அபௌட் கிரேஸ் என்ற நாவலில், டேவிட் விங்க்லர் தன்னை பிரிந்த மகளைக் கண்டுபிடிக்க ஏங்குகிறார், அவருக்கு உதவக்கூடிய ஒரே நபர் ஹெர்மன் ஷீலர் மட்டுமே. ஆனால் ஒரு தடை உள்ளது. ஹெர்மனின் மனைவியுடனான தவறான தொடர்பில்தான் டேவிட்டின் மகள் பிறந்தாள், மேலும் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஹெர்மன் எச்சரித்திருந்தார்.

பல ஆண்டுகள் கழித்து டேவிட், ஹெர்மனிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். மேலும் அவர், “என் வாழ்க்கையில் ஒரு வெறுமை உண்டு, காரணம் என் மகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது” என்று அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்கிறார். ஹெர்மன் தனக்கு உதவுவாரா என்று காத்திருக்கிறார்.

நமக்கு அநீதி இழைத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? தனது எதிரிகள் அற்புதமாக அவரது கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேலின் ராஜா இந்த கேள்வியை எதிர்கொண்டார் (2 இராஜாக்கள் 6:8-20). “நான் அவர்களை வெட்டிப் போடலாமா” என்று எலிசா தீர்க்கதரிசியிடம் கேட்கிறார். இல்லை, எலிசா கூறுகிறார். “இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்” (வ. 21-22). இந்த கிருபையின் செயல்  மூலம், இஸ்ரவேல் தனது எதிரிகளுடன் சமாதானம் காண்கிறது (வ. 23).

டேவிட்டின் கடிதத்திற்கு ஹெர்மன் பதிலளித்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்து உணவும் வழங்குகிறார். “ஆண்டவராகிய இயேசு, இத்தனை வருடங்களாக என்னையும் டேவிட்டையும் பராமரித்ததற்காக உமக்கு நன்றி” என்று அவர்கள் சாப்பிடுவதற்கு முன் ஜெபிக்கிறார். டேவிட் தனது மகளைக் கண்டுபிடிக்க உதவுகிறார், பின்னர் டேவிட் ஹெர்மனின் உயிரைக் காப்பாற்றுகிறார். தேவனின் கரங்களில், நமக்கு அநீதி இழைத்தவர்களிடம் நாம் காட்டும் கிருபையின் செயல்கள் பெரும்பாலும் நமக்கு ஆசீர்வாதமாக விளைகின்றன.