
தேவன் நம்மோடு பேசுகிறார்
அறியாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாய் அதுபோன்ற அழைப்புகளை நான் எடுப்பதில்லை. ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதில் பேசிய நபர், ஒரு சிறிய வேதாகம செய்தியை ஒரு நிமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். அவர் வெளிப்படுத்தல் 21:3-5இல் உள்ள “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவைக் குறித்தும் அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயத்தைக் குறித்தும் குறிப்பிட்டார். நான் இயேசுவை ஏற்கனவே என் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னேன். அவர் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நான் அவரோடு சேர்ந்து ஜெபிக்க அவர் விரும்பினார். அவர் எனக்காய் ஜெபிக்கும்போது, என்னுடைய ஊக்கத்திற்காகவும் பெலத்திற்காகவும் ஜெபித்தார்.
அந்த அழைப்பானது வேதத்தில் இடம்பெற்றுள்ள, சிறுவன் சாமுவேலின் அழைப்பை எனக்கு நினைவுபடுத்தியது (1 சாமுவேல் 3:4-10). சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அது ஆசாரியனாகிய ஏலியின் சத்தம் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ஏலியின் ஆலோசனையின் பேரில் கடைசி முறை தேவனுடைய சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில், “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வச. 10) என்று பதில் சொன்னான். அதுபோல இரவும் பகலும் தேவன் நம்மோடு பேசக்கூடும். நாம் அவருடைய சத்தத்தை உடனே அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவருடைய சமூகத்தில் அதிக நேரம் செலவழிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
அந்த அழைப்பை நான் வேறொரு கோணத்திலும் சிந்தித்தேன். நாம் மற்றவர்களுக்கு தேவனுடைய தூதுவர்களாகவும் செயல்பட நேரிடலாம். நாம் மற்றவர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்யக் கூடும் என்று எண்ணத் தோன்றலாம். தேவனுடைய ஆலோசனையோடு, யாரையாவது தொலைபேசியில் அழைத்து, “நான் உங்களுக்காக இன்று ஜெபிக்கலாமா?” என்ற கேட்க முற்படலாம்

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்
இருபது வயது நிரம்பிய ஷின் யி, பல்கலைக்கழகத்திற்கு போவதற்கு முன்னர் தன்னுடைய மூன்று மாத விடுமுறையில், இளைஞர் ஊழிய இயக்கத்தில் சேர்ந்து ஊழியம் செய்ய விரும்பினாள். ஆனால் கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் ஒருவரையொருவர் நேரில் சந்திப்பது சாத்தியமில்லாததாய் தோன்றியது. ஆனால் ஷின் யி விரைவில் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். “நாங்கள் வழக்கம் போல் தெருக்கள், வணிக வளாகங்கள், துரித உணவு மையங்கள் போன்ற இடங்களில் மாணவர்களைச் சந்திக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் ஸ_ம் செயலி வழியாக கிறிஸ்தவ மாணவர்களுடன் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவும், மற்ற மக்களிடம் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்” என்று சொன்னாள்.
அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுவை செய்யும்படிக்கு உற்சாகப்படுத்தியதை ஷின் யி செய்தாள்: “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” (2 தீமோத்தேயு 4:5). கேட்கப்படவேண்டிய சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் (வச. 3-4) என்று பவுல் தொடர்ந்து எச்சரிக்கிறார். ஆகையால் தீமோத்தேயு “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ண” ஆயத்தமானான். “எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல” (வச. 2) தீமோத்தேயு தயாரானான்.
நாம் எல்லோருக்கும் சுவிசேஷக அழைப்போ அல்லது பிரசங்கம்பண்ணும் பிரத்யேகமான அழைப்போ இல்லாதபோதிலும், நம்மை சுற்றியிருக்கிற மக்களுக்கு சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளலாம். இயேசுவை நம்பாமல் அவிசுவாசிகள் அழிந்துபோகின்றனர். விசுவாசிகளுக்கு பெலனும் உற்சாகமும் தேவைப்படுகிறது. தேவனுடைய உதவியோடு, சமயம் வாய்த்தாலும் வாய்க்கவிட்டாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம்பண்ணுவோம்.

பெலவீனத்தில் பெலன்
என்னுடைய மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு முன்பதாக, எங்கள் வீட்டில் இன்னும் கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை நான் யோசித்துப்பார்த்தேன். சுறுசுறுப்பாய் சுற்றித்திரியும் என் சிறுபிள்ளையை நான் எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்றும் அடுப்பறையில் நின்று எவ்வாறு சமையல் செய்யப்போகிறேன் என்பதையும் குறித்து என்னால் சற்றும் கற்பனை செய்யமுடியவில்லை. என்னுடைய இந்த பலவீனம் எங்கள் சுமூகமான வாழ்க்கையை பாதித்ததைக் குறித்து நான் சோர்வுற்றேன்.
கிதியோனுடைய சேனைகள் மீதியானியரிடத்தில் யுத்தம்செய்வதற்கு முன்னர் தேவன் அவர்களை பெலவீனமடையச் செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் திரும்பிப் போகும்படிக்கு சொல்லப்பட்டது. அதில் இருபத்தி இரண்டாயிரம் பேர் திரும்பப் போய்விட்டனர் (நியாயாதிபதிகள் 7:3). மீதமிருந்த பத்தாயிரம் பேர்களில், தண்ணீரை கையில் அள்ளிப் பருகியவர் மட்டும் இருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் மூந்நூரு பேர் மாத்திரம் மீதமிருந்தனர். ஆனால் இந்த குறைவான எண்ணிக்கை அவர்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைக்க விடாமல் பாதுகாத்தது (வச. 5-6). அவர்கள் “என் கை என்னை ரட்சித்தது” (வச. 2) என்று இப்போது சொல்லமுடியாது.
நம்மில் பலர் இதுபோன்ற சோர்வுற்று பெலவீனமான தருணங்களை அனுபவிப்பதுண்டு. இந்த அனுபவம் எனக்கு நேரிடும்போது, தேவன் எனக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்துகொண்டேன். தேவன் தன்னுடைய ஆவியைக்கொண்டு உள்ளுக்குள்ளும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெளியரங்கமாகவும் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக எண்ணினேன். ஆனால் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ள பழகிக்கொண்டேன். நம்முடைய தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியாத பட்சத்தில், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்ற வார்த்தைகள் நம்மை தேற்றும்.

இயேசுவில் தொடருவோம்
காட்டுப்பகுதியில் ஓட்டப்பயிற்சி செய்யும்போது, அங்கு ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்து, எனக்கு சற்றும் பரீட்சயமில்லாத அந்த பாதையில் சென்றேன். நான் வழியை தொலைத்து விட்டேனோ என்று எண்ணி, எனக்கு பின் ஓடிவந்த இன்னொரு சக பயிற்சியாளரைப் பார்த்து, நான் சரியான பாதையில் தான் செல்கிறேனா என்று கேட்டேன்.
“ஆம்” என்று அவர் உறுதியுடன் பதிலளித்தார். என்னுடைய சந்தேகப் பார்வையை அறிந்த அவர், “கவலைப்படாதீர்கள், நானும் பல தவறான வழிகளை தெரிந்தெடுத்திருக்கிறேன். ஆனால் பரவாயில்லை, ஓட்டப்பயிற்சியில் இதுவும் ஒரு அங்கம் தான்” என்று உற்சாகப்படுத்தினார்.
என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கச்சிதமாய் பொருந்தக்கூடிய என்னே நேர்த்தியான விளக்கம்! எத்தனை முறை நான் சோதனைக்குட்பட்டு, தேவனுடைய வழியை விட்டு திசைமாறி போயிருக்கிறேன்? ஆனால் நான் மீண்டும் விழுவேன் என்பதை தேவன் அறிந்திருந்தும் ஒவ்வொரு முறையும் என்னை மன்னித்து, தொடர்ந்து முன்னேறுவதற்கு கிருபை கொடுத்தார். நாம் தவறான பாதையில் செல்ல விரும்பும் சுபாவம் கொண்டவர்கள் என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதும் நம்மை மன்னிப்பதற்கும், நம்முடைய பாவத்தை அறிக்கையிடும்போது அவருடைய ஆவியைக் கொண்டு நம்மை முற்றிலும் மறுரூபமாக்குவதற்கும் அவர் போதுமானவராயிருக்கிறார்.
பவுல் அப்போஸ்தலரும் இது விசுவாசப் பாதையின் ஒரு அங்கம் தான் என்பதை அறிந்திருந்தார். அவருடைய கடந்த கால பாவ வாழ்க்கை மற்றும் பலவீனங்களுக்கு மத்தியிலும் அவரால் கிறிஸ்துவைப் போல மாற முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (பிலிப்பியர் 3:12). “ஒன்று செய்கிறேன்” என்று சொல்லி, “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14) என்று குறிப்பிடுகிறார். இடறுதல் என்பது தேவனோடு நடக்கும் நம்முடைய பயணத்தின் ஒரு அங்கமே. நம்முடைய தப்பிதங்களின் மூலமாகவே அவர் நம்மை புடமிடுகிறார். மன்னிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாய் அவருடைய கிருபை நம்மை தொடர்ந்து ஓடச் செய்கிறது.
