Amy Boucher Pye | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

சிறந்த அன்பு

இயேசுவின் சிலுவை தியாகத்தை நினைவுகூரும் அந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகமான அன்பை நினைவுகூர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலை கொண்டாடும்வேளையில், தென்மேற்கு பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தி  அங்கிருந்த இருவரைக் கொன்றான். பேச்சு வார்த்தைக்கு பின்னர், அவன் தன் கைவசம் பிடித்துவைத்திருந்த மக்களை விடுவித்தான்;. ஆனால் அவனுடைய பாதுகாப்புக்காக அதில் ஒரு பெண்ணை மட்டும் பினையக்கைதியாய் பிடித்து வைத்திருந்தான். ஆபத்தை அறிந்த போலீஸ் அதிகாரி அர்னாட் பெல்ட்ரேம், எதிர்பாராத ஒன்றைச் செய்தார். அவர் அவன் பிடித்து வைத்திருந்த பெண்ணுக்கு பதிலாக, தன்னை பிடித்து வைத்துக்கொள்ளும்படிக்கு முன்வந்தார். தீவிரவாதியும் அதை ஒப்புக்கொண்டு அவளை விடுவித்தான். ஆனால் அதற்கடுத்து நடந்த சண்டையில், பெல்ட்ரேம் காயமடைந்து பின்னர் இறந்துபோனார். 
அந்த போலீஸ் அதிகாரியை நன்கு அறிந்த போதகர் ஒருவர், அவருடைய அந்த துணிச்சலான செய்கையை தேவன் மீதான விசுவாசத்திற்கு ஒப்பிட்டு யோவான் 15:13ஐ மேற்கோள் காண்பிக்கிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” பூமியில் தன்னுடைய கடைசிபோஜனத்தை புசித்த இயேசு இவ்வார்த்தைகளை தன்னுடைய சீஷர்களைப் பார்த்து கூறினார். “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்” (வச. 12) என்று போதித்த அவர், ஒருவர் தன் சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்க துணிவதே அந்த மெய்யான அன்பு என்று கூறுகிறார் (வச. 13). அதைத்தான் அடுத்த நாளில் அவர் செய்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும்பொருட்டு, அவர் சிலுவையில் தன் ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். 
அர்னாட் பெல்ட்ரேம் செய்த அந்த துணிச்சலான தியாகத்தை செய்வதற்கு நமக்கு அழைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கும்போது, நம்முடைய மாம்ச திட்டங்களை விட்டுவிட்டு, அவருடைய அந்த சிறந்த அன்பின் மேன்மையை மற்றவர்களுக்கு அறிவிக்க பிரயாசப்படுவோம்.  

புத்துணர்ச்சியூட்டும் பாலைவனச்சோலை

ஆன்ட்ரூவும் அவனது குடும்பத்தினரும் கென்யாவில் வனப்பயணம் சென்றிருந்தபோது, ஒரு ஏரியை நோக்கிப் பல வகையான மிருகங்கள் செல்வதைக் கண்டு மகிழ்ந்தனர். அவ்வாழ்வு தரும் நீரூற்றை நோக்கி, ஒட்டகச்சிவிங்கிகளும், காட்டு மிருகங்களும், நீர்யானைகளும், நீர்ப்பறவைகளும் பயணம் செய்தன. அக்காட்சியை ஆன்ட்ரூ உற்றுக் கவனித்தபோது, வேதமானது அத்தண்ணீரைப் போல வழிநடத்துதலையும், ஞானத்தையும் தருவதுமின்றி, மனிதர்களுடைய நடைமுறை வாழ்க்கையில், புத்துணர்ச்சியைத் தந்து அவர்கள் தாகத்தைத் தீர்க்கும் தெய்வீகம் சுரக்கும் ஊற்றாய் இருக்கிறதென்பதை நினைவுகூர்ந்தார்.

ஆன்ட்ரூவின் அக்கணிப்பு பழைய ஏற்பாட்டில் தேவனின் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் குறிக்கும் பதமான "தேவனின் வேதத்தில்" பிரியமாயிருந்து, அதை தியானிப்பவர்களை "பாக்கியவான்" என்று சங்கீதக்காரன் அழைப்பதை எதிரொலிக்கிறது. வசனங்களைத் தியானிக்கிறவர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தரும் மரத்தைப் போலிருக்கிறார்கள் (சங்கீதம் 1:3). எப்படி வேறானது மண்ணுக்குள் சேர்ந்து, வளர்ச்சியைப் பெற்றுக் கொள்கிறதோ, அதேபோல், தேவனை உண்மையாய் நேசித்து அவரை விசுவாசிப்பவர்களும், சத்தியத்தில் வேரூன்றி, அவர்களுக்குத் தேவையான பலத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்.

தேவனுடைய ஞானத்திற்குள்ளாக, நம்முடைய ஆதாரங்களை நாம் ஒப்புக்கொடுக்கும் போது, நாம் "காற்றுப் பறக்கடிக்கும் பதரை போல்" (வ.4 ) இருக்க மாட்டோம். தேவன் நமக்கு வேதத்தில் கொடுத்துள்ளவற்றை நாம் தியானிக்கும் போது, நாம் அவருடைய பராமரிப்பையும் வழி நடத்துதலையும் பெற்று நிலைத்திருக்கும் கனி கொடுக்கிறவர்களாய் இருக்க முடியும்.       

தேவனின் விசாலமான இடம்

இறையியலாளர் டோட் பில்லிங்ஸ் குணப்படுத்த முடியாத இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தபோது, ​​தனது உடனடி மரணத்தைத் தொலைதூர அறைகளில் உள்ள விளக்குகள் அணைவது அல்லது அணையும்படி மினுமினுப்பது போலவும் இருப்பதாக விவரித்தார். "ஒன்று மற்றும் மூன்று வயதுக் குழந்தையின் தந்தையாக, நான் அடுத்த சில தசாப்தங்களை  ஒரு பரந்த வெளியாக நினைக்க முனைந்தேன். நேட்டியும் நத்தானியேலும் வளர்ந்து முதிர்ச்சியடைவதை நான் பார்ப்பேன் என்று கருதினேன். ஆனால் நோய் கண்டறியப்பட்டதில். ஒரு குறுகல் நடைபெறுகிறது"

இந்த வரம்புகளைப் பற்றிச் சிந்திக்கையில், பில்லிங்ஸ் சங்கீதம் 31 இல், தேவன் தாவீதை எப்படி "விசாலத்திலே" (வ.8) வைத்தார் என்பதையும் அவதானிக்கிறார். தாவீது தனது சத்துருக்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றிப் பேசினாலும், தேவனே தனது பலத்த துருகமும் அடைக்கலமான அரணுமானவர் என்று அவர் அறிந்திருந்தார் (வ.2). இந்த பாடலின் மூலம், சங்கீதக்காரன் தேவன் மீதான தனது நம்பிக்கைக்குக் குரல் கொடுத்தார்: "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" (வ.15).

தேவன் மீது நம்பிக்கை வைப்பதில், பில்லிங்ஸ் தாவீதை பின்பற்றுகிறார். இந்த இறையியலாளர், கணவன், தந்தை தனது வாழ்க்கையில் குறுகலை எதிர்கொண்டாலும், அவரும் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஏன்? ஏனென்றால், கிறிஸ்துவின் பலியின் மூலம் மரணத்தின் மீது தேவன் பெற்ற வெற்றி என்பது, “கற்பனைக்கு எட்டாத விசாலமான இடமான” கிறிஸ்துவில் நாம் வாழ்வதைக் குறிக்கிறது. அவர் விளக்குவது போல், "பரிசுத்த ஆவியானவரால் அவருடைய வாழ்க்கையில் பங்கெடுப்பதை விடப் பரந்த மற்றும் விசாலமானது எது?"

நாமும் புலம்பி அழலாம், ஆனால் நம்மை வழிநடத்தவும் வழிகாட்டவும்  தேவனிடம் அடைக்கலம் புகலாம் (வ.1,3). நாம் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறோம் என்பதை தாவீதுடன் உறுதிப்படுத்த முடியும்.

பெருமதிப்புமிக்க பயம்

“எனக்கு மரண பயத்தைப்பற்றி கொஞ்சம் தெரியும். ஏழு ஆண்டுகளுக்குமுன் எனக்குக் குணமாகாத புற்றுநோய் இருப்பதை நான் அறிந்தபோது.. கடுமையான, அலைக்கழிக்கிற, நிலைகுலையச்செய்து மூழ்கடிக்கும் பயத்தை உணர்ந்தேன்" என்று ஜெரமி எழுதுகிறார். ஆனால் தேவனுடைய பிரசன்னத்தைச் சார்ந்துகொள்ளவும், தனது மரணபயத்திலிருந்து தேவனுக்கேற்ற பயபக்திக்குக் கடந்துபோகவும் அவர் கற்றுக்கொண்ட பிறகு, தனது பயத்தைக் கையாள அறிந்துகொண்டார். ஜெரமியை பொறுத்தமட்டில் அதின் பொருள், “மரணத்தை ஜெயமாக விழுங்கு(ம்)வார்” (ஏசாயா 25:8) இந்த அண்ட சராசரத்தின் சிருஷ்டிகரைப் பற்றின வியப்போடு இருப்பதும், அதேநேரம் தேவன் தன்னை அறிந்து நேசிக்கிறார் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதுமே.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்; அதாவது நமது பரிசுத்த தேவனைக் குறித்த ஆழமான மரியாதையும், வியப்புமே. வேதாகமம் முழுவதும் இழைந்தோடும் கருப்பொருள் இதுவே. நீதிமொழிகள் எனும் தொடர்ச்சியான ஞான வார்த்தைகளால் தனது மகனைக் கர்த்தருக்குப் பயப்படும்படி சாலொமோன் ராஜா அறிவுறுத்தினார். தனது மகன், அவனுடைய “செவியை ஞானத்திற்குச் சாய்த்து” அதை “புதையல்களைத் தேடுகிறதுபோல்” தேடும்போது, அவன் “கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று.. உணர்ந்து,  தேவனை அறியும் அறிவை” (நீதிமொழிகள் 2:2,4-5) கண்டடைவான். ஞானம் மற்றும் அறிவோடும், நல்யோசனையையும் புத்தியையும் பெறுவான் (வ.10-11).

நாம் பலவகையான சவால்களைச் சந்தித்து, நடுக்கத்தையும் பயத்தையும் அனுபவிக்கும்போதுதான் நாம் பெலவீனர்களென்று நினைவூட்டப்படுகிறோம். ஆனால் நாம் தேவனிடம் திரும்பி, அவரிடம் உதவி கேட்டு, அவருக்கு முன் நம்மைத் தாழ்த்தி, அவரை பயபக்தியோடு பணிந்துகொள்ளுகையில்; நாம் நமது பயத்தைக் கடந்து அவரைப்பற்றிய ஆரோக்கியமான பயத்திற்கு நேராக நடக்க அவர் நமக்கு உதவுவதைக் காண்போம்.

 

தேவனின் கரம்

1939 ஆம் ஆண்டில், பிரிட்டன் சமீபத்திய போரில் ஈடுபடுகையில், அரசர் ஆறாம் ஜார்ஜ் தனது கிறிஸ்துமஸ் தின வானொலி ஒலிபரப்புரையில் ஐக்கிய இராச்சியம் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிகள் தேவன் மீது நம்பிக்கை வைக்குமாறு ஊக்குவிக்க முயன்றார். அவரது தாயார் விலைமதிப்பற்றதாகக் கண்ட ஒரு கவிதையை மேற்கோள் காட்டி, அவர் கூறினார்: “இருளை எதிர்கொண்டு, தேவனின் கரத்தில் உன் கரத்தை ஒப்புவி. அதுவே உனக்கு வெளிச்சத்தைக் காட்டிலும் சிறந்ததும், நீ அறிந்த பாதையைக் காட்டிலும் பாதுகாப்பாகவும் இருக்கும்". புத்தாண்டில் என்ன நடக்கும் என்பதை அவர் அறியார், ஆனால் வரப்போகும் துக்கமான நாட்களில் அவர்களை "வழிகாட்டி, நிலைநிறுத்த" அவர் தேவனையே நம்பினார்.

ஏசாயா புத்தகம் உட்பட வேதாகமத்தில் பல இடங்களில் தேவனின் கரம் காணப்படுகிறது. இந்த தீர்க்கதரிசி மூலம், தேவன் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய சிருஷ்டிகராக, “முந்தினவரும்.. பிந்தினவருமா(க)மே” (ஏசாயா 48:12) இருப்பவர் அவர்களுடன் தொடர்ந்து இடைப்படுவார் என்று நம்பும்படிக்கு அழைத்தார். அவர் சொல்வது போல், "என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது" (வ.13). அவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், திராணியற்றவர்களை நோக்கக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்" (வ.17).

புத்தாண்டை எதிர்நோக்கி இருக்கும் நாம் எதை எதிர்கொண்டாலும், அரசர் ஜார்ஜ் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசி அளித்த ஊக்கத்தைப் பின்பற்றி, தேவன் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கலாம். அப்போது, ​​நமக்கும், நமது சமாதானம் நதியைப் போலும், நமது சுகவாழ்வு சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும் (வ.18).

உணரக்கூடிய அன்பு

மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், "உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?" என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், "இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!" என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் "அன்பிற்கு உருவம் கொடுத்தது போல" இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று" ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை" (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?

இயேசுவில் புதிய வாழ்க்கை

 

மத்திய ஆசியாவில் ஒன்றாக வளர்ந்த பஹீரும், மெடெட்டும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். ஆனால் பஹீர் இயேசுவின் விசுவாசியாக மாறியதும், எல்லாம் மாறியது. மெடெட் அவரைப்பற்றி அரசாங்க அதிகாரிகளிடம் புகாரளித்த பிறகு, பஹீர் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார். "இந்த வாய் இனி ஒருபோதும் இயேசுவின் பெயரை உச்சரிக்காது"- காவலர் உறுமினார். மோசமாக இரத்தக் காயங்கள் பட்டிருந்தாலும், கிறிஸ்துவைப் பற்றிப் பேசுவதை அவர்கள் தடுக்க முற்படலாம், ஆனால் அவர்கள் ஒருபோதும் "அவர் என் உள்ளத்தில் செய்ததை மாற்ற முடியாது" என்றார் பஹீர்.

அந்த வார்த்தைகள் மெடெட்டையும் தொட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, நோய் மற்றும் இழப்பால் மெடெட் அவதிப்பட்டு; சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பகீரைக் கண்டுபிடிக்கப் பயணம் செய்தார். அவர் பெருமையைக் கைவிட்டு, தனக்கும் இயேசுவை அறிமுகப்படுத்துமாறு தனது நண்பரிடம் கேட்டார்.

பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது, பேதுருவைச் சுற்றித் திரண்டிருந்தவர்கள் ஊற்றப்பட்ட தேவகிருபையை கண்டும், கிறிஸ்துவைப் பற்றிய பேதுருவின் சாட்சியைக் கேட்டபோதும், ​​​​அவர்கள் " இருதயத்திலே குத்தப்பட்ட(து)வர்களாகி" (அப்போஸ்தலர் 2:37) போலவே, மெடெட் பரிசுத்த ஆவியானவர் அருளிய பாவ உணர்த்துதலில் செயல்பட்டார். பேதுரு, மக்களை மனந்திரும்பி இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற அழைத்தார். சுமார் மூவாயிரம் பேர் அவ்வாறு செய்தார்கள். அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுச் சென்றது போலவே, மெடெட்டும் மனந்திரும்பி இரட்சகரைப் பின்பற்றினார்.

இயேசுவுக்குள்ளான புதிய வாழ்வு என்ற பரிசு அவரை நம்பும் அனைவருக்கும் உண்டு. நாம் என்ன செய்திருந்தாலும், நாம் அவரை விசுவாசிக்கையில், ​​நமது  பாவங்கள் மன்னிக்கப்பட்ட சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

துருவிய வெண்ணெய்

ஜே. ஆர். ஆர். டோல்கியேன் இன் "தி  ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்ஸ்" புத்தகத்தில், பில்போ பக்கின்ஸ் எனும் கதாபாத்திரம் ஆறு தசாப்தங்களாக, இருளான தீயசத்தியைக் கொண்ட ஒரு மந்திர மோதிரத்தைச் சுமந்து செல்வதன் விளைவுகளைக் காட்டுகிறது. அதன் மெதுவாக அழிக்கும் தன்மையால் சோர்ந்து, அது மந்திரவாதி கந்தால்ஃபிடம், "உனக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால், நான் ரொட்டியின் மீது அதிகமாகத் தடவப்பட்ட வெண்ணெய்யைப் போல, தேவையில்லாமல் இழுக்கப்பட்டும், வலுவிழந்தும் ஏன் உணர்கிறேன்?" என்று கேட்கிறது. எங்கேயாவது  "அமைதியையும், நிம்மதியையும், அறிமுகமானவர்களின் இரைச்சல் இல்லாத" இளைப்பாறுதல் தேடி தனது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான் பில்போ.

டோல்கினின் கதையின் இந்த அம்சம் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி ஒருவரின் அனுபவத்தை எனக்கு நினைவூட்டுகிறது. யேசபேலிடமிருந்து தப்பி, கள்ள தீர்க்கதரிசிகளுடன் மோதிய பின்னர், எலியாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. சோர்வுற்ற அவர், "போதும் கர்த்தாவே" (1 இராஜாக்கள் 19:4) என்று கூறி, தன்னை சாக அனுமதிக்குமாறு தேவனிடம் கேட்டார். அவர் தூங்கிய பிறகு, தேவதூதன் அவரை எழுப்பினார், அதனால் அவர் சாப்பிடவும் குடிக்கவும் செய்தார். அவர் மீண்டும் தூங்கினார், பின்னர் தேவதூதன் வழங்கிய உணவை மேலும் சாப்பிட்டார். புத்துயிர் பெற்ற அவர், தேவபர்வதத்திற்கு செல்ல நாற்பது நாட்களின் நடைப்பயணத்திற்கு போதுமான ஆற்றலைப் பெற்றார்.

நாம் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருக்கையில், ​​உண்மையான புத்துணர்ச்சிக்காக நாமும் தேவனை நோக்கலாம். அவருடைய நம்பிக்கை, சமாதானம் மற்றும் இளைப்பாறுதலால் நம்மை நிரப்பும்படி அவரிடம் கேட்கும் அதே வேளையில், நாம் நம் உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். தேவதூதன் எலியாவை உபசரித்தது போல , தேவன் தம்முடைய புத்துணர்ச்சியூட்டும் பிரசன்னத்தை நம்மீதும் பொழிவார் என்று நாம் நம்பலாம் (பார்க்க மத்தேயு 11:28).

இயேசுவின் குணாதிசயத்தை பிரதிபலித்தல்

ஆப்கானிஸ்தானில் ஒரு கடுமையான சுற்றுப்பயணத்தின் பின், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஸ்காட் மனமுடைந்து போனார். "நான் ஒரு இருண்ட இடத்திலிருந்தேன்" என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர் "இயேசுவைக் கண்டடைந்து,  அவரைப் பின்தொடர ஆரம்பிக்கையில்" அவரது வாழ்க்கை தீவிரமாக மாறியது. இப்போது அவர் கிறிஸ்துவின் அன்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள முற்படுகிறார், குறிப்பாக அவர் ஆயுதப்படைகளில் ஊனமடைந்த மற்றும் காயமடைந்த வீரர்களுக்கான சர்வதேச விளையாட்டு நிகழ்வான இன்விக்டஸ் கேம்ஸில்  தன்னுடன் போட்டியிடும் வீரர்களுடன் அதைச் செய்கிறார்.

ஸ்காட்டைப் பொறுத்தவரை, வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் ஆராதனை பாடல்களைக் கேட்பது ஆகியவை விளையாட்டுகளுக்குச் செல்வதற்கு முன் அவரை நிலைப்படுத்துகிறது. பின்னர், அங்குப் போட்டியிடும் சக வீரர்களுக்கு “இயேசுவின் குணத்தைப் பிரதிபலிக்கவும், இரக்கம், மென்மை மற்றும் கருணை காட்டவும்” தேவன் அவருக்கு உதவுகிறார்.

கலாத்தியாவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய ஆவியின் கனிகளில் சிலவற்றை ஸ்காட் இங்கே குறிப்பிடுகிறார். அவர்கள் கள்ள போதகர்களின் தாக்கத்தின் கீழ் போராடினர், எனவே பவுல் அவர்களை "ஆவியினால் வழிநடத்தப்பட்டு" (கலாத்தியர் 5:18) தேவனுக்கும் அவருடைய கிருபைக்கும் உண்மையாக இருக்கும்படி ஊக்குவிக்க முயன்றார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஆவியின் கனியாகிய  "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" (வ. 22-23) ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள்.

தேவனின் ஆவியானவர் நம்முள் வசிப்பதால், நாமும் ஆவியின் நற்குணத்தினாலும் அன்பினாலும் நிறைந்திடுவோம். நாமும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்களிடம் கனிவும் கருணையும் காட்டுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பயன்பாட்டிற்கு உதவாத சிறு கயிறுகள்

மார்கரெட் அத்தையின் சிக்கன சுபாவம் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய மருமகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சீரமைக்கும் சலிப்பான வேலையை தொடங்கினாள். மேசையில் ஒரு டிராயரில் இருந்த பிளாஸ்டிக் பை ஒன்றில் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு கயிறுகள் தென்பட்டது. அந்த பிளாஸ்டிக் பையின் மீது ஒட்டியிருந்த லேபிளில், “பயன்படுத்த முடியாத அளவிற்கு சிறிய கயிறுகள்” என்று எழுதப்பட்டிருந்தது.  
பயன்படுத்த முடியாத ஒன்றை சேகரித்து வைக்கும்படிக்கு ஒருவரை எது ஊக்கப்படுத்தியது? ஒருவேளை, இந்த நபர் தன்னுடைய வாழ்க்கையில் பற்றாக்குறையை அதிகமாய் அனுபவித்த நபராய் இருந்திருக்கலாம்.  
இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியபோது, அவர்கள் பாடுகள் நிறைந்த வாழ்க்கையை விட்டு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் விரைவிலேயே தங்கள் பாதையில் கிரியை செய்த தேவனுடைய அற்புதக் கரத்தை மறந்து, ஆகாரத்திற்காய் முறுமுறுக்கத் துவங்கினர்.  
தேவன் அவர்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவர்களுடைய வனாந்திர வாழ்க்கையில் அவர்களுக்கு வானத்து மன்னாவை புசிக்கக்கொடுத்து, அதை “ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்” (யாத்திராகமம் 16:4) என்று மோசே மூலம் கட்டளையிடுகிறார். ஆனால் ஓய்வு நாளில் மன்னா கொடுக்கப்படாது என்பதினால், ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆறாம் நாளில் மக்கள் இரட்டிப்பாய் சேகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (வச. 5,25). சில இஸ்ரவேலர்கள் அதற்கு கீழ்ப்படிந்தனர். சிலர் கீழ்ப்படியாமல் விளைவை சந்தித்தனர் (வச. 27-28).  
தாராளமாய் கிடைக்கும் தருணங்களில், பற்றாக்குறையை மனதில் வைத்து பொருட்களை எடுத்து பதுக்கி வைக்க நாம் தூண்டப்படுவது இயல்பு. அனைத்தையும் நம் கைகளில் எடுப்பது அவசியமில்லை. “பயன்படாத சிறிய கயிறு துண்டுகளையோ” மற்ற பொருட்களையோ நாம் பதுக்கி வைக்கவேண்டிய அவசியமில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று நமக்கு வாக்குபண்ணியிருக்கிற தேவன் மீது நம்முடைய விசுவாசத்தை வைப்போம்.  

இயேசுவைப் போல் நேசித்தல்

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன்,  ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர்.  
மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16).  
தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம்.  

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.  
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.  
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.