Archives: ஜூன் 2025

படிப்படியாக

தோளோடு தோள் சேர்த்து நின்று, மூன்று பேர் கொண்ட ஒரு டஜன் அணியினர் நான்கு-கால் பந்தயத்திற்குத் தயாராயினர். இருபுறத்திலும் இருந்த இரண்டு நபர்களும் நடுவில் இருந்த நபரின் காலோடு, ஒரு வண்ணமயமான கயிற்றினால் பிணைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டது. விசில் அடித்ததும் ஒவ்வொரு அணிகளும் இலக்கை நோக்கி முன்னேறின. அவர்களில் பெரும்பாலானோர் கீழே விழுந்து மீண்டும் எழும்பி நிற்க போராடினர். ஒரு சில குழுக்கள் நடந்துசெல்வதற்கு பதிலாக குதித்து செல்ல முயற்சித்தனர். சிலர் ஆட்டத்தை இடையிலேயே நிறுத்திக்கொண்டனர். ஆனால் அதில் ஒரு குழு மட்டும் தங்கள் ஓட்டத்தை துவக்கமாமல் தாமதம் செய்தது. ஒரு திட்டத்தை தீட்டியது. போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் தெளிவாய் தொடர்புகொண்டனர். அவர்களும் அவ்வப்போது இடற நேரிட்டது, ஆனாலும் மீண்டெழுந்து ஒவ்வொரு அணியையும் முந்தினர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைக்க எடுத்த தீர்மானம், வெற்றி இலக்கை அடைய அவர்களுக்கு உதவியது.  
கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த சமுதாயத்தில் வாழும் வாழ்க்கையில் இந்த நான்கு-கால் பந்தயத்தைப் போலவே சலிப்படைய நேரிடுகிறது. நம்மிலிருந்து முரண்படும் கருத்துக்களை உடையவர்களோடு ஓடும்போது அடிக்கடி தடுமாறுகிறோம்.  
பேதுரு, ஜெபம், விருந்தோம்பல், மற்றும் நமக்கு முன்பாக இருக்கும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வதைக் குறித்து பேசுகிறார். அவர், “நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல,” (வச. 10) “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4:8) என்று வலியுறுத்துகிறார். நாம் தேவனிடத்தில் தொடர்புகொள்வதற்கும் ஒத்துழைப்பதற்குமான உதவி கேட்கும்போது, வேற்றுமையிலும் ஒற்றுமையை கொண்டாடக்கூடிய ஓட்டத்தை நாம் நேர்த்தியாய் ஓட முடியும்.  

மெய்யான மார்க்கம்

எனது இரண்டாம் ஆண்டு கல்லூரியின் கோடை விடுமுறைக்கு பிறகு, என்னுடைய ஒரு வகுப்புத் தோழர் எதிர்பாராத விதமாக இறந்துபோனார். நான் அவரை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன், அவர் நன்றாக இருந்தார். நானும் என்னுடைய வகுப்பு தோழர்களும், வாழ்நாள் முழுவதும் நாம் சகோதர சகோதரிகளாய் இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.  
எனது வகுப்புத் தோழனின் மரணம் பற்றி எனக்கு அதிகம் ஞாபகம் இருப்பது என்னவென்றால், அப்போஸ்தலர் யாக்கோபு, “சுத்தமான பக்தி” (யாக்கோபு 1:27) என்று அழைப்பதற்கு ஏற்ற ஒரு வாழ்க்கையை என் நண்பர்கள் தெரிந்தெடுத்தார்கள். இறந்துபோன அந்த தோழனின் சகோதரிக்கு நாங்கள் சகோதரர்களாய் இருப்போம் என்று தீர்மானித்தோம். அவளுடைய சகோதரன் மரித்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் நாங்கள் சகோதரனுடைய ஸ்தானத்தில் அவளுடைய திருமணம் மற்றும் வளைகாப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்றோம். அவளுக்கு எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போது அழைப்பு விடுப்பதற்காக எங்களில் ஒருவர் அவளுக்கு ஒரு செல்போனையும் பரிசளித்தார்.  
யாக்கோபின் கூற்றுப்படி, திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதே சுத்தமான பக்தியாகும் (வச. 27). என்னுடைய சிநேகதனின் சகோதரி யாருமில்லாத திக்கற்றவள் இல்லையெனினும், அவளுடைய சகோதரன் இனி இல்லை. அவளுடைய புதிய சகோதரர்கள் அந்த இடத்தை நிரப்பினர்.  
இயேசுவில் சுத்தமான மற்றும் மெய்யான வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்கள், தேவையிலுள்ளவர்களை பராமரித்து (2:14-17),  “(திருவசனத்தின்படி) செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்ற ஆலோசனைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு உதவும்போது,உலகின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும்போது, அவர்மீது நமக்குள்ள நம்பிக்கையானது தேவையில் உள்ளவர்களை பராமரிக்க நம்மைத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே தேவன் அங்கீகரிக்கும் சுத்தமான பக்தி.

சுதந்திரமாய் வாழு

நான் வளர்ந்த அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில், ஒவ்வொரு ஜூன் 19 அன்றும் கறுப்பின சமூகத்தினரின் பண்டிகை அணிவகுப்புகள் மற்றும் கேளிக்கைகள் நடக்கும். என்னுடைய இளமைப்பருவத்தில் அந்த ஜீன் 19ஆம் தேதியின் இருதயத்தை நொறுக்கும் முக்கியத்துவத்தை அறிந்தேன். 1865ஆம் ஆண்டில் டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் அளிக்கும் விடுதலைப் பிரகடனத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார் என்பதை அறிந்து அந்த நாளை கொண்டாடுவது வழக்கம். ஆனால் அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டுவிட்டார். அதை அவர்கள் தாமதமாகவே தெரிந்துகொள்ள நேரிட்டது. டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தாங்கள் விடுவிக்கப்பட்டதை அறியாததால் தொடர்ந்து அந்த இரண்டரை ஆண்டுகளும் அடிமைத்தனத்தில் வாழ்ந்துவந்தனர்.  
விடுதலையாக்கப்பட்ட பின்னரும் அடிமையாய் வாழ்தல் என்பது சாத்தியம். கலாத்தியர் நிருபத்தில்  பவுல் மற்றொரு வகையான அடிமைத்தனத்தைப் பற்றி எழுதுகிறார்: நெருக்கும் மார்க்க விதிமுறைகளுக்கு நடுவில் ஜீவித்தல். இந்த முக்கியமான வசனத்தில், பவுல் விசுவாசிகளை “நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்” (கலாத்தியர் 5:1) என்று உற்சாகப்படுத்துகிறார். நாம் என்ன சாப்பிடவேண்டும், யாரை சிநேகிதராக்க வேண்டும் என்ற வெளிப்புறமான மார்க்க விதிமுறைகளுக்கு கிறிஸ்தவர்கள் நீங்கலாக்கப்பட்டுள்ளனர். பலர், இன்னும் அதே அடிமைத்தனத்திற்குள்ளாகவே வாழ பழகிக்கொண்டனர்.  
துரதிருஷ்டவசமாய் இன்றும் நாம் அதையே செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இயேசுவை நம்பின மாத்திரத்தில், மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்க கட்டுகளுக்கு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியுள்ளார். நமக்கான சுதந்திரம் அறிவிக்கப்பட்டாயிற்று. அவருடைய வல்லமையில் நாம் ஜீவிப்போம்

கோ-கார்ட் வாகனத்தை சரிசெய்தல்

எனது சிறுவயதில் நான் தங்கியிருந்த வீட்டின் கேரேஜ் பல நினைவுகளை எனக்கு வைத்திருக்கிறது. சனிக்கிழமைகளில் காலை நேரத்தில், என்னுடைய தந்தை காரில் எங்களை கேரேஜிக்கு அழைத்துச் செல்வார். அங்கே உடைந்துபோன கோ-கார்ட் எனப்படும் ஒரு சிறிய ரக பந்தய கார் தென்பட்டது. அதை பழுதுபார்த்து புதுப்பிக்க எண்ணினோம். அதற்கு புதிய சக்கரங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி என்று அதை புதுப்பித்து, நான் அதை பந்தய சாலையில் ஓட்ட முயற்சிக்கும்போது எனது தகப்பனார் வேறு ஏதாகிலும் வாகனம் அப்பக்கம் வருகிறதா என்று பார்த்துக்கொள்வார். இந்த சிறிய ரக வாகனத்தை ஓட்டுவதைக்காட்டிலும் பெரிய காரியங்களை அந்த கேரேஜில் நான் அனுபவித்தேன். ஆம்! ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு தேவனை ருசித்துப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.  
தேவனுடைய மெய்யான சுபாவத்துடன் மனிதன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான் (ஆதியாகமம் 1:27-28). அவர் “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய” தகப்பனாய் வீற்றிருக்கிறார் (எபேசியர் 3:14-15). பிள்ளைகளுக்கு ஜீவனைக் கொடுத்து இந்த உலகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் பெற்றோர்கள், அவர்களை வளர்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சுபாவத்தினால் அல்லாமல், பிதாவாகிய தேவனுடைய தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். அனைத்து பெற்றோர்களும் பின்பற்றுவதற்கு உகந்த மாதிரியாய் தேவன் திகழ்கிறார்.  
என்னுடைய தகப்பன் எல்லாவிதத்திலும் நேர்த்தியானவர் இல்லை. ஒவ்வொரு தகப்பன் தாயைப் போல அவரும் சிலவேளைகளில் பரலோகத்தை பிரதிபலிக்க தவறலாம். ஆனால் அந்த கேரேஜில் இருந்த அந்த கோ-கார்ட் பந்தய காரை சரிசெய்வதில் அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் பார்த்தபோது, தேவனுடைய குணாதிசயங்களை என்னால் நினைவுகூர முடிந்தது.