எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவிட் மெக்காஸ்லாண்ட்கட்டுரைகள்

ஞானத்தின் அழைப்பு

பிரிட்டன் நாட்டின் பிரசித்திபெற்ற பத்திரிக்கையாளரும் சமுதாய ஆர்வலருமான மால்கம் மக்ரிஜ், தன்னுடைய அறுபதாவது வயதில் விசுவாச அனுபவத்திற்குள் வந்தார். அவருடைய எழுபத்தி-ஐந்தாவது பிறந்ததினத்தில், மனித வாழ்க்கையை பற்றிய இருபத்தி ஐந்து அறிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார். அதிலே ஒன்று, “சந்தோஷமாயிருக்கிற பணக்காரனை நான் சந்தித்ததேயில்லை. ஆனாலும், பணக்காரன் ஆகவேண்டும் என்று விரும்பாத ஏழையையும் நான் மிக அபூர்வமாகத் தான் சந்தித்திருக்கிறேன்”

நம்மில் அநேகர், பணம் நமக்கு சந்தோஷத்தை தராது, என்பதை ஏற்றுக்கொள்வர். ஆனாலும், அதனை நிச்சயிக்க கூடுதலான பணத்தை சேர்த்துக்கொண்டும் இருப்பர்.

ராஜா சாலமோனுக்கு இருந்த சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒருவேளை அவர் பெரும் செல்வந்தராக இருந்தாலும், பணத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்று அறிந்திருந்தார். நீதிமொழிகள் 8 அவருடைய அனுபவத்தை ஒட்டி எழுதப்பட்ட ஒன்று. அது எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் “ஞானத்தின் அழைப்பு”. “என் சத்தம் மனுபுத்திரருக்கு தொனிக்கும்…என் வாய் சத்தியத்தை விளம்பும் (வச. 4-7). வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல (வச. 10-11).

ஞானம் சொல்கிறது, “பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன் (வச. 19-21).

மெய்யாகவே இவைகள் அறிய செல்வங்கள்!

மன்னிக்கும் கலை

ஒரு மதியநேரம், தகப்பனும் இரண்டு மகன்களும்: மன்னிக்கும் கலை எனும் தலைப்பில் அமைந்த கலைக்கண்காட்சி ஒன்றில் இரண்டு மணிநேரம் செலவிட்டேன். இயேசு சொன்ன கெட்ட குமாரன் (லூக். 15:11-31) உவமையே அதன் கருபொருள். மற்ற சித்திரங்களை காட்டிலும் என்னை எட்வர்டு ரியோஜாஸ் அவர்களின், “கெட்ட குமாரன்” கலைவண்ணம் அதிகமாய் கவர்ந்தது. முன்னொரு நாளில் வீட்டைவிட்டு வெளியேறிய குமாரன், கிழிந்த அழுக்குபடிந்த உடைகளுடன் தலையை தொங்கவிட்டு வீடுதிரும்பும் காட்சி.. மரித்தோரின் தேசம் அவனுக்கு பின்னால் இருக்க, அவனுடைய தகப்பன் ஏற்கனவே அவனை நோக்கி ஓடிவரும் அந்த பாதையில் மகன் அடியெடுத்து வைக்கிறான். அந்த சித்திரத்தின் கீழ், இயேசு சொன்ன வார்த்தைகள் “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி…” (வச. 20).

தேவனுடைய மாறாத அன்பு என்னுடைய வாழ்கையை எப்படி மாற்றியது என்பதை சிந்தித்தேன். நான் அவரைவிட்டு விலகினாலும், அவர் என்னைக் கைவிடவில்லை. என் வருகையை எதிர்நோக்கினார், கூர்ந்து கவனித்தார், அதற்காக காத்திருந்தார். அவருடைய அன்பிற்கு நான் தகுதியற்றவன் என்றாலும், அந்த அன்பு ஒருபோதும் மாறாதது. அன்பைக் குறித்த கரிசனை நமக்கு இல்லாமல்போனாலும், அந்த அன்பு நம்மைவிட்டு நீங்காதது.

எப்படி இந்த உவமையில் வழிதவறின மகன் திரும்பிவந்தபோது தகப்பன் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாரோ, அதுபோல நாம் குற்றவாளிகள் என்றாலும், நம்முடைய பரமதந்தை நம்மையும் வரவேற்கக் காத்திருக்கிறார். “என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்” (வச. 23-24).

இன்றும் அவரிடம் திரும்புவோரின் நிமித்தம் கர்த்தர் களிகூருகிறார்-உண்மையில் அது ஒரு கொண்டாடதக்க நிகழ்வு!

செயல்முறை விளக்கத்தின் வல்லமை

என் வீட்டிலுள்ள சில காரியங்களை நான் செய்ய முற்படும் போது, அவை பொதுவாக, மற்றொருவரை நான் வேலை செய்யும் போது ஏற்படுத்திய சேதத்தைச் சரி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளும். ஆனால் யு-டியூபில் ஒரு மனிதன் படிப்படியாக செயல்முறை விளக்கம் தந்ததைக் கடைபிடித்து சமீபகாலத்தில் நான் வீட்டு உபயோகப் பொருளொன்றை வெற்றிகரமாகச் சரி செய்து விட்டேன்.

பவுல், தன்னுடைய இளம் சீடருக்கு ஒரு வலிமையான எடுத்துக்காட்டு. தீமோத்தேயு பவுலோடு பிரயாணம் பண்ணி, அவருடைய செயல்களைக் கவனித்தார். ரோமாபுரியிலுள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து தீமோத்தேயுவிற்கு நீயோ என் போதகத்தையும், நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும் ... துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்” (2 தீமோ. 3:10-11) என எழுதுகிறார். அத்தோடு அவர் தீமோத்தேயுவிடம் ‘‘நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்” (வச. 14-15) எனவும் எழுதுகின்றார்.

நம்முடைய வாழ்வையும் தேவனுடைய வார்த்தையாகிய கற்பாறையின் மேல் கட்டும்படி பவுலின் வாழ்வு நமக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்துள்ளது. அவர் தீமோத்தேயுவிடம், வேதாகமம் ஒரு வலிமையான, தேவன் தந்த பொக்கிஷம் அதனை அவன் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதாலும், வாழ்ந்து காட்டுவதாலும் தேவனுடைய சீடன் என்பதைக் காட்டுமாறு கூறுகின்றார்.

தேவன் மீதுள்ள நம்பிக்கையில் நாம் வளர, நமக்கு உதவிய தேவனுடைய பிள்ளைகளுக்கு நன்றி கூறும்போது நாமும் அவர்களைப் போன்று சத்தியத்தில் வாழ்ந்து பிறருக்குக் கற்றுக் கொடுப்போம். அவர்களை ஊக்குவிப்போம்.

இதுவே செயல்முறை விளக்கத்தின் வல்லமை.

அனைவரும் சேர்ந்து இழுப்போம்

ஒரு வருடத்தில் 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் பணத்தை செலவழித்து தடைகள் நிறைந்த பாதையில் பல மைல்கள் ஓடுகின்றனர். அவ்வழியில் செங்குத்தான சுவர்களின் மேலேறுகின்றனர், சகதிகளின் வழியே கடினப்பட்டு ஓடுகின்றனர். தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு செங்குத்தான குழாயின் வழியே ஏறுகின்றனர். இவையெல்லாம் ஏன்? சிலர் இவற்றைத் தங்கள் சகிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் சவால்களாகவும், அல்லது அவர்களின் அச்ச உணர்வை நிவிர்த்திக்கும் வழியெனவும் கருதுகின்றனர். வேறு சிலருடைய கவர்ச்சி, அவர்களுடய கூட்டு முயற்சி. அவர்களோடு சேர்ந்த போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவவும், உறுதுணையாகவும் செயல்படுகின்றனர். ஒரு மனிதன் இதனை ‘‘நியாயந் தீர்க்கப்படாத மண்டலம்” என அழைக்கின்றார். ஏனெனில் இனம் தெரியாத நபர்கள் ஒருவருக்கொருவர் உதவி, தங்கள் ஓட்டத்தை முடிக்கச் செய்கின்றனர் (ஸ்டீபனி நோவிட்ஸ், த வாஷிங்டன் போஸ்ட்)

இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வாழ்வில் காட்டும்படி, வேதாகமம் நம்மை குழுவாக வேலை செய்யத் தூண்டுகிறது. ‘‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடி வருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும் (எபி. 10:24-25).

நம்முடைய விசுவாச ஓட்டத்தின் இலக்கு ‘‘முதலாவது முடிப்பது” அல்ல, நம் ஓட்டத்தின் போது பிறருக்கு ஊக்கங்களைக் கொடுத்து, ஒரு முன் மாதிரியாக அமைந்து, உதவிக்கரம் நீட்டி பிறரையும் இலக்கினை அடையச் செய்வதேயாகும்.

நாம் எதிர்பார்க்கும் அந்த நாள், நம் வாழ்வை இவ்வுலகில் முடிக்கும்போது வரும். அதுவரையிலும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தியும், உதவுவதற்கு தயாராகவும், அவர்களையும் நம்மோடு இழுத்துக்கொண்டே ஒவ்வொரு நாளும் ஓடுவோம்.

நம்முடைய உறுதியான அஸ்திபாரம்

அநேக ஆண்டுகளாக எங்கள் பட்டணத்தின் மக்கள் நிலச்சரிவுக்குள்ளாகக் கூடிய பகுதியில் வீடுகள் கட்டவும் வீடுகள் வாங்கவும் செய்தனர். சிலருக்கு அந்த நிலப்பகுதியின் நிலையற்றத் தன்மை தெரியும். வேறு சிலருக்கு அதைப் பற்றியே தெரியாது. புவியியலாளர்களும் பட்டணத்தின் ஒருங்கமைப்பாளர்களும் பாதுகாப்பான எச்சரிப்பு விளக்கப்படவில்லை அல்லது அலட்சியப்படுத்தப்பட்டது (த கெசட் கொலோரடோ ஸ்பிரிங்ஸ், ஏப்ரல் 27, 2016) அங்குள்ள வீடுகளிலிருந்து காணக்கூடிய காட்சி பிரமிக்கச் செய்யும். ஆனால் வீட்டின் கீழேயுள்ள நிலமோ அதன் அமைப்பின்படி அழிவுக்குள்ளாகக் கூடியது, ஆபத்தானது.

முந்தைய இஸ்ரவேலரில் அநேகர் விக்கிரக வணக்கத்தை விட்டு விடும்படி ஜீவனுள்ள தேவன் கொடுத்த எச்சரிப்பை அலட்சியப்படுத்தினர். அவர்களின் கீழ்படியாமையால் கிடைத்த சோக முடிவை பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற போதிலும், தேவன் தம்மிடம் திரும்பி, தம்முடைய வழிகளைப் பின்பற்றும் தன்னுடைய ஜனங்களுக்கு மன்னிப்பு நம்பிக்கை என்ற செய்தியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

ஏசாயா தீர்க்கதரிசி பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும். கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம் (ஏசா. 33:6) எனக் கூறுகிறார்.

இன்றைக்கும் பழைய ஏற்பாட்டுக் காலங்களிலிருந்தது போல, தேவன் நாம் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார். நம் வாழ்வை எதின் மீது கட்டப் போகிறோம்? நம்முடைய சொந்த வழிகளில் நடக்கப் போகிறோமா? அல்லது வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள என்றும் நிலைத்திருக்கும் அவருடைய கொள்கைகளைத் தழுவிக் கொள்ளப் போகிறோமா?

நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான் வேறஸ்திபாரம் மணல் தான் (எட்வர்ட் மோட்)

பெருமையினால் வரும் பிரச்சனை

புகழ்ச்சியின் உச்ச நிலையையோ அல்லது தாங்கள் உயிரோடிருக்கும் காலத்திலேயே சாதனைபடைத்த மக்களை தங்கள் காலத்திலேயே சரித்திரம் படைத்தவர்கள் என சொல்வதுண்டு. பேஸ் பால் விளையாட்டினை தொழிலாகக் கொண்ட எனது நண்பர் உலக அளவில் அநேக விளையாட்டு வீரர்களைச் சந்தித்திருக்கிறார். அவர்களில் அநேகர் தங்கள் மனத்தளவில் மட்டும் சரித்திரம் படைக்கின்றனர் என்றார். தங்களைக் குறித்து பெருமை கொண்டவர்களாக இருக்கின்றனர். பெருமை அழிவிற்கு வழி வகுக்கின்றது. பெருமை நம்மைப்பற்றிய கண்ணோட்டத்தைத் திரித்துவிடுகிறது. தாழ்மை உண்மையான கண்ணோட்டத்தைத் தருகிறது.

நீதிமொழிகளை எழுதியவர் அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மன மேட்டிமை (16:18) என்கின்றார். சுய கவுரவம் என்ற கண்ணாடியின் முன் நின்று நம்மைப் பார்க்கும் போது, சிதைந்து போன வடிவத்தைக் காட்டுகிறது. நம்மை உயர்த்தும் போது, அது விழுதலுக்கு வழி வகுக்கிறது.

அகங்காரம் என்ற நச்சுவிற்கு எதிர் மருந்து என்னவெனின், தேவனிடமிருந்து வரும் உண்மையான தாழ்மை. அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப் பார்க்கிலும் சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாய் இருப்பது நலம் (வச. 19).

இயேசுவும் தன்னுடைய சீடர்களுக்கு, உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே மனுஷக்குமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் (மத். 20:26-28) எனக் கூறினார்.

நம்முடைய சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் பாராட்டுகளைப் பெறுவதில் தவறில்லை. இதில் சவால் என்னவெனில் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தவரையே நோக்கிக் கவனித்தலே. அவர் கூறுவது நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத். 11:29).

ஒரு சிறு குழந்தையைப் போல

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மாலையில் என்னுடைய இரண்டு வயது மகளுடன் இரவு ஜெபத்தை முடிக்கும் போது, என் மகள் என் மனைவியிடம் ஒரு வியக்கத்தக்க கேள்வியைக் கேட்டாள். “அம்மா, இயேசு எங்கேயிருக்கிறார்? அதற்கு என் மனைவி லுஆன், “இயேசு கிறிஸ்து மோட்சத்திலிருக்கிறார், மேலும் அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். இப்பொழுது நம்மோடும் இருக்கிறார். நீ அவரை என் இருதயத்தில் வாரும் என்று அழைத்தால் அவர் உன் இருதயத்திலும் இருக்க முடியும்” என்று கூறினாள்.

“நான் இயேசு என் இருதயத்தில் இருக்க விரும்புகிறேன்.”

“ஒரு நாள் நீ அவரை வரும்படி கேள்.”

“நான் இப்பொழுதே அவர் என் இருதயத்தில் வரும்படி கேட்பேன்.”

எனவே என்னுடைய சிறிய மகள் சொன்னாள், “இயேசுவே, தயவு கூர்ந்து என் இருதயத்தினுள் வாரும். வந்து என்னோடிரும்” அன்று முதல் இயேசுவோடு அவளுடைய விசுவாச பயணம் துவங்கியது.

இயேசுவின் சீடர் பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாய் இருப்பான் என்று கேட்டபோது, அவர் ஒரு சிறு பிள்ளையை தம்மிடத்தில் அழைத்து அவர்கள் நடுவே நிறுத்தி (மத். 18:1-2) “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போலாகாவிட்டால் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்… இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். (வச. 3-5) என்றார்.

இயேசுவின் கண்கள் பார்க்கின்ற படியே நாமும் ஒரு நம்பிக்கையுள்ள குழந்தையை நம் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவருக்கு தன்னுடைய இருதயத்தைத் திறக்கிற அனைவரையும் வரவேற்க கற்பிக்கப்பட்டுள்ளோம். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். பரலோகராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று இயேசு சொன்னார் (19:14)

தாமதத்தைக் கையாளுதல்

ஓர் உலகளவிலான கணினி அமைப்பின் செயலிழப்பினால், பரவலாக விமான சேவைகள் ரத்தாகி, ஆயிரக்கணக்கான பிரயாணிகள் விமானநிலையத்தில் தவித்தனர். ஒரு பனிபுயலின்போது ஏற்பட்ட வாகன விபத்துக்களால் பல பிரபல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. ஒரு நபர் தான் “இப்பொழுதே செய்கிறேன்” என்று வாக்களித்ததைச் செய்யத் தவறினார். இப்படிப்பட்ட விளைவுகளால் ஏற்படும் தாமதம் பெரும்பாலும் கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்கும். ஆனால், இயேசுவை பின்பற்றுபவர்கள், உதவிக்கு அவரை நோக்கிப்பார்க்கக் கூடிய சலுகையைப் பெற்றுள்ளோம்.

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் பொறுமைக்கு பெரிய எடுத்துக்காட்டு யோசேப்பு. அவன் தன் பொறாமை கொண்ட சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்றுப் போடப்பட்டான். தன் எஜமானனின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டு, எகிப்தில் சிறையில் அடைபட்டான். “யோசேப்பு சிறைச் சாலையில் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்தார்” (ஆதி. 39:20-21). சில வருடங்களுக்குப் பின், யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களின் அர்த்தத்தைக் கூறியபோது, அவனை எகிப்து தேசம் முழுமைக்கும், பார்வோனுக்கு அடுத்தப்படியான அதிகாரியாக்கினான் (அதிகாரம் 41).

ஒரு பஞ்சத்தின் போது யோசேப்பின் சகோதரர் அவனிடம் தானியம்கொள்ள வந்தபோது, அவனுடைய பொறுமைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது. “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம். அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினர்… ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்” (45:4-5,8).

நமக்கு ஏற்படும் தாமதம் குறுகியதோ, அல்லது நீண்டதோ, யோசேப்பைப் போன்று தேவன் மீது விசுவாசத்தோடு காத்திருக்கும் போது, நாம் பொறுமையையும் முன்னோக்குப் பார்வையையும், சமாதானத்தையும் பெற்றுக் கொள்வோம்.

ஓற்றுமையை நாடுதல்

1950 ஆம் ஆண்டு முதல் நான் வளர்ந்த பட்டணத்தின் அனுதின வாழ்வில் உட்புகுந்திருந்த இனவெறி, மற்றும் பிரிவினைகளைக் குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை. பள்ளிகளிலும், உணவகங்களிலும், பொது போக்குவரத்து சாதனங்களிலும், அருகில் வசிப்பவர்களிடையேயும் வெளிப்புறத் தோல் நிறத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டிருந்தனர்.

1968 ஆம் ஆண்டு நான் அமெரிக்க ஐக்கிய இராணுவ அடிப்படை பயிற்சியில் சேர்ந்த போது, என்னுடைய இந்த அணுகுமுறை மாறியது. என்னுடைய படையில், வெவ்வேறு கலாச்சாரத்திலிருந்து வந்த இளைஞர்களைச் சேர்த்திருந்தனர். நாங்கள் எங்களுடைய பணியின் நோக்கத்தை அடைவதற்கு எங்களுக்குள் புரிந்துகொள்ளல், ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளல், இணைந்து பணிபுரிதல் ஆகியவை தேவை என்பதை முதலில் கற்றுக் கொண்டோம்.

முதலாம் நூற்றாண்டில் கொலோசெயிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதும் போது சபை அங்கத்தினரிடையேயிருந்த வேறுபாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவர்களுக்கு “அதிலே கிரேக்கனென்றும், யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், இல்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” (கொலோ. 3:11) என எழுதுகிறார். ஒரு குழுவில் மேலோட்டமான, மற்றும் ஆழ்ந்த வேறுபாடுகள் எளிதாக மக்களை பிரித்துவிடும், எனவே பவுல் அவர்களிடம், “உருக்கமான இரக்கத்தையும் தயவையும், மனத் தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 12) என்கிறார். இத்தகைய நற்குணங்களோடு அன்பையும் தரித்துக் கொண்டால், அது அனைவரையும் ஒன்றாக இணைக்கும் என்பதை “இவை எல்லாவற்றின் மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச: 14) என்று கூறுகிறார்.

இந்த கொள்ளைகளை செயல்படுத்தும் போது தேவன் நம்மை அழைத்த நோக்கத்தைச் செயல்படுத்தத்துவக்குகிறோம். விசுவாசிகளாகிய நாம் அனைவருக்கும் பொதுவாயிருப்பது, நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்பு, அதனடிப்படையில் கிறிஸ்துவில், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கத்தினராகிய நாம் புரிந்துகொள்ளலையும், சமாதானத்தையும், ஓற்றுமையையும் நாடிப் பெற்றுக்கொள்ளுவோம்.

நம்மிடையேயுள்ள அற்பமான வேறுபாடுகளிடையே, கிறிஸ்துவுக்குள் மிகப்பெரிய ஒற்றுமையைத் தேடிப் பெற்றுக்கொள்வோம்.