இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள். 

களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம்.

பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார். 

பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).