Archives: ஜனவரி 2026

குறுக்குச் சாலையில் தேவன்

பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு, பின்னர் உடல் சூடு அதிகரித்த பிறகு, என் கணவருக்கு அவசர சிகிச்சை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. உடனடியாக மருத்துவமனை அவரை அனுமதித்தது. ஒரு நாள் கடந்துபோனது. அடுத்த நாளில் அவர் சற்று தேறியிருந்தார். ஆகிலும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கும் நிலையில் இல்லை. மருத்துவமனையில் தங்கி என் கணவரை பராமரித்துக்கொள்வதும், அதே நேரத்தில் பலர் பங்குபெறும் திட்டப்பணி வேலையை செய்வதற்கும் நான் மிகவும் சிரமப்பட்டேன். நான் நலமாக இருப்பேன் என்று என் கணவர் உறுதியளித்தார். ஆனால் அவரை பராமரிப்பதற்கும் என் வேலையை செய்வதற்கு இடையில் நான் சிக்கித் தவிக்க நேரிட்டது.

வாழ்க்கையின் இதுபோன்ற முக்கியமான தருணங்களில் தீர்மானம் எடுப்பதற்கு தேவ ஜனத்திற்கு தேவனுடைய உதவி தேவைப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஆனால் மோசே, தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து ஜீவனைத் தெரிந்துகொள்ளும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்துகிறார் (உபாகமம் 30:19). மேலும் எரேமியா தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்” (எரேமியா 6:16) என்று ஜனங்களுடைய வழிநடத்துதலுக்கு அறிவுறுத்துகிறார். வேதாகமத்தில் பூர்வ பாதைகளும் கடந்த காலத்தில் கர்த்தர் செய்த நன்மைகளும் நம்மை நேர்த்தியாய் வழிநடத்தக்கூடியவைகள்.

நான் நடைமுறையில் குழப்பமான வாழ்க்கைப் பாதையில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, எரேமியாவின் ஞான போதனைனை கருத்தில்கொண்டேன். என் கணவருக்கு நான் தேவை. என் வேலையையும் நான் செய்தாக வேண்டும். என்னுடைய மேற்பார்வையாளர் என்னை அழைப்பித்து, வீட்டில் தங்கி கணவரை பராமரித்துக்கொள்ளும்படிக்கு என்னை ஊக்கப்படுத்தினார். தேவனுடைய இந்த கிருபைக்காய் நான் பெருமூச்சுடன் நன்றி சொன்னேன். தேவனுடைய வழிநடத்துதல் எப்போதும் தெளிவாக தெரிவதில்லை. ஆனால் அது நம்மை நோக்கி நிச்சமாய் வரும். நாம் குழப்பமான பாதையில் நிற்கும்போது, அது நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்பதை நம்புவோம்.

- எலிசா மோர்கன்

கிறிஸ்துவில் அமைதியான உண்மை

அவரை நான் முதலில் பார்க்கவில்லை.

நான் தங்கியிருந்த ஹோட்டலில் காலை உணவு சாப்பிடுவதற்காக நான் கீழே இறங்கிவந்தேன். உணவு உண்ணும் அந்த அறையில் அனைத்தும் சுத்தமாக இருந்தது. உணவு மேசைகள் பதார்த்தங்களினால் நிரம்பியிருந்தன. குளிர்சாதன பெட்டி நிரம்பியிருந்தது. பாத்திரம் கொள்கலன் நிரம்பியிருந்தது. அனைத்தும் சரியாக இருந்தது.

அப்போது நான் அவரைப் பார்த்தேன். ஒரு கவனிக்கப்படாத நபர் அவைகள் ஒவ்வொன்றையும் நிரப்பிக்கொண்டேயிருந்தார். அவைகளை துடைத்து சுத்தம் செய்தார். அவர் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஆனால் நான் அதிக நேரம் அமர்ந்திருந்தேன், மேலும் நான் ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதர் மிக வேகமாக வேலை செய்து கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கவனித்து, யாருக்கும் ஏதாவது தேவைப்படுமுன் அனைத்து பாத்திரங்களையும் நிரப்பிக்கொண்டேயிருந்தார். உணவு சேவையில் அனுபவம் வாய்ந்தவராக, அவர் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை நான் கவனித்தேன். இந்த மனிதர் உண்மையாக வேலை செய்ததால் அந்த இடத்தில் அனைத்தும் சரியாக இருந்தது.

இந்த நபர்; உன்னிப்பாக வேலை செய்வதைப் பார்த்து, தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் சொன்ன வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்: “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்” (1 தெசலோனிக்கேயர் 4:12). உண்மையாய் வேலை செய்யும் ஒருவன் மற்றவர்களுடைய மதிப்புக்கு எவ்விதத்தில் பாத்திரமாகக்கூடும் என்பதை அறிந்த பவுல், ஒரு சிறிய சேவையின் மூலம் சுவிசேஷத்தை நாம் எவ்வாறு கண்ணியத்துடனும் நோக்கத்துடனும் சொல்ல முடியும் என்பதை வலியுறுத்துகிறார். 

அன்று நான் பார்த்த மனிதர் கிறிஸ்தவ விசுவாசியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது அமைதியான விடாமுயற்சி, கிறிஸ்துவுக்காக அமைதியான உண்மையுடன் வாழ என்னை ஊக்குவித்தது.

- ஆடம் ஹோல்ட்ஸ்

காணப்படும் நம்பிக்கை

கடல்சார் ஆய்வாளர் சில்வியா ஏர்லே, பவளப்பாறைகள் சீரழிவதை நேரில் கண்டுள்ளார். அவர் “மிஷன் ப்ளு” என்னும் நிறுவனத்தை உலகளாவிய “நம்பிக்கை புள்ளிகளின்" வளர்ச்சிக்காக நிறுவினார். உலகெங்கிலும் உள்ள இந்த சிறப்பு இடங்கள் “கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.” இது பூமியில் நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த பகுதிகளுக்கு அதிக கவனிப்பு கொடுப்பதின் மூலம், விஞ்ஞானிகள் நீருக்கடியில் உள்ள சமூகங்களின் உறவுகளை மீட்டெடுப்பதையும், ஆபத்தான உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்கின்றனர்.

சங்கீதம் 33 இல், தேவன் அனைத்தையும் உண்டாக்கி, அவைகள் உறுதியாய் நிற்கக்கூடியவைகள் என்பதை கண்டார் என்று சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார் (வச. 6-9). தேவன் தலைமுறைகள் மற்றும் தேசங்களின் மீது ஆளுகைசெய்கிறார் (வச. 11-19). அவர் மட்டுமே உறவுகளை மீட்டெடுக்கிறார், உயிர்களைக் காப்பாற்றுகிறார், மற்றும் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறார். இருப்பினும், தேவன் உண்டாக்கிய உலகத்தின் மீதும் அதின் மக்கள் மீதும் அக்கறை கொள்வதற்கு அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

மேகங்கள் நிறைந்த, சாம்பல் நிற வானத்தின் குறுக்கே தெறிக்கும் வானவில்லை காணும்போதோ, கடலின் அலைகள் கரையில் மோதும்போதும், நாம் அவரை நம்பியிருக்கிறபடியால் அவருடைய மாறாத அன்பை பறைசாற்றலாம் (வச. 22).

உலகத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, நம்மால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியாது என்று நம்மை நம்பத் தூண்டும் மனச்சோர்வுக்கும் பயத்திற்கும் ஒருவேளை நாம் ஆளாகக்கூடும். இருப்பினும், தேவனுடைய பராமரிப்புக் குழுவின் உறுப்பினர்களாக நாம் நம் பங்கைச் செய்யும்போது, அவரை சிருஷ்டிகராகக் கனப்படுத்தவும், மற்றவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கும்போது அவரை அவர்கள் கண்டுபிடிக்க நாம் உதவலாம்.

- சோச்சில் டிக்ஸன்

விலைப்பட்டி இல்லை

எனது ஊரில் உள்ள ஒரு சிறிய குடும்ப பல்பொருள் அங்காடி புத்தாண்டின் போது ஏழை மக்களுக்குப் பரிசுகளை வழங்க முடிவு செய்தது. அந்த அங்காடியே பொருட்களுக்குரிய விலையைச் செலுத்தியது, அதன் பணியாளர்கள் சில அத்தியாவசிய பொருட்கள், உடைகள் மற்றும் உணவுகளால் கடையை நிரப்பினர். அழைக்கப்பட்ட ஏழை மக்கள் கடைக்குள் நுழைந்தபோது, “விலைப்பட்டிகள் இல்லை, உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்று உங்களுக்கு எல்லாம் இலவசம்!” என்று அறிவிக்கும் குரல் கேட்டது. புதிய ஆடைகள், புதிய உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதை அவர்கள் கண்டதேயில்லை என்பதால், அவர்களின் நன்றியுணர்வு மெய்யாகவே மேலோங்கியது.

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக முற்றிலும் இலவசமான ஒரு பரிசை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையிலிருந்து நம்மை இரட்சித்த இயேசுவின் மூலம் தேவனே இந்த பரிசுக்கான விலையைச் செலுத்தினார், ஆகையால் நாம் அவருடன் என்றென்றும் வாழ முடியும் (ரோமர் 6:23). தேவன் அதற்கான விலையை முன்கூட்டியே செலுத்தியதின் மூலம் நமக்கு இரட்சிப்பை இலவசமாக்கினார். கிறிஸ்துவின் இரத்தமே விலை. அவர் நம்மைக் கிரயத்தால் மீட்டுத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதால், நாம் இனி நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் (1 கொரிந்தியர் 6:20). நமது பிரயத்தனம் இந்த விலையேறப்பெற்ற பாக்கியத்தை வாங்கியிருக்க முடியாது (எபேசியர் 2:8-9). அவருடைய மிகுந்த அன்பினால்தான் நமக்கும், விசுவாசத்தோடு அவரிடம் திரும்புகிற அனைவருக்கும் இரட்சிப்பு இலவசமாக அருளப்படுகிறது.

கொடுக்கப்பட்ட பொருட்களுக்கு அங்காடியின் உரிமையாளர்கள் பணம் கொடுத்தது போல், இயேசுவானவர் சிலுவையில் நம் இடத்தை எடுத்துக்கொண்டு நமது இரட்சிப்புக்கான விலையைச் செலுத்தினார். அவா்கள் அதைச் செய்ததால், ஏழை மக்கள் தங்களுக்குத் தேவையானதை எந்தச் செலவுமின்றி பெற்றுக் கொண்டது போல நாமும் இலவசமாக இரட்சிப்பு என்ற பரிசை பெறலாம். அவருடைய இரட்சிப்பை நமக்கு இலவசமாக வழங்கும்படி அவர் எடுத்த அன்பான தீர்மானத்திற்கு அவர்களைப் போலவே நாமும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்

- ரவி எஸ். ரத்ரே

குமாரனும் உயிர்த்தெழுந்தார்

“நான் ஒரு காலத்தில் இருந்தவன் அல்ல. நான் ஒரு புதிய நபர்." தன் பள்ளிக் கூடுகையில் என்னும் மகன் சொன்ன அந்த எளிய வார்த்தைகள், தேவன் அவனுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை விவரித்தது. ஹெராயின் என்னும் போதை வஸ்துக்கு அடிமையாயிருந்த ஜெஃப்ரி, அதே பாவ கண்ணோட்டத்தோடே தன்னுடைய வாழ்க்கையை பார்க்க நேரிட்டது. ஆனால் தற்போது அவன் தன்னை தேவனுடைய பிள்ளையாய் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.  
வேதாகமம் இந்த வாக்குறுதியுடன் நம்மை ஊக்குவிக்கிறது: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). நம்முடைய கடந்தகாலத்தில் நாம் யாராக இருந்தோம், நாம் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பது முக்கியமில்லை, ஆனால் நாம் இயேசுவை விசுவாசித்து, அவருடைய சிலுவை கொடுக்கும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்ட பின்பு நாம் புது சிருஷ்டியாய் மாறிவிடுகிறோம். ஏதேன் தோட்டத்தில் நாம் பாவத்தால் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டோம். ஆனால் “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்” (வச. 18-19). நாம் அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்கத்தக்க அவருடைய அன்பான பிள்ளைகளாயிருக்கிறோம்.  
இயேசு நம்மை பாவத்திலிருந்தும் அதன் ஆதிக்க வல்லமையிலிருந்தும் விடுவித்து, தேவனுடன் ஒரு புதிய உறவை மீட்டெடுக்கிறார். ஆகையால் நாம் இனி நமக்காக வாழாமல், “தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி” வாழுவோம் (2 கொரிந்தியர் 5:15). இந்த புத்தாண்டு தினத்தில், அவருடைய மறுரூபமாக்கும் அன்பு நம்மை புதிய அடையாளத்துடனும் நோக்கத்துடனும் வாழத் தூண்டுகிறது என்பதை நினைவில் கொள்வோம். இது மற்றவர்களை நம் இரட்சகரிடம் வழிநடத்த உதவுகிறது. அவர்களும் புதிய சிருஷ்டிகளாக மாற முடியும்!