நாசியன்சஸின் கிரிகோரி மற்றும் சிசேரியாவின் பேசில் ஆகியோர் நான்காம் நூற்றாண்டில் பெரிதும் மதிக்கப்பட்ட திருச்சபை தலைவர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். தத்துவ பாட மாணவர்களாகத்தான் முதலில் இவர்கள் சந்தித்தனர், பின்னர் கிரிகோரி, அவர்கள் “ஈருடல் ஓருயிர்” போல ஆனதாகக் கூறினார்.

அவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் ஒத்ததாக இருந்ததால், கிரிகோரிக்கும்  பேசிலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளாலான வாழ்க்கையைத் தங்களின் “ஒரே லட்சியமாக” கொண்டு, மேலும் இந்த லட்சியத்தில் தன்னை காட்டிலும் மற்றவர் சிறக்க வேண்டுமென்று “ஒருவரையொருவர் ஊக்குவித்த” காரணத்தால் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக கிரிகோரி விளக்கினார். இதன் விளைவாக, இருவரும் நம்பிக்கையில் வளர்ந்தனர் மற்றும் போட்டியின்றி உயர் மட்ட திருச்சபை தலைமைக்கு உயர்ந்தனர்.

எபிரேயர் புத்தகம், நாம் விசுவாசத்தில் வலுவாக இருக்க உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது (எபிரேயர் 2:1), நாம் “நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்” அசைவில்லாமல் உறுதியாயிருக்கவும், “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்” (10:23-24) ஊக்குவிக்கவும் ஏவுகிறது. இந்த கட்டளை ஒரு சபைக்கென்று கொடுக்கப்பட்டிருந்தாலும் (வ. 25), அதை தங்கள் நட்புக்குப் பயன்படுத்தியதின் மூலம், கிரிகோரியும் பேசிலும் எவ்வாறு நண்பர்கள் ஒருவரையொருவர் வளர ஊக்குவிக்கலாம் என்றும், அவர்களுக்கு இடையே வளரக்கூடிய போட்டி மனப்பான்மை போன்ற “கசப்பான வேரை” (12:15) தவிர்க்கலாம் என்பதையும் காட்டினார்கள்.

விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளை நமது சொந்த நட்பின் லட்சியமாகக் கொண்டு, இந்த இலட்சியத்தில் நம்மைக் காட்டிலும் நமது நண்பர்கள் சிறக்கும்படி அவர்களை ஊக்குவித்தால் என்ன? இரண்டையும் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார்.