எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆடம் ஆர். ஹோல்ஸ்கட்டுரைகள்

தேவனைத் தேடுதல்

நிச்சயதார்த்த மோதிரங்களுக்காக நான் ஷாப்பிங் செய்யும்போது, சரியான வைரத்தை கண்டுபிடிப்பதற்கு பல மணிநேரம் செலவிட்டேன். நல்ல தரமான ஒன்றை நான் தவறவிட்டுவிடக்கூடாது என்கிற எண்ணம் என்னை வாட்டியது.

என்னுடைய இந்த அலைபாயும் மனநிலையை, பொருளாதார உளவியலாளரான பேரி ஸ்வார்ட்ஸ், “திருப்தியாளர்” என்று அழைக்காமல் “அதிகப்படுத்துகிறவர்” என்று அழைக்கிறார். ஒரு திருப்தியாளர், அவரின் தேவை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்வார். ஆனால் அதிகப்படுத்துபவர்களுக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் (குற்றமனசாட்சி) இருக்கும். அநேக வாய்ப்புகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கும் நம்முடைய திறன்? கவலை, மனச்சோர்வு மற்றும் அதிருப்தி. சமூகவியலாளர்கள் இந்த மனநிலையை, “தவறவிட்டுவிடுவோமோ என்கிற பயம்” என்று அடையாளப்படுத்துகின்றனர்.

நிச்சயமாக, வேதத்தில் அதிகப்படுத்துபவர் அல்லது திருப்தியாளர் போன்ற வார்த்தைகளை நாம் காண முடியாது. ஆனால் இதேபோன்ற ஒரு யோசனையை நாம் காண்கிறோம். 1 தீமோத்தேயுவில், பவுல் தீமோத்தேயுக்கு இந்த உலகத்தின் விஷயங்களைக் காட்டிலும் தேவனைத் தேடும்படியாக சவால் விடுக்கிறார். உலகத்தின் “நிறைவாக்கும்” வாக்குறுதிகள் ஒருபோதும் நம்மை திருப்தியாக்காது. அதற்கு பதிலாக தீமோத்தேயு தனது அடையாளத்தை தேவனில் வேரூன்ற வேண்டும் என்று பவுல் விரும்பினார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (6:6).

“உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” (வச. 8) என்று பவுல் கூறும்போது, அவர் “திருப்தியாளர்” என்பது நன்றாய் தெரிகிறது.

உலகம் கொடுக்கும் நிறைவை அடைய நான் தீர்மானிக்கும்போது நான் திருப்தியற்றவனாக இருக்க நேரிடுகிறது. ஆனால் நான் தேவனில் கவனம் செலுத்தி, என்னுடைய இந்த மனநிலையை கைவிடும்போது, என் ஆத்துமா மெய்யான மனநிறைவையும் இளைப்பாறுதலையும் அடைகிறது.

நமக்காக ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துதல்

எங்கள் வீட்டிற்கு ஒரு நாய்க்குட்டியை வாங்க நாங்கள் தீர்மானித்தோம். என் பதினோரு வயது மகள், நாய்கள் என்ன சாப்பிடும் என்று அதின் வாழ்க்கை முறையைக் குறித்து மாதக்கணக்கில் ஆராய்ந்தாள்.

நாய்க்குட்டியை அதற்கென ஒரு தனியறையில் வளர்த்தால், அது சிறப்பாக செயல்படும் என்று அவள் சொன்னாள். ஆகையால், நாங்கள் அதற்கென ஒரு படுக்கையறையை ஆயத்தப்படுத்தினோம். அந்த நாய்க்குட்டியை வளர்க்கும்போது, ஆச்சரியங்கள் நிறைய காத்திருக்கும் என்றறிவோம். ஆனால், அதை வளர்க்க என் மகள் ஏறெடுத்த ஆச்சரியமான முன்னேற்பாட்டுக்கு ஈடில்லை.

வரப்போகிற நாய்க்குட்டிக்காக ஆர்வமுடன் என்ன மகள் ஏறெடுத்த இந்த முன்னேற்பாடுகள், தன் ஜீவியத்தையும், வாக்குறுதிகளையும் தன் ஜனத்தோடு பகிர ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, ஏங்கிக்கொண்டிருக்கும் கிறிஸ்துவின் எண்ணத்தை எனக்கு நினைவுபடுத்தியது. பூமியில் தன்னுடைய வாழ்நாளின் கடைசிநாட்களில் இயேசு, தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1) என்று வலியுறுத்துகிறார். மேலும், அவர்களுக்காக “ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, (அவர்) இருக்கிற இடத்திலே (அவர்களும்) இருக்கும்படி” (வச. 3) அவர்களை சேர்த்துக்கொள்வேன் என்று வாக்குப்பண்ணுகிறார். 

சீஷர்கள் சீக்கிரமே பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். ஆனால், அவர்களை சுயதேசம் திரும்பச் செய்யும் முயற்சியில் கிறிஸ்து ஈடுபட்டிருக்கிறார் எனும் உண்மையை அவர்கள் நம்பும்படி செய்தார். 

புதிய நாய்க்குட்டியை எங்கள் வீட்டிற்கு வரவேற்கும் முன்னேற்பாடு முயற்சியில் என் மகளுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆனால் அதை நான் ரசித்தேன். அதேபோன்று, நமக்காய் ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, நம்மோடு நித்திய வாழ்வை பகிர்ந்துகொள்ள நினைக்கும் நம்முடைய இரட்சகரின் ஏக்கத்தை என்னால் கற்பனை செய்ய முடிகிறது (வச.2).

தப்பிப்பதா அல்லது சமாதானமா?

“தப்பித்தல் (ESCAPE)” என்று பெயரிடப்பட்ட சுடுதண்ணீர் தொட்டி விற்கும் கடையின் விளம்பர பலகையை பார்த்தோம். என் மனைவியும் நானும் ஒரு நாள் அந்த தொட்டியை வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம். அதை வீட்டின் கொல்லைப் புறத்திலே வைத்துக்கொண்டால் விடுமுறை கொண்டாடுவது போல் இருக்கும் என்று யோசித்தோம். ஆனால் அதை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டும், அதற்கான மின் கட்டணத்தை செலுத்தவேண்டும். அதை நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, “தப்பித்தல்” என்ற கடையின் பெயரானது, நான் சில காரியங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணத் தூண்டியது. அந்த வார்த்தை நமக்குத் தேவையான நிவாரணம், ஆறுதல், பாதுகாப்பு மற்றும் தப்பித்தல் ஆகியவற்றை வாக்களிக்கிறது. ஓய்வெடுப்பதிலேயோ அல்லது அழகான இடத்தை சுற்றிப்பார்ப்பதிலேயோ எந்த தவறும் இல்லை. ஆனால் வாழ்க்கையின் கடினங்களில் இருந்து தப்பிப்பதற்கும் அவற்றின் மத்தியில் தேவனைச் சார்ந்து வாழ்வதற்கும் வித்தியாசம் உண்டு.

யோவான் 16ல், இயேசு தன் சீஷர்களிடம் அவர்களின் வாழ்க்கையில் விசுவாசப் போராட்டங்கள் உண்டு என்கிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்ற வாக்குறுதியையும் கொடுத்துள்ளார். தம்முடைய சீஷர்கள் சோர்ந்துபோவதை இயேசு விரும்பவில்லை. அதற்கு பதிலாக சீஷர்கள் தம் மீது விசுவாசம் வைக்குமாறும், “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன்," என்கிற இளைப்பாறுதலை அறிய வேண்டும் என்றும் அவர் விரும்பினார் (வச. 33). இயேசு வேதனையில்லா வாழ்வை வாக்களிக்கவில்லை. நாம் அவர் மேல் விசுவாசம் வைத்து இளைப்பாறுதலை அனுபவிக்கும்போது, இந்த உலகம் விற்கும் “தப்பிக்கும்” வழிகளை விட நாம் திருப்தியான சமாதானத்தைப் பெறமுடியும் என்று வாக்களிக்கிறார்.

கிறிஸ்மஸ்க்கு ஒருநாள் நெருக்கத்தில்

“கிறிஸ்மஸ் முடிந்து விட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று என்னுடைய மகள் மனமுடைந்து கூறினாள். 

அவள் எப்படி உணருகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது: கிறிஸ்மஸ்க்கு பின்பு மந்தமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. பரிசுகள் எல்லாம் பிரித்துப் பார்க்கப்படும். வண்ண விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். விடுமுறையற்ற ஜனவரி மாதம் வந்துவிடும். பல எதிர்பார்ப்புகளுடன் வரும் அடுத்த கிறிஸ்மஸ் வெகு தூரத்தில் இருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்மஸ் ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, “காலண்டர் என்ன தேதி வேண்டுமானாலும் காட்டட்டும். ஆனால் நாங்கள் எப்போதுமே கிறிஸ்மஸ்க்கு ஒரு நாள் நெருக்கத்தில் இருக்கிறோம்” என்பதை உணர்ந்தேன். அதை நான் அடிக்கடி சொல்ல பழகிக்கொண்டேன். 

காலத்திற்கு உட்பட்ட நம்முடைய சரீரப் பிரகாரமான கொண்டாட்டத்திற்கு பின் இருக்கும் ஆவிக்குரிய யதார்த்தம் மிகவும் முக்கியமானது: இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்த இரட்சிப்பு மற்றும் அவர் மீண்டும் வருவார் என்னும் நம்பிக்கை. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து காத்திருங்கள் என்று வேதம் அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது. பிலிப்பியர் 3:15-21ல் சொல்லுவது எனக்கு பிடித்தமானது. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிற (வச. 19) உலகத்தின் வாழ்க்கைமுறையும் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையும் முரண்படுத்தப்படுகிறது: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (வச. 20).

பரலோகத்திலிருக்கிற நம்முடைய குடியிருப்பானது நாம் என்ன நம்புகிறோம் என்பதையும், எப்படி வாழுகிறோம் என்று எல்லாவற்றையும் மாற்றுகிறது. இயேசுவின் வருகைக்கு ஒரு நாள் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு, நம்முடைய நம்பிக்கையை உறுதியாக்குகிறது. 

குறைகிறது

என் தொண்டையில் இருமல் உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வு குளிர்காய்ச்சலாய் மாறியது. அது என் மூச்சுக் குழாயில் வேதனையை ஏற்படுத்தியது. அத்துடன் கக்குவான் இருமல் தொற்றிக்கொண்டது. அது பின்பாக நிமோனியா காய்ச்சலாக மாறியது.

எட்டு வாரங்கள் தொடர்ந்த அந்த இருமல் என் சரீரத்தை ஒடுக்கியது. எனக்கு வயதாகிவிட்டது என்பதை நான் நம்பவில்லை. ஆனால் எனக்கு வயதாகிறது என்பதை நம்பவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தேன். இந்த சரீர பெலத்திற்கு எங்களுடைய சபை பராமரிப்புக் குழுவை சேர்ந்த ஒருவர் “குறைதல்” என்று வேடிக்கையான ஒரு பெயரை வைத்திருந்தார். ஆனால் நம் ஆயுசு குறைவுபட்டுக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று அல்ல.

2 கொரிந்தியர் 4இல் பவுலும் இந்த குறைவுப்படுதலைக் குறித்து எழுதுகிறார். அவரும் அவருடைய உடன் ஊழியர்களும் கடந்துபோன உபத்திரவத்தை இந்த அதிகாரம் பதிவிட்டுள்ளது. தன்னுடைய புறம்பான மனுஷனானது அழிந்து கொண்டிருக்கிறது என்று தன்னுடைய ஊழியத்தின் பாதையில் தான் பட்ட பாடுகளைக் குறித்து கூறுகிறார். அவருடைய வயது, உபத்திரவம், கடினமான பாதைகள் போன்றவைகளால் அவருடைய சரீரம் தோற்றுபோனாலும், “உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” என்கிற உறுதியான நம்பிக்கையை பவுல் பிடித்திருக்கிறார். (வச.16). இதை இலேசான உபத்திரவம் என்று குறிப்பிடும் பவுல், அதனை “இனி வரும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” என்று ஒப்பிடுகிறார் (வச.17). 

இந்த இரவில் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதும், என் நெஞ்சில் இந்த சரீர குறைவுப்படுதலை நான் உணருகிறேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையோ, அல்லது தேவனை சார்ந்து வாழுகிற எவருடைய வாழ்க்கையும் முடிவடைவதில்லை என்பதே உண்மை. 

அணைத்துக் கொள்ளுதல்

“அப்பா, நீங்கள் எனக்காக படித்து காட்டுவீர்களா?” என் மகள் கேட்டாள். அது ஒரு குழந்தை பெற்றோரிடம் கேட்கும் வழக்கமில்லாத கேள்வி அல்ல. ஆனால் என் மகளுக்கு இப்போது பதினொரு வயது. இந்த சமயத்தில் அத்தகைய கோரிக்கைகள் அவள் இளமையாக இருந்தபோது இருந்ததை விட குறைவாகவே உள்ளன. "ஆம்,"என்று நான் மகிழ்ச்சியுடன் சொன்னேன், அவள் படுக்கையில் என் அருகில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

நான் அவளுக்காக படித்து காட்டியபோது அவள் உண்மையாகவே என்னுள் உருகினாள்.  நம்முடைய பிதா நம்மீது வைத்திருக்கும் நேர்த்தியான அன்பு, ​​அவருடைய பிரசன்னத்திற்குள்ளும் நம்மீதுள்ள அன்பிற்குள்ளும் நம்மை “அணைக்க வேண்டும்” என்ற அவருடைய ஆழ்ந்த விருப்பம் ஆகியவற்றின் அறிகுறியை நாம் உணரும்போது ஒரு தந்தையாக பல சிறப்பான தருணங்களில் இதுவும் ஒன்று,

நான் என் பதினொரு வயது உள்ள எனது மகளை போல் அந்த தருணத்தில் உணர்ந்தேன். பெரும்பாலான நேரம், நான் யாரையும் சாராமல் இருப்பதில் கவனம் செலுத்துகிறேன். தேவன் நம்மீது வைத்திருக்கும் மென்மையான மற்றும் பாதுகாப்பான அன்பிலிருக்கும் தொடர்பை இழப்பது மிகவும் எளிது, சங்கீதம் 116 “கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர். நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்” என்று விவரிக்கிறது (வச. 5). இந்த அன்பில், என் மகளைப் போலவே, தேவனின் மடியில், அவரது வீட்டில் எனக்கு மகிழ்ச்சி இருக்கும்.

சங்கீதம் 116: 7, தேவனின் நல்ல அன்பை நாம் தவறாமல் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும், பின்னர்  காத்திருக்கும் அவருடைய கரங்களில் தவழ்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது: "என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மைசெய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு". அது  உண்மையாகவே, அவரிடம் உள்ளது. 

பயத்தின் புயல்கள்

சமீபத்தில் நான் பார்த்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில், ஒரு பெண் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் “மாற்கு, நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார், “பயத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காத என்னை நான் தேடுகிறேன்”, என்று, தொலைக்காட்சியில் அவர் என்ன பார்க்க விரும்புகிறார் என்பதை தான் அவள் கேட்கிறாள் என்பதை உணராமல், அவர் நிதானமாக பதிலளித்தார்.

ஆஹா! நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு தொலைக்காட்சி விளம்பரம் என்னை இவ்வளவு ஆழமாக தாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை! ஆனால் என்னால் மாற்குடன் என்னை தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது: பயம் என் வாழ்க்கையை வழிநடத்துவதைப் போல சில நேரங்களில் தோன்றும்போது, சில சமயங்களில் நானும் சங்கடப்படுகிறேன்.
 
இயேசுவின் சீஷர்களும் பயத்தின் பலத்த வல்லமையை அனுபவித்தார்கள். ஒருமுறை அவர்கள் கலிலேயா கடலைக் கடக்கமுற்படும்போது (மாற்கு 4:35), “பலத்த சுழல்காற்று உண்டாகி படவு நிரம்பத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதிற்று” (வ. 37), பயங்கரம் அவர்களைப் பிடித்தது, (நித்திரையிலிருக்கும்) இயேசு அவர்களைப்பற்றி கவலைப்படமாட்டார் என்றெண்ணி அவருக்கே அறிவுரை கூறினர்: “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள்.

பயம் சீஷர்களின் பார்வையை மழுங்கடித்தது, அவர்களுக்கான இயேசுவின் நல்ல நோக்கங்களை காணக்கூடாதபடி அவர்களுடைய கண்களை குருடாக்கியது, அவர் காற்றையும் அலைகளையும் அதட்டிய பிறகு (வ. 39), கிறிஸ்து சீஷர்களிடம் ஊடுருவும் இரண்டு கேள்விகளை முன்வைத்தார். ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று? (வ. 40).

நம் வாழ்க்கையிலும் புயல்கள் தாக்குகிறது அல்லவா? ஆனாலும் இயேசுவின் கேள்விகள் நம் பயத்தை சரியான கண்ணோட்டத்துடன் அணுகச்செய்கிறது. அவருடைய முதல் கேள்வி நம் பயங்களை குறிப்பிட செய்கிறது. இரண்டாவது சிதைந்தபோன அந்த உணர்வுகளை அவரிடம் ஒப்படைக்க அழைக்கிறது - வாழ்க்கையின் மிக மோசமான புயல்களிலிருந்தும் அவர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைக் கண்கள் காண அவரிடம் கேட்பது.

செழித்தோங்க வெட்டி களைதல்

ஒரு பெரிய வண்டு ஒரு பூப்பூக்கும் புதரில் மெல்ல இறங்கியதை நான் பார்த்தபோது, அந்த புதரின் பசுமையான இலைகள் வண்ணமயமாக விரிவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதன் கரு நீல மலர்கள் கண்களையும் வண்டுகளையும் ஒரே மாதிரி ஈர்த்தன. இலையுதிர் காலத்தின் கடைசி நாட்கள் என்பதால், அவை மீண்டும் பூக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். என் மனைவியின் பெற்றோர் ஒரு பஞ்சு செடியை ஒரு சிறு துண்டாக குறைத்த போது அவர்கள் அதை அகற்ற முடிவு செய்தார்கள் என்று நான் கருதினேன். கொடூரமாக தோன்றிய, வெட்டி களைதலின் பிரகாசமான விளைவை நான் இப்பொழுது கண்டேன்.
இத்தகைய கடுமையான வெட்டுகளால் ஏற்படுகின்ற ஆச்சரியப்படத்தக்க அழகுதான் விசுவாசிகளிடையே கடவுளின் வேலையை விவரிக்க இயேசு வெட்டி களைதலின் உருவகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். யோவான் 15ல் இயேசு கூறுகிறார், "நான் மெய்யான திராட்சச்செடி. என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார். கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும் படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார்." (வச. 1-2).
நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் கடவுள் எப்போதும் நமது ஆவிக்குரிய புதுப்பித்தல் மற்றும் கனி கொடுத்தல் இவற்றை நோக்கியே நம்மில் செயல்படுகிறார் என்பதை இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. வெட்டி களைதலின் பருவங்களான துன்பப்படுதல் அல்லது உணர்ச்சியின் மலட்டுத்தன்மை இவற்றின் போது, நாம் எப்போதாவது மீண்டும் செழித்து வளர முடியுமோ என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனால் கிறிஸ்து தொடர்ந்து அவருடன் நாம் நெருக்கமாக இருக்கும்படி நம்மை ஊக்குவிக்கின்றார். "கொடியானது திராட்சைச் செடியில் நிலைத்திராவிட்டால், அது தானாய் கனி கொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (வச. 4). நாம் தொடர்ந்து இயேசுவிடமிருந்து ஆவிக்குரிய ஊட்டத்தை பெறுகையில் இதன் விளைவாக நம் வாழ்வில் வரும் அழகும் கனி தருதலும்,தேவனின் நன்மையை இந்த உலகிற்கு காண்பிக்கும்.

இயேசுவின் வேகத்தில் நகர்வது

சமீபத்தில் எனது நான்கு சக்கர வாகனம் பழுதாகி விட்டது.  வாகனம் பழுது பார்க்கும் இடம் ஒரு மைல் தூரத்தில் இருந்தது. நடந்து செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். ஒன்றை கவனித்தேன். அனைவரும் என்னை விட மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இது ஒன்றும் பெரிய ஏவுகணை அறிவியல் இல்லை நடந்து செல்பவர்களை விட ஊர்திகளில் செல்பவர்கள் வேகமாக செல்வார்கள். அப்பொழுது தான் ஒன்றை நான் உணர்ந்தேன்: நாம் எப்போதும் மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். மற்றொன்றையும் உணர்ந்தேன்: தேவனையும் என்னுடைய கால அட்டவணைக்கு ஏற்ப வேகமாக நகர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது அவருடைய மெதுவான வேகம் அவர் நண்பர்களை சில நேரங்களில் விரக்தி அடைய செய்தது. நாம் யோவான் 11ல் வாசிப்பது போன்று மார்த்தாள் மரியாள் தங்கள் சகோதரனாகிய லாசருவை குணப்படுத்த வல்லவராகிய  இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். ஆனால் அவரோ லாசரு மரித்து 4 நாட்களுக்கு பிறகு வந்தார் (வச. 17). மார்த்தாள் இயேசுவைப் பார்த்து “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால்  என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” என்று கூறினாள். அதாவது இயேசு வேகமாக செயல்படவில்லை என்று அர்த்தம். ஆனால் இயேசுவோ லாசருவை உயிரோடு எழுப்பும்படி பெரிய திட்டத்தை வைத்திருந்தார் (வச. 38-44).

உங்களால் மார்த்தாவின் விரக்தியை உணர முடிகிறதா? என்னால் முடிகிறது. சில சமயங்களில் நம் ஜெபங்களுக்கு சீக்கிரமாக பதிலளிக்கும்படி இயேசுவை எதிர்பார்க்கிறவர்களாக நாம் இருக்கிறோம்.  சிலவேளைகளில் அவர் தாமதிப்பது போல் காணப்படலாம். ஆனால் அவருடைய சர்வவல்ல திட்டம் நம்  திட்டத்திற்கு எதிர்மாறானது.  அவருடைய திட்டத்தில் உள்ள வேலைகளை அவர் சரியாக செய்து முடிக்க வல்லவர். இதிலிருந்து அவருடைய மகிமையும் நன்மையும் நம் திட்டங்களுக்கு அப்பாற்பட்டவை என்று அறியலாம்.