“நான் அவசரநிலையை அறிவிக்க வேண்டும். எனது விமானி இறந்து விட்டார்”, டக் ஒயிட் பதற்றத்துடன் தனது விமானத்தைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு இந்த வார்த்தைகளைக் கூறினார். புறப்பட்ட சில நிமிடங்களில், டக் குடும்பம் வாடகைக்கு எடுத்திருந்த தனியார் விமானத்தின் விமானி திடீரென மரித்தார். பழைய வகை விமானங்களை ஓட்டும் மூன்று மாத பயிற்சி அனுபவத்துடன், டக் விமானி இருக்கையில் அமர்ந்தார். பின்னர், அவர் விமானத்தைத் தரையிறக்குவதன் மூலம் தன்னிடம் பேசிய உள்ளூர் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்களுக்கு கவனமாகச் செவிகொடுத்தார். பின்னர், டக், “ஏறக்குறைய ஏற்பட்டிருக்கும் நிச்சயமான தீ விபத்திலிருந்து [அவர்கள்] என் குடும்பத்தைக் காப்பாற்றினர்” என்றார்.
வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள ஒருவர் மட்டுமே நமக்கு உதவ முடியும். மோசே இஸ்ரவேலர்களிடம் பேசுகையில், “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (உபாகமம் 18:15) என்றார். இந்த வாக்குத்தத்தம் தேவன் தம் மக்களுக்கு வழங்கிய தீர்க்கதரிசிகளின் வரிசையைச் சுட்டிக்காட்டியது, ஆனால் அது மேசியாவைப் பற்றியும் பேசுகிறது. பேதுரு மற்றும் ஸ்தேவான் இருவரும் இந்த கடை முடிவான தீர்க்கதரிசி இயேசுவே என்று பின்னர் கூறியிருப்பார்கள் (அப்போஸ்தலர் 3:19-22; 7:37, 51-56). அவர் மட்டுமே தேவனின் அன்பும் ஞானமுமான அறிவுரைகளை நமக்குச் சொல்ல வந்தார் (உபாகமம் 18:18).
கிறிஸ்துவின் வாழ்நாளில், பிதாவாகிய தேவன், “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்” (மாற்கு 9:7) என்றார். ஞானமாக வாழவும், இந்த வாழ்க்கையில் நொறுங்கி அழிவதைத் தவிர்க்கவும், வேதாகமம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் மூலம் இயேசு சொல்வதற்குச் செவிகொடுப்போமாக. அவருக்குச் செவிசாய்ப்பதே பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது.
இவ்வுலகில் கிறிஸ்துவின் குரலுக்குச் செவிசாய்ப்பது ஏன் சில நேரங்களில் சவாலாக உள்ளது? இன்று அவருடைய ஞானமான மற்றும் அன்பான வார்த்தைகளை நீங்கள் எவ்வாறு சிறப்பாகப் பின்பற்றக்கூடும்?
அன்பு இயேசுவே, தயவுசெய்து உம் குரலுக்குச் செவிகொடுக்கவும், கீழ்ப்படியவும் எனக்கு உதவும்.