என் மகன் சேவியர் சிறுவனாக இருந்தபோது, நானும் அவனும் ஒரு கற்பனையான சிறுவர் கதையைப் படித்தோம். அதில் ஒரு சிறுவன் தனது ஆசிரியருக்கு எதிராக, பேனாவிற்கு தானே சொந்தமாக ஒரு மாற்றுப் பெயரை வைக்கிறான். அவன் தனது சக ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பேனாக்களுக்குத் தான் உருவாக்கிய புதிய பெயரைப் பயன்படுத்தச் சொல்கிறான். சிறுவனின் இந்த மாற்றுப் பெயர் பற்றிய செய்தி ஊர் முழுவதும் பரவியது. இறுதியில், நாடு முழுவதும் உள்ள மக்கள் பேனாக்களைக் குறிப்பிடும் முறையை மாற்றிக்கொண்டனர், காரணம் எல்லோரும் ஒரு சிறுவன் ஏற்படுத்திய மாற்றுப் பெயரை உலகளாவிய உண்மையாக ஏற்றுக்கொண்டனர்.

சரித்திரம் முழுவதும், குறையுள்ள மனிதர்கள் மாற்றமடைந்து கொண்டேயிருக்கும் நிஜத்தின் பரிமாணங்கள் அல்லது தங்களுக்குச் சவுகரியமான யதார்த்தங்களை தங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தழுவிக்கொண்டனர். இருப்பினும், வேதகமாம் ஒரே சத்தியத்தையும், ஒரே மெய் தேவனையும், இரட்சிப்புக்கான ஒரே வழியையும் சுட்டிக்காட்டுகிறது. அது கிறிஸ்துவே. அவர் மூலமே “கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்” (ஏசாயா 40:5). சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் போலவே மனிதர்களும் தற்காலிகமானவர்கள், தவறிழைக்கக்கூடியவர்கள் மற்றும் நம்பத்தகாதவர்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி உறுதிப்படுத்தினார் (வ.6-7). அவர், “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (வ.8) என்றார்.

வரப்போகும் கிறிஸ்துவை பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நம்பகமான அடித்தளத்தையும், பாதுகாப்பான புகலிடத்தையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறது. இயேசுவே வார்த்தையாக இருப்பதால் நாம் தேவனுடைய வார்த்தையை நம்பலாம் (யோவான் 1:1). இயேசுவே என்றும் மாறாத உண்மை.