிஸஸ் கிராண்ட் தனது வாழ்நாள் சேமிப்பை ஒரு வியாபார கூட்டாளியின் மோசடியால் மொத்தமாய் இழந்தபோது இவ்வார்த்தைகளை கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு, கிராண்டிற்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாய் உதவுவதற்கு தீர்மானித்த அவர், அவரது நினைவுக் குறிப்புகளை எழுதி வெளியிடுவதற்காக எழுத்தாளர் மார்க் ட்வைன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதை முடித்தார்.

கடுமையான கஷ்டங்களைச் சந்தித்த மற்றொரு நபரைப் பற்றி வேதம் நமக்குச் சொல்கிறது. யாக்கோபு தனது மகன் யோசேப்பை “துஷ்டமிருகம்.. பட்சித்துப்போட்டது” (ஆதியாகமம் 37:33) என்று நம்பினான். பின்னர் அவரது மகனான சிமியோன் அந்நிய தேசத்தால் சிறைபிடிக்கப்பட்டான். மேலும் தன்னுடைய குமாரனான பென்யமீனும், தன்னிடத்திலிருந்து போய்விடுவானோ என்று யாக்கோபு அஞ்சினான். “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” என்று சொல்லி கதறுகிறான் (42:36).

ஆனால் அவன் எண்ணியது தவறு. அவனுடைய குமாரனாகிய யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்பதையும், தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தேவன் திரைக்கு பின்னாலிருந்து செயல்படுகிறார் என்பதையும் பின்னர் அறிகிறான். நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய கரத்தை பார்க்கமுடியாவிட்டாலும், தேவனை ஏன் நம்பவேண்டும் என்பதை இக்கதை நமக்கு வலியுறுத்துகிறது.

அமெரிக்க அதிபர் கிராண்டின் நினைவுக் குறிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் அவருடைய குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்தனர். அதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடில்லையெனினும், அவருடைய மனைவி அதை நேர்த்தியாய் அனுபவிக்க நேர்ந்தது. நம்முடைய பார்வை குறைவுள்ளது. ஆனால் தேவனுடைய பார்வை அப்படியில்லை. இயேசு நம்முடைய நம்பிக்கையாய் இருக்கும்போது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31). அவர் மீது நம்முடைய நம்பிக்கையை இன்று வைப்போம்.

ஊக்குவிக்கும் வரம்

“உங்கள் தேனீக்கள் மொய்க்கின்றன!” என் மனைவி கதவின் உள்ளே தலையை நுழைத்து எந்த தேனீ வளர்ப்பவரும் கேட்க விரும்பாத செய்தியை என்னிடத்தில் கூறினாள். ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டிலிருந்து உயரமான பைன் செடியின் உச்சிக்கு பறப்பதைப் பார்க்க நான் வெளியே ஓடினேன். அவைகள் ஒருபோதும் திரும்பிவரப்போவதில்லை.

தேன் கூடு மொய்க்கப்போகிறது என்பதைக் குறித்து தெரிந்துகொள்வதில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். ஒரு வாரத்திற்கும் மேலாக வீசிய புயல்கள் எனது ஆய்வுகளுக்கு இடையூறாக இருந்தன. புயல் வீசிமுடிந்த அன்று காலையில், தேனீக்கள் வெளியேறின. அந்த கூடு புதியதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால் தேனீக்கள் ஒரு புதிய கூட்டை உருவாக்க முயற்சிக்கின்றன. எனது ஏமாற்றத்தைக் கண்டு, “சோர்ந்துபோகாதே, இது யாருக்கும் நடக்கலாம்!” என்று அனுபவம் வாய்ந்த தேனீ வளர்ப்பவர் மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறினார்.

ஊக்கப்படுத்துதல் என்பது மிகப்பெரிய வரம். சவுல் தாவீதை கொல்ல வகைதேடினபோது, சவுலின் குமாரனாகிய யோனத்தான் தாவீதை உற்சாகப்படுத்தினான். “நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்” என்று யோனத்தான் அறிவுறுத்துகிறான் (1 சாமுவேல் 23:17).

அரியணைக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த ஒருவரிடமிருந்து வியக்கத்தக்க தன்னலமற்ற வார்த்தைகள் அவை. தேவன் தாவீதோடு இருக்கிறார் என்பதை யோனத்தான் அறிந்திருந்ததினால் தாழ்மையான இருதயத்தில் விசுவாசத்துடன் பதிலளித்தான்.

நம்மைச் சுற்றிலும் ஊக்கம் தேவைப்படுகிற மக்கள் நிறைய இருக்கின்றனர். நாம் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நம் மூலம் அவர்களை நேசிக்கும்படி அவரிடம் கேட்கும்போது அவர்களுக்கு நம் மூலம் நன்மைகள் உண்டாக அவர் நமக்கு உதவிசெய்வார்.

விளைவுகளைத் தாண்டிய நம்பிக்கை

நீங்கள் எப்போதாவது கோபத்தில் ஏதாவது செய்துவிட்டு பின்னர் வருந்தியுள்ளீர்களா? என் மகன் போதைக்கு அடிமையாகி அதனால் போராடிக் கொண்டிருந்தபோது, அவனது விருப்பங்களுக்கு எதிராக நான் சில கடுமையான விஷயங்களைச் சொன்னேன். என் கோபம் அப்பழக்கத்தை இன்னும் அவனுக்குள் அதிகரித்தது. ஆனால் இறுதியில் தன்னிடம் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பற்றிப் பேசிய காலப்போக்கில் விசுவாசிகளைச் சந்தித்த பின்னர், அவ்வடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். 

 விசுவாசத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர்களில் ஒருவரான மோசே கூட, கோபத்தில் ஒரு காரியத்தைச் செய்ததினால் பின்னர் வருந்த வேண்டியதாய் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்தபோது, கசப்புடன் முறையிட்டார்கள். 
 

எனவே தேவன் மோசேக்கும், ஆரோனுக்கும் குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார்: "அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்" (எண்ணாகமம் 20:8). ஆனால் மோசே அவ்வதிசயத்திற்கு காரணமான தேவனுக்கு கனத்தை கொடுக்காமல், தனக்கும் ஆரோனுக்கும் அதைக் கொடுத்து, கோபத்தை வெளிக்காட்டினார்:"அப்பொழுது மோசே அவர்களை நோக்கி:கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி" (வ.10). பின்னர் வெளிப்படையாக தேவனுக்கு அவர் கீழ்ப்படியாமல், "தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்” (வ.11). என்னதான் தண்ணீர் பொங்கி வழிந்தாலும், சோகமான பின் விளைவுகள் ஏற்பட்டது. தேவன் தம் மக்களுக்கு வாக்களித்த தேசத்தில் மோசேயும், ஆரோனும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் இன்னும் இரக்கமுடையவராக இருந்தபடியால், மோசே தூரத்திலிருந்து அதைப் பார்க்க அனுமதித்தார் (27:12-13). 
 

மோசேக்கு இரக்கமாய் இருந்தது போலவே, தேவன் இன்னும் கீழ்ப்படியாமையின் பாலைவனத்தில் இருக்கும் நமக்கு இரங்குகிறார். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், அவர் நமக்கு மன்னிப்பையும், நம்பிக்கையையும் கிருபையாக அளிக்கிறார். நாம் எங்கே இருந்திருந்தாலும், என்ன செய்திருந்தாலும், நாம் அவரிடம் திரும்பும்போது, அவர் நம்மை ஜீவனுக்கேதுவாக நடத்திச் செல்வார். 
  
  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

பெஹலே ஆப்

கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.

ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).

தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.