ஜிம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒருவகையான இயக்க நரம்பணு நோயுடன் போராடி வருகிறார். அவரது தசைகளில் உள்ள நரம்பணுக்கள் சிதைவதால் அவரது தசைகள் வீணாகின்றன. அவர் தனது சிறந்த இயக்க திறன்களை இழந்துவிட்டார் மற்றும் அவரது கைகால்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிட்டார். அவரால் இனி சட்டை பொத்தான் போடவோ அல்லது காலணி அணியவோ முடியாது. மேலும் கைகளால் கரண்டியைப் பிடிப்பதும்  சாத்தியமற்றதாகிவிட்டது. ஜிம் தனது சூழ்நிலையோடு போராடி, தேவன் ஏன் இப்படி நடக்க அனுமதிக்கிறார்? ஏன் எனக்கு? எனக் கேட்கிறார்.

தேவனிடம் தங்கள் கேள்விகளைக் கொண்டு வந்த இயேசுவின் பல விசுவாசிகளின் கூட்டத்தில் இவரும் ஒருவர். சங்கீதம் 13 இல், “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்” (வ.1-2) என்று தாவீது கூக்குரலிடுகிறார்.

நாமும் நம் குழப்பங்களையும் கேள்விகளையும் தேவனிடம் எடுத்துச் செல்லலாம். “எவ்வளவு காலம்?” என்றும் “ஏன்?” என்றும்  நாம் அழும்போது அவருக்குப் புரியும். அவருடைய ஆகச்சிறந்த பதில் இயேசுவிலும், பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியிலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் சிலுவையையும் காலியான கல்லறையையும் பார்க்கும்போது, ​​தேவனின் “கிருபையின்மேல்” நம்பிக்கை வைத்து, அவருடைய இரட்சிப்பில் களிகூர (வ. 5) நாம் தன்னம்பிக்கை பெறுகிறோம். வாழ்வின் இருண்ட நேரங்களிலும், நாம் “கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்” (வ. 6) எனலாம். கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலம், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார், மேலும் அவருடைய நித்தியமான நல்ல நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுகிறார்.