“எனக்கு மரண பயத்தைப்பற்றி கொஞ்சம் தெரியும். ஏழு ஆண்டுகளுக்குமுன் எனக்குக் குணமாகாத புற்றுநோய் இருப்பதை நான் அறிந்தபோது.. கடுமையான, அலைக்கழிக்கிற, நிலைகுலையச்செய்து மூழ்கடிக்கும் பயத்தை உணர்ந்தேன்” என்று ஜெரமி எழுதுகிறார். ஆனால் தேவனுடைய பிரசன்னத்தைச் சார்ந்துகொள்ளவும், தனது மரணபயத்திலிருந்து தேவனுக்கேற்ற பயபக்திக்குக் கடந்துபோகவும் அவர் கற்றுக்கொண்ட பிறகு, தனது பயத்தைக் கையாள அறிந்துகொண்டார். ஜெரமியை பொறுத்தமட்டில் அதின் பொருள், “மரணத்தை ஜெயமாக விழுங்கு(ம்)வார்” (ஏசாயா 25:8) இந்த அண்ட சராசரத்தின் சிருஷ்டிகரைப் பற்றின வியப்போடு இருப்பதும், அதேநேரம் தேவன் தன்னை அறிந்து நேசிக்கிறார் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதுமே.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்; அதாவது நமது பரிசுத்த தேவனைக் குறித்த ஆழமான மரியாதையும், வியப்புமே. வேதாகமம் முழுவதும் இழைந்தோடும் கருப்பொருள் இதுவே. நீதிமொழிகள் எனும் தொடர்ச்சியான ஞான வார்த்தைகளால் தனது மகனைக் கர்த்தருக்குப் பயப்படும்படி சாலொமோன் ராஜா அறிவுறுத்தினார். தனது மகன், அவனுடைய “செவியை ஞானத்திற்குச் சாய்த்து” அதை “புதையல்களைத் தேடுகிறதுபோல்” தேடும்போது, அவன் “கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று.. உணர்ந்து,  தேவனை அறியும் அறிவை” (நீதிமொழிகள் 2:2,4-5) கண்டடைவான். ஞானம் மற்றும் அறிவோடும், நல்யோசனையையும் புத்தியையும் பெறுவான் (வ.10-11).

நாம் பலவகையான சவால்களைச் சந்தித்து, நடுக்கத்தையும் பயத்தையும் அனுபவிக்கும்போதுதான் நாம் பெலவீனர்களென்று நினைவூட்டப்படுகிறோம். ஆனால் நாம் தேவனிடம் திரும்பி, அவரிடம் உதவி கேட்டு, அவருக்கு முன் நம்மைத் தாழ்த்தி, அவரை பயபக்தியோடு பணிந்துகொள்ளுகையில்; நாம் நமது பயத்தைக் கடந்து அவரைப்பற்றிய ஆரோக்கியமான பயத்திற்கு நேராக நடக்க அவர் நமக்கு உதவுவதைக் காண்போம்.