கிறிஸ்துவுக்கென நன்மதிப்பு
புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி நாட்களில், சார்லி வார்டு இரண்டு விளையாட்டுகளில் மாணவர் அணி வீரராக இருந்தார். 1993 ஆம் ஆண்டில், இளம் பந்தெறி வீரனாக, கல்லூரி அளவில் நாட்டின் சிறந்த அமெரிக்கக் கால்பந்து வீரராக ஹெய்ஸ்மேன் கோப்பையை வென்றார். மேலும் அவர் கூடைப்பந்து அணியிலும் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் போட்டிக்கு முன்னான உரையாடலில், அவரது கூடைப்பந்து பயிற்சியாளர் தனது வீரர்களுடன் பேசும்போது சில மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது சார்லிக்கு பிடிக்கவில்லை என்பதைக் கவனித்த அவர், "சார்லி, என்னவாயிற்று ?" என்று கேட்க, வார்டு, “அய்யா, உங்களுக்குத் தெரியும், பயிற்சியாளர் பவுடன் [கால்பந்து பயிற்சியாளர்] இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை, மேலும் அவர் எங்களை மிகவும் கடினமாக விளையாட வைப்பார்" என்றார்.
கிறிஸ்துவை பிரதிபலிக்கும் சார்லியின் சுபாவம், இந்தப் பிரச்சினையைப் பற்றி அவரது கூடைப்பந்து பயிற்சியாளரிடம் மென்மையாகப் பேசச் செய்தது. உண்மையில், அவர் சார்லியிடம் பேசியதை குறித்து: "ஒரு தூதன் உங்களைப் பார்ப்பது போல் இருந்தது" என்று அந்த பயிற்சியாளர் ஒரு நிருபரிடம் கூறினார்.
அவிசுவாசிகளிடம் நல்மதிப்பையும், கிறிஸ்துவுக்கென உண்மையுள்ள சாட்சியையும் பேணுவது கடினம். ஆனால் அதே சமயம், அவர் நமக்கு உதவி செய்து வழிநடத்தும்போது, இயேசுவின் விசுவாசிகள் அவரைப் போலவே மேலும் வளர முடியும். தீத்து 2ல், வாலிபரும், மற்றும் பொதுவாக அனைத்து விசுவாசிகளும், "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும்" (வ.6) மற்றும் "நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பே(சவும்)சுகிறவனுமாயிருப்பாயாக” (வ.8) அழைக்கப்படுகிறார்கள்.
கிறிஸ்துவின் பெலத்தால் நாம் அவ்வாறு வாழும்போது, அவரைக் கனப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு நன்மதிப்பையும் உருவாக்குவோம். தேவன் நமக்குத் தேவையான ஞானத்தை வழங்குவதால், நாம் சொல்வதற்குச் செவிகொடுக்க ஜனங்களுக்கு நியாயமான காரணம் உண்டாயிருக்கும்.
இயேசுவைப் பற்றி மக்களிடம் பேசுங்கள்
பவுல் யூதர்களின் சுத்திகரிப்பு முறைமைக்காக ஆலயத்திற்குச் சென்றிருந்தார் (அப் 21:26). ஆனால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு எதிராகப் போதிப்பதாகக் கருதிய சில கிளர்ச்சியாளர்கள், அவரை கொல்ல முயன்றனர் (வ.31). ரோமானிய வீரர்கள் விரைந்து தலையிட்டு, பவுலைக் கைது செய்து, அவரைக் கட்டி, ஆலய பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்; “இவனை அகற்றும்” (வ.36) என்று அந்தக் கும்பல் கூச்சலிட்டது.
இந்த அச்சுறுத்தலுக்கு அப்போஸ்தலன் எவ்வாறு எதிர்வினையாற்றினார்? படைகளின் தளபதியிடம், "ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று" என்று கேட்டார் (வ. 39). ரோமானியத் தலைவர் அனுமதி அளித்தபோது; பவுல், இரத்தம் ஒழுக காயத்துடன், கோபமான கூட்டத்தினரிடம் திரும்பி, இயேசுவின் மீதான தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார் (22:1-16).
இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பழைய வேதாகம கதையோடு நம்மைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதே கடினமாக இருக்கும். மிகச் சமீபத்தில், விசுவாசிகளைத் தொடர்ந்து துன்புறுத்தும் ஒரு நாட்டில், சிறையில் அடைக்கப்பட்ட இயேசுவின் விசுவாசியான ஒரு நண்பரைப் பார்க்கச் சென்ற பீட்டர் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பீட்டர் ஒரு இருண்ட சிறை அறையில் தூக்கி எறியப்பட்டார் மற்றும் விசாரணையின் போது கண்கள் கட்டப்பட்டிருந்தார். கண்கட்டை அவிழ்த்தபோது, நான்கு வீரர்கள் துப்பாக்கியுடன் தன்னை குறி வைத்திருப்பதைக் கண்டார். பீட்டரின் மறுமொழி? அவர் அதை “அவரது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சரியான வாய்ப்பு" என்று கண்டார்.
இயேசுவுக்காக ஓடுதல்
100 மீட்டர் விரைவோட்டத்தை பற்றி நாம் குறிப்பிடுகையில், தற்போதைய உலக சாதனையாளரான உசைன் போல்ட் நினைவுக்கு வரலாம். ஆனால் ஜூலியா "ஹரிக்கேன்" ஹாக்கின்ஸை நாம் மறக்க முடியாது. 2021 ஆம் ஆண்டில், லூசியானா முதியோருக்கான விளையாட்டுப் போட்டியில் ஜூலியா 100 மீட்டர் விரைவோட்டத்தில் மற்ற அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் முன்பாக இறுதிக் கோட்டைக் கடந்து வெற்றி பெற்றார். அவரது நேரம் போல்ட்டின் 9.58 வினாடிகளை விடச் சற்று குறைவு; 60 வினாடிகளுக்கு மேல். ஆனால் அவளுக்கு 105 வயது!
ஒரு பெண் இந்த வயதிலும் வேக ஓட்டம் ஓடிக்கொண்டிருப்பது பெரிய காரியம். மேலும் இயேசுவை தங்கள் இலக்காகக் கொண்டு ஓடுவதை நிறுத்தாத விசுவாசிகளைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு இன்னும் நிறைய உண்டு (எபிரெயர் 12:1-2). வாழ்க்கையின் முதுமையிலும் உண்மையுள்ளவர்களைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்: “நீதிமான் பனையைப் போல் செழித்து . . . அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (92:12-14).
இவ்வகையான தரத்தையுடைய முதிர்ந்த விசுவாசிகள், அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் மேலும் அறிவுறுத்தலைக் காணலாம். முதிர்வயதுள்ள புருஷர்கள் "விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி" (தீத்து 2:2), முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் "நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும்" (வ. 3) சொல்கிறார்.
ஓட்டத்தை நிறுத்துவதற்கு முதிர்ந்த விசுவாசிகளுக்கு அழைப்பு இல்லை. தடகள பாதையில் ஜூலியா செய்வது போல் அல்ல, ஆனால் அவர்களுக்குத் தேவையான பெலனை அவர் வழங்குவதால் தேவனை மகிமைப்படுத்தும் வழிகளில் ஓடவேண்டும். அவருக்கும் பிறருக்கும் நன்றாக ஊழியம் செய்ய அனைவரும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவோம்.
தேவன் அருளிய பாதுகாப்பு
நானும் என் மனைவியும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மைல்கள் மிதிவண்டியில், எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பாதைகளில் ஒட்டுகிறோம். இந்த அனுபவத்தை மேம்படுத்த, எங்கள் மிதிவண்டிகளுடன் சில பாகங்களை இணைத்துள்ளோம். ஜெனிபரின் மிதிவண்டியில் ஒரு முன் விளக்கு, ஒரு பின் விளக்கு, ஒரு ஓட்ட அளவி மற்றும் ஒரு சிறிய பூட்டு ஆகியவை உள்ளன. என்னுடையதில் தண்ணீர் புட்டி வைக்கும் பகுதியுண்டு. உண்மையில், இத்தகைய உதிரி இணைப்பு பாகங்களின்றி ஒவ்வொரு நாளும் எங்கள் பாதையில் வெற்றிகரமாகச் சவாரி செய்து, போதுமான தூரத்தை எளிதாகக் கடக்க முடியும். இவைகள் உதவிகரமானவை ஆனால் அவசியமானவையல்ல.
எபேசியர் புத்தகத்தில், அப்போஸ்தலன் பவுல் மற்றுமொரு துணை பாகங்களைப் பற்றி எழுதுகிறார்; ஆனால் இவை அத்தியாவசியமானவை. இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை வெற்றிகரமாக வாழ்ந்திட, இவற்றை "தரித்துக்கொள்ளுங்கள்" என்றார். நம் வாழ்க்கை எளிதான பயணங்கள் அல்ல. நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம், அதில் நாம் "பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க" (6:11) வேண்டும், எனவே நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும்.
வேத ஞானம் இன்றி, நாம் தவறானதை ஏற்றுக்கொள்ள நடத்தப்படலாம். இயேசு தமது "சத்தியத்தின்படி" வாழ்ந்திட நமக்கு உதவாவிடில், நாம் பொய்களுக்கு அடிபணிவோம் (வ.14). "சுவிசேஷம்" இன்றி நமக்கு "சமாதானம்" இல்லை (வ.15). "விசுவாசம்" நம்மைக் காக்காவிடில், நாம் சந்தேகத்திற்கு ஆளாவோம் (வ.16). நமது "இரட்சிப்பு" மற்றும் பரிசுத்த ஆவியானவர், தேவனுக்காக நன்றாய் வாழும்படி நம்மை நங்கூரமிடுகிறாா் (வ.17). இதுவே நமது கவசம்.
வாழ்க்கையின் உண்மையான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும் பாதையில் நாம் பயணிப்பது எவ்வளவு அவசியம். பாதையில் எதிரிடும் சவால்களுக்குக் கிறிஸ்து நம்மை ஆயத்தப்படுத்தும்போது; தேவன் அளிக்கும் சர்வாயுதவர்க்கத்தை நாம் “தரித்துக்கொள்ளுகையில்” நாம் அதனை நிறைவேற்றுகிறோம்.
இனி அந்நியர் இல்லை
“நீங்கள் இந்த இடத்திற்கு உரியவர் இல்லை.” அந்த வார்த்தைகள் ஒரு எட்டு வயது சிறுமியின் இதயத்தை நசுக்கியது, தொடர்ந்து வேதனைப்பட்டாள். அவரது குடும்பம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து புதிய நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளது. மேலும் அவரது குடியேற்ற அட்டையில் அந்நியர் என்ற வார்த்தை முத்திரையிடப்பட்டிருந்தது. அவள் அந்த நாட்டிற்கு சொந்தமானவள் இல்லை என்று உணர்ந்தாள்.
வயது முதிர்ந்தவளானாலும், இயேசுவை விசுவாசித்தாலும் அவள் தன்னை ஒரு விரும்படாத அந்நியனாகவே உணர்ந்தாள். அவளுடைய வேதாகமத்தைப் படிக்கும்போது, எபேசியர் 2-ன் வாக்குறுதிகளை அவள் கண்டுபிடித்தாள். 12ஆம் வசனத்தில் அந்நியர் என்ற அந்த கடினமான வார்த்தையை அவள் கண்டுபிடித்தாள்: “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.” ஆனால் அவள் தொடர்ந்து வாசிக்கையில், கிறிஸ்துவின் தியாகம் தன் நிலையை எப்படி மாற்றியது என்பதைப் பார்த்தாள். அவள் வசனம் 19 ஐப் படித்தாள். “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல்,” என்பதை வாசித்து, தேவ ஜனத்துடன் அவள் ஒரு குடிமகளாய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தாள். தான் பரலோகத்தின் பிரஜை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். இனி ஒருபோதும் அவள் வெளிநாட்டினராக இருக்க மாட்டாள். தேவன் அவளை ஏற்றுக்கொண்டார்.
நம்முடைய பாவத்தின் காரணமாக, நாம் தேவனுக்கு அந்நியராயிருக்கிறோம். ஆனால் நாம் அப்படியே இருக்க வேண்டியதில்லை. இயேசு “தூரமாயிருந்த” இருந்த அனைவருக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தார் (வச. 17), தம்மை நம்புகிற அனைவரையும் தம்முடைய நித்திய ராஜ்யத்தின் சக குடிமக்களாக மாற்றி, கிறிஸ்துவின் சரீரமாக ஐக்கியப்படுத்தினார்.
அழகான ஒருவர்
130 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈஃபிள் கோபுரம் பாரிஸ் நகரத்தின் மீது கம்பீரமாக நிற்கிறது. இது கட்டிடக்கலையின் மேன்மையாகவும் அழகின் அடையாளமாகும் திகழ்கிறது. நகரம் அதன் மகத்துவத்தின் முக்கிய அங்கமாக கோபுரத்தை பெருமையுடன் ஊக்குவிக்கிறது.
இருப்பினும், அது கட்டப்படும்போது, பலர் அதைப் பற்றி கொஞ்சம் யோசித்தார்கள். உதாரணமாக, பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசண்ட், இது “தொழிற்சாலை புகைபோக்கி போன்ற அபத்தமான மெல்லிய வடிவம் கொண்டது" என்று விமர்சித்தார். அவனால் அதன் அழகைப் பார்க்க முடியவில்லை.
இயேசுவை நேசிப்பவர்களும், தம் இரட்சகராக அவரிடம் இதயங்களை ஒப்படைத்தவர்களும், அவர் யார், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். ஆயினும், ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார்: “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (53:2).
ஆனால் அவர் நமக்காகச் செய்தவற்றின் உன்னதமான மகத்துவம், மனிதர்கள் எப்போதும் அறிந்த மற்றும் அனுபவிக்கும் அழகின் உண்மையான, தூய்மையான வடிவமாகும். அவர் “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (வச. 4). “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (வச. 5).
சிலுவையில் நமக்காக பாடுபட்டு, நம் பாவங்களின் சொல்லொணாத் தண்டனையை சுமந்துகொண்ட அவரைப் போல் அழகானவர், அருமையானவர் எவரையும் நாம் ஒருபோதும் அறிய முடியாது.
அதுதான் இயேசு. அழகான ஒருவர். அவரைப் பார்த்து வாழ்வோம்.
உதாரத்துவமாய் கொடுத்தல்
பள்ளி பாடங்களுக்குப் பின் வேதாகம படிப்பு என்ற நோக்கத்தில் இயங்கும் ஒரு குழுவில், வாரத்திற்கு ஒருமுறை என் மனைவி சுமதி ஊழியம் செய்கிறாள். அதிலே, போரினால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காகப் பணத்தை நன்கொடையாக அளிக்கும்படி குழந்தைகளிடம் கேட்கப்பட்டது. சுமதி எங்கள் பதினொரு வயது பேத்தி ரஞ்சனியிடம் இத்திட்டத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாரத்திற்குப் பிறகு, அவளிடமிருந்து எங்களுக்கு ஒரு கடித உறை கிடைத்தது. அதில் சுமார் ரூ. 250 இருந்தது: “உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்காக என்னிடம் இருப்பது இதுதான். மேலும் பின்னர் அனுப்புகிறேன்" என்ற குறிப்புமிருந்தது.
ரஞ்சனி உதவ வேண்டும் என்று சுமதி பரிந்துரைக்கவில்லை, ஆனால் ஆவியானவர் அவளைத் தூண்டியிருக்கலாம். மேலும் இயேசுவை நேசித்து அவருக்காக வாழ முற்படும் ரஞ்சனி செயல்பட்டாள்.
ஒரு தயாள மனதிலிருந்து வந்த இந்த சிறிய பரிசை சிந்திக்கையில், நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். கொடுத்தல் குறித்து 2 கொரிந்தியர் 9ல் பவுல் வழங்கிய சில அறிவுரைகளை இது பிரதிபலிக்கிறது. முதலாவது அப்போஸ்தலன், நாம் பெருக விதைக்கும்படி அறிவுறுத்துகிறார் (வ. 6). "என்னிடம் இருப்பதெல்லாம்" என்பது நிச்சயமாகவே பெருக விதைப்பதாகும். நாம் “கட்டாயத்தினால்” (வ. 7) அல்ல, தேவன் வழிநடத்தும் விதமாகவும் நம்மால் இயன்றதைப் போலவும் நம்முடைய ஈவுகள் மகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பவுல் எழுதினார். மேலும் சங்கீதம் 112:9ஐ மேற்கோள் காட்டி, "ஏழைகளுக்கான ஈவுகளின்" (வ. 9) மதிப்பைக் குறிப்பிட்டார்.
கொடுக்கும்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று கேட்போமாக. அவர் நம்மை வழிநடத்தும் போது, தேவைப்படுபவர்களுக்கு நம்முடைய ஈவுகளை வழங்குவதில் நாம் தாராளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது, "தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும்" (2 கொரிந்தியர் 9:11). அதுவே தாராள மனதுடன் கொடுப்பது.
தேவன் செய்ததை அவர்களுக்குச் சொல்
எனது கல்லூரி நண்பர் பில் டோபியாஸ் ஓர் தீவில் பல வருடங்களாய் மிஷனரியாக சேவை செய்துள்ளார். ஓர் இளைஞன் தன் சொந்த ஊரைவிட்டு வெளியேறி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டடையச் சென்றக் கதையைக் கூறுகிறார். ஆனால் வேறொரு நண்பர் அவரை தேவாலயத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டார்.
ஓர் இளைஞன் “பில்லிசூனியத்தில் மூழ்கியிருந்த” தனது மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல விரும்பினான். அதனால் ஜனங்களை சந்திக்க ஓர் ஊழியக்காரரைத் தேடினான். ஆனால் ஊழியக்காரரோ அவரிடம் “கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்” (மாற்கு 5:19 ஐப் பார்க்கவும்). அதைத்தான் அந்த இளைஞன் செய்தான். அவனது சொந்த ஊரில் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். அந்தப் பட்டணத்தில் இருந்த மாயவித்தைக்கார மருத்துவர் இயேசுவே “வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்” (யோவான் 14:6) என்று ஏற்றுக்கொண்டபோது மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவன் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்த பிறகு, அவரைப் பற்றி ஊர் முழுவதும் கூறினான். நான்கு ஆண்டுகளுக்குள், ஓர் இளைஞனின் சாட்சி அப்பகுதியில் ஏழு திருச்சபைகளை நிறுவ வழிவகுத்தது.
2 கொரிந்தியரில், கிறிஸ்துவை இன்னும் அறியாதவர்களுக்கு நற்செய்தியை அறிமுகப்படுத்துவதற்கான தெளிவான திட்டத்தை பவுல் முன்வைக்கிறார். அது அந்த இளைஞனுக்கு சொல்லப்பட்ட ஆலோசனையோடு ஒத்துப்போகிறது. “ஆனபடியினாலே... நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்“ (2 கொரிந்தியர் 5:20). ஒவ்வொரு விசுவாசியிடமும் இயேசு எவ்வாறு அவர்களை புது சிருஷ்டியாய் மாற்றியிருக்கிறார் என்றும் தேவனோடு அவர்கள் எவ்விதம் ஒப்புரவானார்கள் என்றும் சொல்ல ஓர் தனித்துவமான கதை உள்ளது (வச. 17-18). அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வோம்.
தேவனுடைய தற்போதைய மற்றும் நிரந்திர பிரசன்னம்
மிர்னாளினி சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு இருந்த கிறிஸ்தவ நண்பர்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை எப்படிக் கையாண்டார்கள் என்பதை அவள் மதித்தாள். அவர்கள் மீது கொஞ்சம் பொறாமைகூட அவளுக்கு இருந்தது. ஆனால் மிர்னாளினி அவர்கள் வாழ்ந்ததுபோல் வாழ முடியும் என்று நினைக்கவில்லை. கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு அதிக ஒழுங்குகளை கையாளவேண்டும் என்று எண்ணியிருந்தாள். இறுதியில் ஓர் கல்லூரி மாணவி, இயேசு அவளுடைய வாழ்க்கையை பாழாக்குகிற தேவனல்ல, மாறாக, வாழ்க்கையின் கடினமான தருணங்களில், அவர் நம்மோடிருந்து உதவிசெய்கிற தேவன் என்று அவளுக்கு உணர்த்தினாள். அதை புரிந்துகொண்ட மாத்திரத்தில், மிர்னாளினி, இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் அவளுக்கான தெய்வீக அன்பையும் ருசிக்க தீர்மானித்தாள்.
சாலொமோன் ராஜாவும் மிர்னாளினிக்கு இதேபோன்ற அறிவுரைகளை வழங்கியிருக்கலாம். இந்த உலகத்திற்கு அதன் பாடுகள் உண்டு என்பதை அவர் ஒப்புக்கொள்ளுகிறார். “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” (பிரசங்கி 3:1) என்றும் “புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு” (வச. 4) என்றும் பிரசங்கி சொல்லுகிறார். அதுமட்டுமல்ல, இன்னும் அநேகம் இருக்கிறது. தேவன் “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்” (வச. 11). உலகம் என்றால், தேவனுக்கு முன்பாக நாம் வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது.
மிர்னாளினி இயேசுவை விசுவாசித்தபோது (யோவான் 10:10), அவர் வாக்களித்த நிறைவான வாழ்க்கையை பெற்றுக்கொண்டாள். அதைக்காட்டிலும் மேலானவைகளையும் பெற்றாள். விசுவாசத்தின் மூலம் அவளுடைய இருதயத்தில் இருக்கும் நித்தியமானது (பிரசங்கி 3:11), பிரச்சனையில்லாத எதிர்காலத்தையும் (ஏசாயா 65:17) நித்தியமான தேவனுடைய பிரசன்னத்தையும் அடையாளப்படுத்துகிறது.