2023ல் பெங்களூருவில் சில காலம் கழிக்கும் திட்டத்துடன் வந்தேன். ஆனால் அந்த காலம் நான் எதிர்பாராமல் நீண்டது. எனக்கு இரவு உணவு கொண்டு வரும் குடும்பத்தினர் எனக்கு உதவ முடியாத நிலையில், நான் வெளியே சாப்பிட ஆரம்பித்தேன். இது என் உடல்நிலையைப் பாதித்தது. அதிர்ஷ்டவசமாக நான் குறுகிய காலமே பழகிய ஒரு குடும்பம், எனக்கு உணவளித்து உதவ விரும்புவதாகச் சொன்னார்கள். அவர்கள் “பிறருக்கு உதவி சேவை செய்திடத் தேவன் எங்களுக்கு பெலனளித்துள்ளார், நாங்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாய் இருக்க வேண்டும்” என்றனர். தேவனின் வார்த்தை பல்வேறு சூழல்களில் உக்கிராணத்துவத்தை பற்றிப் பேசுகிறது மற்றும் நாம் “உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக” (லூக்கா 12:42-48) இருக்க வேண்டும் என்கிறது. தேவன் நமக்குப் பல வரங்களைத் தந்திருக்கிறார், அவற்றை நாம் உண்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (1 பேதுரு 4:10). இந்த ஈவுகளைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் பிறருக்கு ஊழியம் செய்யவும், அன்புடன் விருந்தோம்பல் செய்யவும் நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ.8-10). நம்மிடம் இருப்பது நமக்காக மட்டுமல்ல, பிறரின் நலனுக்காகவும் இருக்கிறது என்பதை ஒரு உண்மையுள்ள உக்கிராணக்காரன் உணர்ந்துகொள்கிறான். பெங்களூருவில் உள்ள குடும்பம் அதையே எனக்காகச் செய்தது. அவர்கள் தங்கள் பலத்தை உணர்ந்து அதற்கேற்ப உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாகச் செயல்பட்டார்கள்.

நம்மிடம் எத்தகைய திறன் இருந்தாலும் அது தேவனிடமிருந்தே வந்தது என்பதை நினைவில் கொள்வோம் (வ.10). நாம் பிறருக்கு உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வரங்களையும் உடைமைகளையும் அவர் நம்மிடம் நம்பி ஒப்படைத்துள்ளார். எனவே, நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து ஒருவருக்கொருவர் மனமுவந்து உதவி செய்வோம். நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களும், தனித்தன்மை வாய்ந்த மனிதர்களாக நாம் உருவாக்கப்பட்ட விதமும் நமக்கு மட்டுமல்ல, தேவைப்படுகிற அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்வோம். தேவன் கொடுத்த கிருபைகள் மற்றும் ஈவுகளுக்கு ஏற்ப நாம் பிறருக்கு நன்மை செய்யும்போது, நாம் அவர்களின் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக மாறுகிறோம்.