
ஆவியில் நிரம்பி
அமெரிக்க நாட்டு எழுத்தாளரும், புதிய ஏற்பாட்டு அறிஞருமான ஸ்காட் மெக்நைட்; உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, "ஆவியில் நிரம்பிய அனுபவத்தைப் பற்றி" பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு முகாமில் இருந்தபோது, ஆவியானவருக்கு ஒப்புவிப்பதன் மூலம் கிறிஸ்துவை வாழ்க்கையின் சிம்மாசனத்தில் அமர்த்த அதின் பேச்சாளர் அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர், அவ்வறிஞர் மரத்தடியில் அமர்ந்து, "பிதாவே, என் பாவங்களை மன்னியும். பரிசுத்த ஆவியானவரே, என்னுள்ளே வந்து என்னை நிரப்பும்" என்று ஜெபித்தார். ஒரு பெரிய வல்லமையான மாற்றம் ஏற்பட்டது. "அந்த தருணத்திலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாய் மாறியது. பூரணம் அல்ல ஆனால் மற்றம் உண்டானது” என்றார். வேதத்தைப் படிக்கவும், ஜெபிக்கவும், இயேசுவில் உள்ள மற்ற விசுவாசிகளைச் சந்திக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும் அவருக்கு
உடனே விருப்பம் ஏற்பட்டது.
உயிர்த்தெழுந்த இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு முன், தனது நண்பர்களிடம், "ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்" (அப்போஸ்தலர் 1:5) என்று கட்டளையிட்டார். அவர்கள் பெலனடைந்து, "எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்" சாட்சிகளாயிருப்பார்கள் (அப்போஸ்தலர் 1:8). இயேசுவை நம்பும் ஒவ்வொருவருக்கும், தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தருகிறார். இது பெந்தெகொஸ்தே நாளில் முதலில் நடந்தது (அப்போஸ்தலர் 2ஐப் பார்க்கவும்). இன்றும் யாரெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறார்களோ அவர்களுடைய வாழ்விலும் இது நிகழ்கிறது.
இயேசுவை விசுவாசிக்கிறவர்களை தேவனுடைய ஆவியானவர் தொடர்ந்து தம் ஆவியால் நிரப்புகிறார். ஆவியானவரின் உதவியால் சுபாவ மாற்றங்கள் மற்றும் உன்னதமான விருப்பங்கள் போன்ற கனிகளைத் தருகிறோம் (கலாத்தியர் 5:22-23). தேவன் நமக்கருளும் ஆறுதலுக்கு, உணர்த்துதலுக்கு, உதவிக்கு மற்றும் அன்பிற்காக நன்றியோடு துதிப்போம்.

அமைதிக்கான அறை
நீங்கள் அமெரிக்காவில் அமைதியான இடத்தைத் தேடுகிறவர்களென்றால், மினியாபோலிஸ், மினசோட்டாவில் நீங்கள் விரும்பும் அந்த அறை உள்ளது. இவ்வறையானது அனைத்து ஒலிகளிலும் 99.99 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது! ஆர்ஃபீல்ட் ஆய்வகங்களின் உலகப் புகழ்பெற்ற, எதிரொலியற்ற அந்த அறை, "பூமியின் அமைதியான இடம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்தமில்லாத இடத்தை அனுபவிக்க விரும்புபவர்கள், கவனம் சிதறாத வண்ணம் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மேலும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அந்த அறையில் இருக்க முடியாது.
இத்தகைய நிசப்தத்தை பெரும்பாலும் நாம் விரும்ப மாட்டோம். ஆயினும்கூட, இரைச்சலும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சிறிது அமைதிக்காக நாம் அனைவரும் சில சமயங்களில் ஏங்குகிறோம். நாம் பார்க்கும் செய்திகளும், நாம் உள்வாங்கும் சமூக ஊடகங்களும் கூட, நம் கவனத்தைச் சிதறடிக்கும் ஒருவித ஆரவாரமான "இரைச்சலை" நமக்குள் கொண்டு வருகின்றன. எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் வார்த்தைகள் மற்றும் படங்கள் நம் மனதில் பதிந்து விடுகின்றன. அவற்றில் நாம் மூழ்கி விட்டால் தேவனின் சத்தத்தைக் கேட்க முடியாமல் போய்விடும்.
எலியா தீர்க்கதரிசி ஓரேப் பர்வதத்தில் தேவனைச் சந்திக்கச் சென்றபோது, பலத்த, சடுதியான காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அவரைக் காணவில்லை (1 இராஜாக்கள் 19:11-12). எலியா ஒரு "மெல்லிய சத்தத்தைக்" கேட்கும் வரை, அவர் முகத்தை மூடிக்கொண்டு, "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை" (வவ. 12-14) சந்திப்பதற்காக குகையை விட்டு வெளியேறினார்.
உங்கள் ஆவியும்கூட அமைதலுக்காக ஏங்கலாம், ஆனால் அதைக்காட்டிலும் தேவனின் சத்தத்தைக் கேட்கவே அது வாஞ்சிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அமைதிக்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தேவனின் 'மெல்லிய சத்தத்தை' உங்களால் கேட்க முடியும் (໙. 12).

தாழ்மையைத் தரித்தல்
"ஃப்ரோசன் ட்ரீட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி "அண்டர்கவர் பாஸ்" என்ற தொலைக்காட்சித் தொடரில், காசாளர் சீருடை அணிந்தவராக நடித்தார். அவரது செயற்கை முடியும், ஒப்பனையும் அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, ஒரு புதிய பணியாளரைப் போல் தோற்றம் தரவே, தனது நிறுவனத்தின் அங்காடிகளில் ஒன்றில் பணியாற்றினார். தனது நிறுவனத்தில் விஷயங்கள் உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவர் அவ்வாறு மாறுவேடத்தில் சென்றார். மேலும் அதன் மூலம் அங்காடி எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அவரால் தீர்க்க முடிந்தது.
நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இயேசு ஒரு "தாழ்மையான நிலையை" (பிலிப்பியர் 2:7) எடுத்தார். அவர் மனிதனாகி பூமியில் இருந்து, தேவனைப் பற்றி நமக்குக் கற்பித்தார், இறுதியில் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (வச. 8). இந்தப் பலி, கிறிஸ்துவின் மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. அவர் கீழ்ப்படிதலுடன் தம் ஜீவனை நமது பாவநிவாரன பலியாக கொடுத்தார். அவர் பூமியில் ஒரு மனிதனாக இருந்து, நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அவரும் அனுபவித்தார்.
இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், நம் இரட்சகரைப் போலவே "அதே மனப்பான்மையுடன்" இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக மற்ற விசுவாசிகளுடனான நமது உறவுகளில் (வ.5) மனத்தாழ்மையை அணிந்துகொள்ள தேவன் நமக்கு உதவுவார் (வ.3). கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாயிருந்து (2.5) மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் ஊழியர்களாக வாழ அவர் நம்மை அழைக்கிறார். அவர்களை நேசிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செய்யவும், தேவன் நம்மை சிறந்த நிலையில் பயன்படுத்துவார்.

கூடுதல் கிருபை தேவை
திருச்சபையை ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக நாங்கள் அலங்கரித்தபோது, அந்தப் பொறுப்பில் இருந்த பெண் என் அனுபவமின்மையைப் பற்றிக் கூறினார். அவள் சென்ற பிறகு, இன்னொரு பெண் என்னிடம் வந்தாள்: "அவளைப் பற்றி கவலைப்படாதே. அவளை "கூ.கி.தே" என அழைக்கிறோம்; அதாவது "கூடுதல் கிருபை தேவை" " என்றாள்.
நான் சிரித்தேன். விரைவில் நான் ஒவ்வொரு சச்சரவின் போதும் அந்த வாக்கிய சுருக்கத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். பல வருடங்கள் கழித்து, அதே திருச்சபையில் அமர்ந்து "கூ.கி.தே”வின் இரங்கலுரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் எவ்வாறு பிறர் காணா வண்ணம் தேவனுக்கு சேவை செய்தாள், மற்றவர்களுக்கு தாராளமாக கொடுத்தாள் என்பதை அச்சபையின் போதகர் பகிர்ந்து கொண்டார். அவளையும் மற்றவர்களையும் கூ. கி. தே என நியாயந்தீர்த்து, முத்திரை பதித்து, கிசுகிசுத்ததற்காக என்னை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டேன். கடந்த காலத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற விசுவாசிகளைப் போல எனக்கும் கூடுதல் கிருபை தேவைப்பட்டது.
கோபாக்கினையின் எபேசியர் 2ல் அப்போஸ்தலன் பவுல், அனைத்து விசுவாசிகளும் ”சுபாவத்தினாலே
மற்றவர்களைப்போலக் பிள்ளைகளாயிருந்தோம்". (2:3) ஆனால், தேவன் நமக்கு இரட்சிப்பாகிய பரிசைக் கொடுத்திருக்கிறார், ”ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல". (2:9) என்கிறார். இந்த வாழ்நாள் பயணத்தின் போது நாம் ஒவ்வொரு கணமும் தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் நம் குணத்தை மாற்றியமைக்கவும், அதனால் கிறிஸ்துவின் தன்மையை நாம் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் கூடுதல் கிருபை தேவைப்படுகிறது. ஆனால், தேவனுடைய கிருபை போதுமானது என்பதால் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம் (2 கொரிந்தியர் 12:9).
