மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், “உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?” என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், “இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!” என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் “அன்பிற்கு உருவம் கொடுத்தது போல” இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று” ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) “அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை” (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?