ஒரு பாட்டியின் விசுவாசம்
நாங்கள் இரவு உணவு அருந்துகையில், என் ஒன்பது வயது பேரன் புன்னகையுடன், "நான் பாட்டியைப் போலவே இருக்கிறேன். நான் படிக்க விரும்புகிறேன்!” என்றான். அவன் வார்த்தைகள் என் மனதை மகிழ்வித்தது. அவன் உடல்நலம் குன்றி, பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த முந்தைய வருடத்தை நான் மீண்டும் நினைத்தேன். அவன் நன்றாகத் தூங்கிய பிறகு, நாங்கள் அருகருகே அமர்ந்து ஒன்றாகப் படித்தோம். புத்தகங்களை நேசிக்கும்படி என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மரபை நான் அவனுக்குக் கடத்துவதில் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால் என் பேரக்குழந்தைகளுக்கு நான் கடத்த விரும்பும் மிக முக்கியமான மரபு அதுவல்ல. என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற விசுவாசத்தின் மரபையே மற்றும் என் பிள்ளைகளுக்குக் கடத்த முயல்கிறேன், அது என் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் விசுவாசத்தை நோக்கிய பயணத்தில் உதவும் என்று நான் ஜெபிக்கிறேன்.
தீமோத்தேயு ஒரு ஆவிக்குரிய தாய் மற்றும் பாட்டியின் மரபைக் கொண்டிருந்தார். மேலும் ஒரு ஆவிக்குரிய வழிகாட்டியான அப்போஸ்தலன் பவுலும் இருந்தார். அப்போஸ்தலன், "அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்" (2 தீமோத்தேயு 1:5) என்றெழுதினார்.
நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க போதுமானதாக இல்லை என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை நமக்குக் கடத்தப்பட்ட மரபு தீமையானதாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அல்லது எந்தவொரு குழந்தையின் வாழ்க்கையிலும் விசுவாசத்தின் மரபை உருவாக்கக் காலம் கடந்து போகவில்லை. தேவனின் உதவியால், நாம் விசுவாச விதைகளை விதைக்கிறோம். விசுவாசத்தை வளரச் செய்பவர் அவரே (1 கொரிந்தியர் 3:6-9).
மற்றவர்களின் பணியில்
எங்கள் பேரக்குழந்தைகள் நான்கு பெரும் ஒரு ரயில் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர், இளைய இருவருக்கும் அதின் உந்து பொறியைக் குறித்து வாக்குவாதம் உண்டானது. எங்கள் எட்டு வயது பேரன் தலையிடுகையில், அவனுடைய ஆறு வயது சகோதரி, “அவர்களுடைய காரியத்தில் தலையிடாதே” என்றாள். இது பொதுவாகவே நம் அனைவருக்குமான ஞானமான வார்த்தைகள். ஆனால் வாக்குவாதம் அழுகையாக மாறியபோது, பாட்டி தலையிட்டு, பிரித்து, சண்டையிடும் குழந்தைகளை ஆறுதல்படுத்தினார்.
பிறர் காரியங்களில் தலையிடுவது விஷயங்களை மோசமாக்கும் என்றால், விலகி இருப்பதே நல்லது. ஆனால் சில நேரங்களில் நாம் ஜெபத்தோடு தலையிட வேண்டும். பிலிப்பியருக்குக்கான நிருபத்தில் அப்போஸ்தலன் பவுல், அதை எப்போது செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணத்தை அளிக்கிறார். இங்கே அவர் இரண்டு பெண்களான எயோதியா மற்றும் சிந்திகேயாவை, "கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க" (4:2) வலியுறுத்துகிறார். வெளிப்படையாக, அவர்களின் கருத்து வேறுபாடு மிகவும் தீவிரமடைந்தது, அப்போஸ்தலன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் (1:7) தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார் (வ.3).
பெண்களின் வாதம் பிரிவினை உண்டாக்குவதையும், சுவிசேஷத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதையும் பவுல் அறிந்திருந்தார். எனவே, அவர்களின் பெயர்கள் "ஜீவபுஸ்தகத்தில்" (4:3) எழுதப்பட்டிருப்பதை அவர்களுக்கு நினைவூட்டுகையில் அவர் கண்ணியமாக இந்த சத்தியத்தை உரைத்தார். இந்தப் பெண்களும், சபையில் உள்ள அனைவரும் சிந்தையிலும், செயல்களிலும் தேவனின் ஜனங்களாக வாழ வேண்டும் என்று பவுல் விரும்பினார் (வ.4-9).
நீங்கள் தலையிட வேண்டுமா என்று உங்களுக்கு நிச்சயமில்லாவிடில், "சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்" (வ. 9; பார்க்க வ. 7) என்பதை நம்பி ஜெபியுங்கள்.
கருணையின் எளிய செயல்கள்
என் அம்மா சிகிச்சையிலிருந்தபோது, பூமியில் அவளுடைய கடைசி நாட்களை நெருங்கியபோது, ஒரு முதியோர் இல்ல பராமரிப்பாளரின் உண்மையான கருணை என்னை அசைத்தது. நலிவடைந்த என் அம்மாவை அவளது நாற்காலியிலிருந்து மெதுவாகத் தூக்கி கட்டிலில் அமர்த்திய பிறகு, செவிலிய உதவியாளர் அம்மாவின் தலையைக் கோதி மெதுவாக அவள்மேல் சாய்ந்து கொண்டு, "நீங்கள் மிகவும் இனிமையானவர்" என்று கூறினார். பிறகு நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டாள். அவளுடைய கருணை என்னை அன்றும் இன்றும் கண்ணீரை வரவழைத்தது.
அவளது ஒரு எளிய கருணை செயல், ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அது தேவைப்பட்டது. இந்த பெண்ணின் பார்வையில் என் அம்மா ஒரு நோயாளி மட்டும் அல்ல என்பதை அறிந்து அவளோடு ஒத்துழைக்க எனக்கு உதவியது. அவள் அவளை மிகவும் மதிப்புமிக்க நபராகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
நகோமியும் ரூத்தும் தங்கள் கணவர்களை இழந்த பிறகு, போவாஸ் ரூத்துக்கு இரக்கம் காட்டினார், அறுவடை செய்பவர்களுக்குப் பின்னால் எஞ்சிய தானியங்களைச் சேகரிக்க அனுமதித்தார். அறுவடை செய்யும் ஆண்களுக்கு அவளைத் தனியாக விட்டுவிடுமாறு கட்டளையிட்டார் (ரூத் 2:8-9). நகோமியின் மீதான ரூத்தின் அக்கறையினால் அவனது கருணை உந்தப்பட்டது: "உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும்.. எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது." (வ. 11). அவர் அவளை ஒரு அந்நியராகவோ அல்லது விதவையாகவோ பார்க்கவில்லை, ஆனால் ஒரு தேவையிலுள்ள பெண்ணாகவே பார்த்தார்.
நாம், "உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (கொலோசெயர் 3:12) வாழத் தேவன் விரும்புகிறார் . தேவன் நமக்கு உதவுவதால், நம்முடைய எளிய தயவான செயல்களால் உள்ளங்களை உற்சாகப்படுத்தவும், நம்பிக்கையூட்டவும், பிறரிடம் கருணையைப் பிறப்பிக்கவும் முடியும்.
விசுவாசத்தில் அடியெடுத்து வைத்தல்
சிறப்புப் பேச்சாளர் தேவனை நம்பி “நதியில் அடியெடுத்து வைப்பதன்” ஞானத்தைப் பற்றி பேசினார். தேவனை நம்பிய ஒரு போதகரைப் பற்றி அவர் கூறினார். அவருடைய நாட்டில் புதிய சட்டம் இருந்தபோதிலும் ஒரு பிரசங்கத்தில் வேதாகமத்தின் உண்மைகளைப் பேசத் தேர்ந்தெடுத்தார். அவர் அந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு முப்பது நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வேதாகமத்தைக் குறித்த தனிப்பட்ட விளக்கத்தை அளிக்கவும் மற்றவர்களைப் பின்பற்றும்படி வலியுறுத்தவும் அவருக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கும் ஆசாரியர்களும் ஒரு தேர்வு செய்ய வேண்டியிருந்தது —தண்ணீரில் இறங்குவது அல்லது கரையில் தங்குவது. எகிப்திலிருந்து தப்பித்த இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர். இப்போது அவர்கள் யோர்தான் நதியின்; கரையில் நின்றார்கள். அது வெள்ளப்பெருக்கெடுக்கும் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் துணிந்து இறங்கினர். தேவன் தண்ணீரை குறையச் செய்தார்: “ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று..” (யோசுவா 3:15-16).
நாம் நம் வாழ்வில் தேவனை நம்பும்போது, வேதாகமத்தின் உண்மைகளைப் பேசுவதைத் தேர்ந்தெடுத்தாலும் அல்லது தெரியாத பிரதேசத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதைத் தேர்ந்தெடுத்தாலும், முன்னேறுவதற்கு ஆண்டவா் நமக்கு தைரியத்தைத் தருகிறார். போதகரின் விசாரணையின் போது, நீதிமன்றம் அவரது பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் நற்செய்தியைக் கேட்டது. மேலும், யோசுவா புத்தகத்தில் இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பாதுகாப்பாகக் கடந்து, வருங்கால சந்ததியினருடன் தேவனுடைய வல்லமையைக் குறித்து பகிர்ந்து கொண்டனர் (வச. 17; 4:24).
விசுவாசத்தில் நாம் துணிந்து அடியெடுத்து வைத்தால், தேவன் மற்றதைப் பார்த்துக்கொள்வார்.
வனாந்திர இடங்கள்
நான் ஒரு இளம் விசுவாசியாக இருந்தபோது, நான் இயேசுவை சந்திக்கும் இடமாக "மலையுச்சி" அனுபவங்களை நினைத்தேன். ஆனால் அந்த உயரங்கள், நீடிக்கவில்லை அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. வனாந்தரங்களில் தான் நாம் தேவனைச் சந்திக்கிறோம், வளர்கிறோம் என்கிறார் ஆசிரியர் லீனா அபுஜம்ரா. த்ரூ தி டெஸெர்ட் என்ற தனது வேத ஆராய்ச்சியில், “நம் வாழ்வில் உள்ள வனாந்தரங்களைப் பயன்படுத்தி நம்மைப் பலப்படுத்துவதே தேவனின் நோக்கம்” என்று எழுதுகிறார். "தேவனின் நன்மை உங்கள் வேதனையின் மத்தியில் பெறப்பட வேண்டும், வேதனை இன்றி அதனை நிரூபிக்க இயலாது" என மேலும் எழுதுகிறார்.
துக்கம், இழப்பு மற்றும் வலி போன்ற கடினமான இடங்களில்தான் நாம் நம் நம்பிக்கையில் வளரவும், அவருடன் நெருங்கவும் தேவன் உதவுகிறார். லீனா கற்றுக்கொண்டது போல், "தேவனின் திட்டத்தில் வனாந்தரம் அசட்டை செய்யப்பட்ட பகுதியல்ல, மாறாக நாம் வளரும் செயல்முறையில் ஒருங்கிணைந்த பகுதியாகும்."
தேவன் பல பழைய ஏற்பாட்டின் முற்பிதாக்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய அனைவருக்கும் வனாந்தர அனுபவங்கள் இருந்தன. வனாந்தரத்தில்தான் தேவன் மோசேயின் இருதயத்தை ஆயத்தப்படுத்தி, அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை வெளியே வழிநடத்த அவரை அழைத்தார் (யாத்திராகமம் 3:1-2, 9-10). வனாந்தரத்தில்தான் தேவன் தனது உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் நாற்பது ஆண்டுகளாக [இஸ்ரவேலர்] நடந்துவருகிறதை அறிவார் (உபாகமம் 2:7).
தேவன் மோசேயுடனும் இஸ்ரவேலருடனும் வனாந்தரத்தில் ஒவ்வொரு அடியிலும் இருந்தார், அவர் உங்களுடனும் என்னுடனும் இருக்கிறார். வனாந்தரத்தில் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்கிறோம். அங்கே அவர் நம்மைச் சந்திக்கிறார்; அங்கே நாம் வளர்கிறோம்.
தேவனோடு போராடுதல்
என் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு நீண்டகால நண்பர் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பினார்: “(ஆலன்) ... தேவனுடன் போராடுபவர். அவர் ஒரு உண்மையான யாக்கோபு. மேலும் நான் இன்று ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு அவர் ஒரு வலுவான காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. ஆலனின் போராட்டங்களை முற்பிதாவான யாக்கோபுடன் ஒப்பிட நான் ஒருபோதும் நினைத்ததில்லை; ஆனால் அது சரியாய் பொருந்துகிறது. தனது வாழ்நாள் முழுவதும், ஆலன் சுயத்துடனும் பதில்களுக்காக தேவனுடனும் போராடினார்;. அவர் தேவனை நேசித்தார்; ஆனால் தேவன் அவரை நேசிக்கிறார், மன்னிக்கிறார் மற்றும் அவருடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்னும் சத்தியங்களை விளங்கிக்கொள்ள முடியாமல் சிலவேளைகளில் போராடினார். ஆயினும்கூட, அவரது வாழ்க்கை அதன் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்தது. அவர் பலரை நேர்மறையாய் ஊக்கப்படுத்தினார்.
யாக்கோபின் வாழ்க்கையானது போராட்டங்களால் நிறைந்திருந்தது. அவன் தன் சகோதரன் ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற தீர்மானித்தான். அவன் வீட்டை விட்டு ஓடிப்போய், தனது உறவினர் மற்றும் மாமனாருமான லாபானுடன் பல ஆண்டுகளாக போராடினான். பிறகு லாபானை விட்டு தப்பி ஓடினான். அவன் தனிமையில் ஏசாவை சந்திக்க பயந்தான். ஆயினும்கூட, அவனுக்கு பரலோக தரிசனம் கிடைத்தது. “தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்” (ஆதியாகமம் 32:1). இது ஒருவேளை தேவனிடமிருந்து அவர் பெற்ற முந்தைய தரிசனத்தின் நினைவூட்டலாக இருக்கலாம் (28:10-22). இப்போது யாக்கோபு வேறொரு தெய்வீக நபரை சந்திக்கிறார்: இரவு முழுவதும் அவர் ஒரு “மனிதனுடன்” போராடினார். மனித உருவில் இருந்த தேவனுடைய பிரதிநிதியான அந்த தெய்வீக நபர், “தேவனோடும் மனிதரோடும் போராடி” (32:28) மேற்கொண்டான் என்பதினால் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் மாற்றம் செய்கிறார். இவையெல்லாவற்றிலும் தேவன் யாக்கோபோடு இருந்து அவனை நேசித்தார்.
நம் அனைவருக்கும் போராட்டங்கள் உள்ளன. ஆனால் நாம் தனியாக இல்லை. ஒவ்வொரு சோதனையிலும் தேவன் நம்முடன் இருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மன்னிக்கப்படுகிறார்கள், நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கின்றனர் (யோவான் 3:16). நாம் அவரைப் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.
கொடுப்பதில் மகிழ்ச்சி
கீதாவின் இளைய மகனுக்குத் தசைநார் சிதைவு தொடர்பான மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, தன் குடும்பச் சூழலால் ஏற்பட்ட மனச்சுமையைக் குறைக்க, வேறொருவருக்காக ஏதாகிலும் உதவி செய்ய விரும்பினாள். அதனால் அவள் தன் மகனின் சிறிதாய்ப்போன , நல்ல காலணிகளை எடுத்து, ஒரு ஊழிய ஸ்தாபனத்திற்கு நன்கொடையாக அளித்தாள். இந்த காரியம், அவளது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாரையும் இணைந்துகொள்ளும்படி தூண்டியது, விரைவில் இருநூறு ஜோடிக்கும் மேற்பட்ட காலணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது!
காலணிகளை கொடையளித்தது மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக இருந்தாலும், தனது குடும்பம் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டதாக கீதா உணர்ந்து, "இந்த முழு அனுபவமும் மெய்யாகவே எங்களுக்கு மிகவும் உற்சாகமூட்டியது ,பிறரிடம் எங்கள் கவனத்தைச் செலுத்த உதவியது" என்றாள்.
தாராளமாகக் கொடுப்பது இயேசுவின் சீடர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பவுல் புரிந்துகொண்டார். எருசலேமுக்குச் செல்லும் வழியில், அப்போஸ்தலன் பவுல் எபேசுவில் தங்கினார். அவர் அங்கு ஸ்தாபித்த சபையின் மக்களுடனான அவரது கடைசி சந்திப்பாக இது இருக்கலாம் என்று அவர் அறிந்திருந்தார். சபை மூப்பர்களுக்கான தனது பிரியாவிடை உரையில், தேவனுக்கு ஊழியம் செய்வதில் தான் எவ்வாறு ஜாக்கிரதையுடன் பணியாற்றினார் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (அப் 20:17-20) மேலும் அவர்களும் அதையே செய்யும்படி உற்சாகமூட்டினார் (வ.35) பின்னர், "வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்" (வ.35) என்ற இயேசுவின் வார்த்தைகளோடு முடித்தார்.
நாம் விருப்பத்தோடும், தாழ்மையோடும் நம்மையே கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் (லூக்கா 6:38). அவர் நம்மை வழிநடத்துவார் என்று நாம் நம்பும்போது, அதற்கான வாய்ப்புகளை அவர் நமக்கு வழங்குவார். கீதாவின் குடும்பத்தைப் போலவே நாமும் அதன் விளைவாக அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படலாம்.
இணைந்து இயேசுவை சந்தித்தல்
நான் என்னுடைய வாழ்க்கையின் கடினமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலையின் ஊடாய் கடந்துசென்றபோது, திருச்சபைக்குப் போவதை நிறுத்தக்கொள்வது எளிதாயிருந்திருக்கும் (சில வேளைகளில் “நான் ஏன் கவலைப்படவேண்டும்” என்று யோசித்ததுண்டு). ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருச்சபைக்கு செல்வது எனக்கு அவசியமாய் தோன்றியது.
பல வருடங்களாக என்னுடைய நிலைமை மாறாமல் அப்படியே இருந்தபோதிலும், மற்ற விசுவாசிகளுடன் இணைந்து ஆராதனை செய்வது, ஜெபக்கூட்டங்கள், வேதபாட கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதின் மூலம் நான் ஊக்கம்பெற்றேன். பல வேளைகளில் ஆறுதலான வார்த்தைகள் கேட்கவும், என்னுடைய குமுறலை அவர்கள் கேட்கவும், அவர்களின் அரவணைப்பை அவ்வப்போது பெறவும் இது வழிவகுத்தது.
எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” (எபிரெயர் 10:25) என்கிறார். நாம் கடினமான வாழ்க்கை அனுபவங்களுக்குள் கடந்துசெல்லும் வேளைகளில் நமக்கு மற்றவர்களின் ஆதரவும், அவர்களுக்கு நம்முடைய ஆதரவும் அவசியப்படும் என்பதை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். ஆகையால், “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்றும் “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்” (23-24) தாங்கும்படியாகவும் ஆசிரியர் நமக்கு அறிவுறுத்துகிறார். இதுவே ஆரோக்கியமான ஓர் ஊக்கமாகும். ஆகையினால் தான் தேவன் நமக்கு அவ்வப்போது சபையோடு ஐக்கியங்களை ஏற்படுத்தித் தருகிறார். யாரேனும் ஒருவருக்கு உங்களுடைய ஊக்கம் தேவைப்படலாம், மற்றவர்களின் ஊக்கமான வார்த்தைகள் உங்களுக்கு ஆச்சரியமானதாய் இருக்கும்.
கிறிஸ்துவின் பேரன்பு
தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.
தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.
ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.