எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

நம் தேவன் எவ்வளவு பெரியவர்!

மக்களை அடையாளம் காணுவதற்கு அவர்களின் கைரேகையை பயன்படுத்தும் வழக்கம் வெகுகாலமாய் வழக்கத்திலுள்ளது. ஆனால் அதையும் ஏமாற்றக்கூடும். அதேபோன்று மனித கண்களிலிருக்கும் கருவிழியின் வடிவத்தையும் அங்கீகார அடையாளமாய் பயன்படுத்துகின்றனர். ஆனால் கான்டாக்ட் லென்ஸின் மூலம் அந்த அடையாளத்தையும் மாற்ற முடியும். இதுபோன்ற அங்க அடையாள தொழிநுட்பத்தை எளிதில் ஏமாற்றிவிடலாம். எது பிரத்யேகமான தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது? ஒவ்வொரு மனிதனின் இரத்தநாளங்களின் அமைப்புகளை மாற்றியமைக்கவே முடியாது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூமியில் வசிக்கும் எல்லோரைக் காட்டிலும் உங்களுடைய பிரத்யேகமான இரத்தநாள அமைப்பு உங்களை வித்தியாசமான நபராய் அடையாளம் காட்டுகிறது.
நம்மிலிருக்கும் இந்த ஆச்சரியமான வித்தியாசங்களை கருதுகையில், நம் சிருஷ்டிகரை ஆராதிக்கவேண்டும் எனும் வியப்புணர்வே மேலோங்குகிறது. நாம் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டவர்கள் (சங்கீதம் 139:14) என்று தாவீது நமக்கு நினைப்பூட்டுகிறார். அது அக்களிப்பான ஓர் அங்கீகாரம். சங்கீதம் 111:2, “கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது” என்றும் நம்மை நினைப்பூட்டுகிறது.
அந்த தெய்வீக சிருஷ்டிகரே நம் மொத்த கவனத்திற்கும் பாத்திரர். தேவனுடைய கிரியைகளில் மகிழ்கையில், நாம் அவரிலும் மகிழ வேண்டும். அவர் கிரியைகள் பெரியவை, அவரோ அதைக்காட்டிலும் மகத்துவமானவர். அந்த உணர்வே சங்கீதக்காரனை, “தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (சங்கீதம் 86:10) என்று துதிக்கத் தூண்டுகிறது.

ஜெபத்தின் சாரம்சம்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியானபோது, அவர் உடைக்கப்பட்டிருந்த தேசத்தை உருவாக்க வேண்டியிருந்தது. லிங்கன், ஒரு புத்திசாலித்தனமான தலைவராகவும், உயர்ந்த நற்குணங்கள் கொண்ட மனிதனாகவும், தன்னுடைய நன்மதிப்பை ஸ்தாபித்திருந்தாலும், அவருடைய மற்றுமொரு தகுதியே அவருடைய எல்லா செயல்களுக்கும் அஸ்திபாரமாய் திகழ்ந்தது. தன்னிடத்தில் ஒப்பிவிக்கப்பட்ட பொறுப்பை செயல்படுத்துவதற்கு அவர் தகுதியுள்ளவர் அல்ல என்னும் அவருடைய நம்பிக்கையே அந்த தகுதி. தன்னுடைய இயலாமைக்கான அவருடைய பதில், லிங்கன் சொல்லுகிறார்: “எனக்கு எங்கும் செல்லுவதற்கு வழியில்லை என்ற நிலைமையினால் நான் பலமுறை முழங்காலில் நிற்க உந்தப்பட்டேன். அந்த குறிப்பிட்ட நாளை சந்திப்பதற்கு என்னுடைய ஞானம் போதுமானதாக இல்லை.” 

வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்போது, நம்முடைய குறைவான ஞானத்தையும், அறிவையும், பெலத்தையும் கொண்டு லிங்கனைப் போன்று எதிர்த்து போராட முனையாமல், வரையறையில்லாத கிறிஸ்துவை பூரணமாய் சார்ந்துகொள்ள முற்படுவோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7) என்று பேதுரு இந்த சார்ந்துகொள்ளுதலை நினைவுபடுத்துகிறார். 

தன்னுடைய பிள்ளைகளின் மீது தேவன் வைத்திருக்கிற அன்போடு, அவருடைய வல்லமையும் இணைந்து, நம்முடைய பெலவீனங்களில் அவரை சார்ந்துகொள்வதற்கு ஏற்ற ஒரு நபராய் அவரை நம்முன் நிறுத்துகிறது. அதுவே ஜெபத்தின் சாரம்சம். நம் இயலாமையை உணர்ந்தும், அவரே நித்தியத்திற்கும் போதுமானவர் என்பதையும் அறிக்கையிட்டு இயேசுவிடம் சேருவோம்.. “எங்கு போவதென்று தெரியவில்லை” என்று லிங்கன் சொன்னார். ஆனால், தேவன் நம்மீது மிகுந்த அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்று தெரிந்துகொள்வதே நற்செய்தி. அவரிடத்திற்கு நாம் போகலாம்! 

மறக்கப்படவில்லை

நாம் சரித்திர சிறப்புமிக்க, நவீன சிந்தனையாளர்களாய் இருந்த அருட்பணியாளர்களை  நினைக்கும்போது, சார்லஸ் இரேனியஸ் (1790-1838) என்ற பெயர் நம்முடைய நினைவுக்கு வருவதில்லை. ஆனால் நிச்சயம் அது வந்தாகவேண்டும். ஜெர்மானிய தேசத்தில் பிறந்த இரேனியஸ், தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு அந்தப் பகுதியின்  முதல் அருட்பணியாளர்களின் வரிசையில் வந்தார். குறுகிய காலகட்டத்திலே 90 கிராமங்களுக்கு இயேசுவின் சுவிசேஷத்தை கொண்டுபோய் சேர்த்து, மூன்றாயிரம் ஆத்துமாக்களை சம்பாதித்தார். அவர் எழுத்தாளராகவும், வேதாகமத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பவராகவும் பணியாற்றினார். மேலும் அவர் "திருநெல்வேலியின் அப்போஸ்தலன்" என்று பரவலாக அறியப்பட்டிருக்கிறார், தென்னிந்திய திருச்சபையை நிறுவிய அருட்தந்தைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.

தேவனுடைய ராஜ்யத்தின் பணிக்கு ஏற்ற இரேனியஸின் வியத்தகு வாழ்வை சிலர் மறந்திருக்கலாம் ஆனால் அவருடைய ஆவிக்குரிய சேவையை தேவன் ஒருபோதும் மறக்க மாட்டார். தேவனுக்கென்று நீங்கள் செய்வதையும் அவர் மறக்கமாட்டார். எபிரெயருக்கு எழுதின நிருபம் இப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மை ஊக்குவிக்கிறது, " உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே" (6:10). தேவனுடைய உண்மைத்தன்மையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனெனில் அவர் தம்முடைய நாமத்தினாலே செய்யப்பட்ட அனைத்தையும் மெய்யாய் அறிந்திருக்கிறார், அவைகளை ஞாபகத்தில் வைத்துள்ளார். அவ்வாறே எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம், "வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து" (வ.11) என்று நம்மை ஊக்குவிக்கிறது.

நாம் யாரும் அறியாவண்ணம் நம் சபையிலும், சமுதாயத்திலும் சேவை செய்கையில் நம்முடைய கடுமையான பணி ஒருவராலும் பாராட்டப் படவில்லை என்று நாம் உணர்வது இயல்புதான். மனம் தளராதீர்கள், நம்மை சுற்றியுள்ள ஜனங்கள் நமது சேவைகளை அங்கீகரிக்கிறார்களோ, வெகுமதி அளிக்கிறார்களோ இல்லையோ, தேவன் உண்மையுள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை.

அழகாய் உடைக்கப்பட்டது

நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த, இஸ்ரவேல் தேசத்தில் எங்களின் அகழ்வாராய்ச்சி பணி நடந்துகொண்டிருந்த அந்த குறிப்பிட்ட இடத்திற்கு கடைசியாய் எங்கள் பஸ் வந்து சேர்ந்தது. அந்த இடத்தின் மேற்பார்வையாளர், அந்த ஸ்தலத்தில் நாம் எதைக் கண்டறிந்தாலும் அவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு யார் கையும் படாமல் இருந்தவைகள் என்று எங்களுக்குச் சொன்னார். அங்கு கண்டெடுக்கப்பட்ட உடைந்த மண்பாண்டங்களைப் பார்க்கும்போது நாங்கள் சரித்திரத்தை கையில் தொடுவதுபோல் உணர்ந்தோம். அதன் பின்பு அந்த உடைந்த மண்பாண்டங்களை, பணி செய்யும் இடத்திற்கு கொண்டுபோய் அவைகளை ஒன்றிணைக்க முயற்சித்தோம். 

அவர்களின் பணி மிகத் தெளிவான ஒன்று. அந்த பணியாளர்கள் ஒருங்கமைத்த அந்த உடைந்த மண்பாண்டங்கள், உடைந்துபோனதை நேர்த்தியாய் ஒன்றுசேர்க்க விரும்பும் தேவனுடைய சிந்தையை அழகாய் பிரதிபலித்தது. சங்கீதம் 31:12ல் தாவீது, “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்கிறார். இந்த சங்கீதத்தை அவர் எந்த சூழ்நிலையில் எழுதினார் என்னும் தகவல் இல்லையென்றாலும், அவர் புலம்புவதை வைத்து அவருடைய வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையை அறியமுடிகிறது. இந்த சங்கீதம், தாவீது மேற்கொண்ட அபாயம், சத்துருக்கள் மற்றும் விரக்தியினால் முற்றிலும் உடைக்கப்பட்டதை விவரிக்கிறது. 

அவர் எங்கு உதவிக்காக நாடினார்? 16ஆம் வசனத்தில் தாவீது தேவனிடத்தில், “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்று கதறுகிறார்.

அந்த சூழ்நிலையில் தாவீதின் நம்பிக்கையாய் நின்ற தேவன், இன்றும் உடைந்துபோனவைகளை ஒன்றிணைக்க போதுமானவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடவும், அவரை முழுமையாய் நம்பவும் வேண்டும் என்பதையே அவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். 

நன்றியுள்ள இருதயம்

பண்டைய ரோம நாட்டில் செனேகா (கி.மு. 4-கி.பி. 65) என்னும் புகழ்பெற்ற தத்துவமேதை, விபச்சாரம் செய்தார் என்று பேரரசி மெசலினாவினால் குற்றஞ்சாட்டப்பட்டார். செனேகாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பேரரசர் கிளாடியஸ், அவரை குற்றமற்றவராய் பார்த்ததினால், மரண தண்டனைக்கு பதிலாக, அவர் கோர்ஸிகா என்னும் இடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த சூழ்நிலை செனேகாவின் நன்றியுணர்ச்சிக்கு புதுவடிவம் கொடுத்தது. அவர் சொல்லும்போது, “படுகொலைகள், கொடுங்கோலாட்சிகள், திருடர்கள், விபச்சாரக்காரர்கள், கொள்ளையர்கள், புனிதர்கள், துரோகிகள் ஆகியோர் எல்லா காலத்திலும் இருப்பர். ஆனால் அவை எல்லாவற்றையும் விட கொடுமையான குற்றம் நண்றியுணர்வில்லாமல் இருப்பதே” என்கிறார்.    

செனேகாவின் காலகட்டத்தில் வாழ்ந்த பவுல் அப்போஸ்தலர் இதை ஏற்றுக்கொண்டார். ரோமர் 1:21ல் நன்றியுணர்வில்லாதிருப்பதே மனுஷீகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் என்று பவுல் எழுதுகிறார். கொலோசெ திருச்சபைக்கு எழுதும்போது, நன்றியுணர்ச்சிக்கு மூன்று தரம் சவால் விடுகிறார். “ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக” (கொலோசெயர் 2:7) என்றும், தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்போது, நன்றியறிதலுள்ளவர்களுமாயிருக்கவும் (3:15) அறிவுறுத்துகிறார். மேலும் நன்றியுணர்வே ஜெபத்திற்கும் மையமாய் அமைகிறது (4:2) என்கிறார். 

தேவனின் மாபெரும் தயவே வாழ்க்கையின் மிகச்சிறந்த யதார்த்தங்களை நினைவூட்டுகிறது. அவர் நம்முடைய அன்பிற்கும் துதிக்கும் மட்டுமின்றி, நம்முடைய நன்றியுள்ள இருதயத்திற்கும் பாத்திரர். வாழ்க்கையின் நன்மையான எந்த ஈவும் அவரிடத்திலிருந்தே வருகிறது (யாக்கோபு 1:17). 

கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட அனைத்து ஈவுகளுக்கும் நாம் நம்முடைய நன்றியுணர்வை சுவாசம்போல் இயல்பாகவே வெளிப்படுத்தவேண்டும். தேவனுடைய கிருபையுள்ள ஈவுகளுக்கு நம் நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம். 

ஆவியானவரின் நடத்துதல்

தன் இராணுவ முகாமின் பாதுகாப்புகளை வலுபடுத்துவதற்காக பாலைவனத்தின் மணலைத் தோண்டிய பிரஞ்சு இராணுவ வீரனுக்கு, பிரம்மாண்டமான ஒரு புதையல் தென்படப்போவது தெரியாது. மணலைத் தோண்டியபோது, அவனுக்கு ஒரு கல் தட்டுப்பட்டது. சாதாரண ஒரு கல் அல்ல அது தான் ரோஸட்டா கல்வெட்டு. மூன்று மொழிகளில் எழுதப்பட்ட ஐந்தாம் டோலமியின் விதிமுறைகள் மற்றும் ஆட்சி பதிவுகள் உள்ளடங்கிய கல்வெட்டு. ஹீரோகிளிஃபிக் எனப்பட்ட எகிப்திய எழுத்துக்கலையின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் 19ஆம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு அது (தற்போது பிரிட்டிஷ்அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது). 

நம்மில் பலருக்கு பெரும்பாலான வேதப்பகுதிகள் ஆழத்தில் புதைந்துள்ள பொக்கிஷங்கள் போன்றவை. சிலுவை மரணத்திற்கு முன்தினம் இரவில், இயேசு தன்னை பின்பற்றியவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை வாக்குப்பண்ணுகிறார். அவர் சொல்லும்போது, “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:13) என்று சொல்லுகிறார். வேதத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஆச்சரியமான சத்தியங்களின் மீது பரிசுத்த ஆவியானவரே ஒளியூட்டும் ஒரு ரோஸட்டா கல்வெட்டு. 

வேதத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து சத்தியங்களையும் நாம் அறிந்துகொள்ள முடியாது என்றாலும், கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு தேவையான அனைத்துக் காரியங்களையும் ஆவியானவர் நமக்குக் கொடுக்கிறார். அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். 

நினைவுகூர்ந்து மகிழ்ந்திரு

அமெரிக்காவின் தெற்கு விர்ஜீனியா மாகாணத்தில் டிசம்பர் 6, 1907இல் ஏற்பட்ட வெடி விபத்து, நிலக்கரி சுரங்க வரலாற்றில் மிகவும் மோசமான ஒன்று. இந்த விபத்தில் 360பேர் பலியாயினர். இந்த கோர விபத்து, 250 பெண்களை விதவைகளாகவும் 1000 பிள்ளைகளை தகப்பனில்லாதவர்களாகவும் மாற்றியது. இந்த நினைவுநாளையே அமெரிக்க சரித்திர நிபுணர்கள் தகப்பனார்கள் தினமாய் கொண்டாடத்துவங்கினர். பெரிய இழப்பிலிருந்து நினைவுகூருதல் நிகழ்ந்தது. அது பின் மகிழ்ச்சியான தருணமாய் மாறியது. 

மனிதர்கள் தங்கள் சிருஷ்டிகரை சிலுவையில் அறைந்த அவலம் மனித சரித்திரத்தின் பெரிய சோகம். இந்த இருண்ட நிகழ்வு நினைவுகூருதலையும் மகிழ்ச்சியினையும் தோற்றுவித்தது. சிலுவைக்கு போவதற்கு முன் தினம் இரவில், இஸ்ரவேலின் பஸ்காவை ஆசரித்த இயேசு தன்னுடைய நினைவு நாளையே ஆசரித்தார். லூக்காவின் பதிவு அதை இப்படியாய் விவரிக்கிறது. “பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது;  என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்” (லூக்கா 22:19). 

இன்றுவரை ஒவ்வொருமுறையும் கர்த்தருடைய பந்தியை நாம் ஆசரிக்கும்போதும் நமக்காக அவருடைய விரிசலில்லாத அன்பை நாம் கனப்படுத்துகிறோம். நம்மை மீட்டதற்கான விலைக்கிரயத்தையும் அவருடைய தியாகம் நமக்குக் கொடுத்த வாழ்க்கையையும் நினைவுகூருகிறோம். சார்லஸ் வெஸ்லி தன்னுடைய பாடல் ஒன்றில் “ஆச்சரியமான அன்பு! எனக்காய் என் தேவனே நீர் மரித்தது எப்படி!” என்று பாடியுள்ளார்.

துக்கத்தில் நம்பிக்கை

டாக்ஸி ஓட்டுநர் எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருடைய கதையை எங்களுக்குச் சொன்னார். வறுமையின் நிமித்தமாக தன் வீட்டைவிட்டு வெளியேறி, 17 வயதில் இந்த பட்டணத்திற்கு வந்ததாக கூறினார். பதினொறு வருடங்கள் கழிந்துவிட்டது. தற்போது தனக்கு குடும்பம் இருப்பதாகவும் தங்களுடைய கிராமத்தில் கிடைக்காத நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஆயினும் தன் பெற்றோரை விட்டும் உடன்பிறப்புகளை விட்டும் பிரிந்திருப்பதை நினைத்து வேதனைப்பட்டார். எங்களிடம் அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய கடினமான வாழ்க்கை பயணமானது, அவருடைய குடும்பத்தோடு ஒன்று சேரும்வரை நிறைவடையாது.    

நம்மை நேசிப்பவர்களிடமிருந்து பிரிந்திருப்பது கடினமானது. ஆனால் நாம் நேசிப்பவர்களை மரணத்தில் பிரிவது அதைவிட கடினமானது. அந்த இழப்பை, அவர்களை மீண்டும் சந்திக்கும்வரை ஈடுகட்டமுடியாது. இதுபோன்ற இழப்பை அனுபவித்துக் கொண்டிருந்த தெசலோனிக்கேய திருச்சபையின் புது விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” (1 தெசலோனிக்கேயர் 4:13) என்று எழுதுகிறார். விசுவாசிகளாய் கிறிஸ்துவோடு சேர்ந்து மீண்டும் நாம் இணைக்கப்படப் போகிறோம் என்று நாம் எதிர்பார்க்கலாம் (வச. 17). 

சில வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு ஏற்படுத்திய ஆழமான பிரிதலை நாம் பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் மீண்டும் இணையப் போகிறோம் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம். துக்கங்கள் மற்றும் இழப்புகளின் மத்தியிலும் தேவன் கொடுத்த இந்த நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடைகிறோம் (வச. 18). 

தேவையான இடத்தில் தண்ணீர்

உலகின் மிக ஆழமான ஏரியான பைக்கால் ஏரி, மிகவும் பரந்து விரிந்த அற்புதமான ஏரி. 49 மைல் (79 கி.மீ.) குறுக்கே ஒரு மைல் ஆழத்தையும் கிட்டத்தட்ட 400 மைல் (636 கி.மீ) அளவையும் கொண்டு, இது உலகின் அனைத்து நண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த நீர் பெரும்பாலும் அணுக முடியாதது. பைக்கால் ஏரி சைபீரியாவில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் மிக தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாகும். நமது கிரகத்தின் பெரும்பகுதிக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒரு தேவை என்றபோதில், மக்கள் யாரும் போக முடியாத இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் இருப்பது முரண்பாடான ஒரு காரியம். 

பைக்கால் ஏரி தொலைதூரத்தில் இருந்தாலும், முடிவில்லாத வாழ்வாதாரமான தண்ணீர் இங்கு கிடைக்கிறது. அதின் தேவை அதிகம் உள்ளவர்களுக்கே அது கிடைக்கிறது. சமாரியாவில் ஒரு கிணற்றினருகே இயேசு இருந்தபோது, ஒரு பெண்ணுடன் உரையாடினார். அவளுடைய ஆழ்ந்த ஆன்மீக தாகத்தின் ஓரங்களை ஆராய்ந்தார். அவளுடைய உள்ளத்தின் ஏக்கத்திற்கு தீர்வு? இயேசு மட்டுமே.

கிணற்றிலிருந்து எடுக்க வந்த தண்ணீருக்கு மாறாக, இயேசு அதைவிடச் சிறந்த ஒன்றை வழங்கினார்: “இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்” (யோவான் 4: 13-14).

பல விஷயங்கள் திருப்தியை உறுதிப்படுத்துகின்றன, ஆனால் ஒருபோதும் நம் இருதயத்தின் தாகத்தை முழுமையாகத் தணிக்காது. இயேசுவால் மட்டுமே நம்முடைய ஆன்மீக தாகத்தை உண்மையிலேயே பூர்த்தி செய்யமுடியும். அனைவரது தேவைகளையும், எல்லா இடங்களிலும் அவர் சந்திக்கிறார்.