எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆடம் ஆர். ஹோல்ஸ்கட்டுரைகள்

கிருபையின் மறுதொடக்கம்

கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.

மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).

தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு,  புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.  அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.

முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட

சமீபத்தில், விருந்தினர் வருவதற்கு முன்பு நானும் என் மனைவியும் எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தோம். எங்கள் சமையலறையின் வெள்ளை தரையில் சில கருப்பு கறைகளை நான் கவனித்தேன். அதை முழங்கால் ஊன்றி  தேய்க்க வேண்டியிருந்தது. 

ஆனால் எனக்கு விரைவில் ஒன்று தோன்றியது: நான் எவ்வளவு அதிகமாகத் துடைத்தாலும், மற்ற கறைகளை நான் கவனித்தேன். நான் நீக்கிய ஒவ்வொரு கறையும் மற்றதை மிகவும் தெளிவாக்கியது. திடீரென்று எங்கள் சமையலறையின் தளத்தைச் சுத்தமாக்குவது இயலாமல்போனது. நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், என்னால் இந்த தரையை முழுமையாகச் சுத்தம் செய்ய முடியாது என்று ஒவ்வொரு முறையும் நான் உணர்ந்தேன்.

சுய சுத்திகரிப்பு பற்றி வேதம் கூறுகிறது. பாவத்தை நாம் சொந்தமாகக் கையாள்வதில் நாம் எடுக்கும் சிறந்த முயற்சிகள் எப்போதும் தோல்வியடையும் . தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்கள், அவருடைய இரட்சிப்பை அனுபவிக்கக் கூடாமல் இருப்பதால் (ஏசாயா 64:5) விரக்தியடைந்த ஏசாயா தீர்க்கதரிசி, “நாம் எல்லாரும் அசுத்தமானவர்களைப் போல் ஆனோம், எங்களுடைய நீதியான செயல்களெல்லாம் அழுக்கான துணியைப் போலிருக்கிறது”(வ. 6) என்றெழுதினார்.

ஆனால் தேவனின் கருணையின்  மூலம் எப்போதும் நம்பிக்கை இருப்பதை ஏசாயா அறிந்திருந்தார். ஆகையால், "நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்" (வ. 8) என்று கெஞ்சினார். ஆழமான கறைகள் "உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்" வரை நம்மால் முடியாததைத் தேவன் ஒருவரே சுத்தம் செய்ய முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (1:18).

நம் ஆத்துமாக்களில் படிந்திருக்கும் பாவத்தின் கறைகளையும், அழுக்கையும் நாம் துடைக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக, நம்மை முழுமையாகச் சுத்திகரிக்கும் பலியாக மாறின அவரில் நாம் இரட்சிப்பைப் பெறலாம் (1 யோவான் 1:7).

காபி வாசனை

நான் என்னுடைய நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, என்னுடைய இளைய மகள் கீழே இறங்கி வந்தாள். அவள் என் மடியில் அமர்ந்து குதித்து விளையாடினாள். ஒரு அப்பாவாக, நான் அவளை இறுக்கி, அவளுடைய முன்நெற்றியில் முத்தமிட்டு தகப்பனுடைய அன்பை வெளிப்படுத்தினேன். அவள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள். அவள் தன் புருவத்தை சுருக்கி, மூக்கை உறிஞ்சி நான் காபி குடிக்கும் கோப்பையை உற்று பார்த்துவிட்டு, “அப்பா, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் உங்களுடைய வாசனை எனக்கு பிடிக்கவில்லை” என்று சொன்னாள். 

என்னுடைய மகள் அந்த விமர்சனத்தை கிருபையோடும் சத்தியத்தோடும் முன்வைத்தாள். அவள் என்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் சிலவற்றை சொல்லுவதற்கு அவள் ஏவப்பட்டாள். நம்முடைய உறவுகளில் அதுபோன்ற சில காரியங்களை நாம் வெளிப்படையாய் சொல்லவேண்டியிருக்கிறது. 

எபேசியர் 4ஆம் அதிகாரத்தில், ஒருவருடைய தப்பிதங்களை அவர்களிடம் நேரடியாய் சொல்வதற்கு தயங்குபவர்களுக்கு பவுல் சொல்லுகிறார்: “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்(குங்கள்)” (வச. 2). மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் நீடிய பொறுமை ஆகியவைகள் நம் உறவின் அஸ்திபாரமாய் திகழ்கிறது. தேவனுடைய வழிநடத்துதலோடு இதுபோன்ற குணாதிசயங்களை பிரஸ்தாபப்படுத்தும்போது, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” (வச. 15), “பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி” (வச. 29) பேசுவோம். 

யாரும் பலவீனங்களையும் குழுப்பங்களையும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. நம்முடைய சுபாவங்களில் ஏதோ நாற்றம் வீசும்போது, கிருபையோடும் உண்மையோடும் தாழ்மையோடும் மென்மையாக பேசக்கூடிய உண்மையுள்ள நண்பர்களைக் கொண்டு தேவன் அதை நமக்கு தெரியப்படுத்துவார். 

அமளியினூடே கிருபை

நான் எதிர்பாராதவிதமாக ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். அறைகள் அதிர்வது போல, கீழறையில் என் மகன் கிட்டாரைச் சத்தமாக வாசித்தான். அமைதியில்லை, சமாதானமில்லை, தூக்கம் போனது. சிலநிமிடங்களில் எனது மகள் "வியத்தகு கிருபை" என்ற பாடலை தனது பியானோவில் வாசிக்க, இனிமையான இசை என் காதுகளை வருடியது.

பொதுவாக எனது மகன் கிட்டாரை வாசிக்கையில், எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த நொடியில், எனக்கு எரிச்சலூட்டி அமைதியைக் குலைத்தது. இருப்பினும் உடனே ஜான் நியூட்டனின் பாடல் வரிகள், அமளியின் மத்தியில் மேற்கொள்ளும் கிருபையை எனக்கு ஞாபகப்படுத்தியது. நமது வாழ்வின் புயல்கள் எவ்வளவாய் இரைந்தாலும், தேவையற்றதாக நம்மைத் திசைதிருப்பினாலும்; கிருபையைக் குறித்த தேவனின் குறிப்புகள் உண்மையாயும் தெளிவாயும் உள்ளன. எப்போதும் நம்மீதிருக்கும் அவருடைய கவனமான கரிசனையை நினைப்பூட்டுகின்றன.

இந்த உண்மையை நாம் வேதத்தில் பார்க்கிறோம். சங்கீதம் 107:23–32 இல், கப்பலோட்டிகள் தங்களை எளிதாய் அழிக்கக்கூடிய பெரும்புயலை எதிர்த்து கடுமையாய் போராடுகின்றனர். "அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது." (வ.26). ஆயினும் நம்பிக்கையிழக்காமல், "கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்." (வ. 28). இறுதியாக, "அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்." (வ. 30) என்று வாசிக்கிறோம்.

அமளியின் நேரங்களில், இரைச்சலும் பயமும் அணைகளைத்தாண்டி, நமது ஆத்துமாக்களில் புயலுண்டாக்கலாம். ஆனால், நாம் தேவனை நம்பி அவரிடம் ஜெபிக்கையில் தேவைகளைச் சந்திக்கும் அவரது கிருபையின் பிரசன்னத்தை நாம் அனுபவிப்போம். அவரது நிலையான அன்பென்னும் புகலிடம் அடைவோம்.

பந்தயத்தில் ஓடுதல்

தனது மனைவி, மகன் மற்றும் மகளை இழந்த தொடர் சோகங்களுக்குப் பிறகு, தனது 89ஆம் வயதில் ஃபாஜா சிங் தன்னுடைய ஆர்வமான ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். பஞ்சாபி-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிங், டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தினை நிறைவு செய்த முதல் 100 வயது நபர் என்னும் சாதனையை நிகழ்த்தினார். அவரது ஆரோக்கியமான உணவு, உடல் வலிமை, மன ஒழுக்கம் போன்றவைகள் அவரது சாதனைக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய 5 வயது வரை நடக்கமுடியாமல் இருந்தவராம். அதினால் அவரை எல்லோரும் “குச்சி” என்ற கிண்டல் செய்வார்களாம். ஆனால் தற்போது அவருடைய சாதனையைக் கண்டவர்கள் அவரை “முண்டாசிட்ட புயல்காற்று” என்று அழைக்கின்றனர். 

அப்போஸ்தலனாகிய பவுலும் தனது நாட்களில் இதேபோன்ற ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களை அங்கீகரித்தார் (1 கொரிந்தியர் 9:24). ஆனால் அவர்கள் எவ்வளவு பயிற்சி செய்தாலும் இறுதியில் அவர்களின் வலிமை குன்றுவதையும் அவர் கண்டார். ஆனால் நித்தியத்தை பாதிக்கும் விதத்தில் இயேசுவுக்காக வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று போதித்தார். தற்காலிகப் பெருமைக்காக பாடுபடும் விளையாட்டு வீரர்கள் மிகவும் கடினமாக உழைக்க முடியும் என்றால், “அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு" வாழ்பவர்கள் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படவேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 25).

இரட்சிப்பைப் பெறுவதற்கு நாம் பயிற்சியளிக்கவில்லை. மாறாக, நமது இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது என்பதை நாம் உணரும்போது, அது நமது வாழ்வின் முக்கியத்தவத்தை உணர்த்தி நம்முடைய ஓட்டத்தை எவ்வளவு நேர்த்தியாகவும் உண்மையாகவும் நிறைவுசெய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

பொறுப்பற்ற தீர்மானங்கள்

ஒரு கல்லூரியின் கால்பந்து ஆட்டத்திற்குப் பின், அந்த வாலிபன் தன் நண்பனை மோட்டார் சைக்கிளில் வேகமாகத் தொடர்ந்தான். பலமாய் மழை பெய்ததால் தன் நண்பனுக்குச் சமமாய் ஓட்டுவது கடினமாயிருந்தது. திடீரென தனக்குமுன் வந்த சிக்னல் கம்பத்தைப் பார்த்தவன் வேகமாக பிரேக்கை அழுத்தவே, சாலையிலிருந்து சறுக்கிய வண்டி, அருகேயிருந்த பெரிய மரத்தில் மோதியது. வண்டி உருக்குலைந்து, அவன் கண் விழிக்கையில் அருகிலிருந்த மருத்துவமனையின் கோமா பிரிவில் இருந்தான். தேவனின் கிருபையால் அவன் உயிரோடிருந்தாலும், அவனுடைய பொறுப்பற்ற முறை பலத்த சேதத்தை உண்டாக்கிவிட்டது.

தனக்கே பெரிய விளைவுகளை உண்டாக்கும் பொறுப்பற்ற தீர்மானத்தை மோசே எடுத்தார். தண்ணீர் பற்றாக்குறை உண்டானபோது, அவர் மதியீனமான முடிவொன்றை எடுத்தார் (என்னைப் பொறுத்தமட்டில் இது பெரிய காரியமில்லை). சீன் வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களுக்கு தண்ணீரில்லை, "அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்." (எண்ணாகமம் 20:2). திகைத்துப்போன தலைவனை நோக்கி, ஒரு கன்மலையிடம் பேசுமாறு தேவன் சொன்னார் "அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்" (வ.8). ஆனால் மாறாக அவன் , "கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்" (வ.11). அதற்கு தேவன், "நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்." (வ.12).

நாம் பொறுப்பற்ற முடிவுகளை எடுக்கையில் அதின் விளைவுகளை நாமே அனுபவிப்போம். "ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்." (நீதிமொழிகள் 19:2). நாம் ஜெபத்தோடும், கவனத்தோடும் தேவனின் ஞானத்தையும், வழிகாட்டுதலையும் இன்று நமது அனைத்து முடிவுகளிலும் தீர்மானங்களிலும் தேடுவோமாக.

“உங்களுக்கு சொந்தமாக்குங்கள்!"

ஜூன் 11, 2002 அன்று, “அமெரிக்கன் ஐடல்” என்னும் பாடும் போட்டி துவங்கியது. ஒவ்வொரு வாரமும், பங்கேற்றவர்கள் பிரபலமான பாடல்களில், தங்கள் சொந்த வரிகளில் பாடினார்கள். பார்வையாளர்கள், போட்டியின் அடுத்த சுற்றுக்கு யார் முன்னேறினார்கள் என்று வாக்களித்தனர்.

நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவரான, ராண்டி ஜாக்சன், “நீங்கள் அந்தப் பாடலை உங்களுடைய சொந்த பாடலாக்கிக்கொண்டீர்கள்” என்று அவர்களைப் பாராட்டுவது வழக்கம். ஒரு பாடகர், ஒரு பழக்கமான ட்யூனை எடுத்து, அதை கற்றுக்கொண்டு, அதை ஒரு தனித்துவமான புதிய வழியில் பாடியபோது அவர் அந்தப் பாராட்டுகளுக்கு பாத்திரமானார். “அதைத் தனக்கென  சொந்தமாக்கிக்கொள்ள" அதை முழுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சொந்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பின்னர், அதை மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தலாம்.

நம்முடைய விசுவாசத்தையும் அதை பிரதிபலிப்பதையும் சொந்தமாக்கிக் கொள்ளும்படியான ஒன்றைச் செய்ய பவுல் நம்மை அழைக்கிறார். பிலிப்பியர் 3இல், தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருப்பதற்கான முயற்சிகளை அவர் நிராகரிக்கிறார் (வச. 7–8). மாறாக, “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து," வாழ அவர் நமக்குக் கற்பிக்கிறார் (வச. 9). மன்னிப்பு மற்றும் மீட்பின் பரிசு நமது உந்துதலையும் இலக்குகளையும் மாற்றுகிறது: “கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்" (வச. 12).

இயேசு நம் வெற்றியை உறுதிப்படுத்துகிறார். நம் வேலை? அந்த உண்மையை அறிந்துக்கொண்டு, தேவனின் வசனத்தை நாம் உள்வாங்கி, உடைந்த நம் உலகத்தின் மத்தியில் வாழவேண்டும். அதாவது, நாம் நமது விசுவாசத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக" (வச. 16) என்று வலியுறுத்துகிறார்.

 

தேவனைத் தேடுதல்

நிச்சயதார்த்த மோதிரங்களுக்காக நான் ஷாப்பிங் செய்யும்போது, சரியான வைரத்தை கண்டுபிடிப்பதற்கு பல மணிநேரம் செலவிட்டேன். நல்ல தரமான ஒன்றை நான் தவறவிட்டுவிடக்கூடாது என்கிற எண்ணம் என்னை வாட்டியது.

என்னுடைய இந்த அலைபாயும் மனநிலையை, பொருளாதார உளவியலாளரான பேரி ஸ்வார்ட்ஸ், “திருப்தியாளர்” என்று அழைக்காமல் “அதிகப்படுத்துகிறவர்” என்று அழைக்கிறார். ஒரு திருப்தியாளர், அவரின் தேவை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்வார். ஆனால் அதிகப்படுத்துபவர்களுக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் (குற்றமனசாட்சி) இருக்கும். அநேக வாய்ப்புகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கும் நம்முடைய திறன்? கவலை, மனச்சோர்வு மற்றும் அதிருப்தி. சமூகவியலாளர்கள் இந்த மனநிலையை, “தவறவிட்டுவிடுவோமோ என்கிற பயம்” என்று அடையாளப்படுத்துகின்றனர்.

நிச்சயமாக, வேதத்தில் அதிகப்படுத்துபவர் அல்லது திருப்தியாளர் போன்ற வார்த்தைகளை நாம் காண முடியாது. ஆனால் இதேபோன்ற ஒரு யோசனையை நாம் காண்கிறோம். 1 தீமோத்தேயுவில், பவுல் தீமோத்தேயுக்கு இந்த உலகத்தின் விஷயங்களைக் காட்டிலும் தேவனைத் தேடும்படியாக சவால் விடுக்கிறார். உலகத்தின் “நிறைவாக்கும்” வாக்குறுதிகள் ஒருபோதும் நம்மை திருப்தியாக்காது. அதற்கு பதிலாக தீமோத்தேயு தனது அடையாளத்தை தேவனில் வேரூன்ற வேண்டும் என்று பவுல் விரும்பினார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (6:6).

“உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” (வச. 8) என்று பவுல் கூறும்போது, அவர் “திருப்தியாளர்” என்பது நன்றாய் தெரிகிறது.

உலகம் கொடுக்கும் நிறைவை அடைய நான் தீர்மானிக்கும்போது நான் திருப்தியற்றவனாக இருக்க நேரிடுகிறது. ஆனால் நான் தேவனில் கவனம் செலுத்தி, என்னுடைய இந்த மனநிலையை கைவிடும்போது, என் ஆத்துமா மெய்யான மனநிறைவையும் இளைப்பாறுதலையும் அடைகிறது.

நமக்காக ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துதல்

எங்கள் வீட்டிற்கு ஒரு நாய்க்குட்டியை வாங்க நாங்கள் தீர்மானித்தோம். என் பதினோரு வயது மகள், நாய்கள் என்ன சாப்பிடும் என்று அதின் வாழ்க்கை முறையைக் குறித்து மாதக்கணக்கில் ஆராய்ந்தாள்.

நாய்க்குட்டியை அதற்கென ஒரு தனியறையில் வளர்த்தால், அது சிறப்பாக செயல்படும் என்று அவள் சொன்னாள். ஆகையால், நாங்கள் அதற்கென ஒரு படுக்கையறையை ஆயத்தப்படுத்தினோம். அந்த நாய்க்குட்டியை வளர்க்கும்போது, ஆச்சரியங்கள் நிறைய காத்திருக்கும் என்றறிவோம். ஆனால், அதை வளர்க்க என் மகள் ஏறெடுத்த ஆச்சரியமான முன்னேற்பாட்டுக்கு ஈடில்லை.

வரப்போகிற நாய்க்குட்டிக்காக ஆர்வமுடன் என்ன மகள் ஏறெடுத்த இந்த முன்னேற்பாடுகள், தன் ஜீவியத்தையும், வாக்குறுதிகளையும் தன் ஜனத்தோடு பகிர ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, ஏங்கிக்கொண்டிருக்கும் கிறிஸ்துவின் எண்ணத்தை எனக்கு நினைவுபடுத்தியது. பூமியில் தன்னுடைய வாழ்நாளின் கடைசிநாட்களில் இயேசு, தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1) என்று வலியுறுத்துகிறார். மேலும், அவர்களுக்காக “ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, (அவர்) இருக்கிற இடத்திலே (அவர்களும்) இருக்கும்படி” (வச. 3) அவர்களை சேர்த்துக்கொள்வேன் என்று வாக்குப்பண்ணுகிறார். 

சீஷர்கள் சீக்கிரமே பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். ஆனால், அவர்களை சுயதேசம் திரும்பச் செய்யும் முயற்சியில் கிறிஸ்து ஈடுபட்டிருக்கிறார் எனும் உண்மையை அவர்கள் நம்பும்படி செய்தார். 

புதிய நாய்க்குட்டியை எங்கள் வீட்டிற்கு வரவேற்கும் முன்னேற்பாடு முயற்சியில் என் மகளுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆனால் அதை நான் ரசித்தேன். அதேபோன்று, நமக்காய் ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, நம்மோடு நித்திய வாழ்வை பகிர்ந்துகொள்ள நினைக்கும் நம்முடைய இரட்சகரின் ஏக்கத்தை என்னால் கற்பனை செய்ய முடிகிறது (வச.2).