1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, ‘தி ஹிப்பி டிரெயில்’ ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. “பேடி” என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.
எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.
உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இதுபோன்ற சோர்வை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் சோர்வாக இருந்தபோது தேவன் உங்களைத் தூக்கிய சில வழிமுறைகள் யாவை?
அன்பு இயேசுவே, என் சோர்வுக்கு மத்தியிலும் உமது மாறாத பிரசன்னத்தை உணர்ந்துகொள்ள எனக்கு உதவும். ஏனெனில் உம்மில் மட்டுமே என் பயணத்திற்கான பெலனைக் காண்பேன்.
