எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.
ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, “மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி” எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).
இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார்.
ஆதி விசுவாசிகளின் சமூகம் உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது? கிறிஸ்துவில் உங்கள் சமூகத்தை வளப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் யாவை?
தேவனே, இயேசு கிறிஸ்துவின் மூலம் எங்களை உம் மக்களாக ஆக்கியதற்கு உமக்கு நன்றி. உமது மகிமைக்காக ஒன்றுபட்ட சமூகமாக மாற எங்களுக்கு உதவும்
