Archives: டிசம்பர் 2024

தேவனின் பாதுகாக்கும் பிரசன்னம்

எனது உயர்நிலைப் பள்ளி ஆண்டு புகைப்படங்களைப் பார்த்து, எனது பேரக்குழந்தைகள் பழமையாய் போன சிகை அலங்காரங்கள், ஆடைகள் மற்றும் "பழங்கால" வாகனங்களைக் கண்டு வியந்தனர். நானோ வித்தியாசமான ஒன்றைக் கண்டேன்; முதலாவதாக நீண்டகால நண்பர்களின் புன்னகை, சிலர் இன்னமும் நண்பர்களாக உள்ளோம். இருப்பினும், அதை விட, தேவனின் பாதுகாக்கும் வல்லமையை நான் கண்டேன். அந்த பள்ளியிற்கேற்ப என்னை மாற்றிக்கொள்ள நான் சிரமப்படுகையில், அவரது மென்மையான பிரசன்னம் என்னைச் சூழ்ந்திருந்தது. பாதுகாக்கும் அவருடைய நற்குணம் என்னைப் பேணியது, தம்மைத் தேடும் அனைவருக்கும் அவர் இந்த தயவை அருளுகிறார்.

தேவனின் காக்கும் பிரசன்னத்தை தானியேல் அறிந்திருந்தார். பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டுப் போயிருக்கையில், ​​"தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க," (தானியேல் 6:10) அவர் ஜெபித்தார். அவ்வாறு செய்யக்கூடாது என்ற ராஜாவின் ஆணையைப் பொருட்படுத்தவில்லை (வ. 7-9). நன்மை பயக்கும் அவருடைய ஜெப கண்ணோட்டத்தில், தன்னை தாங்கி, தன் ஜெபங்களை கேட்டு, பதிலளிக்கும் தேவனின் பேணிக்காக்கும் பிரசன்னத்தை தானியேல் நினைவில் கொள்வார். இவ்வாறு, தேவன் அவரைக் கேட்டு, பதில் அளித்து, மீண்டும் அவரைத் தாங்குவார்.

இருப்பினும், புதிய சட்டம் இயற்றப்பட்ட போதிலும், தானியேல் தனக்கு நேரிடப்போவதைப் பொருட்படுத்தாமல் தேவனின் பிரசன்னத்தை இன்னும் நாடினார். மேலும் அவர் முன்பு பலமுறை ஜெபித்தது போலவே ஜெபித்தார் (வ. 10). சிங்கங்களின் குகையிலிருந்தபோது, ​​கர்த்தருடைய தூதன் தானியேலைப் பாதுகாத்தார், அவருடைய மெய்யான தேவன் அவரை மீட்டார் (வ. 22).

தற்கால சோதனைகளின் போது நமது கடந்த காலத்தைப் பார்ப்பது, தேவனின் உண்மைத்தன்மையை நினைவுபடுத்த உதவும். தரியு ராஜா கூட தேவனைப் பற்றிக் கூறியது போல், “அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்” (வ. 27). தேவன் அப்போது நல்லவராகவே இருந்தார், இப்போதும் நல்லவராகவே  இருக்கிறார். அவருடைய பிரசன்னம் உங்களைக் காக்கும்.

இயேசுவுக்கென இடம்

பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு குவார்ட்டரில் எனது வார இறுதியை  இராணுவ அணிவகுப்பு, அருங்காட்சியகத்தைப் பார்வையிடல் மற்றும் பொறித்த மீன்களைச் சுவைப்பது என்று செலவிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எனது நண்பரின் அறையில் நான் தூங்கியபோது, என் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ஏங்கினேன். பிற நகரங்களில் பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளை நான் மகிழ்ந்து அனுபவிக்கிறேன், ஆனால் வீட்டில் இருப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும்.

இயேசுவின் வாழ்க்கையில் ஒரு அம்சம் சில சமயங்களில் கவனிக்கப்படாமல் இருக்கும்; அவருடைய மிக முக்கியமான எத்தனையோ நிகழ்வுகள் சாலையில்தான் நிகழ்ந்தன என்பதே. பெத்லகேமில் தேவனுடைய குமாரன் நம் உலகில் பிறந்தார், அவருடைய பரலோக வீட்டிலிருந்து கணக்கிட முடியாத தூரம் மற்றும் அவரது குடும்பத்தின் சொந்த ஊரான நாசரேத்திலிருந்து வெகு தொலைவில் இது உள்ளது. பெத்லகேம் நகரம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நிரம்பி வழிய, விரிவாக்கப்பட்ட இக்குடும்பமும் வருகிறது, எனவே ஒரு உதிரி கெடாலிமா (கிரேக்க வார்த்தை) அல்லது "விருந்தினர் அறை" கூட கிடைக்கவில்லை என்று லூக்கா கூறுகிறார் (லூக்கா 2:7).

இயேசுவின் பிறப்பில் இல்லாத ஒன்று, அவருடைய மரணத்திலிருந்தது. இயேசு தம் சீடர்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்றபோது, ​​பேதுருவையும் யோவானையும் பஸ்கா விருந்துக்குத் தயார் செய்யும்படி கூறினார். அவர்கள் ஒரு குடத்தை எடுத்துச் செல்லும் மனிதனை அவரது வீட்டிற்குப் பின்தொடர்ந்து, கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் இறுதி இராபோஜனத்தை புசிக்கக்கூடிய விருந்தினர் அறையான "கெடாலிமா"வை அதன் உரிமையாளரிடம் கேட்க வேண்டும் (22:10-12). அங்கு, இரவல் வாங்கிய இடத்தில், இயேசு இப்போது ஐக்கிய பந்தி என்று அழைக்கப்படுவதை ஏற்படுத்தினார். அவர் கொடூரமாகச் சிலுவையில் அறையப்படுவதை இது முன்னறிவித்தது (வ.17-20).

நாம் வீட்டை நேசிக்கிறோம், ஆனால் நாம் இயேசுவின் ஆவியானவருடன் பயணித்தால், ஒரு விருந்தினர் அறை கூட அவருடன் ஐக்கியம் கொள்ளும் இடமாக மாறும்.

தேவன் பதிலளிப்பார்

போதகர் தீமோத்தேயு பயணம் செய்யும் போது, தனது போதருக்குரிய கழுத்துப்பட்டையை அணிந்திருந்தால், ​​அவர் அடிக்கடி அந்நியர்களால் அணுகப்படுவார். "தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள்" என்று விமான நிலையத்தில் உள்ளவர்கள் அவரது எளிய கறுத்த மேலங்கியின் மீது போதகருக்கான பட்டையைப் பார்க்கும்போது கூறுகிறார்கள். சமீபத்தில் ஒரு விமானத்தில், ஒரு பெண் அவரைக் கவனித்தபோது அவருடைய இருக்கை அருகே மண்டியிட்டு, “நீங்கள் ஒரு போதகரா? எனக்காக ஜெபிப்பீர்களா?" என்று கெஞ்சினார். போதகர் தீமோத்தேயு ஜெபித்தார்.

எரேமியாவில் உள்ள ஒரு பகுதி, தேவன் ஏன் ஜெபத்தைக் கேட்கிறார் மற்றும் பதிலளிக்கிறார் என்பதை நாம் உணர உதவுகிறது. தேவன் அக்கறை காட்டுகிறார்! அவர் தனக்குப் பிரியமான ஆனால் பாவத்தால் நிறைந்து சிறைபிடிக்கப் பட்டுப்போன ஜனங்களுக்கு, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை  உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (29:11) என்று உறுதியளிக்கிறார். அவர்கள் தம்மிடம் திரும்பும் காலத்தைத் தேவன் எதிர்நோக்கினார். "அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" (வ. 12-13).

தீர்க்கதரிசி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜெபத்தைப் பற்றி இதையும் இதற்கு மேலும் கற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு, "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (33:3) என்று உறுதியளித்தார்.

ஜெபிக்கும்படி இயேசுவும் நம்மை உந்துகிறார். "உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்" (மத்தேயு 6:8) என்று அவர் கூறினார். எனவே ஜெபத்தில் "கேளுங்கள்," "தேடுங்கள்," மற்றும் "தட்டுங்கள்" (7:7). நாம் வைக்கும் ஒவ்வொரு விண்ணப்பமும் பதில் அளிப்பவருடன் நம்மை நெருங்கச் செய்கிறது. ஜெபத்தில் நாம் தேவனுக்கு அந்நியராக இருக்க வேண்டியதில்லை. அவர் நம்மை அறிந்திருக்கிறார், நம்மிடமிருந்து கேட்க விரும்புகிறார். நம்முடைய கவலைகளை இப்போதே அவரிடம் எடுத்துச் சொல்லலாம்.

 

முற்றிலும் நேர்த்தியான பரிசு

பெருவிற்கு ஒரு குறுகிய கால ஊழிய பயணத்தின் போது, ​​ஒரு இளைஞன் என்னிடம் பணம் கேட்டான். பாதுகாப்பு காரணங்களுக்காக, பணத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று எனது குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது, ஆகையால் நான் அவனுக்கு எவ்வாறு உதவுவது? அப்போஸ்தலர்களான பேதுருவும், யோவானும் அப்போஸ்தலர் 3-ல் குறிப்பிடப்பட்ட முடவனுக்கு அளித்த பதிலை நான் நினைவு கூர்ந்தேன். என்னால் அவனுக்குப் பணம் கொடுக்க இயலாது, ஆனால் தேவனின் அன்பைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அவனுக்கு விளக்கினேன். தான் ஒரு அனாதை என்று அவன் சொன்னபோது, ​​தேவனே அவனுக்குத் தகப்பனாயிருக்க விரும்புகிறார் என்றேன். அதைக் கேட்டதும், அழுதான். அவனைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு, எங்களை உபசரித்த சபையின் உறுப்பினரோடு அவனை அறிமுகப்படுத்தினேன்.

சில நேரங்களில் நம் வார்த்தைகள் மட்டும் போதுமானதாக இல்லை என்பதாக உணரலாம், ஆனால் நாம் இயேசுவைப் பிறருடன் பகிரும்போது  பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்துவார்.

பேதுருவும் யோவானும் அந்த மனிதனை ஆலய பிராகாரத்தில் சந்தித்தபோது, ​​கிறிஸ்துவைப் பகிர்ந்துகொள்வதே மிகப் பெரிய பரிசு என்பதை அவர்கள் அறிந்தார்கள். "அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொ(ன்னான்)ல்லி" (வ. 6). அந்த மனிதன் அன்றே இரட்சிப்பையும் சுகத்தையும் பெற்றான். காணாமல் தொலைந்தவர்களை  தன்னிடமாய் இழுக்க, தேவன் தொடர்ந்து நம்மைப் பயன்படுத்துகிறார்.

இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில், கொடுப்பதற்குச் சரியான பரிசுகளைத் தேடுகையில், ​​இயேசுவையும்  அவர் அருளும் நித்திய இரட்சிப்பின் ஈவையும் கொடுப்பதே மிகநேர்த்தியான பரிசு என்பதை நினைவில் கொள்வோம். இரட்சகரிடம் மக்களை வழிநடத்த, தேவனால் பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து நாடுவோம்.